எஸ். ஜயலக்ஷ்மி
திருக்கோளூர் சென்ற நாயகி
ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்கால் படுபவர்கள் என்று பொருள். வேதங்களாலும் அளவிடமுடியாத எம்பெருமா னுடைய எல்லாக் குணங்களையும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, அறிந்து அனுபவிக்கும் குணமே ஆழங்கால் படுவதாகும்.
எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதில் நாயக நாயகி (தலைவன், தலைவி) பாவமும் ஒன்று. இந்த உறவே எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்பர். இந்த முறையில் பரம் பொருளைத் தலைவனாகவும் (நாயகனாகவும்) ஜீவாத்மாக் களைத் தலைவியாகவும் (நாயகியாகவும்) வைத்து விளக்கும் பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும், தேவார திருவாசகத் திருமுறைகளிலும் காணலாம்.
நம்மாழ்வாரும், திருமங்கையாழ் வாரும் பெண் தன்மையடைந்து பல திருக்கோயில்களில் வீற்றிருக் கும் எம்பெருமான்களைத் தங்களுடைய பல பாசுரங்களில் பாடி யிருக்கிறார்கள். நம்மாழ்வாருக்கு பராங்குசன் என்றொரு பெயரும் உண்டு. அவர் பெண் தன்மையடந்து பாடும் பொழுது பராங்குச நாயகியாகவே காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வாருக்குப் பரகாலன் என்றொரு பெயர் உண்டு. இவரும் நாயகி பாவத்தில் பாடும் பொழுது பரகால நாயகியாகவே மாறி விடுகிறார்.
இவர்கள் இப்படி பராங்குச, பரகால நாயகியாகி எம்பெருமானை அனுபவிக்கும் பொழுது அவர்கள் பாசுரங்கள் தாய்ப் பாசுரங்கள். மகள் பாசுரங்கள். தோழி பாசுரங்கள். என்று வழங்கப் படுகின்றன. தாய் சொல்வது போல் வரும் பாசுரங் கள் தாய்ப் பாசுரம். மகள் கூற்றாக வருபவை மகள் பாசுரங்கள். தோழி சொல்வது தோழி பாசுரங்கள். இவர்கள் மூவர் கூற்றாக
வந்தாலும் இவற்றைச் சொல்பவர்கள் ஆழ்வார்களே. அவர்களுடைய அனுபவமே தாய், மகள், தோழி மூலமாக வெளிப்படுகிறது.
தாய்ப் பாசுரங்கள்
பெண்ணைப் பெற்று வளர்ப்பவள் தாய். தக்க வயது வந்ததும் மகள் எம்பெருமானிடம் காதல் கொள் கிறாள். அவன் இருக்குமிடம் சென்று சேர வேண்டும் என்று தவிக் கிறாள். தலைவனே, தலைவியைத் தேடி, தலைவி இருக்கு மிடத் திற்கு வரவேண்டும் என்பது தான் நடைமுறை என்றும் தலைவி தானாகவே அவனைத் தேடிச் செல்வது குலமரியாதைக்கு உகந்தது அல்ல என்றும் தாய் நினைக்கிறாள். ஆனால் தன் அருமை மகள் பிரிவாற்றாமையால் வருந்துவதையும் இந்தத் தாயால் பொறுக்க முடிய வில்லை. எம்பெருமானிடமே “என் மகளை என்ன செய்யப் போகிறாய்?” என்று வாதாடுகிறாள்
மகள் பாசுரங்கள்.
தலைவனுடைய (எம்பெருமானுடைய)
பேராற்றலிலும், அழகிலும் ஈடுபட்டு அவனுடைய வீர, தீர கல்யாண குணங்களைக் கேள்விப்பட்டு அல்லும் பகலும் அவனையே நினைத்து ஏங்குகிறாள் தலைவி. இவளுக்குப் பாலும் கசந்து, படுக்கை நொந்து, கோலக் கிளிமொழிகள் குத்தலெடுக்கின்றன. தென்றலும் அன்றிலும் இவள் தவிப்பை அதிகரிக்கின்றன. தன் நிலையை அவனிடம் சென்று சொல்லி வரும்படி பல பறவைகளை யும், வண்டுகளையும், ஏன் மேகங்களையும். தன் நெஞ்சையும் கூட தூதாக விடுக்கிறாள். இந்த நாயகிகள் அவனை அடைந்தால் அல் லது உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன் என்று பதறுகிறார்கள், துடிக்கி றார்கள். கடலையும், நிலவையும் பழிக்கிறார்கள். கோபிக்கிறார்கள்.. தோழியும் தாய்மார்களும் எவ்வளவோ சொல்லியும். கேளாமல் தங்கள் நாயகனைத் தேடிப் புறப்பட்டு விடுகிறார்கள்.
தோழி பாசுரங்கள்
தலைவனைப் பிரிந்து தவிக்கும் நாயகிக்கு உற்ற துணையாக இருப்பவள் தோழி. தலைவியின் நோயையும், அதற்கான காரணத்தையும் அறியாத தாயும், உறவினர்
களும் கட்டுவிச்சியைக் கூப்பிட்டும் வேலனைக் கூப்பிட்டும் வெறி
யாட்டெடுக்கிறார்கள்.. தோழி, தலைவியின் நோய்க்கான காரணத் தையும் அதற்கான பரிகாரத்தையும் சொல்கிறாள்
இனி பொருனையாற்றங்கரை யிலுள்ள (தாமிரபரணி) திருக்குகுருகூரில் ( இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார்
(பராங்குசர்) பராங்குச நாயகியாகி எம்பெருமானைப் பல்வேறு
நிலையில் அனுபவித்ததை நாமும் அனுபவிப்போம் நம்மாழ்வார் பல்வேறு நாயகிகளின் காதலையும் தவிப்பையும் நமக்குக் காட்டு கிறார். ஒவ்வொரு நாயகியும் ஒவ்வொரு ஊர்ப்பெருமானிடம் காதல் கொண்டிருக்கிறாள். காதல் நோயில் தவிக்கிறாள். தன்னை அவனி
டம் ஒப்புவிக்க வீட்டையும் உறவினர்களையும் துறந்து அவனிருக்கு மிடம் நோக்கிச் செல்கிறாள். ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய இத்தகைய தவிப்பு! இனி இந்த நாயகிகளைச் சந்திப்போமா?
திருக்கோளூர் சென்ற நாயகி
நம்மாழ்வாரால் பாடப்பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருக்கோளூர் இன்றைய தூத்துக் குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரிக்கும் தென்திருப்பேரைக்கும் நடுவே அமைந்துள்ளது. பொருனையாற்றின் தென் கரையிலுள்ளது எம் பெருமான் வைத்தமாநிதி சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
மதுரகவியாழ்வாரின் அவதாரத்தலம். நவதிருப்பதிகளுள் ஒன்று.
இங்கு குபேரனின் நிதி உள்ளது என்பது நம்பிக்கை. நிதியைத் தன்னிடம் வைத்திருந்ததால் இவர் வைத்த மாநிதிப் பெருமான் என்றும் குபேரனுக்குச் செல்வத்தை அளந்து கொடுத்ததால் ”செல்வம் அளந்த பெருமாள்” என்று அழைக்கப் படுகிறார்.
நாயகியின் காதல்
இவ்வளவு பெருமை வாய்ந்த வைத்த மாநிதிப் பெருமான் மேல் காதல் கொள்கிறாள் நாயகி. (பராங்குச
நாயகி) சோலையில் குயிலும் சேவலும் சேர்ந்து கூவுவது இவள் காதில் விழுகிறது. அந்தக் குயில்களிடம் இவளுக்குக் கோபம் வருகிறது. குயில்களிடம் சென்று, “குயில்களே! சங்கீதம் தெரிந்த உங்களுக்குக் கொஞ்சமாவது இங்கிதம் தெரிகிறதா? இங்கு நான் பெருமானைப் பிரிந்து உயிர் போவது போல் தவிக்கிறேன். நீங்களோ சமய சந்தர்ப்பம் தெரியாமல் இப்படிக் கூவுகிறீர்களே. உங்களுக்கே இது நியாயமாக இருக்கிறதா? உங்கள் காதலையும் சல்லாபங்களை யும் நொந்து நூலாகிக் கொண்டிருக்கும் என் முன்னால் தான் அரங்கேற்ற வேண்டுமா? பிரிவுத் துன்பத்தால் தவிக்கும் எனக்கு ஆறுதல் சொல்வதை விட்டு விட்டு மேலும் இம்சிப்பது சரியா என்று வேதனையோடு கேட்கிறாள்.
இதற்குள் அன்றில் கரைவது கேட்கிறது. இவள் தாபம் அதிகமாகிறது. அந்த அன்றிகளும் தனக்கு எதிராகவே சதி செய்வதாகத் தோன்றுகிறது. “அன்றில்களே! உங்கள்
கூவல் என் நாயகனின் நினவை மேலும் மேலும் உண்டாக்கி என்னை மேலும் மேலும் நலிவிக்கிறது என்பதை நீங்கள் அறிய வில்லையா? அல்லது அறிந்தும் அறியாதது போல் பாசாங்கு செய்கிறீர்களா?
அவன் கையதே எனது ஆர் உயிர் அன்றில் பேடைகாள்!
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்குண்டோ?
என்று அன்றில்களைக் கோபிக்கிறாள். சோலையில் ஒரு இடத்தில் மயில் கூவும் சப்தம் கேட்டதும் அவற்றிடம் செல்கிறாள். “மயில் களே! உங்கள் கூவும் குரல் கேட்டும் மாயக் கண்ணன் வெளிப்பட மாட்டான். ஏன் வீணாகக் குவுகிறீகள்? அதனால் நீயும் சேவலும் மேலும் மேலும் கூவ வேண்டாம். என்னுடைய மனம், வாக்கு, காயம் மூன்றுமே அவன் பக்கம் சென்று விட்டன. உடலும் உயிரும் நடுவே நின்று சுழல்கின்றன.
இந்திர ஞாலங்கள் காட்டி, இவ்வேழுலக்கும் கொண்ட
நம் திருமார்வன் நம் ஆவி உண்ண நன்கெண்ணினான்
என்று தன் நிலையைச் சொல்கிறாள்
கிளிகள் பேசிய மொழி
இவள் வருவதைப் பார்த்த கிளிகள் கீச் கீச் என்று இவளைக் கூப்பிடுகின்றன. இவள் அருகில் சென்றதும் அவள் சொல்லிக் கொடுத்த, அவளுக்குப் பிரியமான கோவிந்தா, கோவிந்தா என்ற நாமத்தைச் சொல்கின்றன. உடனே நாயகி. ”பார்த்துப் பார்த்து நான் வளர்த்த கிளிகளே! ஏற்கெனவே பிரிவுத் துயரால் வருந்திக் கொண்டிருக்கும் என் காதில் விழும்படி அவன் திருப்பெயரை மறு படியும், மறுபடியும் சொல்லாதே. (இவளே முன்பு அவன் திருநாமம் எனக்கொருக்கால் பேசாயே, என்று சொன்னவள் தான்.) அவன் அதர மும் உன் சிவந்த வாயைப் போலவே உள்ளது. அவன் திருக் கண் களும் திருக் கரங்களும், திருவடிகளும் கூடச் சிவந்த நிறம் கொண் டவையே. உன் பசியநிறத்தைப் போலவே அவனும் சியாமளவண் ணன். அவன் என் உயிருடன் ஒன்றாகக் கலந்தான்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன், கண்ணன், கை , காலினான்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்
அதனால் அவன் பெயரைக் கூவாதே” என்று தடை விதிக்கிறாள்.
கூற்றான மேகங்கள்.
சற்றே நிமிர்ந்த அவள் மேகங்களைப்
பார்க்கிறாள். அவை மேக வண்ணனையல்லவா நினைவூட்டு கின்றன! மழை தந்து வாழ வைக்கும் மேகங்களே நீங்களே எனக்கு எமனாக மாறாதீர்கள். உங்கள் வடிவமே எனக்குக் கூற்றாகத் தோன்றுகிறது.
கூட்டுண்டு நீங்கிய கோலத்தாமரைக் கண், செவ்வாய்
வாட்டமில் என் கருமாணிக்கம், கண்ணன், மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னும் மேகக் குழாங்கள்காள்!
காட்டென்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே
குயில்களிடம் கோபம்
மேகங்களே! மேக வண்ணனை நினைப்
பூட்டி என்னைத் துன்புறுத்தாதீர்கள் என்று மேகங்களைக் கடிந்து கொண்ட நாயகி, குயில்கள் கண்ணா, கண்ணா என்று கூவுவதைக்
கேட்டு. “குயில்களே! அவன் பெயரைக் கூவிக் கூவி என்னை வாட்டி வதைக்க வேண்டாம் என்று நேற்றுத் தானே சொன்னேன். எத்தனை முறை சொல்லியும் கேட்காமல் இருந்து விட்டு இன்று திரும்பத் திரும்ப அவன் பெயரையே கூவிக் கூவி என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்? உங்களை நான் அருமையாக வளர்த்தது இப்படி என்னை நலிய வைக்கவா? பழைய சோற்றோடு தயிர் கலந்து
ஊட்டினேனே! பால் சோறு கொடுத்தேன். இப்படி ஊட்டி ஊட்டி வளர்த் ததற்கு நீங்கள் செய்யும் கைம்மாறு இதுவா?
உயிர்க்கு அது காலன் என்று உம்மையான் இரந்தேற்கு நீர்
குயிர்பைதல்காள்! கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர்ப்பழஞ் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல்வளம் ஊட்டினீர்! பண்புடையீரே!
என்று குயில்களைச் சாடுகிறாள்.
வண்டுகளின் பாடல்
தலைக்குமேல் வண்டுகளின் ரீங்காரம் கேட்கிறது. வழக்கமாக அதை ரசிக்கும் நாயகிக்கு இப்பொழுது அது நாராசம் போல் இருக்கிறது. வண்டுகளே~! நீங்களும் பாட வந்து விட்டீர்களா? நீங்கள் ஒன்றும் பாடவேண்டாம். உங்கள் பாடல் வெந்த புண்ணில் வேல் கொண்டு குத்துவது போலிருக்கிறது. தாமரைக் கண்ணனோ என் உயிரையே கொள்ளை கொண்டு போய் விட்டான் அவனைப் பிரிந்து தவிக்கும் எனக்கு உங்கள் பாட்டு பொறுக்க முடியாமல் இருக்கிறது. உங்கள் பாட்டை உடனே நிறுத்துங்கள்
பண்புடை வண்டொடு, தும்பிகாள்! பண் மிழற்றேன்மின்
புண்புரைவேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
கண் பெருங்கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்
என்று கண்னன் மேல் தனக்கு ஏற்பட்ட வருத்தத்தை வெளியிடு கிறாள்
தாயின் தவிப்பு
இப்படி பலபடியாகத் தவித்த நாயகிக்கு, இப்படித் தவிப்பதை விட அவனிடமே சென்று விடலாமா என்றும் தோன்றுகிறது. அல்லும் பகலும் அனவரதமும் கண்ணனையே நினைத்திருக்கும் நாயகிக்கு எல்லாமே கண்ணனாகி விட்டது ஒன்றும் அதிசயமில்லை. இதைக் கண்ட தாய், ”என் மகள் ஊரில் உள்ளவர்களும் நாட்டில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும் தன்னைப் போலவே எம்பெருமானின் திருநாமங்களையும், மாலை களையும் நினைத்து நினைத்துப் பேசி பிதற்றும் படி செய்து விட்டாள். அவர்களும் இவளைப் போலவே அவனுடைய கல்யாண குணங்களிலே மூழ்கும் படி செய்துவிட்டாள்.
இப்பொழுது என் மகள், அவளுடைய விளையாட்டுப் பொருட்களான பூவைகள், பந்து, கிளிகள், பூக்கூடை,
சிறிய பானை இவற்றை யெல்லாம் புறக்கணித்து விட்டாள். அதற்குப் பதிலாக கண்ணனின் நாமங்களையே சொல்கிறாள். என் மகள் திருக்கோளூர்ப் பெருமானையே நினைத்து நினைத்து உருகியதால் விளையாட்டில் நாட்டமில்லாமல் போய்விட்டாள். ஒரு வேளை திருக்கோளூர் சென்றால் அங்குள்ள சோலைகளையும் குளங்களை யும் கோவில்களையும் நேரில் கண்டு மகிழ்வாளோ?” என்றெல்லாம் கவலைப் படுகிறாள்.
கோளூர் சென்ற நாயகி
ஒருநாள் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த நாயகியைப் பக்கத்தில் காணாததால் தாயார் திடுக் கிட்டாள். அவளுக்குப் புரிந்து விட்டது. கிளி பறந்து விட்டது என்று. ஆனால் தாயுள்ளம் தவிக்கிறது. தன் மகள் திருக்கோளூர்ப் பெரு மானிடம் கழிபெருங்காதல் கொண்டவள் என்பதால் அவள் திருக் கோளூர் நோக்கிச் சென்றிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறாள்.
தன்மகள் நல்லபடியாக திருக்கோளூர் போய்ச் சேர்ந்திருக்க வேண் டுமே என்று தாயுள்ளம் தவிக்கிறது. நாகணவாய்ப் பறவையிடம்
நல்வளம் சேர்பழனத் திருக்கோளூர்க்கே
போருங்கொல்? உரையீர் கொடியேன் கொடி பூவைகளே!
என்று விசாரிக்கிறாள். தன் ம்கள் வீட்டை விட்டு போய் விட்டாள். இவள் போகும் ஊரிலுள்ள பெண்கள் இவளை எப்படிப் பார்ப்பார்கள்?
இவள் த்னது மெல்லிய இடையானது வருந்தும் படி செல்வதற்குச் சம்மதித்து விட்டாள் .ஆனால் அவ்வூர்ப் பெண்கள் என்ன சொல் வார்களோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
கொல்லை என்பார்கொலோ? குணம் மிக்கனள் என்பர்
கொலோ?
என்று தாய், பெண்களுக்கே உரிய தன்மையைப் பற்றிக் கவலைப் படுகிறாள். அவ்வூர்ப் பெண்கள் இவளை நல்லபடியாக வரவேற்க வேண்டுமே என்ற கவலை அந்தத் தாய்க்கு.
உதவாத இளமான்
இந்தப் பெண் இனி தனக்கு உதவ மாட்டாள் என்று தாய் தீர்மானித்து விட்டாள். ஆனால் அந்தத் தாயுள்ளம் தன்னுடைய பெண் திருக்கோளூர் நோக்கி நல்லபடியாகச் சென்று சேர வேண்டுமே என்று கவலைப் படுகிறது. அவள் கண்ணீர் மல்க தளர்ந்த நடையோடு ஒசிந்து ஒசிந்து செல்லவேண்டுமே கண்ணீர் மறைத்தால் பாதை தெரிய வேண்டுமே என்ற கவலை தாய்க்கு!
மல்குநீர்க் கண்களோடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் பகலும் நெடுமால் என்றழைத்து இனிப்போய்
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே
என்று தாய் தவிக்கிறாள். எங்களை விட்டு நீங்கிய என் மகள் எந்த ஒரு சிறந்த பொருளைக் கண்டாலும் இவை என் கண்ணனுக்கு என்று எடுத்து வைத்துக் கொள்வாள். எங்களளைப் பற்றிய சிந்த னையோ கவலையோ இல்லாமல் சென்று விட்டாளே, என் மகள்
இப்படிச் செல்வாள் என்று நான் சிறிதும் நினைக்கவேயில்லை.
என்று வருந்துகிறாள்.
சோறு நீர் வெற்றிலை
பசித்தவனுக்குச் சோறு போலவும். தாகமெடுப்பவனுக்குத் தண்ணீர் போலவும். சுவை நுகர வேண்டு பவனுக்கு வெற்றிலை போலவும், என் மகளுக்கு எல்லாமும் கண்ணன் ஆகிவிட்டான். அவளால் அவன் இல்லாமல் இருக்க முடியாது. அதனால் அவள் நிச்சயம் திருக்கோளூர் ஊர் வினவிச் சென்று சேர்ந்திருப்பாள். என்று திடமாக நம்புகிறாள் இந்தத் தாய்.
உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்னன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என இளமான் புகுமூர் திருக்கோளூரே
பராங்குச நாயகி திருக்கோளூர்ப் பெருமானிடம் சேர்ந்து, அவனை தினைத்தனையும் விடாதவளாகி விளங்குகிறாள்.
===========================================================================
- போய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்
- புலவிப் பத்து
- புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.
- நமன் கொண்ட நாணமும் அச்சமும்
- தொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- பிசுபிசுப்பு
- கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)
- கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.
- பொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – பிரபஞ்சம் எத்தனை வேகமாக விரிகிறது என்பதற்குப் பேரொளி மின்மினிகள் [Quasars] விடை தருகின்றன
- ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.