முருகபூபதி
இலக்கியச்சிந்தனை அமைப்பின் விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன்.
அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன் உரையாடியபொழுது, ” இலங்கை திரும்பு முன்னர் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் அர்த் சத்யா படத்தையும் பார்த்துவிட்டுச்செல்லுங்கள். ” என்றார்.
1981 இல் இரண்டு முக்கிய அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் பொலிஸார் நடத்திய வேட்டையில் யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டதை சித்திரிக்கும் ஒரு இலட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையும் சுஜாதா எழுதியிருந்தார்.
சென்னையிலிருந்துகொண்டு அந்தக்கதையை எவ்வாறு எழுதினீர்கள் எனக்கேட்டபோது, அதற்கான முன்கதைச்சுருக்கத்தை சொல்லிவிட்டே அர்த்சத்யா படத்தை அவசியம் பாருங்கள் என்றார். அதற்கிடையில் வேறும் சில சுஜாதா ரசிகர்கள் அவரைச்சூழ்ந்துகொண்டதால் மேற்கொண்டு அவருடன் உரையாட முடியவில்லை.
எனினும் மேலும் உரையாடுவதற்கு தமது பெங்களுர் வீட்டுக்கு வாருங்கள் என்று தமது முகவரியை எழுதித்தந்தார். ஆனால், என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அவர் சொன்னதால் அர்த்சத்யா படத்தை பார்க்க விரும்பினேன். நண்பர் கவிஞர் அக்கினிபுத்திரனும் அந்தப்படத்தை அவசியம் பாருங்கள் என்று சொல்லியிருந்தார்.
இரண்டு முக்கியமான படைப்பாளிகள் சொன்னதன் பின்னர் அதனைத்தவறவிட விரும்பவில்லை.
அந்தப்பயணம்தான் எனது முதலாவது சென்னை அனுபவம். பச்சையப்பன் கல்லூரியில் படித்த இலங்கை மாணவர்கள் வசித்த நுங்கம்பாக்கம் வாடகை வீட்டில் சில நாட்கள் நின்றேன். சென்னை எனக்குப்புதுசு. தனியே இரவில் நடமாட சற்றுத் தயக்கம் இருந்தமையால் அம்மாணவர்களையும் அர்த்சத்யா பார்க்க அழைத்தேன்.
அவர்களுக்கு ஹிந்தி படம் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை. அவர்கள் மணிவண்ணனின் இயக்கத்தில் அச்சமயம் வெளியான நூறாவது நாள் படத்தையே பார்ப்பதற்கு பெரிதும் விரும்பியிருந்தனர்.
அந்தப்படம் அக்கால கட்டத்தில் சென்னையில் நடந்த பிரபலமான ஓட்டோ சங்கரின் கதையைப்போன்ற திகில் படம் எனச்சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
பின்னர் ஒரு உடன்பாட்டுக்கு , முதலில் அர்த்சத்தியாவும் மறுநாள் நூறாவது நாளும் பார்த்தோம்.
சுஜாதாவும் அக்கினிபுத்திரனும் நான் இலங்கை அரசியல் பின்னணியில் மட்டுமல்ல இந்தியா உட்பட கிழக்காசிய நாடுகளின் பின்னணியிலும் பார்க்கவேண்டிய படத்தையே சிபாரிசு செய்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.
யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேள்விஞானத்துடன் எழுதிய சுஜாதாவுக்கும் அந்தப்படம் மிகவும் பிடித்தமானதாக இருந்தமையால் ஒரு இதழில் சிறிய விமர்சனமும் எழுதியிருந்தார்.
ஹிந்திப்படங்கள் என்றால் அர்த்தம் புரியாதுவிட்டாலும் செவிக்கினிய இசை இருக்கும், படங்களும் ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக ரசனையை தீவிரப்படுத்தும் என்ற பொதுவான அபிப்பிராயம்தான் எனக்குமிருந்தது.
அஷ்லி நக்லி, சங்கம், லவ் இன்டோக்கியோ, ஜிஸ்தேஸ்மன் கங்கா பேத்திஹே, ஜன்வர், சோட்டி சி முலாகட், மிலான், ஏக் பூல் தோ மாலி, கும்நாம், ஆராதனா, மதர் இந்தியா, கீத் முதலான பல படங்களை இலங்கையில் பார்த்து ரசித்து, இந்த ஃபோர்மூலாதான் ஹிந்திப்படங்கள் என நம்பிக்கொண்டிருந்த எனக்கு, அந்த இரண்டு படைப்பாளிகளும் சொன்ன அர்த்சத்யா எனது சினிமா ரசனையில் புதிய பாதையை திறந்துவிட்டது.
இங்கு நான் குறிப்பிட்ட ஜனரஞ்சக ஹிந்திப் படங்கள், வசூலை மாத்திரம் குறியாகக்கொண்டிருந்தவை. சில தமிழுக்கும் தழுவப்பட்டு முன்னணி தமிழ் நடிகர்களினால் நடிக்கப்பட்டிருக்கிறது.
சங்கம் – ஶ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை, மிலான் – சாவித்திரியின் பிராப்தம், ஜிஸ்தேஸ்மன் கங்காபேத்திஹே – சாணக்கியாவின் நான் ஆணையிட்டால், கும்நாம் – ஏ.வி.எம்.மின் அதே கண்கள். ஆராதனா – சிவாஜி நடித்த சிவகாமியின் செல்வன், பிரம்மச்சாரி – ஏ.சி. திருலோகசந்தரின் எங்க மாமா – இவ்வாறு ஹிந்தியிலிருந்து பல தமிழ்ப்படங்கள் பின்னாளில் அழகாக சுடப்பட்டன.
இவற்றில் தமிழக முன்னணி நட்சத்திரங்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர், சாவித்திரி, கே.ஆர். விஜயா, ஜெயலலிதா, ரவிச்சந்திரன் முதலானோர் நடித்தனர்.
தமிழகத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அர்த்சத்யாவையும் விட்டு வைக்கவில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் சத்தியராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தையும் ஓம்புரி நடித்த அர்த்சத்யாவையும் நேரம் கிடைக்கும்பொழுது பாருங்கள்.
பொதுவாகவே வசீகரமான தோற்றத்தையே இந்திய சினிமா உலகம் எதிர்பார்க்கும். ஆனால், தென்னகத்தில் எவ்வாறு வசீகரமான தோற்றம் இல்லாமல் எதிர்நீச்சல் போட்டு நடிகர் நாகேஷ் முன்னணிக்கு வந்தாரோ அதேபோன்று ஹிந்தியில் மாத்திரமின்றி, இந்திய மொழிகளில் மட்டுமன்றி மேலைத்தேய ஆங்கிலம் உட்பட சில மொழிகளிலும் வெளியான படங்களில் நடித்து புகழும் பல சர்வதேச விருதுகளும் பெற்ற ஓம்புரி கடந்த 6 ஆம் திகதி அதிகாலை மும்பையில் அவரது இல்லத்தில் இறந்துகிடக்க காணப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
இவரது மரணத்திலும் மர்மம் நீடிப்பதாக ஊடகங்கள் செய்திகளை பரப்புரை செய்கின்றன. உலகில் பிரபலமான கலைஞர்கள், தலைவர்களின் மரணங்கள் குறித்து சில காலத்துக்கு இந்த மர்ம முடிச்சுகள் பற்றித்தான் பேசப்படும். மர்லின் மன்றோ முதல் எல்விஸ் பிரஸ்லி தொடக்கம் அண்மையில் மறைந்த முன்னாள் நடிகையும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வரையில் இந்த மர்மக்கதைகள் பல்வேறு ஊகங்களுடனும் ஊர்ஜிதங்களுடனும் தொடரத்தான் போகிறது.
ஹிந்தியில் 1984 இல் நான் பார்த்த ஓம்புரியின் அர்த்சத்யா குறிப்பிடத்தகுந்த படம். அன்று முதல் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அதன்பின்னர் அவருடைய City of Joy உட்பட சில படங்களைப் பார்த்திருக்கின்றேன்.
ஒம்புரி கமலின் ஹேராம், மற்றும் அவ்வை சண்முகியின் ஹிந்தி தயாரிப்பிலும் நடித்திருப்பவர். ஷியாம் பெனகல், கோவிந் நிஹலானி போன்ற சிறந்த இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கும் ஓம்புரியின் தனிப்பட்ட வாழ்க்கையும் பிரச்சினைகளை சந்தித்திருக்கிறது. இரண்டு தடவை மணம் முடித்தவர். இவரது சரிதையும் புத்தகமாகியிருக்கிறது.
அர்த்சத்யா – (Half True) பாதி உண்மை
ஓம்புரியுடன் அம்ரிஷ்புரி, நஷ்ருதீன்ஷா, ஸ்மீதா பட்டேல் நடித்த படம். அனாட் வெலங்கர் என்ற கடும்போக்குள்ள பொலிஸ் சப் இன்ஸ்பெக்டரான அனாட் வெலங்கர் ( ஓம்புரி) ராமசெட்டி என்ற உள்ளுர் தாதாவான ஒரு ரவுடிக்கும்பலின் தலைவனுக்கும் அந்தத்தொகுதி எம். எல்.ஏ.க்கும் மத்தியில் போராடி ஒன்றில் நீங்களா…? அல்லது நானா…? என்ற போட்டியை தொடருகின்றார்.
ஊருக்குத்தெரிந்த அந்த மாபியா தலைவன் அரசியல் செல்வாக்குடன் செய்யும் அட்டகாசத்தை அடக்க போதிய அதிகாரம் இன்றி அவஸ்தையுறும் நாயகன் ஓம்புரி இயல்பாக நடித்திருப்பார்.
முரட்டுச்சுபாவம் உள்ள அந்த இன்ஸ்பெக்டர் வெளித்தோற்றத்திற்கு அவ்வாறு இருந்தாலும் இயல்பில் அவன் மிகவும் மென்மையானவன். அவனுக்கு இலக்கியமும் கவிதையும் தெரிகிறது. ஒரு உணவு விடுதியில் சந்திக்கும் உள்ளுர் கல்லூரி ஒன்றின் ஆங்கில இலக்கி விரிவுரையாளர் ஜோஸ்த்னா கோகலேயின் ( ஸ்மீதா பட்டேல்) நட்பு அவனுக்கு கிடைக்கிறது.
பல விடயங்களையும் அவர்கள் மனம்விட்டுப்பேசுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு இரட்டைத்தட்டு பஸ்ஸில் அவர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர். ஒருவன் தற்செயலாக அந்த விரிவுரையாளர் பெண்ணில் உரசிவிடுகிறான். அதனைக்கண்டு பொறுக்கமுடியாத அனாட் வெலங்கர், அவனை வெளியே இழுத்து ஆக்ரோஷமாக அடித்து துவைத்தெடுக்கிறார்.
அவருக்கு வந்த வெறிகண்டு அவள் அதிர்ச்சியடைந்து சமாதானப்படுத்துகிறாள். கவிதையும் இலக்கியமும் பேசும் மென்மையான இயல்புள்ள அவனா இப்படி…? என்று அவள் அவனுடன் விவாதிக்கிறாள்.
மாபியா தலைவன் ராமசெட்டியின் அட்டகாசம் பொறுக்காமல் அவனைக்கைது செய்தாலும் , அவனோ அரசியல் செல்வாக்கினால் வெளியே வந்துவிடுகிறான்.
பின்னர் நடந்த தேர்தலில் அந்த மாபியா தலைவன் எம். எல். ஏ. ஆக தெரிவாகிவிடுவான். இந்த முரண் சப்இன்ஸ்பெக்டருக்கு புலனாகாத புதிர். எவனை கைது செய்தாரோ அவனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டிய சூழ்நிலையின் கைதியாகின்றார் சப் இன்ஸ்பெக்டர். அரசியல்வாதியாகிவிடும் ரவுடிக்கு பணிவிடையும் செய்யவேண்டிய நிலைமை உருவாகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் மேலதிகாரியினால் சஸ்பெண்ட் செய்யப்படும் சப் இன்ஸ்பெக்டர் இறுதியில் ஆத்திரம் அடங்காமல் அந்த அரசியல் ரவுடியைச் சுட்டுக்கொல்கிறார் இன்ஸ்பெக்டர்.
இந்தச் சமூகத்தில் எது உண்மை…? எது பொய்மை….? இரண்டுக்கும் நடுவே ஒரு நேர்மையான பொலிஸ் இன்ஸ்பெக்டரின் நிலை என்ன..? என்பதை ரசிகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறது அர்த்சத்யா.
ஏற்கனவே ஒருவரால் எழுதப்பட்ட கதைக்கு திரைவடிவம் கொடுத்து கோவிந் நிஹலானி இயக்கிய படம். திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற படம்.
ஓம்புரி, பத்மஶ்ரீ, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றவர். பிரித்தானிய திரைப்படத்துறைக்கு ஓம்புரி வழங்கிய சிறந்த பங்களிப்புக்காகவும் மகாராணியின் மரியாதைக்குரிய விருதும் பெற்றவர். அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், கமல்ஹாசன், ஸ்மீதா பட்டேல், சபானா அஸ்மி முதலான முன்னணி நடிகர்களோடு நடித்தவர்.
ஹிந்தியிலும் மலையாளம், பஞ்சாபி, கன்னடம், தமிழ் உட்பட பல்வேறு மொழித்திரைப்படங்களிலும் நடித்திருக்கும் ஓம்புரியின் மறைவு நூற்றாண்டு கண்டுவிட்ட இந்திய திரைப்படத்துறைக்கு பேரிழப்பு.
1984 இல் இவரது அர்த்சத்யா பார்த்த பின்னர்தான் கோவிந்த் நிஹலானி, ஷியாம் பெனகல், தீபா மேத்தா, மீரா நாயர், அபர்ணா சென் ஆகியோர் இயக்கிய தரமான படங்களைப்பார்க்கும் ஆவல் எனக்குள் தூண்டப்பட்டது.
அதனால் அவரது மறைவு எனக்கும் அவரது ரசிகன் என்ற முறையில் இழப்புத்தான்.
1950 இல் பஞ்சாப்பில் பிறந்து 2017 இல் தமது 66 வயதில் மும்பையில் தமது இல்லத்தில் திடீரென்று மறைந்துவிட்டார்.
திடீர் மறைவுக்குள் முளைக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும்பொழுது பாதி உண்மைதான் ( அர்த்சத்யா – Half Truth) வெளியே வரும்.
—0—
- நோய்வாய்ப்பட்ட ” சுமங்கலிகள் “
- மிளிர் கொன்றை
- திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி
- எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”
- கொதிக்கிறது மக்கள் வெள்ளம்
- திருப்பூர் திரைப்படவிழா :சுப்ரபாரதிமணியன்
- ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்
- நெகிழன் கவிதைகள்
- இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை
- தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15
- இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்