வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான்.
கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப முயன்று பின் அக்கறையெடுத்துக் கொள்ளாதவன் போல் அப்படியே நின்றான்.
பனியன் கம்பனிக்கென்றான இயந்திரங்கள் ஓடும் சப்தம் ரீங்காரமாய் கேட்டது. உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறவனின் மூச்சிரைப்பு போல அது சுப்ரமணிக்கு இப்போதெல்லாம் படுகிறது. மூச்சிரைத்தபடி ஏதோ வாகனம் பின்பக்கம் ஓடிப்போயிற்று.
“”என்ன நின்னுட்டே? உள்ளே வர்றது.. நீ யாரைக் கூட்டிட்டு வந்தாலும் வரவேற்க மொதலாளிதா இருக்காறே?”
டவுன் பஸ்கோபால் ஊருக்குப் போய் விட்டு வரும்போது யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து விடுவான். போன தரம் வந்த போது ஒடிசியாவைச் சார்ந்த ஒரு தம்பதி அவன் கூட வந்திருந்தார்கள்.இன்னொருமுறை பீகாரைச்சார்ந்தவர்களை..
“”எப்பிடிடா இவங்க உனக்கு கெடச்சாங்க?”
“”ஊர் புளியந்தோப்பிலெ உட்கார்ந்திடிருந்தாங்க. தலையிலெ ஒரு பெட்டி. கால் பக்கம் ஒரு பெட்டி. ரயில் ஏற காசு கெடச்சா கௌம்பீர்வாங்கன்னு தோணுச்சு. அங்க போயி என்ன பண்றது. இங்கதா வேலை கொட்டிக் கெடக்குதேன்னு வந்திருக்காங்க. பத்து தமிழ் வார்த்தைக தெரிஞ்சிருக்கு. வேலை இல்லெ. பணக்கஷ்டம். அப்புறம் ரெண்டு மூணு கெட்ட வார்த்தைக… கஸ்டப்பட்டுட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. அதுதா கூட்டிட்டு வந்தன்”
எல்லா இடத்திலும் அவர்கள் நிறைந்து கிடந்தார்கள். பீகாரிகள், நேபாளிகள், வங்காளிகள், ஒடிசாக்காரர்கள் என .எந்த வேலையாக இருந்தாலும் சரி. கட்டிடத்திற்கு கல்லைத் தூக்குவதிலிருந்து பனியன் பேல்களை நகர்த்துகிற வரைக்கும் எல்லாவற்றையும் செய்தார்கள். கொஞ்சம் சோறு போதும். தூங்க இடம் போதும் என்றார்கள். சுலபமாக இருக்கிறதென்று சொல்லிக் கொண்டார்கள். வெறும் அரிசி சோறாய் போடுகிறார்கள். கொஞ்சம் ரொட்டியும் போட்டால் பரவாயில்லை என்பதுதான் அவர்களின் கோரிக்கை. மூட்டை மூட்டையாய் உருளைக்கிழங்குகள் அவர்களுக்காய் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன.
முன்வாசலில் அவரைக் கொடி பூத்திருந்தது. அதை புதுதாய் வந்திருந்த பெண்மணி பார்த்துக் கொண்டிருந்தாள். வலது கால் கட்டை விரலால் மண்ணைக் கீறிக் கொண்டாள். இந்த மண்ணில் இந்த அவரைக் கொடி படருமா? இந்த இன்ஜின் சப்தம், தூசு மத்தியில் இதெல்லாம் வளர்ந்தது அதிசயம் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். விடுவிடுவென மேல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த கொடியை இடது கையில் தொட்டுக் கொண்டாள். அதனுடன் ஏதோ பேசுவது போலிருந்தது. ஏதோ மந்திரத்தை அதன் மேல் ஏவி விடுவது போலிருந்தது. அவரைக் கொடியில் சிறு பூச்சிகள் மேய்ந்து கொண்டிருந்தன். அவளின் மந்திரத்தால் அவை ஓடி ஒளிந்து கொண்டன. மீசையுடன் இருந்த ஒரு பூச்சி ஓடி வந்து பார்த்து விட்டு மறைந்து போனது.
“”யாரைக் கூட்டிட்டு வந்தன்னு நான் கேட்டா சொல்லவா போறே. மொதலாளி கேட்டா அவங்க பூர்வீகம்ன்னு ஏதோ சொல்லுவே.. ஜாதகம் உட்பட எல்லாமும் சொல்வே”
கோபால் அந்த பனியன் கம்பனிக்கு வேலை தேடி வந்த போது முதலாளி என்று ஒருவரை கைநீட்டிக் காட்டினார்கள். அவர் கொஞ்ச நேரம் சூரியனைப் பார்த்தபடி நின்றிருந்தார். அவனும் பக்கத்தில் போய் நின்றான். என்ன? என்று முகத்தை அவன் பக்கம் திருப்பி கேட்ட மாதிரி இருந்தது.
அவன் எல்லாவற்றையும் கொட்டிவிட்டான். பூர்வீகம், ஜாதகம் முதற்கொண்டு எல்லாவற்றையும் சொல்லி வேலை வேண்டும் என்றான். ஆனாலும் அவனைச் சட்டை பண்ணாதவர் போலவே நின்று கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர்தான் இப்போதெல்லாம் ஆள் வேணுமா, வேறு பிரச்சினையா? அவனிடம் அபிப்பிராயம் கேட்கிறார் என்பதில் அவனுக்கு பெரிய களரவம் கிடைத்த மாதிரி இருக்கும்.
அவரைக் கொடியோடு அப்பெண் பேசிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்தவளின் கண்களில் மிரட்சி தென்பட்டது. அவளின் கண்கள் விரைசலாக எல்லாவற்றையும் வீதி முழுக்க அலைந்து விட்டு திரும்பி வந்தது.
கோபால் கதியென்று பனியன் கம்பனியில் தான் கிடப்பான். வாட்ச் மேன் இல்லாக் குறைக்கு வாசல் படியில் இரவில் படுத்துக் கிடப்பான். ஏதாவது சக்கரத்தை கையில் கட்டிக் கொண்டு ஏதாவது பொருளை நகர்த்திக் கொண்டிருப்பது போல இருக்கும். ஆளில்லா விட்டால் அடுக்கிக் கட்டுவான். டெய்லருக்குப் பக்கம் நிற்க ஆளில்லாத போது நின்று பீûஸ எடுத்துக் கொடுப்பான். கூர்மையான அவனின் காதுகள் தண்ணீர் வரும் சப்தத்திற்காக காத்துக் கொண்டிருக்கும்.
பவானித் தண்ணீர் எப்போது வந்தது, அத்திக்கடள தண்ணீர் எப்போது வந்தது. மேட்டுப்பாளையம் தண்ணீர் எப்போது வந்தது என்று சரியாகச் சொல்வான். பைப்பிலிருந்து வரும் தண்ணீரைப் பிடித்து ஒரு வாய் சுவைத்த பின் எந்த தண்ணீர் என்பதைச் சொல்லி விடுவான். அத்திக்கடள தண்ணீர் என்றால் லேபிள் வைத்துக் கொண்டிருக்கும் சுலோசனாவைத் துரத்துவான். கலைச்செல்வி தண்ணீர் வருகிறது என்று தெரிந்தால் பாய்ந்து ஓடி விடுவாள். அவளுக்கு இரண்டு தெரு தள்ளி வீடு இருந்தது. அவள் கணவன் இன்னொரு பனியன் கம்பனியில் வேலை பார்த்து வந்தான்.
“”ரெண்டு பேரும் ஒரே கம்பனியில வேலை பாத்தா சளகரியம்தானே?” என்று கோபால் அவளுக்கு அறிளரை கூறுவான்.
“”என்னமோ ஒரே கம்பனியில வேலை பாக்கறது ஒத்து வர்லே. அவர் ஒரு பக்கம் ஓடுடானா… நான் இன்னொரு பக்கம் ஓடணம்ன்னு எழுதியிருக்கு”
நஜிமாவிற்கு எந்த அவசரமும் இருக்காது அவள் கணவன் சோம்பேறியா, மன நோயுடன் அலைபவனா என்று பலருக்கும் சந்தேகம் இருப்பதுண்டு. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பான். தண்ணீர் வருகிற போது யாராவது சொல்லி விட எல்லாவற்றையும் நிரப்பி வைத்து விடுவான். முன்பெல்லாம் தண்ணீர் இருக்கும் வாளியிலிருந்து தண்ணீரை மொண்டு மொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் சிறுநீர் கழிப்பது போல் ஊற்றிக் கொண்டிருப்பான். முன்பு வாடகைக்கு இருந்த இடத்தில் அது போல் அவன் செய்வது கண்டு எரிச்சலடைந்த வீட்டுக்காரர் வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார். அடுத்த வாடகை வீட்டிற்குப் போன பின்பு அந்தப் பழக்கம் அவரை விட்டுப் போய் விட்டது. புதிதாய் என்ன பழக்கம் வந்து விடப்போகிறதோ? என்று நஜிமா பயந்து போய்க் கிடப்பாள். நஜிமா கணவனை அவ்வப்போது மருத்துவமனைக்கு அவள் கூட்டிக் கொண்டு போகிற போது கோபாலும் போவான். அவள் பயப்படுகிற சமயத்தில் ஆறுதல் சொல்வான். பத்ரகாளியம்மன் கோவில் தாயத்தை வாங்கி வந்து கொடுத்திருக்கிறான்.
“”இதெ கட்டிக்க முடியாதே” என்று சொல்லியிருகிறாள்..
“”ஏன்?” என்று அப்பாவியாய் காரணம் கேட்பான்.
“”இந்த மனுஷனெ வெச்சுட்டு ரெண்டு கொழந்தைகளையும் வெச்சிட்டு எப்படி காலம் கழிக்கப் போறே நசிமா?” என்பான்.
வடமொழி தவிர்த்த மாதிரி அவள் பெயரைச் சொல்வான். பலருக்கு அவன் நஜிமாவிற்கு உதவி செய்வதோ, கூடமாட இருப்பதோ பிடிக்காது.
“”பொம்பளைகளுக்கு மட்டுந்தா உதவி பண்ணுவியா?” என்று கிண்டல் செய்வார்கள். “புல் இருக்கும் இடத்தில் பசு மேயும்’ என்று யாரோ கிண்டல் அடித்தது கூட அவன் மனதில் இருந்தது.
“” நீங்க சொல்லுங்க. எனக்கு நேரம் இருந்தா பண்றன்” என்பான்.
யார் வீடு மாற்றுவதாக இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் தூக்கத்தைத் துறந்து விடுவான். வாசல்படிகளைத் தாண்டிக் கொண்டே இருப்பான். ஒரு நாள் வாய் விட்டு சொல்லி விட்டான்.
“” நான் வீடுன்னு ஒண்ணு கட்டறப்போ இவங்கெல்லா உதவி பண்ணப் போறவங்கதானே?” என்பான்.
“”யாராச்சும் நாலு பேர் இருந்தா கூட்டிட்டு வாடா”
“”எத்தனை பேர் ஆம்பளெ. எத்தனெ பேர் பொம்பளெ முதலாளி”
“”கலந்து இருக்கட்டுண்டா. இது ஆம்பள வேலை, பொம்பளெ வேலைன்னு தனித் தனியா இருக்குதா இப்போ பனியன் கம்பனியிலெ”
“”என்னங்க. டளன் பஸ் மாதிரி ஆயிப்போச்சு பனியன் கம்பனி. நாலு பேரு வர்றாங்க. நாலு பேர் போறாங்க”
“”அதென்னடா டளன் பஸ்?”
“” அங்கங்க நிக்கறதும் போறதும், அங்கங்க ஆளுக ஏர்றதும், எறங்கறதும்ன்னு இருக்கற மாதிரி ஆளுக வர்றாங்க போறாங்க அதுதா”
“” நல்ல பேர்தா”
அவனுக்கு டளன் பஸ் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். யார் எதை ஏற்றி விட்டாலும் சுமப்பவன் என்று.
“”ரயில்வே ஸ்டேசன்லே கும்பல் கும்பலா நிக்கறானுங்க. கூட்டிட்டு வரட்டுங்களா?”
“”அவங்கெல்லா ஊருக்குப் போறதுக்கு நிக்கறாங்கடா. ஊருக்குப் போற அவசரத்திலே நிக்கறவங்களெ எதுக்கு கூப்படறே?”
கலைச் செல்வி சேலம் போகிறேன் என்று ஒரு நாள் புகை வண்டி நிலையம் போக கூடப் போனவன் ஒடிசா போகிற கும்பலைப் பார்த்திருக்கிறான். “”ஊர்ல எந்த திருட்டானாலும், என்ன சிரமம்னானாலும் அவங்களைத்தா போலீஸ் தேடுது. அடையாள அட்டை கேக்கறானுகன்னு கௌம்பீட்டானுக”
போன தரம் அவன் பனியன் கம்பனி வேலைக்கென்று கூட்டிக் கொண்டு வந்தது ஒரு பீகாரிப் பெண்ணை. அவளுக்கு அவன் வைத்த பெயர் அய்ஸ்வர்யா. கம்பனிக்கு கூட்டி வந்த போது என்ன பெயர் என்று முதலாளி கேட்ட போது அவன் வாயிலிருந்து அய்ஸ்வர்யா என்று வந்து விட்டது. அந்தப் பெண்ணிடம் பெயர் கேட்பது எப்படி? என்று தெரியவில்லை. ஏதோ இந்தி படத்தில் கேட்ட துமாரா நாம் என்ற சொற்கள் அவனுக்கு அப்புறம்தான் ஞாபகம் வந்தன. அந்தப் பெண் முதலாளியின் கேள்விக்கு பயந்து முழித்து உளறிவிட்டால் வேலை கிடைக்காமல் போய் விடுமோ? என்ற பயம் இருந்தது.
“”அவ பேரு இதுவா. இல்லே நீயா வெச்சிட்டியா. உனக்கு ஒருத்தி கிடைக்கற வரைக்கும் பாக்கற பொம்பளைகளுகெல்லாம் நீயே ஒரு பேரை வச்சுகிடுவேயா?”
“”அய்ஸ்வர்யா கல்யாணம் ஆனவங்க”
வீதியில் கடக்கும்போது அவள் கணவனுக்கு அடிபட்டிருக்கிறது. அதைப்பார்த்த கோபால் ஆட்டோ பிடித்து பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறான். “”சுக்கிரியா… சுக்கிரியா” என்று அவள் திணறி கண்ணீர் விட்டதை பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
பெரியாஸ்பத்திரி பக்கத்திலே இருந்தது எவ்வளள சளகரியமாப் போச்சு என்பதுதான் அவனுக்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கிறது. ஆட்டோ சார்ஜ் ரொம்பக் கம்மியில்லியா? அதுதா. அவளின் கணவனை ஒரு வாரம் கழித்து வீட்டில் சேர்த்து விட்டு வந்தான். அய்ஸ்வர்யா சாப்பாட்டுக்கு என்ன செய்வாள் என்று அவன் வேலை செய்யும் கம்பனிக்குக் கூட்டி வந்திருக்கிறான்.
“”என்ன வேலை தெரியும்? என்ன வேலை தர்றது?”..
“”உங்களுக்குத் தெரியாதுங்களா முதலாளி”.
“”தொழில்லே எதுளம் தெரியாமெ சுலபமா நுழஞ்சிடறாங்க. ஏதாச்சும் செய்யறதுக்கு இங்க கொட்டிக் கெடக்குது”
ஆணைப்போல் எல்லாவற்றையும் வியர்வை வழியக் கற்றுக் கொண்டாள் அய்ஸ்வர்யா.
டளன் பஸ் போலத்தான் கம்பனியும் இருந்தது. வேலை தெரிந்தவர்கள் ஓவர்லாக் டெய்லர், கட்டிங் மாஸ்டர் என்று வருபவர்கள் கூட இன்னும் கொஞ்சம் வேலை அதிகம் உள்ள கம்பனி என்று வெளியில் போவது சாதாரணம், முன் பணம் கிடைக்கிறதென்று போனவர்கள் உண்டு. வேலை தெரியாமல் அய்ஸ்வர்யா போல் வந்து இருப்பவர்களுக்கும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கும்.அவர்களுக்கு இடம் மாறுவது மற்றும் வேறு இடங்களில் ஏதாவது வேலை பார்ப்பது சுலபமாகவே இருந்தது. அடுக்கிக் கட்டுவது, அட்டைப்பெட்டி உருட்டுவது, பேக்கிங் செய்வது என்று…
அய்ஸ்வர்யா அட்டைப் பெட்டிகளில் ஒன்றாய் ஆகிப்போனாள். அவளைப் போலவே முன்னர் வந்து சேர்ந்து கொஞ்சம் வேலை கத்துக் கொண்டு வெளியில் போனவர்களும் நிறைய இருந்தார்கள். அவர்களில் சிலர் கோபால் கூட்டிக் கொண்டு வந்தவர்களாக இருந்தார்கள்.
“”இந்தக் கண்டிரிக்கு சாம்பிள் நம்ம கம்பனி… எல்லாரும், எல்லா மாநிலத்துக்குகாரங்களும் வேலை பாக்கறாங்க” என்று சரவணன் சொல்லிக் கொண்டிருப்பான்.
கோபால் ஏதாவது பெண்களை கூட்டிக் கொண்டு வருகிற போது எல்லோர் முகத்திலும் நமுட்டுச் சிரிப்பு இருக்கும்.
சரவணன் முகத்தில் நமுட்டுச் சிரிப்பு இருந்தது. இப்போதும் அந்த நமுட்டுச் சிரிப்பு எல்லோருக்கும் வந்து விட்டது.
“”புதுசா ஒண்ணுக்கு ரெண்டா கூட்டிட்டு வந்திருக்கே கோபால்”
“”ஆமாங்க. கஷ்டப்படறவங்க”
“”எந்த தேசத்துக்காரங்க?” …
“” உத்தரப் பிரதேசத்துக்காரங்க”
“”ரெண்டுமா?”
“”ஒருத்தர் உத்தரப்பிரதேசம். இன்னொருத்தர் எம் பொண்டாட்டி”
காதில் குரல் விழுந்தவர்களில் நாலைந்து பேர் ஓடி வந்து முகப்பில் நின்று கொண்டார்கள். “”எப்போ கண்ணாலம் பண்ணுனே? சொல்லவேயில்லை.”
“”திடீர்ன்னு பண்ண வேண்டியதாப் போச்சு”
“”யாரு அவங்க?”
“”அய்ஸ்வர்யா பேர மொதல்லியே ஒரு பொம்பளைக்கு வெச்சுட்டே. இப்போ இவளுக்கு என்ன பேர் வைக்கப் போறே?”
புதிதாய் கூட்டிக் கொண்டு வந்தவளைப் பற்றி அவன் அப்போது சொல்லவில்லை. முன்பு அய்ஸ்வர்யாவின் கணவன், விபத்து என்பதைப் பற்றியெல்லாம் விரிவாய் சொல்லியிருந்தான். வந்த புதியவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களிடமிருந்தது. முதலாளி தலை தெரிந்ததும் எல்லோரும் கலைந்து போய் விட்டார்கள்.
எப்போதாவது அவன் மனைவியைப் பற்றி சொல்லளம் கேட்களம் நிறைய இருக்கும் என்று எல்லோருக்கும் ஏகமனதாய் தோன்றியது.
குறிப்பாய் அவள் மனைவி பெயரையும்.
—
subrabharathi@gmail.com
- சமுதாய அக்கறை உள்ளவை [வளவ. துரையனின் “சாமி இல்லாத கோயில்” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]
- பிரிவை புரிதல்…
- 2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !
- Tamil Nadu Science Forum, Madurai District District Level 24th National Children Science Congress….
- ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்
- தொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- A Lecture in Remembrance of MSS Pandian 10th November 2016
- மௌனம் பேசுமா !
- ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்
- காரணங்கள் தீர்வதில்லை
- மரத்துடன் மனங்கள்
- மெரிடியனுக்கு அப்பால்
- வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.
- உண்மை நிலவரம்.
- (வளவ. துரையனின் வார்த்தைச் சாட்டைகள் என்ற சிறுகதையை முன்வைத்து) ஒரு கதை; மனதின் எட்டுத் திசைகள்
- டவுன் பஸ்