இரட்ணேஸ்வரன் சுயாந்தன்
••••••••••••••••••
“”கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய உருவம்
என்னைப் போலவே
தோற்றம் மாறி
நகரத்தில் குறுக்கும்
நெடுக்குமாக உலாவுகின்றன.””
ரமேஷ்-பிரேமின் இந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் கமல் ஹாஸனின் திரைப்படம் சார்ந்த முற்போக்குச் செல்வாக்கு இன்னும் கடைக்கோடி மக்கள் வரை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. ஏனைய தமிழ்ப் படைப்புக்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் வெளிவந்த உலக சினிமா அன்பே சிவம் (2003) என்றால் அது மிகையல்ல.
உலகின் பல்வேறுதரப்பட்ட Magnum Opus தர படைப்புக்களை தன் ஒரே படைப்பில் உள்வாங்கிய சினிமா கலைக்களஞ்சியம் (Encyclopedia) எனக் கமல் ஹாஸனைக் கூறலாம். இலக்கியம், உலக சினிமா, ஓவியம், தத்துவார்த்தங்கள், மதக் கொள்கைகள் மற்றும் ஒருமைப்பாடு எனப் பலவிதமான கூறுகளை படம் நெடுகிலும் கடைந்தெடுத்திருந்தார் எனலாம். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்தே கமல் நடிகனாகத் தோன்றும் அநேக படங்களில் அவரே மறைமுக இயக்குநராக இருப்பார். அன்பே சிவமும் அதற்கு விதிவிலக்கல்ல.
அவற்றின் தனித்தனிப் பண்புகள் கலைஞானி மீதான விமர்சகர்களின் படைப்பபிமானத்தை மேலும் மரியாதைக்குட்படுத்தும் .
1. உலக சினிமா:
ஹாலிவூட்டில் 1987 இல் வெளியான ‘Planes, Trains and Automobiles’ எனும் நகையுணர்வு திரைப்படத்தின் மையக்கூறுகளை முன்னிறுத்தியே அன்பே சிவம் திரைப்படத்தின் கதை நகர்வை அவதானிக்கலாம். நியூயோர்க்கில் இருந்து சிக்காக்கோ செல்வது போல ஆங்கிலத்தில் வருவதை புவனேஸ்வரில் இருந்து சென்னை நோக்கிய பயணத்தோற்றத்தை தமிழில் அமைத்திருந்தார். அவற்றுக்கிடைப்பட்ட விடயங்களில் சுவையான காட்சி விபரிப்புக்களையும், Non Linear கதையுத்திகளையும் தன் படைப்பு முறையில் கையாண்டிருந்தார். உலக சினிமா படைப்பின் Inspire ஆக இருந்தாலும் தன்னிலை சார்ந்த வழுக்களை பெருமளவில் தவிர்த்திருப்பார். உதாரணமாக நடிகைகளின் அங்கங்களை திரைப்படத்தின் எந்தப்பகுதியிலும் கவர்ச்சிகரமாகக் காட்டியிருக்கவில்லை. அன்பே சிவம் திரைப்படத்தின் ஒப்பனை சார்ந்த விடயங்களுக்காக அமெரிக்காவின் பிரபல மேக்கப் நிபுணர் மைக்கல் வெஸ்டமோர் (Michael Westmore) என்பவர் பணியாற்றியிருந்தார். இவர் 1985ஆம் ஆண்டு வெளிவந்த Mask என்ற திரைப்படத்தின் ஒப்பனை வடிவமைப்புக்காக ஒஸ்கார் விருது பெற்றவர் என்பது விசேட அம்சமாகும்.
2. ஓவியம்:
மெக்சிக்கோவின் பிரபல சுவரோவியக் (Muralism) கலைஞர் தியாகோ ரிவேரா அவர்களால் 1934 இல் உருவாக்கப்பட்ட ‘Man at The Crossroads’ எனும் சர்ச்சைக்குரிய ஓவியத்தில் முதலாளித்துவத்தை நையாண்டிக்குட்படுத்த பயன்படுத்தியிருந்தார். ரிவேரா தனது ஓவியத்தை அமெரிக்காவில் உருவாக்கும் போது ரஷ்யத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் மே தின பேரணி ஆகியவற்றை கம்யூனிச நோக்கில் உருவாக்கியிருந்தார். அதுவே அங்கு பெரும் எதிர்ப்பலைகளைக் கிளப்ப மெக்சிக்கோ திரும்பி தனது பணிகளை முடுக்கிவிட்டிருந்தார். அதே போக்கில் அன்பே சிவம் திரைப்படத்தில் முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் 910 என்கிற கம்யூனிச குறியீடுகளால் தன் கொள்கைகளை ஓவியத்தில் கூறியிருந்தார். அல்லது காட்சிப்படுத்தி திரைப்படத்திற்குள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார்.
3. தத்துவார்த்தங்கள்:
கமல் தன்னை ஈர்த்த பல தத்துவங்களையும், எதிரான சில தத்துவங்களையும் திரைப்படம் நெடுகிலும் கொணர்ந்த விதம் சிறப்புமிக்கது. அவற்றின் மூலம் தன்னை ஒரு மனிநேயராக் காட்டி, உயிர்களின் பெறுமதியையும் கூறியிருந்தார். குறிப்பாக கம்யூனிசம், கடவுள் மறுப்புக் கோட்பாடு, பொதுநலம் (Altruism), மனிதாபிமானம் என்ற தன்னிலை சார்ந்த கொள்கைகளையும், முதலாளித்துவம், உலகமயமாதல் என்ற சமூக அக்கறையற்ற கொள்கைகளைப் பிறர் வாதமாகவும் கையாண்டிருப்பார். அதனைச் சொல்ல அவர் கையாண்ட Non-Linear கதை சொல்லி முறை புதிய நோக்கில் அமைந்தது.
4. இலக்கியம் மற்றும் மதக் கொள்கைகள்:
‘அன்பே சிவம்’ எனும் திருமூலரின் திருமந்திரச் செய்யுளையும், குற்றம் செய்யும்போது நாசர் சொல்லும் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்கிற திருவாசக வரிகளையும் சைவத்தமிழ் இலக்கியங்களில் இருந்தே பெற்றிருந்தார். அத்துடன் இதில் கூறுகின்ற திருவாசக வரிகளை கவிஞர் கனிமொழியின் கவிதை ஒன்றுடன் இணைத்துப் பார்க்கலாம்.
அக்கவிதையானது;
“எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதேயில்லை!”
இக்கவிதையும் அது போன்றதொரு கருத்தொற்றுமையைக் காட்டி நிற்கிறது. அதாவது மாதவிலக்கான பெண்களுக்குக் கோயிலுக்குள் இடமில்லை, ஆனால் குற்றமும் கொலையும் செய்பவர்கள் தினமும் சொல்வது “தென்னாடுடைய சிவனின் நாமம்” என்ற நையாண்டிப் போலியை (Parody) இங்கு அவதானிக்க முடிகிறது. உத்தமன் என்ற பெயரை வைத்து ரயிலில் திருடுகிற காட்சிகளில் பல கருத்துக்கள் வெளிவருகிறது. இது போன்ற அபத்தங்களில் சமூகம் இன்னும் அறியாமை நிலையில் தான் உள்ளது எனவும், தனவான்கள் கனவான்களாக முயற்சி செய்வது போல் நடிக்கிறார்கள் என்ற கருத்தியலும் மேலோங்கியே நிற்கிறது. மூடக்கொள்கைகளின் நியாயம் தொடர்ந்தும் கற்பிக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தை அங்கதச் சுவையில் திரைப்படம் கூறிச் சென்றது எனில் மிகையல்ல.
5. ஒருமைப்பாடு:
“உலகத்தின் பின்னின்று சிந்திக்கும் இந்தியன்” என்பது கலைஞானியின் கொள்கை. அது போலவே தனது வழக்கமான ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளை இத்திரைப்படத்திலும் நிலைகொள்ளச் செய்தவிதம் வியப்பைத் தருகிறது.
மகாநதி திரைப்படத்தில் வங்கமொழி பேசி அம்மக்களைச் சந்திப்பதாகட்டும், நம்மவரில் வரும் தெலுங்கு மொழிப் பிரியமானாலும் சரி, ஹேராமில் வங்காளிப்பெண்ணைத் திருமணம் செய்வதும் அதே வடிவில் மன்மதன் அம்பு திரைப்படத்தில் பிரஞ்ச் பெண்ணை மணம் புரிவதுமாகட்டும் அவரது ஒருமைப்பாட்டை தொடர்ந்து வரும் படங்களில் அவதானிக்கலாம். வேட்டையாடு விளையாடு படத்திலும் அமெரிக்க உதவியாளரை பொலிஸ் பணிக்கு வைத்திருப்பார். அதே போலத் தான் அன்பே சிவம் திரைப்படத்திலும் ஒடிசா மக்களுடனான அவரது Conversation ஐ அவதானிக்க முடியும். இதுபோன்ற தொலைநோக்குச் சிந்தனைகளை (Foresight) விதைக்கும் போது சமூகத்தின் ஆளுமை விருத்திகளும், அறிவுசார் காட்சிநிலைகளும் விருத்தியடையும் என்பது பிரக்ஞைபூர்வமான உண்மை.
பல்வேறுபட்ட இணைக்கூறுகளை ஒரே திரைப்படத்தில் இணைத்து தன் கொள்கை சார்ந்த வாதங்களை முன்வைப்பதில் கமல் வெற்றி கண்டிருந்தார். ஆனால் கமல் எனும் கலைஞனைச் சரியாகப் பயன்படுத்துகிற அறிவுநிலை முதிர்ச்சி, மற்றும் பக்குவம் தமிழ்சினிமாவிடம் அல்லது சமூகத்திடம் இன்னும் கைகூடவில்லை/இல்லை என்பது தான் நிதர்சனம்.
●
By:சுயாந்தன்.
- ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா இறுதியாக வால்மீன் மேல் விழ வைத்து புதிய தகவல் அனுப்புகிறது.
- வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்
- ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை…..
- ஈரத் தீக்குச்சிகள்
- அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்
- ஒரு திரைப்படத்தின் பல உள்வாங்கல்கள்; Via கமல் ஹாஸன்
- தொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 7, 8 , 9
- தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள்
- திரும்பிப்பார்க்கின்றேன் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்