அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 2 of 13 in the series 18 டிசம்பர் 2016

ayyapapanicker323

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்
=======
மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியமான கவிஞர், இலக்கிய விமர்சகர், கல்வியியலாளர் என்று கூறுவதோடு அல்லாது கேரளத்தின் நவீனத்துவவாதி, பின்நவீனத்துவக் கர்மபிதா என்றெல்லாம் விவரணம் வரையத் தகுதியான ஒரு எழுத்தாளர் கே.அய்யப்ப பணிக்கர். அப்படியே கொஞ்சம் சுந்தர ராமசாமி சாயலில் இருப்பார். பழங்கால இந்திய அழகியலையும், இலக்கிய பாரம்பரிய நெறிகளையும் இலக்கியங்களில் நுழைத்திருந்தார். மலையாளக் கவிதைகளின் மரபுத் தரத்தை நவீனப்படுத்திய புதுமையாளர் எனவும் மிகைப்படுத்தாமல் கூறலாம்.

தனது தலைமுறை சார்ந்த நாடகக் கலைகள் சம்பந்தமாக பணிக்கர் எழுதிய “அய்யப்ப பணிக்கரின் கிருதிகள் மற்றும் சிந்தனைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1960களில் புவியியல் மையக் கருக்களை வைத்து மனித மனம், எள்ளல், நகைப்பு முதலான வாழ்நிலை அமிசங்களை முன்வைத்து “குருஷேத்திரம்” எனும் நூலையும் எழுதினார். இது மலையாளக் கவியுலகின் திருப்புமுனையான படைப்பாக அமைந்தது. இந்திய இலக்கிய சமூக நிறுவகமான சாகித்திய அகாடமியில் பிரதம ஆசிரியராகி “இந்திய இலக்கியக் கலைக் களஞ்சியம் (Indian Literary Encylopedia) என்ற தொகுப்புக்களைப் பதிப்பித்தார். சரஸ்வதி சம்மன் எனும் விருதைப் பெற்றதன் மூலம் தெய்வீக எழுத்தாளன் என்ற நிலையில் அணுகப்பட்டார். பாலமணி அம்மா என்ற கவிஞருக்குப் பிறகு இவ்விருதைப் பெற்றவர் பணிக்கராவார். இதன் பின்னர் 2012ல் சுகதகுமாரி இவ்விருதைப் பெற்றார்.

கேரளாவைக் கல்விகற்ற மாநிலமாக மாற்றிய பெருமை பணிக்கர் போன்றோரின் கூரிய விமர்சனப் பார்வைகள் தான். குறிப்பாகத் தான் வாழ்ந்த சமூகத்தில் தன்னைச் சூழ அப்பட்டமாகக் காணப்பட்ட இனவாதம் (Communalism) மற்றும் சாதியம் (Casteism) என்பவற்றையே தன் படைப்புக்கான சாட்சிகளாக எடுத்தார். நமது தமிழ் சமூகத்தின் நிலைகளை பாரதியார் தோலுரித்தது போல இவரும் பச்சையாகவும் அங்கதமாகவும் கூறினார்.

குழப்பமான அதேநேரம் சக்திவாய்ந்த உருவமைப்பு, குறியீடுகள் மற்றும் சொல்லாளுமை முதலான இலக்கிய யுக்திகளை வித்தியாசமான விதத்தில் நெறியாள்கை செய்து மலையாளக் கவிதையின் சிற்பி போலவே செயற்பட்டிருந்தார். சொற்களில் மாயம் செய்து எழுத்தாளுமைகளை வியப்பிலாழ்த்திய தகுதியால் தான் இவரை மலையாள இலக்கிய உலகம் “எழுத்தச்சன்” என்கிறது. அதாவது மலையாள இலக்கிய உலகின் தந்தை என்று பொருள். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் “களக்காத்து குஞ்சன் நம்பியார்” உடன் இணைத்து இவர்தம் படைப்புக்கள் போற்றப்பட்டது.

ஏனெனில் மலையாளத்தில் நையாண்டிக் கவிதைகளின் (Satirist Poetry) பிதாமகன் என்று நம்பியாரை அழைப்பர். அதேபோல பணிக்கரும் தனது படைப்புகளில் அங்கதம், வசை, முரண்தன்மை முதலானவற்றைக் கையாண்டு சமூகநிலைகளின் அறியாமைக் கோர்வைகளை சற்றே மாற்றியமைக்க முயன்றிருந்தார். தமிழ்ச் சமூகம் போலன்றி, கேரள சமூகம் இலக்கியம் சார்ந்த ஒரு நபரை சமூகத்தின் கதாநாயகனாக ஏற்றுக்கொண்டது. அதனால்தான் சமூகக் கட்டமைபாபுக்களிலும், முற்போக்குச் சித்தாந்தங்களிலும் அந்த மாநிலமும், மொழிக்குழுமமும் முதன்மை பெற்றிருக்கிறது.

வாழ்நிலத்தின் விளிம்புநிலை நிஜங்களைத் தனது படைப்புகளினூடாகத் தெளிவுபடுத்தியுள்ளார். செயற்றிறன் மிக்க சொற்களையும், குறியீடுகளையும் பிரயோகித்து மரபுத் திரிபற்ற கவிதைகளை தன் வாசகர்களுக்கு வழங்கிய பெருமை பணிக்கரைச் சாரும்.

“பணிக்கரின் கவிதைகள் உலகத்துடன் சம்பந்தப்பட்டுள்ள விடயங்களை எனக்குக் கொணர்ந்து தருவதில் பேருதவி புரிந்துள்ளது”
இது பிரபல ஒரியக் கவிஞர் ஜெயந்த மஹாபத்ராவின் கூற்று. பணிக்கரின் கவிதைகள் உலகத் தளத்தில் விரிவுற்றதற்கு இக்கருத்தே தக்க சான்று. இதே முன்வைப்பினைத் தான் சமூக மட்டங்களில் காலூன்றிய இவர் கவிதைகள் பெரும் புரட்சி செய்திருந்தன.

மலையாள மொழிப் புதுக்கவிஞர்களான என்.என்.கக்காடு, கே.சச்சிதானந்தன், ஆற்றூர் ரவிவர்மா, சுகதகுமாரி, ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோருடன் இவரை இணைத்துக் கொள்ளலாம். எனினும் பணிக்கரின் தனித்துவம் மற்றவர்களிடமிருந்து மிகவும் முந்தைய தரத்துக்குள் அல்லது காலத்துள் வரக்கூடியது எனலாம்.

இருபதாம் நூற்றாண்டில் மேலோங்கிக் காணப்பட்ட ஆழ்மன வெளிப்பாட்டுநிலை (Surrealism) பற்றிய வாதங்களை கருப்பு நகைச்சுவை (Black Humour) உடன் ஒண்றிணைத்து மத்தியதரக் குடும்பங்களின் தனிப்பட்ட கபடவாழ்க்கையை வெளிக்காட்டினார். கருப்பு நகைச்சுவைக்கு உதாரணமாக- “டயானா எதற்காக வீதியைக் கடந்து சென்றார்?”
என்ற வினாவிற்குப் பதில், “அவர் சீல்ட் பெல்ட் அணிந்திருக்கவில்லை” என்பது போல வரும். (இது பணிக்கரின் கூற்று அல்ல. ஒரு உதாரணத்துக்காகக் கூறினேன்)

இதேபோன்ற படைப்புக் கோட்பாடுகளை மேற்கத்திய எழுத்தாளர்களும் முன்வைத்திருந்தனர். குறிப்பாக இன்று வரைக்கும் கருப்பு நகைச்சுவை என்பது ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரு புதினமாகவே நோக்கப்படுகிறது. நமது பிராந்தியங்களில் இன்னும் வளராத அல்லது நாட்டாரியல் சார்ந்த மனோநிலையில் நின்று நகையுறுவதைக் காணலாம். விளாடிமீர் நெபகோவ், ஜோசப் ஹெலர், ஜோன் பர்த், தோமஸ் சைன்கோன், எட்வார்ட் அல்பீ, புரூஸ் ஜே பிரைட்மேன் ஆகியோரை பணிக்கரின் மேற்சொன்ன கோட்பாட்டு தரத்தில் வகைப்படுத்தலாம்.  எழுத்து வகையிலிருந்த கருப்பு நகைச்சுவை இன்று திரைப்படங்கள் வரை சென்றுள்ளது.

ஆங்கிலத் திரைப்பட இயக்நர்களான குயின்ரன் ரறாரினோ, ஜோயல் கோஹன், மார்டின் ஸ்கோர்ஸி, டேவிட் பிஞ்சர் முதலானோர் Black Comedy படங்கள் இயக்கி வெற்றி பெற்றவர்களாவர். Pulp Fiction, Fargo, Fight Club, Goodfellas போன்ற படங்களில் கருப்பு நகைச்சுவையுடன் கலந்த சமூக எள்ளல் காணப்படும். இவை எண்பதுகளின் பிற்பாடு தான் திரைப்படமாக்கப்பட்டு பிரபலமாகியிருந்தது. (ஆரம்பத்திலும் Black Comedy) படங்கள் வந்தன. எனினும் இவை அளவுக்கு சென்று சேரவில்லை) பணிக்கர் இதுபோன்ற பெருங்கொள்கைகளை எண்பதுகளுக்கு முன்பே இலக்கியங்களில் எழுதியிருந்தார். இவரின் “குதிரை நடனம்” என்ற  பின்வரும் கவிதையை  இங்கு குறிப்பிடலாம்.

“”நான்கு பெரும் குதிரைகள்
அலங்கரித்துவந்தன.
ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு.
ஒன்று கருமை ஒன்றுக்கு தவிட்டுநிறம்.

ஒன்றுக்கு நான்குகால்.
ஒன்றுக்கு மூன்றுகால்.
மூன்றாவதற்கு இரண்டுகால்.
நான்காவது ஒற்றைக்காலன்.

ஒற்றைக்கால் குதிரை சொன்னது,
மற்றவற்றிடம்
நடனத்துக்கு நேரமாயிற்று தோழர்களே
நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோம்.

நடனம் தொடங்கியது .
நான்குகாலன் நடுங்கி விழுந்தது.
மூன்றுகாலன் மூர்ச்சையாயிற்று.
ரெட்டைக்காலன் நொண்டியடித்தது.

ஒற்றைக்காலன் குதிரை மட்டும்
நடனம் தொடர்ந்தது””.

இக்கவிதையின் மூலமானது அக்காலத்தில் நிலவிய அரசியல்-சம்பிரதாய நிலைப்பாடுகளையும், சமூகவியல் அபத்தங்களையும் உள்ளார்ந்த விதமாகக் கேலி செய்வது போலவே உள்ளது. சமத்துவத்தை வேண்டி நின்றவர்கள் தகுதியற்ற தலைவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து சுதந்திரங்களையும், சமூக உரிமைகளையும் இழந்து பொருளாதாரத்தில் பின்தங்கி நிற்பது போன்ற ஒரு கருத்தொருமிப்பைக் கவிதையில் காணலாம். கவிதைகளின் வடிவங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவோ, அதனூடாக ஒரு பரிசோதனையைச் செய்யவோ பணிக்கர் தயங்கவில்லை. உலக இலக்கியக் கதவுகளை லாவகமாகத் திறந்து விட்ட மிக முக்கியமானவராக தன்னை பிரஸ்த்தாபித்திருந்தார். பிரடறிக் ஜேம்ஸன், ஏ.கே.ராமானுஜன், றிச்சர்ட சீஹ்னர் போன்றோரின் படைப்புக்களிலுள்ள வசனங்களும், இவரது படைப்புக்களின் முகாந்திரமும் ஒருவித ஒற்றுமை என்றும் கூறலாம்.

எனது சுவரின் மீது என்றொரு கவிதையில்,

“கண்ணீர்த்துளிகள் உருகியுடைந்து விழுகின்றன…
காதுகள் திறவுண்டு போகின்றன. நரம்புகள் சிவத்துப் புடைத்தெழுகின்றன.”

என்ற நடையில்  வரும் பெரும்பாலான சொற்பதங்கள் சமூகத்தின் மீது உந்தித் தொடுக்கப்பட்ட மாறுதலுக்கான வினைகள் என்றே கருதவேண்டும். சச்சிதானந்தம் அவர்களிடம் காணப்பட்ட சொற்களின் நீட்டல், வீரான் குட்டி வெளிப்படுத்திய சமூக அடிநிலை அபத்தம் என்பவற்றின் பண்புகளை தனியொரு படைப்பாளியாக காத்திரமான பங்கை தந்துள்ளார்.

பத்மஸ்ரீ, கேந்திர சாகித்திய அகடமி விருது, மாநில சாகித்திய விருது, கபீர் சம்மன் விருது, அஸான் விருது, வயலார் விருது மற்றும் வள்ளத்தோல் விருது என்று பல சமூக-இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். பணிக்கருக்கு விருதுகள் புதிதுமல்ல. அல்லது அவ்விருதுகள் எழுத்தாளனின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடப் போவதுமல்ல.

தன்னுடைய நான்கு தசாப்த இலக்கியப் பயணத்தில் 25 புத்தகங்களைப் படைத்துள்ளார். மலையாளப் படைப்புலகில் இவை ஒரு மைல்கல் ஆனதனால் முக்கியத்துவம் கருதி இவற்றைப் பிறமொழிகளிலும் மொழிபெயர்துமுள்ளனர்.

பல தசாப்த இலக்கியப் போராட்ட விளைவில் தாம் சார்ந்த சமூகத்தை ஒருநிலைப்படுத்தி உலகப்படைப்புக்கான அங்கீகாரத்தை தருவித்து மக்களின் வாழ்வியல் சிந்தனை முறைகளை மாற்றியமைக்கும் வல்லமைமிக்க காட்சிநிலை எழுத்தாளர்களையே சாரும். அய்யப்பப் பணிக்கருக்கு இந்த விவரணம் வெகுவாகப் பொருந்தும்.
====
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Series Navigationபிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்பறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *