ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்
மதுரையில் ஓர் ஓரின மரிக்கொழுந்து பூத்தது
பூவின் சுகந்தம் சோழமண்டலத்தில் வீசியது.
சோழமண்டலத்து மீசை சுகந்தத்தில் திளைத்தது…
சோழன் மகிழ்ச்சியில் தன் செங்கோல் உயர்த்தினான்.
ஓர் ஓரினக்காதல் ஒன்று
சொல்லியும் சொல்லாமலும் பிறந்தது.
‘தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே’.
பிசிராந்தை காதல் குறித்து கோப்பெருஞ்சோழனின் பெருமிதங்கள் இவை.
‘உயிர்ஓம் புநனே’ என்ற சோழனின் ஆசை வார்த்தை
மருவி வந்ததோ என என் மனதிலே ஓர் ஐயம் உண்டு..
சோழனின் காதல் வார்த்தை வெறும் நட்பின் இலக்கணமென
சமூகம் தன் பா வாடைக்குள் மரிக்கொழுந்தை மறைத்தது
பாவாடைக்குள் ஒளிந்திருக்கும் அந்தப் பூவாடை வாசம்
பிசிராந்தை என்ற திருநங்கையின் வாசம்..
சொல்லியும் சொல்லாத ஓர்
ஓரின வாசம்.
பேதை என்ற பெண்ணைக் குறிக்கும் வார்த்தையை
‘சூது வாதற்றவன்’ எனச் சமூகம் திரித்தது ஆயினும்
‘பேதைச் சோழன்’ எனப் பிசிராந்தையைச் சொல்லும்
சோழனின் வார்த்தைக்குள்
பொதிந்து கிடக்கும் பிசிராந்தையின் பெண்மை…
சமூகத்தின் பொய்த்திரியை சரஒளியாய் எரிய வைக்கும்
சொல்லியும் சொல்லாமலும் ஓர்
ஓரினக் காதல் ஜோதி.
இதுவரைப் பார்த்திராத ஒருவனுக்காய்
வடக்கிருந்து உடன்கட்டை ஏறச்சொல்லி
இடமொதுக்கும் ஒருவன்.
இதுவரைப் பார்த்திராத ஒருவனுக்காய்
மாண்ட மனைவியையும் மக்களையும் விட்டுவந்து
உடன்கட்டை ஏறும் ஒருவன்..
எங்கோ இடிக்கிறது.
தொலைந்தபிற சங்கப்பாடல்களை இன்னும் தேடித் பாருங்கள்
எங்காவது ஒரு மூலையில்
பிசிராந்தையும் கோப்பெருஞ்சோழனும் கொஞ்சிக் குலவிய
ஓரினப் பாடல்களும் ஒளிந்திருக்கலாம்.
சொல்லாமல் சொல்லிப்போன அவர்தம் காதலும் தெரிந்திருக்கலாம்
‘காதற்கிழமை உடையவன்’ பிசிராந்தை எனச்
சோழச் சேவல் கூவிற்று…
ஆணைக் காதலிக்கும் உரிமை ஆணுக்கும் உண்டு எனச்
சோழச் சேவல் கூவிற்று…
உறுதியாய் ஆந்தை வரும் இறுதியாய் இடம் கொடுங்கள் எனச்
சோழச் சேவல் கூவிற்று…
அச சேவலின் கூவலை வைகறை விடியலின் தூக்கத்தில்
காக்கையின் கரைதலாய் கதை மாற்றம் செய்த சமூகத்தால்
சொல்லியும் சொல்லாமலும்
ஓர் ஓரினக்காதல்.
சங்க காலத்திலும் ஓரினம் உண்டு.
பேடிகள் பலரின் காதல் பாடலும் உண்டு.
ஓரின இலக்கியங்களைத் தேடுதற்குத்தான் ஆள் இல்லை…தேடினால்…
சங்ககாலக் காமங்களிலும் சிலநேரம்
மரிக்கொழுந்து வாசம் வரும்.
காதலில் இன்னும் சில ஆந்தைகள் தெரியலாம்
அவர்தம் சேவல்களும் புரியலாம்.
ஆக்கம – அழகர்சாமி சக்திவேல்
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 6 நேர்ஸ் சாந்தி
- அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.
- சுசீலா பெரியம்மா
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் இரண்டு
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்று
- சொல்லியும் சொல்லாமலும் – பாகம் ஒன்று
- மனிதம் உயிர்த்த பெரு மழை
- அடையாளம்…
- அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…
- தாய்மொழி
- தொடுவானம் 142. தடுமாற்றம்
- தீபாவளி
- ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”
- முகில் காடு
- வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு
- செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்
- கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)
- நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு