”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்[று] இன்புறுவர் எம்பாவாய்”
ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 30-ஆம் பாசுரமான இது
இந்நூலின் இறுதிப்பாசுரமாகும். பகவான் வங்கக் கடல் கடைந்த விருத்தாந்தம் இங்கு சொல்லப்படுகிறது.
ஆயர்குலச் சிறுமிகளைப் பார்த்துக் கண்ணன் கேட்கிறான். “உங்களின் பேச்சுப்படியே நீங்கள் செய்யும் குற்றேவல்கள் அனைத்தையுமே நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் நீங்கள் அனைவரும் பலன் பெறுவீர்கள். ஆனால் உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் இப்பலன்கள் போய்ச்சேருமா? அவர்கள் பலனில்லாமல்தான் இருக்க வேண்டுமா?”
அதற்குத்தான் இப்பாசுரத்தில் பதில் வருகிறது. “கண்ணா, இத்திருப்பாவையை யார்யார் கற்றுப் பாராயணம் செய்து வருகிறர்களோ அவர்களுக்கு பிராட்டியின், எம்பெருமானின் அருள் பார்வை நிச்சயம் கிடைக்கும். அவர்கள் தத்தம் வாழ்வில் நீங்காத செல்வம் பெறுவார்கள். மேலும் அவர்கள் இப்பாவை நோன்பைக் கடைப்பிடிக்கும் நாங்கள் அடைந்த ஆனந்தத்தையைம் அடைவார்கள்” என்று உரைக்கிறார்கள்.
கன்றை இழந்துவிட்ட பசுவின் முன்னர் தோல் கன்றை வைத்தால் அப்பசுமாடு அதற்கும் இரங்கிப் பால் தருமாம். அதுபோல பகவானிடம் மிகுந்த அன்பு கொண்டு உரைத்த இப்பாசுரங்கள் வழி நின்றால் பகவானும் இரங்கி நமக்கு அருள் செய்வான்” என்று இந்த இடத்திற்குப் பட்டர் வியாக்கியானம் அருளிச் செய்திருக்கிறார்.
வங்கம் என்றால் கப்பல் என்று ஒரு பொருள் உண்டு. வங்கக்கடல் எனின் கப்பல்கள் நிறைந்த கடலாம். பகவான் கடலைக் கடையும்போது அக்கப்பல்களுக்கு எத்தீங்கும் வராமல் கடைந்தானாம். திருப்பாற்கடலில் கப்பலுண்டா எனில் கடலைக் கடையும்போது எங்கும் மலை சுழன்றதல்லவா? அவை கப்பல்களைப் போலக் காட்சியளித்ததாகக் கொள்ளலாம்.
ஏன் கடல் கடந்தானாம்? தேவர்களுக்காகக் கடைந்தான் என்றாலும் அதிலும் அவனுடைய காரியம் இருந்ததாம். அதாவது பெரிய பிராட்டியான லக்ஷ்மித் தாயாரை அடையவே அவன் கடல் கடைந்தானாம். கடலைக் கடைந்து அதிலிருந்த விண்ணமுதைத் தேவர்களுக்குக் கொடுத்தான்; பெண்ணமுதான பிராட்டியைத் தான் எடுத்துக்கொண்டான். அதைத்தான் “மாதவனை” என்று காட்டுகிறார்கள். மேலும் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் பிராட்டியின் அருளையும் வேண்டிக்கொள்கிறார்கள். மாதவன் என்பதற்குப் பெரியோன் எனும் பொருளும் உண்டு. பிறருக்கு உதவி செய்வதற்காகக் கடல் கடைந்த பெரியோன் அல்லவா? அது மட்டுமா? பெண்ணாக வடிவெடுத்துத் தேவர்களுக்கு அமுதூட்டின பெரியோன் அல்லவா? மந்தரமலை, வாசுகி என்னும் உபகரணங்களைக் காட்டிக்கொடுத்தப் பெரியோன் அல்லவா?
திருமங்கை மன்னன் பெரிய திருமொழியில் திருவிண்ணகர் திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்கையில்,
விண்ணவர் அமுதுண அமுதில்வரும்
பெண்ணமுது உண்ட எம்பெருமானே!
ஆண்டாய்! உனைக் காண்பதோர் அருளெனக் கருதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை—விண்ணகர் மேயவனே” [6-1-2]
என்று அருளிச் செய்கிறார்.
நாச்சியார் திருமொழியில் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி உள்ள எம்பெருமானின் திறம் கண்டு இரங்கும்போது ஆண்டாள் நாச்சியார் பெருமான் மந்தர மலையை நாட்டிக் கடல் கடைந்ததை அருளிச் செய்வார்.
”சிந்துரச் செம்பொடிப்போல்
திரு மாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே
எழுந் தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று
மது ரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத்தோளுடையான்
சுழ லையில்நின் றுய்துங்கொலோ” [9—1]
தில்லைத் திருசித்திர கூடத்தை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார் கடல் கடைந்ததையும், பிராட்டி எம்பெருமானின் திருமார்பில் தங்கினதையும் காட்டுவார்.
”மௌவல் குழலாய்ச்சி மென்தோள் நயந்து
மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த
தெய்வத் திருமாமலர் மங்கை தங்கு
திருமார் பனைச்சிந்தை யுள்வைத்தும் என்பீர்” [3-2-7]
”அன்று பாற்கடலைக் கடைந்தாய்; பிராட்டியைப் பெற்றாய்; இன்று எம் ஆயர் சேரியில் வந்தும் தயிர் கடைந்தாயே! முகமானது வேர்ப்ப, செவ்வாய் துடிப்ப நீ இங்கு வந்து எளிமையாய் தயிர் கடைந்தது எம்மைப் பெறுவதற்கன்றோ” என்று அவர்கள் கேட்கிறார்கள். குலசேகராழ்வார், பெரிய திருமொழியில் கண்ணன் தயிர் கடைந்ததை அருளிச் செய்வார்.
”கெண்டை ஒண்கண் மடவாள் ஒருத்தி
கீழை யகத்துத் தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
வண்டமர் பூங்குழல் தாழ்ந்து லாவ
வாண்முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப
தண்தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா மெய் அறிவன் நானே” என்பது அவர் பாசுரம்.
சகலதேவதைகள் உட்பட எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க திருப்பாற்கடலில் இருந்து வெளிவந்த சர்வ அலங்காரங்களுடன் கூடிய பிராட்டி உம் மார்பைச் சேர்ந்தார். அதுபோல பலகலனும் அணிந்து நாங்களும் சேர வேண்டும்; மேலும் நீ அமரரர்க்கு அமுது ஈந்த ஆயர்க்கொழுந்து; எமக்கும் அமுது அருள வேண்டும் என இவர்கள் விரும்புகிறார்கள். கப்பலாகிய கலத்தை ஏன் சொன்னார்கள் என்று பார்த்தால் அவனே ஒரு தோணி; நம்மை இத் துன்பக்கடலில் இருந்து மீட்கக் கூடியவன் அன்றோ?
நாச்சியார் திருமொழியில் குயில் பத்தில் உள்ள பாசுரம் இதுவாகும்.
”என் புருகி இனவேல் நெடுங்கண்
இமை பொருந்தா பல நாளும்
துன்பக்கடல் புக்கு வைகுந்தன் என்பதோர்
தோணி பெறாது உழல்கின்றேன்.”
கேசவனை என்று அழைத்ததன் மூலம் அவன் கேசி என்ற அரக்கனை வதைத்ததை நினைவூட்டுகிறார்கள். அதாவது தம்மிடத்தில் அன்புள்ளவர்களை அடைவதற்குத் தடையாய் இருப்பவர்களைக் கேசியை நீக்கியது போல நீக்கிடுவான் அவன். மேலும் அவனது கேசத்தின் அழகையும் கூறுகிறார்கள். அவன் “ஹிரண்யகேச” என்று வேதங்களும் புகழும்படியான கேசத்தை உடையவன்; ’வாசம் செய் பூங்குழலாள்’ என்றே பிராட்டிக்குப் பெயர்.அப்படிப்பட்ட பிராட்டியும் விரும்பக்கூடிய அழகிய கேசத்தை உடையவனாம். தவிர அசைந்து அசைந்துத் தயிர் கடையும் போது அவனது தலைமயிரும் அழகாய் ஆடிக்கொண்டிருக்குமாம்.
தொடக்கத்தில் ‘பரமனடி பாடி’ என்று தொடங்கியவர்கள் இப்போது கேசவனை என்று முடிப்பதால் பெருமானைப் பாதாதி கேசமாய் இவர்கள் அனுபவித்துவிட்டார்கள். இவர்களுக்கு எப்பொழுதும் முடி பிடிப்பதை விட அடி பிடிப்பதே பிடிக்கும். “வங்கக் கடல் கடைந்த” என்றதனால் பெருமானின் சௌலப்யம் என்னும் எளிமை இங்கு காட்டப்படுகிறது. “வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை” என்பதனால் இங்கு “ஸ்ரீமந்நாராயண சரணௌ” என்பது சொல்லப்படுகிறது.
அடுத்துச் ”திங்கள் திருமுகத்துச் சேழையார்” என்பதால் ‘ப்ரபத்யே’ எனும்படிக்கு அடியார்களின் பெருமைகள் கூறப்படுகின்றன. அவர்கள் முதலில் சாதாரணமானவர்களாகத்தான் இருந்தார்கள்; இப்போது கண்ணனுடன் கூடியபடியால் முழுநிலவைப் போன்ற திருமுகத்தைப் பெற்றுள்ளனர். மேலும் சூடகம், பாடகம் எனத் தாங்கள் கண்ணனிடம் வேண்டியபடிக்கு அவன் சுட்டிய ஆபரணங்களாலும் அழகு பெற்றார்கள். மேலும் பாகவதர்களான இவர்களுக்குப் பகவத் சம்பந்தம் வாய்க்கப் பெற்றுள்ளதால் அழகும் பொலிவும் மிகுந்து காணப்படுகிறதாம்.
அதுவும் பகவான் வங்கக் கடல் கடைந்தபோது ஒரு சந்திரன்தான் உண்டானதாம்; ஆனால் இங்கோ ஐந்து லட்சம் பூரண சந்திரன்கள் ஒரே காலத்தில் உதித்தது போல அவர்கள் திருமுகம் பொலிவு பெற்று விளங்குகின்றதாம். சந்திரன் கூட இவர்கள் முகத்திற்கு ஒப்பாக மாட்டான் என்பதனால்தான் ‘திருமுகம்’ என்கிறார்கள்.
வால்மீகி முதலில் இராமனது முகத்தைச் சந்திரனைப் போல இருக்கிறது என்று சொன்னவர், பின் தப்பாய்ச் சொல்லி விட்டோம் போலிருக்கிறதே என்று அச்சந்திரனைக் காட்டிலும் மிகவும் அழகாய் இருப்பவன் என்று அருளியது இங்கு நினைவு கூறத் தக்கது. ஆனால் அவன் முகமோ கதிரும் மதியமும் கலந்த தன்மை கொண்டது; இவர்கள் முகமோ தண்மை மட்டுமே கொண்டதாகும்.
இப்போது இவர்கள் சேயிழையார்களாக இருக்கிறார்கள். எந்த அணிகளும் அணியாமல் இருந்தவர்கள் இப்போது கண்ணனிடம் தாங்கள் வேண்டிப்பெற்ற ஆபரணங்களை அவனாலே அணிக்கப்பட்டு அணிந்துள்ளார்கள். அவர்களே இயற்கையான அழகுள்ளவர்கள். மேலும் இப்போது ஆபரணங்களால் மேலும் அழகு கூடப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எப்போதும் ஆபரணங்களுக்குச் சிறப்பே பகவானுலும் பிராட்டியாலும் அணிவிக்கப்படுவதேயாகும். ’சென்று’ என்பது பகவானிடத்திலே ஏற்பட்ட அன்பினாலே அவனிடத்தில் செல்வதைக் காட்டுகிறது.
செல்வது மட்டும் அன்று. அவனிடத்தில் இறைஞ்சுகிறார்கள். அதாவது தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து அவனுடைய திறல் போற்றியதையும், குணம் போற்றியதையும், கழல் போற்றியதையும் நினைத்துப் பார்க்கிறார்கள். இது சரணம் பிரபத்யே என்பதன் பூரண அர்த்தமாகும். ‘அங்கப் பறை கொண்ட ஆற்றை’ என்பதில் அவனிருக்கும் இடத்திற்கே சென்றதைச் சொல்லுகிறார்கள். திருஆய்ப்பாடியிலே, நந்தகோபன் கோயிலிலே, நப்பின்னைப்பிராட்டியுடன் கூடியிருந்த சிம்மாசனத்திலே என்று எங்கெல்லாம் அவன் காட்சியளித்தானோ அங்கெல்லாம் சென்று தரிசித்ததைச் சொல்லுகிறார்கள். மேலும் “நீ தாரய்” என்று வேண்டி ஊராருக்காகத் தாங்கள் வேண்டிப் பெற்ற பறை என்ற புருஷார்த்தத்தையும் இங்கே காட்டுகிறார்கள்.
நாச்சியார் இப்பாசுரத்தில் ‘அணி புதுவை’ என்று ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமையைப் பேசுகிறார். உலகத்துக்கே ஆபரணாமாம் அது. மேலும் ’அ’ கரத்துக்கே உரிய வடபெருங்கோயில் உடையானும், ‘உ’கரத்துக்கே உரிய ஆண்டாள் நாச்சியாரும், ‘’ம’கரத்துக்கே உரிய பெரியாழ்வாரும் ஒருங்கே சேர்ந்திருப்பதால் ப்ரணவம் போலே பொலிந்திருக்கும் ஊராம்.
“பொன்னும், முத்தும், மாணிக்கமும், சேர்த்துச் செய்த ஆபரணம் போலே நாச்சியாரும், பெரியாழ்வாரும், வடபெருங்கோயிலுடையானும் அணிசெய்யும் ஊராயிற்றே” என்பது ஆறாயிரப்படி.
பெரியாழ்வார் அந்தணர் குலத்தில் அவதரித்தவர். அதனாலே ’பைங்கமலத் தண்தெரியல்’ என்று அவருக்குத் தாமரை மலர்களால் ஆன மாலையைச் சொல்கிறார். பட்டர்பிரான் என்பது பெரியாழ்வாரின் பெருமையைக் காட்டுகிறது. அவர் பிராமணர்களுக்கெல்லாம் கல்வி, கேள்விகள் கற்பித்தவராம். வேதாந்தத்தின் உயரிய பொருளை எல்லாம் விரித்துச் சொல்வதில் வல்லவராம்.
வேதத்தைப் பராசரரின் புத்திரரான வியாசர் அருளினார் என்று சொல்லுமாப்போலே, பட்டர்பிரானான திருமகளான கோதை நாச்சியார் சொன்னதாம் இது. அதுவும் பட்டர்பிரான் கோதை என்பது பூமாதேவியான இவருக்கு ஓர் ஏற்றத்தைத் தருகிறது.
வியாசர் தம் தந்தையாரான பராசரரால், “மைத்ரேயரே! வியாசரை பரமாத்மாவான நாராயணன் என்றே உணர்ந்து கொள்வீராக” என்று கொண்டாடப்பட்டார். அதேபோல ஆண்டாள் நாச்சியாரும் அவர் தந்தையாரான பெரியாழ்வாரல் “ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்” என்று போற்றப்படுகிறார். பெருமானுக்குப் பாமாலை சாற்றியதால் தன்னைக் கோதை என்று சொல்லிக் கொள்கிறார். தாம் ஆயர்பாடியில் அந்த ஆயர் சிறுமிகளின் அனுபவத்தைப் பெற்றுச் சொன்னதை இங்கு நாச்சியார் காட்டுகிறார்.
”கோதை சொன்ன” என்பதற்கு இப்பாசுரங்கள் ஆண்டாளின் திருவாயால் சொல்லப்பட்டதாலேயே பெருமை பெற்றதாம். கடல் நீர் உப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அது மேகம் பருகி எடுத்துக்கொண்டு போனதும் நன்னீராய் மாறிவிடுகிறதல்லவா? அதே போல நாச்சியார் வாய்ப்பட்டதும் வேதக்கடலும் உவர்ப்பதாயிற்று என்பார்கள்.
சங்கம் என்பதற்குக் கூட்டம், குழாம் என்று பொருள்கள் உள்ளன. இப்பாசுரங்களை ஐந்து லட்சம் ஆயர்குடியின் பெண்கள் எல்லாரும் கூட்டமாய்ப் பாடி அனுபவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்ப் பெண்களெல்லாம் சேர்ந்து கூட்டமாக அனுபவித்தனர். அதுவும் தேவர்களுக்கு மட்டுமே புரியும்படியான தேவபாஷை எனும் சமஸ்கிருதத்தில் இல்லாமல் சங்கத் தமிழில் சொல்லப்பட்டு பெருமை பெற்றதாகும். எம்பெருமான் போகயமாக்க் கருதும் மாலை இது. அதுதான் சங்கத் தமிழ்மாலையாகும். இவள் தந்தையான பட்டர்பிரானே “தண்தெரியல் பட்டர் பிரானாயிற்றே”. எனவே அவரே மாலை அணிந்தவர். கோதை எனும் சொல்லுக்கு மாலை எனும் பொருளுமுண்டு. ஆகையால் “தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன மாலை” என்பதற்கு, மாலை அணிந்தவர் மகளான மாலை, மாலுக்குக் கட்டின மாலை என்ரும் பொருள் சொல்லலாம்.
நாச்சியார் கண்ணனிடத்தில் “தோடே, செவிப்பூவே” என ஒரே ஒரு செவிப்பூவைத்தான் கேட்டுப் பெற்றாள். ஆனால் அவனுக்கு பெறற்கரிய மாலையையே பாமாலையாக அணிவித்தாள்.
திருப்பாவையானது திருமந்திரம், திருப்பல்லாண்டு போல மிகவும் சுருக்கமாக இல்லை. அதே நேரத்தில் வேதம் மற்றும் திருவாய்மொழி போல மிகவும் விரிவாகவும் இல்லை. எனவே எல்லாரும் ஏற்கக் கூடிய முப்பது ரத்தினங்கள் அவை. அந்த முப்பதில் ஒன்று கூடக்குறையாமல் அதாவது ஒரு பாசுரம் கூடக் குறையாமல், இக்காலத்திலோ அல்லது பிற்காலத்திலோ கற்பதனால் எம்பெருமானின் அருள் பெற்று விளங்குவர்.
அதாவது மிகவும் உயர்ந்ததான திருப்பாவையை உரைப்பார்க்குக் கிடைக்கும் பலன்களை நாச்சியார் இப்பாசுரத்தில் விளக்குகிறார். அவர்களுக்கு ஈரிரண்டு மால்வரைத் தோள்களுடன் அதாவது சதுர்ப்புஜங்களுடன் காட்சியளிப்பானாம் திருநாராயணன். இக்காலத்திலும் இப்பாசுரங்களைச் சேவிக்கிறார்களே என்று அவன் தோள்கள் மலைபோல பூரித்து விடுமாம். “தடம்பெருந்தோள் ஆரத்தழுவும் மடந்தையை” என்பார் ஆழ்வார். மேலும் அவன் அன்பில்லாதவர்களுக்கு இரண்டு தோள்களுமாய், அன்புடையவர்களுக்கு நான்கு தோள்களுமாய்க் காட்சியளிப்பானம். அவர்களைக் கண்டவுடனேயே அன்பு மேலிட்டு அவன் கண்கள் செங்கண்ணாகிவிடுமாம். பிராட்டியின் சம்பந்தத்தாலும் சிவந்து விடுமாம். “கதிர்மதியம் போல் முகத்தான்”, ”பங்கயக்கண்ணான்”, ”செங்கண் சிறுச்சிறிதே”, ”செங்கண் திருமுகம்” என்றெல்லாம் முன்பே பாடியவர்களன்றோ இவர்கள். அவன் கண்களில் வைத்த தம் கண்களை இவர்களால் வாங்க முடியவில்லை போலும். அவனே செல்வத் திருமால். திருவுக்கும் திருவாகிய பிராட்டியைப் பெற்றவனன்றோ? அவனுடைய திருவருளால் இங்கும் அங்கும் எங்கும் இவர்கள் திருவருள் பெறுவார்கள் என்கிறார். சகல செல்வங்களும் பெறுவார்கள்.
பராசர பட்டரின் வியாக்கியானம் இதற்கு மிகவும் முக்கியமானதாகும். ”ஆண்டாள் அன்று கடைபிடித்த திருப்பாவை நோன்பை நாமும் மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்லவே இல்லை. திருப்பாவை முப்பது பாசுரங்களை எல்லாம் தப்பாமே உரைத்தாலே போதும். அங்கும் இங்கும் எங்கும் திருவருள் கிடைக்கும் என்கிறாள். எப்படி நோன்பு நோற்காமலே திருப்பாவையைப் பாராயணம் செய்தாலே கிடைக்கும் எனில் “கன்றிழந்த தலைநாகு தோற்கன்றுக்கும் இரங்குமாப்போலே இப்பாசுரங்களைக்கொண்டு புக நமக்கும் பலிக்கும்” என்கிறர் பராசர பட்டர்.
அதாவது துள்ளி ஓடி வரும் கன்றுக்குத் தாய்ப்பசு பால்தருகிறது. கன்று இல்லையென்றால் கன்றுக்குட்டியின் தோலின் உள்ளே வைக்கோலை வைத்துத் தைத்து கன்றுக்குட்டி போலச் செய்து தாய்ப்பசு அருகில் நிற்க வைத்தாலும் அது இரங்கைப் பால் தருமாம். இங்கு அது போல தாய்ப்பசுதாம் பகவான். உண்மையான கன்றுதாம் ஆண்டாள் நாச்சியார். அவர் அன்று திருப்பாவை நோன்பை அனுஷ்டித்தார். நாம் எல்லாம் தோற்கன்றுகள். ஆண்டாளுக்குத் திருவருள் காட்டினாற்போலவே இப்பாசுரங்களைச் சொல்பவர்களுக்கும் பரமாத்மாவின் அருள் கிடைக்கும்.
எனவே திருப்பாவை முப்பதையும் தப்பாமே மார்கழி முப்பது நாள்களும் அல்லது நாள்தோறும் பாராயணம் செய்தால் பெருமாளின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று அருளிச்செய்து திருப்பாவையை முடிக்கிறார் ஆண்டாள் நாச்சியார்.
வராக அவதாரத்தில் பகவான் காட்டிய
- பேர் பாடுதல்
- புஷ்பங்களை இட்டு அர்ச்சித்தல்
- அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்தல்
என்கிற மூன்று வழிகளையும் தம் முப்பது பாசுரங்களில் அருளிச் செய்துள்ளார் ஆண்டாள். நாமும் கோதை காட்டிய வழியில் சென்று எம்பெருமானின் அருளுக்குப் பாத்திரர்கள் ஆவோம்.
திருப்பாவை இனிதே நிறைவு
=======================================================================
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்தி
- அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.
- சுசீலா பெரியம்மா
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் இரண்டு
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்று
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் ஒன்று
- மனிதம் உயிர்த்த பெரு மழை
- அடையாளம்…
- அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…
- தாய்மொழி
- தொடுவானம் 142. தடுமாற்றம்
- தீபாவளி
- ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”
- முகில் காடு
- வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு
- செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்
- கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)
- நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு