போய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்

author
2
0 minutes, 14 seconds Read
This entry is part 1 of 12 in the series 29 ஜனவரி 2017

தமிழ் ஊட்டம் – அழகர்சாமி சக்திவேல்

(Thanks to Nick Dutty – UK Pink News)

potusrainbow_640x345_acf_croppedஅமெரிக்க ஜனாதிபதி திரு பராக் ஒபாமாவின் வெள்ளை மாளிகை வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து இருக்கலாம். அதன் முடிவில், இந்த உலகம் முழுதும் வாழும் ஓரினச்சேர்க்கையாளர் நல்வாழ்விற்காய், கடந்த எட்டு வருடங்களில், ஒபாமா எடுத்துக்கொண்ட எண்ணற்ற பெருமுயற்சிகளையும் இனி இந்த உலகம் மறந்து போகலாம். ஆனால் அப்படி எளிதில் எவரும் மறந்து போய் விடாமல் இருக்கும் நோக்கத்துடன் எழுதப்படுவதே இந்தக் கட்டுரை. அதிபர் ஒபாமாவின் இந்த எட்டு வருட அதிபர் வாழ்க்கையின் முடிவில், ஓரினச் சேர்க்கையாளர் எழுச்சிக்காய் அவர் செய்த சாதனைகளை இங்கே பட்டியல் இடுவதைப் படிக்கும் எவரும், “ஒபாமா ஒரு தலைசிறந்த ஓரினச்சேர்க்கை நலவிரும்பி” என்பதை ஒருபோதும் மறுத்துப் பேசமாட்டார்கள்.

  1. ஓரினச்சேர்க்கை வெறுப்புணர்வு குற்றச் சட்டத்திற்கான முயற்சி.

 

1998-இல், அமெரிக்க வ்யாமிங் மாகாணத்தைச் சேர்ந்த மாட் ஷெப்பர்ட் என்ற ஓரினச்சேர்க்கையாளர் கொலை செய்யப்பட்ட போது, அமெரிக்கா முழுவதிலும், உலகின் பல்வேறு இடங்களிலும் அந்த மாபாதகச் செயலை எதிர்க்கும் கூக்குரல்கள் எழுந்தன. இருப்பினும், ஓரினச்சேர்க்கையாளர் கொலைக்கு தண்டனை கொடுப்பதற்கான தனிச் சட்டம் அப்போது இல்லாததால், கொலைக் குற்றவாளியை அந்த மாகாணம் முறையாய்த் தண்டிக்க முடியவில்லை. இது கண்டு வெகுண்ட மாட் ஷெப்பர்டின் பெற்றோர், மாட் ஷெப்பர்ட் அறக்கட்டளை என்ற ஒன்றை தங்கள் பிள்ளை பெயரில் நிறுவி, ஓரினச்சேர்க்கையாளர் பாதுகாப்பு குறித்து போராடத் துவங்கினார்கள். 2009-இல் பதவியேற்ற திரு ஒபாமா, பாதிக்கப்பட்ட மாட் ஷெப்பர்ட் மற்றும் இன்னொரு கறுப்பர் ஓரினச்சேர்க்கையாளரான ஜேம்ஸ் பயர்ட் பெயரிலேயே, ஒரு ஓரினச்சேர்க்கை வெறுப்புணர்வு குற்றச் சட்டம் இயற்ற பெரும்பாடு பட்டு அதில் வெற்றியும் கண்டார். இந்த அமெரிக்க மத்தியச் சட்டத்தின் கீழ், ஓரினச்சேர்க்கையை வெறுத்து குற்றம் புரியும் எல்லா மாகாணத்து  அமெரிக்கர்களும் தண்டிக்கப்பட்டனர். அமெரிக்க ஓரினச்சேர்க்கையாளர்களும், தங்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள மறந்தனர்.

 

  1. “கேட்காதே,சொல்லாதே” சட்டத்தை முற்றிலும் ஒழித்தல்.

“கேட்காதே,சொல்லாதே” என்ற இந்த சட்டம் வருவதற்கு முன்னர், அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த அதிகாரிகள், தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்களில் யார் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனப் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் கண்டுபிடித்து, அவர்களை உடனே பணி நீக்கம் செய்து கொண்டு இருந்தார்கள். 1993-இல் திரு பில் கிளிண்டனால் கொண்டு வரப்பட்ட “கேட்காதே,சொல்லாதே” என்ற இந்த சட்டம், ராணுவ வீரர் ஒருவரை “ஓரினச் சேர்க்கையாளரா?” எனக்.கேட்டுக் கண்டறிந்து பணி நீக்கம் செய்யும் முறையை தடை செய்தது. ஆனால் அதே நேரத்தில், வேலை பார்க்கும் ஓரினச்சேர்க்கை ராணுவப் பணியாளர்கள், தாங்களே வெளிப்படையாக வந்து, “நான் ஒரு ஓரினச்சேர்க்கை செய்பவன்” என அடையாளப்படுத்திக் கொண்டால் அவர்களை உடனே பணி நீக்கம் செய்யவும் இந்தச் சட்டம் வழி செய்தது. புண்ணையும் கீறி புணுகையும் தடவும் இந்த அநியாயச் சட்டத்தை முற்றிலும் நீக்க முயற்சி மேற்கொண்டார் ஒபாமா. பல்வேறு பெரிய ராணுவ அதிகாரிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி, 2010-இல், ஒபாமா வேறொரு புதுச் சட்டம் இயற்றினார். ஒபாமாவின் இந்தப் புதிய சட்டம், “நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்” எனத் தம்மைத் தாமாகவே அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கர்களும், ராணுவத்தில் பணி புரிய வழி வகுத்தது. அதுவரை மறைந்து மறைந்து வாழ்ந்து பணி புரிந்த எண்ணற்ற அமெரிக்க ராணுவப் பணியாளர்கள், இந்த புதிய சட்டத்தால் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

  1. ஓரினச்சேர்க்கை தூதுவர்களையும், அதிகாரிகளையும் நியமித்தல்

ஒபாமாவின் அரசிற்கு முன்னர், LGBT என்று சொல்லக்கூடிய எவரும் வெளிநாட்டுத் தூதுவர்களாகவோ அல்லது அதிகாரிகளாகவோ அமெரிக்க அரசாங்கம் சார்பாக நியமிக்கப்படவில்லை. மாறாய், ஒரு சில மூத்த அமெரிக்க அரசு அதிகாரிகள் மட்டுமே தங்களைத் தாங்களே ஓரினச் சேர்க்கையாளர்கள் என அறிமுகப்படுத்திகொண்டனர். திரு ஒபாமாவின் ஆட்சியில்தான், ஓரினச்சேர்க்கை குறித்த விழிப்புணர்வை உலகம் முழுதிலும் ஏற்படுத்த, பல ஓரினச்சேர்க்கையாளர்கள், வெளிநாட்டுத் தூதுவர்களாகவும் அதிகாரிகளாகவும் அமெரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர். அப்படி நியமிக்கப்பட்டவர்களில் வியட்நாமின் வெளிநாட்டுத் தூதர் திரு டெட் ஒசியஸ், டென்மார்க்கின் வெளிநாட்டுத்தூதர் திரு ஜான் ருபாஷ் கில்பர்டு, ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டுத்தூதர் திரு ஜான் பெர்ரி போன்றோர் முக்கியமானவர்கள் ஆவார்கள். அது மட்டுமல்ல..அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் பல ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு முக்கிய பதவிகள் கொடுத்தும் ஓரினச்சேர்க்கை சமூகத்தைப் பெருமைப்படுத்தினார் ஒபாமா. ஒபாமாவின் ஆட்சியில்தான், ராபி பிரெட்மேன் என்ற திருநங்கை முதன் முதலில் வெள்ளை மாளிகைக்குள் அதிகாரியாய் கால் அடி எடுத்து வைத்தார். மேகன் ஸ்மித் என்பவர், அமெரிக்காவின் பெருமை வாய்ந்த தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டது ஓரினச்சேர்க்கைகு பெருமைதானே?

  1. ஓரினச்சேர்க்கை அகதிகள் நலவாழ்வு

ஒபாமாவின் ஆட்சியின்போது, ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள், அமெரிக்காவில் தஞ்சம் புக நினைத்தபோது, முதலில் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இதைப் பார்த்துக்கொண்டு இருந்த ஒபாமா, 2011-இல், அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், ஓரினச்சேர்க்கையாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு அகதியும் பாகுபாடு இன்றி நடத்தப்பட வேண்டும் என்றும் அவரது ஓரினச்சேர்க்கை உரிமைகளைக் கருத்தில்கொண்டு அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். அது குறித்து பின்னர் அவர் கூறியது… “ஓரினச் சேர்க்கையாளர்களை கிரிமினல் குற்றவாளிகள் ஆக்கி போடப்பட்டுள்ள சட்டங்கள் ஆக இருந்தாலும் சரி, அல்லது ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட்டம் போடுகையில், அடித்துத் துரத்தப்படும் கொடுமைகள் ஆக இருந்தாலும் சரி.. அல்லது ஓரினச்சேர்க்கையாளர்கள் கொல்லப்படும் அக்கிரமங்கள் ஆக இருந்தாலும் சரி… உலகில் எந்த இடத்திலும், ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறைகளும் பாகுபாடுகளும் என்னை வெகுவாக பாதிக்கிறது” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார் ஒபாமா. “எனது ஆட்சியில், உலகம் முழுவதும் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க, பல கண்காணிப்பு முகவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் செயல்படவும் துவங்கி விட்டார்கள். ஆண்,பெண், மூன்றாம் பால் என்ற இனப் பாகுபாடின்றி உலகத்தின் அனைவரது மனித உரிமைகளையும் பாதுகாக்க அமேரிக்கா கடமைப்பட்டு இருக்கிறது” என்று பேசி, உலகத்தின் பார்வையை தன பக்கம் திருப்பினார் ஒபாமா.

  1. அமெரிக்க வெளியுறை அமைச்சின் உலகம் தழுவிய முயற்சிகள்

ஒபாமா, தன் வெளியுறவு அமைச்சகத்தின் உலக வெளியுறவுக் கொள்கைகளின் பட்டியலில், ஓரினச்சேர்க்கை ஆதரவையும் ஒரு அங்கமாக இடம்பெறச் செய்தார். வெளியறவு அமைச்சில் பணி புரிந்த திருமதி ஹில்லரி கிளிண்டன் மற்றும் ஜான் கெர்ரி போன்றோர் உலகம் முழுதிலும் உள்ள பல நாடுகளில், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு குற்றவியல் சட்டத்தை ஒழிக்கப் பாடுபட்டனர். ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய ஹில்லாரி, தனது உரையில் “ஓரினம் என்பது அமெரிக்காவின் கலாச்சாரக் கண்டுபிடிப்பு அல்ல. மாறாய் அது உலகில் நிலவும் ஒரு நிதர்சனமான உண்மை ஆகும். எல்லா மதங்களிலும், எல்லா இனங்களிலும், எல்லா வயதுகளிலும் ஓரினச்சேர்க்கை இருக்கிறது. டாக்டர், ஆசிரியர், விவசாயி, வணிகர், போர் வீரன், விளையாட்டு வீரன் என எல்லாப் பிரிவுகளிலும் ஓரினச்சேர்க்கை வாழ்கிறது. நாம் ஓரினச்சேர்க்கையை அறிந்து இருக்கிறோமா இல்லையோ, நாம் அதை ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, ஓரினச்சேர்க்கையாளர்களும் நமது குடும்பமே..அவர்களும் நமது நண்பர்களே” என்று பேசி உலகின் கவனத்தை ஓரினச்சேர்க்கை பக்கத்திற்கு இழுத்தார். இவர்களுக்குப் பின்னால், ஒபாமா ஆட்சியில் மூலம் பதவிக்கு வந்த திருமதி சூசன் ரைஸ், சமந்தா பவர் போன்றோரும் ஓரினச்சேர்க்கை உரிமைக்காக பாடுபட்டனர். பலவேறு நாடுகளுக்கு பயணம் செய்த போதெல்லாம் அங்கங்கே ஓரினச்சேர்க்கை விழிப்புணர்வை விதைக்க அவர்கள் மறக்கவில்லை.

  1. சுகாதாரப் பாதுகாப்பும் எய்ட்ஸ் விழிப்புணர்வும்

2010-இல், ஒபாமா ஒரு புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி அமெரிக்காவின் எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். அந்தத் காப்பீட்டுத் திட்டத்தின் பலனை ஓரினச் சேர்க்கையாளர் குடும்பங்களும் பெறுவதற்கு ஏதுவாய் ஒபாமா திட்டம் வரைந்து இருந்தது அமெரிக்க ஓரின வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மலிவு விலை பாதுகாப்புச் சட்டத்தின் (Affordable Care Act) கீழ், தம்பதியராய் சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கையாளருக்கும் குடும்ப சுகாதாரக் காப்பீடு வழங்கப்பட்டது. வாழ்நாள் நோயான எய்ட்ஸ் போன்ற பெரு வியாதிகளால் பாதிக்கப்பட்டோருக்கும் இந்தக் காப்பீட்டின் மூலம் தகுந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டன. பல அமெரிக்க ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒபாமாவிற்கு நன்றி செலுத்துகிறார்கள் என்றால் அதற்கு இந்த காப்பீட்டுத் திட்டமும் ஒரு காரணம் ஆகும்.

  1. திருமண உறவு பாதுகாப்புச் சட்டத் திருத்தம்

1996-இல் உருவான அமெரிக்க திருமணச்சட்டம் டோமா (DOMA), ஆண்-பெண் திருமண உறவை மட்டுமே அங்கீகரித்து இருந்தது. டோமா சட்டத்தின்படி, திருமண உறவிற்கான வரி விலக்குகள் ஆண்-பெண் தம்பதியருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட திரு எடித் வின்சர் என்ற ஓரினச்சேர்க்கை தம்பதி, இந்த சட்டப்பிரிவின் பகுதி மூன்றை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அந்த வழக்கில் நீதிமன்றம், “டோமா சட்டம் அரசியல் அமைப்பிற்கு எதிரானது என, 2013-இல் தீர்ப்புக் கூறியது. இந்தத் தீர்ப்பை மேற்கோளாக எடுத்துக்கொண்ட ஒபாமா அரசாங்கம், நீதிமன்றத்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களின் அங்கீகாரம் குறித்து வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றது. பல இந்திய ஓரினச்சேர்க்கை தம்பதியர், அதன் பிறகு அமெரிக்காவில் வேலை தேடிக்கொண்டு வந்து, அமெரிக்காவிலேயே திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாய் வாழ்கிறார்கள் என்றால் அதற்குக்காரணம் ஒபாமாதான். உலகம் முழுவதிலும் இருந்து, பல படித்த திறமை வாய்ந்த ஓரினச்சேர்க்கை இளைஞர்கள் அமெரிக்க மண்ணில் வாழ ஆசைப்படுகிறார்கள் என்றால் அதற்குக்காரணமும் ஒபாமாதான்.

  1. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் ஓரினச்சேர்க்கை உரிமை.

ஒபாமா, தனது எட்டு வருட ஆட்சி முழுவதிலும், அவர் உருவாக்கிய ஓரினச்சேர்க்கை வேலைப் பாதுகாப்புச் ஆணை, (Employment Non-Descrimination Act and Equality Act), அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் சரிவரச் செயல்பட அயராது பாடுபட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. எனினும், 2014-இல் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி, இந்த ஓரினச்சேர்க்கை ஆணை அமெரிக்கச் சட்டம் ஆக மாறுவதற்கு எதிர்த்தபோது, ஒபாமா, தனது அதிபர் உரிமையைப் பயன்படுத்தி ஓரினச்சேர்க்கையாளர்களைப் பாதுகாத்தார். ஒபாமாவின் இந்த ஆணையின் படி, அரசு வேலைகளில் உள்ள ஓரினச்சேர்க்கையாளரை பாரபட்சத்தோடு நடத்தும் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் தண்டிக்கப்பட்டார்கள். அது மட்டுமின்றி, ஒபாமாவின் இந்த ஆணை, அமெரிக்க அரசிடம் ஒப்பந்த முறையில் வேலை பார்த்த தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஓரினச்சேர்க்கையாளர்களும், சம உரிமையோடு நடத்தப்பட வகை செய்தது. இதனால் எண்ணற்ற ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் வேலை இடங்களில் நிம்மதியாய் வேலை பார்க்க முடிந்தது.

  1. திருமணச் சம உரிமை.

என்னதான் ஒபாமாவின் அரசு ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு ஆதரவு தெரிவித்த போதும், அமெரிக்காவின் பல மாகாணங்கள் அதைத் தனிப்பட்ட முறையில் எதிர்த்துக்கொண்டுதான் இருந்தன. “ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு ஆண்-பெண் திருமணம் போல சமஉரிமை வழங்க முடியாது” என பல மாகாணங்கள் எதிர்க்க ஆரம்பித்தன. அதற்கு பதிலடியாய், ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்களும், “திருமணத்தில் சம உரிமை எங்களுக்கும் உண்டு” என்று அந்தந்த மாகாணத்தில் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருந்தனர். அத்தகைய ஓரினச்சேர்க்கை ஆதரவு போராட்டங்களுக்கு, ஒபாமா அரசு, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கி வந்தது. ஒரு நாள் இந்தத் திருமண சம உரிமைப் போராட்ட வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கில், அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் திரு எரிக் ஹில்டர், ஓரினச்சேர்க்கையாளருக்கு ஆதரவாக வாதாடினார். “ஓரினச்சேர்க்கை திருமணங்கள் என்பது அமெரிக்க அரசியல் உரிமை” என்ற அவரது வாதங்களுக்கு செவி சாய்த்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கை திருமணங்களை ஆண்-பெண் திருமணங்களுக்கு இணையாக அங்கீகரித்தது. ஒபாமா அரசின் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க சீரிய முயற்சியால், பல ஆயிரக்கணக்கான ஓரினச்சேர்க்கை தம்பதியர் வாழ்வில் சந்தோசம், நிறைந்தது.

  1. வெள்ளை மாளிகையின் வானவில் வர்ணம்.

ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சமஉரிமை தந்த மகிழ்ச்சியில், திரு ஒபாமா, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையையே வானவில் வர்ணத்தில் மிளிரச் செய்தார். அந்த இனிய நாளில், ஓரினச்சேர்க்கை திருமணங்களின் சமஉரிமையை ஆதரித்துப் பேசிய ஒபாமா, “இந்த நல்ல நாளில், நமது அமெரிக்காவை இன்னும் கொஞ்சம் சரியான வழியில் மாற்றி இருக்கிறோம் என எந்த வித தயக்கமும் இன்றி நாம் சொல்லுவோம்” என்று பேசி, ஓரினச்சேர்க்கை சமூகத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

  1. ஓரினச்சேர்க்கையில் ஒபாமாவின் உலகப் பார்வை

ஒபாமாவின் ஓரினச்சேர்க்கை ஆதரவு அமெரிக்காவோடு நின்றுவிடவில்லை. ஒபாமாவின் அயல்நாட்டு ஓரின விழிப்புணர்வுப் பார்வை, அதன் வெளியுறவு அமைச்சுக்களின் பேச்சுக்களோடு நின்று விடவில்லை. அதற்கும் மேலாய்,  ஓரினச்சேர்க்கை விழிப்புணர்வினை உலகம் முழுதும் எடுத்துச்செல்ல ஒபாமா ஒரு சிறப்புத் தூதரை நியமித்தார். ராண்டி பெர்ரி என்ற அந்தத் தூதர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விஜயம் செய்து, ஓரினச்சேர்க்கை விழிப்புணர்வினை அந்தந்த அரசுகளிடம் விளக்கிக் கூறினார். திரு ராண்டி பெர்ரி, தனது சமூகப்பணி குறித்துப் பேசும்போது, “ஓரினச்சேர்க்கை விழிப்புணர்வினை வலியுறுத்த நாங்கள் எந்த வித நிபந்தனைகளும் விதிக்கவில்லை. ஓரினச்சேர்க்கை விழிப்புணர்விற்காய் நாங்கள் சிலபல ஆதாயங்களை வழங்கி அந்த ஆதாயங்களுக்குப் பின்னால் தண்டனை கொடுப்போம் என நாடுகளை மிரட்டவும் இல்லை. மாறாய், ஓரினச்சேர்க்கை என்பது ஒரு மனித உரிமை என்ற எங்கள் கொள்கையை தெள்ளத்தெளிவாய் பல நாடுகளுக்கு எடுத்துச் சொல்கிறோம். அவ்வளவே” எனப் பேசினார்.

கென்யா நாட்டின் தலைவரான திரு உகுரு கென்யாட்டா ஒரு தீவிர ஓரின வெறுப்பு உடையவர். மதம் சார்ந்த அந்தக் கென்ய நாட்டு அதிபரின் ஓரினச்சேர்க்கை வெறுப்பை, ஒபாமா நேருக்கு நேர் விமர்சனம் செய்தார். ஒபாமாவின் கென்ய நாட்டு விஜயத்தின் போது, கென்யா-அமேரிக்கா இரு நாட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஒபாமா பேசுகையில், “நாடுகளின் சரித்திரங்களை எடுத்துப் பாருங்கள்..எந்த நாடு சில மனிதர்களை வித்தியாசமானவர்கள் என்று பிரித்து வைக்கிறதோ அந்த நாடுகளில்தான் சுதந்திரம் மெல்ல அரிக்கப்பட்டு அழிய ஆரம்பிக்கிறது. அந்த நாடுகளில்தான் கெட்ட விசயங்கள் அதிகமாய் நடக்கிறது. ஒரு அரசாங்கம் தனது மக்களை ஏதாவது ஒரு நியதியியின் பெயரில் பிரித்து வைக்கும் பழக்கவழக்கம் கொண்டிருந்தால், அந்தப் பழக்கவழக்கம் அதன் மக்களிடமும் பரவ ஆரம்பிக்கிறது. நான் ஒரு ஆப்பரிக்க அமெரிக்கன். இது போன்ற பிரித்து வைக்கும் சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்பதால் இதை இங்கே குறிப்பிடுகிறேன்” என அவர் வேதனையை நேருக்கு நேர் பகிர்ந்து கொண்டார். உலகம் விழித்துக்கொள்ள, ஒபாமாவின் ஓரினச்சேர்க்கை ஆதரவு எவ்வளவு உதவியாய் இருந்தது என்பது இப்போது நமக்கு ஓரளவு புரிந்து இருக்கும்.

  1. வெள்ளை மாளிகையில் எண்ணிறந்த ஓரின நிகழ்ச்சிகள்.

ஓரினச்சேர்க்கை திருமணம் முதற்கொண்டு, திருநங்கைகள் சமஉரிமை வரை, ஒபாமா, தனிப்பட்ட முறையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஒருபோதும் தயங்கியதே இல்லை. சமீபத்தில், வெள்ளை மாளிகையில், திருநங்கை திரைப்பட நாள் ஒபாமாவின் அரசால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி, ஓரினச்சேர்க்கை ஆதரவு குறித்த ஒபாமாவின் தயக்கமின்மைக்கு ஒரு நல்ல சான்று ஆகும். அன்றைய நாளில், திருநங்கைகள் நல்வாழ்விற்காக போராடும் சமூக சேவகர்களுக்கு பரிசுகளும் கொடுத்து அமெரிக்கத் திருநங்கைகளை கௌரவப்படுத்தினார் ஒபாமா.

  1. ஓரினப் பெருமை நாள் மற்றும் உலக எய்ட்ஸ் நாள்

ஒவ்வொரு வருட டிசம்பர் முதல் தேதியை உலக எய்ட்ஸ் நாளாகக் கொண்டாடுவதையும், ஒவ்வொரு வருட ஜூன் மாதத்தை ஓரினப் பெருமை மாதமாகக் கொண்டாடுவதையும் அரசுப் பிரகடனம் செய்தவர் திரு ஒபாமா. சமீபத்திய பிரகடனத்தில் பேசிய ஒபாமா “ஓரினச்சேர்க்கை பாகுபாடுகளை எதிர்ப்பது குறித்த கொள்கைகள் நமது அமெரிக்க எல்லைகளோடு நின்று விடக்கூடாது. நமது அமெரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கைகளில், ஓரினச்சேர்க்கை விழிப்புணர்வுக்கு ஒரு முன்னுரிமை கொடுக்கப்படும். உலக அளவிலான மனித உரிமைக்கும், ஓரினச்சேர்க்கையாளர் உரிமைக்கும் பாடுபட அமெரிக்கா கடப்பாடு கொண்டுள்ளது” என்றார்.

  1. திருநங்கை மற்றும் திருநம்பி மாணவர்களின் பாதுகாப்பு.

திருநங்கை மற்றும் திருநம்பி மாணவர்களின் பெரும் பிரச்சினை கழிப்பறைப் பிரச்சினை ஆகும். ஆண்-பெண் என்ற இனம் சார்ந்த இடங்களில், அவர்கள் தங்கள் திருநங்கை அல்லது திருநம்பி அடையாளங்களோடு பழகும்போது, எண்ணற்ற கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாக வேண்டி இருக்கிறது. இது குறித்து ஒபாமா அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. இது குறித்து ஒபாமா பிறப்பித்த ஆணை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஆணையின் படி, பள்ளிகளில் ஆண்-பெண் எனப் பாகுபடுத்தும் விளையாட்டு, கழிப்பறை போன்ற எல்லாவித நிகழ்வுகளிலும், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள், தங்கள் இன அடையாளங்களோடு சுமுகமாகப் பழக அனுமதிக்கப்பட வேண்டும். திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பள்ளிகளில் எந்த பாகுபாடின்றியும் நடத்தப்பட வேண்டும். இந்த அமெரிக்க ஆணை, திருநங்கை மற்றும் திருநம்பி மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை விளக்கு என்று சொன்னால் அது சாலப்பொருந்தும்.

  1. பல்ஸ் சோகமும் ஒபாமாவின் வேகமும்

ஒபாமாவின் ஆட்சியில் பிரகாசமாய் எரிந்து கொண்டு இருந்த ஓரின மகிழ்ச்சியில் மண்ணைப் போடுவது போல, பல்ஸ் துப்பாக்கிச்சூடு அமைந்தது. ஒர்லாண்டோ மாநிலத்தில் பல்ஸ் என்ற மதுக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஐம்பது ஓரினச்சேர்க்கையாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். உலகம் அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால் ஒபாமா வேகம் கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவேறு வகையில் உதவிட துரித நடவடிக்கைகள் மேற்கொண்டார். ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள், அவர்தம் பெற்றோர் அனைவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து ஓர்லாண்டோவில் பேசிய ஒபாமா  “இது ஓரினச்சேர்க்கை சமூகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல். ஒருவர் எந்த இனம் சேர்ந்தவர் அல்லது எந்த வகையில் அவர் புணர்ச்சி செய்கிறார் என்பது குறித்து கவலைப்படாத அமெரிக்க நற்பண்புக்கு ஆற்றப்பட்டுள்ள துரோகம் இது. இந்த உலகத்தை, நாம் வேறு அவர்கள் வேறு என்று பிரித்துப் பார்த்துவிட முடியாது. ஒருவரது நிறம் அல்லது நம்பிக்கை அல்லது அவர்கள் புணர்ச்சி முறை இது போன்றவைகளில் நம் வெறுப்பைக் காட்டி, இது போன்ற துப்பாக்கிச்சூடு ஆபத்துகளுக்கு நாம் துணை போகவும் முடியாது.. எனவே இந்த இக்கட்டான நேரத்தில், நாம் அனைவரும், ஒருவர் மற்றவர் உணர்வுகளை மதித்து நடக்க முயற்சி மேற்கொள்வோம்.” என்று பேசி, துவண்டு கிடந்த ஓரினச்சேர்க்கை சமூகத்தை ஆறுதல் படுத்தினார். உலகத்தில், ஓரினச்சேர்க்கை என்ற ஒரே ஒரு விசயத்திற்காக கொல்லப்படுபவர்கள் எவ்வளவோ பேர். அப்படிப்பட்ட கொலைகாரர்களில் ஒன்றிரண்டு பேரையாவது ஒபாமாவின் இந்த செய்தி திருத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  1. அமெரிக்க ராணுவத்தின் தலைமைப்பீடம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெருமை மிகுந்த பதவிகளில் ஒன்று ராணுவத் தலைமைப் பதவி ஆகும். அந்தப் பதவியை, எரிக் ஃபான்னிங் என்ற ராணுவ வீரருக்கு கொடுத்து, ஓரினச்சேர்க்கை வீரத்தைப் பெருமைப்படுத்தினார் திரு ஒபாமா. திரு எரிக் ஃபான்னிங் என்ற அந்த ஓரினச்சேர்க்கை ராணுவ வீரர், காலாட்படை, கப்பற்படை, ஆகாயப்படை என்ற மூன்று படைகளிலும், சுமார் பத்துக்கும் மேற்பட்ட வருடங்கள் பணி புரிந்தவர், பல்வேறு ராணுவ நிலைகளில் பணி புரிந்த அவர், இறுதியில் ஒபாமாவால் ராணுவத் தலைமை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டது, ஓரினச்சேர்க்கை சமூகத்திற்குக் கிடைத்த பெருமைகளில் ஒன்று ஆகும்.

  1. கற்சுவர் விடுதியை தேசிய மயமாக்கல்.

2016-இல், சரித்திரப் புகழ்பெற்ற நியூயார்க்கின் கற்சுவர் விடுதி (Stone Wall Inn), ஒபாமாவால் தேசிய மயமாக்கப்பட்டது. நியூயார்க்கின் பழமை வாய்ந்த இந்தக் கற்சுவர் விடுதியில்தான், முதன் முதலில், ஓரின உரிமைப்போர் 1960 ஜூன் மாதத்தில் தொடங்கியது. இந்தக் கற்சுவர் விடுதியிலும், விடுதியைச் சுற்றியுள்ள தெருக்களிலும் வாழ்ந்த எண்ணிறந்த ஓரினச்சேர்க்கையாளர்கள், காவலர்கள் தொடுத்த கொடுமைகள் தாங்காமல், வெகுண்டு எழுந்து, கலகம் செய்தனர். கலகத்தை அடக்க முடியாமல் நியூயார்க் நகர காவல்துறை திணறியது. அந்த கலகத்திற்குப் பிறகுதான் ஓரினச்சேர்க்கை சமூக விழிப்புணர்வு ஏற்பட்டு பல்வேறு ஓரினச்சேர்க்கை ஆதரவுச் சங்கங்கள் தோன்றின. கற்சுவர் விடுதிக் கலகம் தொடங்கிய அந்த ஜூன் மாதத்தில்தான், ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கை பெருமை ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஒபாமாவும் தனது பங்குக்கு, அந்த கற்சுவர் விடுதியை தேசியச் சின்னமாய் அறிவித்தார். அப்போது அவர் பேசியபோது “நமது அமெரிக்க தேசியச் சின்னங்கள் உண்மையான அமெரிக்காவையே பிரதிபலிக்கவேண்டும். நாட்டின் நல் ஆக்கத்தையும், அதன் பன்முகத் தன்மையையும் பறை சாற்றவேண்டும். இது போன்ற பலதரப்பட்ட வேற்றுமைகளுக்குள், அமெரிக்கர்கள் ஆகிய நாம் ஒரு முகமாய் எப்போதும் வாழ்வோம்” என்றார். ஒபாமாவோடு சேர்ந்து ஓரினச்சேர்க்கை சமூகமும் அன்று பெருமை கொண்டது.

  1. எல்லென் டி ஜான்ரே –வைப் பெருமைப்படுத்துதல்.

எல்லென் டி ஜான்ரே (Ellen DeGeneres)  என்ற இந்தப் புகழ் பெற்ற பெண்மணியைத் தெரியாமல் இருப்போர் உலகத்தில் மிகக் குறைவே. திருமதி எல்லென், ஒரு பெண் ஓரினச்சேர்க்கையாளர். அவரது தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், இன்றளவும், உலக அளவில் மிகப் பிரபலமாய் இருந்து வருகிறது. அதற்கும் மேலாய் திருமதி எல்லென் ஒரு சிறந்த சமூக சேவகி. ஓரினச்சேர்க்கை சமூகத்திற்கு அவர் ஆற்றி வரும் சமூகத் தொண்டுகள் எண்ணிறந்தவை.. அமெரிக்க ஓரினச்சேர்க்கை சமூகம் முழுமைக்கும் ஒரு முன்மாதிரியாய் வாழ்ந்து வரும் திருமதி எல்லெனுக்கு, பெருமைக்குரிய அமெரிக்க காங்கிரஸ் சுதந்திர விருது கொடுத்து (Congressional Medal of Freedom) ஒபாமா கௌரவப்படுத்தினார். விருது வழங்கிப் பேசிய ஒபாமா, ஓரினச்சேர்க்கையால் திருமதி எல்லென் பட்ட துன்பங்களையும், ஓரினச்சேர்க்கையின் பெயரால் அவர் முன்னேற்றம் எந்த வகையில் எல்லாம் தடைபட்டது என்பதையும் விவரித்தார். ஒபாமா மேலும் பேசுகையில் “ஓரினச்சேர்க்கைத் திருமணங்கள் சம உரிமை பெறும் இந்தக் காலகட்டத்தில், திருமதி எல்லென் பட்ட துன்பங்கள் நமக்கு பெரிதாய்த் தெரியாமல் போகலாம். நாமும் அதை மறந்து விடலாம். ஆனால் இருபது வருடங்களுக்கு முன்னால், ஒரு பெண் தன்னை ஒரு ஓரினச்சேர்க்கை மனிதராய் உலகிற்கு அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. இருபது வருடங்களுக்கு முன்னர் பொது மேடைகளில், ஒரு ஓரினச்சேர்க்கையாளராய் அடையாளம் காட்டிக் கொண்டு பேசிய இந்தப் பெண்மணியின் தைரியம் பாராட்டத்தக்கது.” எனப் பாராட்டும் தந்தார்.

ஒபாமாவைப் போன்ற தலைவர்கள் இந்த உலகத்திற்குத் தேவை. ஒபாமா ஏற்கனவே ஒரு நோபெல் பரிசு பெற்றவர். ஓரின சமூகத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டிற்காய் இன்னொரு முறையும் அவருக்கு நோபெல் பரிசு வழங்க வேண்டும் என்பது எனது அவா. “போய் வாருங்கள் ஒபாமா.. உலகம் முழுதிலும் உள்ள ஓரினச்சேர்க்கை சமூகம் என்றென்றும் உங்களை மிக்க நன்றியுடன் பார்த்துக்கொண்டு இருக்கும். அமெரிக்காவின் ஓரின வருங்காலம் மாறலாம். உலகத்து ஓரினம், தங்கள் உரிமைகளுக்காய் இன்னும் நிறைய போராட வேண்டி இருக்கலாம். ஆனால் ஒபாமா…நீங்கள் வளர்த்த இந்த ஓரின ஆலமரத்தின் வேர்கள் ஆழமாய் வேரூன்றியவை. அதை இனிமேல் வேரோடு பிடுங்க ஒருவராலும் முடியாது.. வாழ்க ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்!

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationபுலவிப் பத்து
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Ali says:

    ஐயகோ இப்போ ஷாலி வந்து அல்லாஹ் இதை வெறுத்தார் அப்பிடின்னு கட்டுரை எழுதுவாரரே,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *