தோழி கூற்றுப் பத்து

This entry is part 3 of 14 in the series 5 பெப்ருவரி 2017

இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்; அவள் எப்பொழுதும் தலைவியின் நலத்தையே விரும்பி அதற்காகச் செயல்படுபவளாக இருக்கிறாள்.
தலைவியின் பேச்சைவிட தோழியின் கூற்று, சற்று அழுத்தமும் துணிவும் தெளிவும், உறுதியும் கொண்டதாக நாம் உணர முடிகிறது.
தோழி கூற்று பத்து—1
நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத் தன்று,நின்
மலர்ந்த மார்பு-இவள் வயாஅ நோய்க்கே
[நீருறை கோழி=நீர்க்கோழி; வயாஅ=கருவுற்றார் கொள்ளும் வேட்கை; உகிர்=நகம்; புளிங்காய்=புளியங்காய்]
அவன் கட்டின அவள உட்டுட்+டு வேற ஒருத்திகிட்டப் போனான். அங்கயே தங்கி இருந்தான். அப்பறம் கட்டினவகிட்டயே வந்தான். இவகிட்டெயே கொஞ்சநாள் இருந்தான்; மறுபடியும் அவகிட்டப்போயிட்டான். அதால கட்டினவ ரொம்பவும் மனம் ஒடைஞ்சு துன்பப்பட்டா; மறுபடியும் ஊட்டுக்கு வந்தான். ஆனா இங்க இவ அவனை வேண்டாம்னு சொல்றதிலே இப்ப உறுதியா இருந்தா; அப்ப தோழி அவன் கிட்ட சொல்றா.
”ஒன் ஊர்ல தண்ணியில வாழற நீலநிறமான நீர்க்கோழியையே கூர்மையான நகங்களோட இருக்கற அதன் பெட்டையானது நெனச்சுக்கிட்டே இருக்கும்; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவனே! இவளுக்கு ஒன் மார்பு எப்படித் தெரியுமா? கர்ப்பங் கொண்டவளுக்குப் புளியங்காயை நெனப்பது போல.
முட்டை போடற நெலயில இருக்கிற நீர்க்கோழிப் பெட்டை அதோட ஆண் சேவலையே நெனச்சுக்கிட்டிருக்கும்; புளியங்காய நெனச்சாலே போதும்; நாக்கிலே தண்ணி ஊறும்; அதேபோல கருவை வயத்துல சொமக்கற ஒன் மார்பை நெனச்சாலே போதும்; இன்பம் அடைவா; அதால ஒன்னை சேராதபோதும் இவ நெனப்பே இவளுக்குத் துன்பம் குடுக்குது.
தோழி கூற்றுப் பத்து—2
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க் குறுமகள் இனைய;
எவ்வாய் முன்னின்று மகிழ்ந!-நின் தேரே!
வெளியே போய்த்தங்கியிருந்தவன் இப்ப ஊட்டுக்கு வந்திட்டான். தலைவியோட வே இருக்கான்; அப்ப தோழி சொல்ற பாட்டு இது
“மகிழ்நனே! இவ ஊட்லதான் வயலைக்கொடி வளத்தா; அதால மாலை தொடுக்கும்போது ஏற்கனவே செவந்து போயிருக்கற இவ வெரலு இன்னும் செவந்து போச்சு; செவப்பா கோடெல்லாம் இருக்கற கண்ணும், செவந்த வாயும் கொண்டவ இவ. இப்ப இவள அழவக்கற மாதிரி ஒன் தேர் நிக்குது? மறுபடியும் எங்க போகப் போற?”
அவ வளத்த வயலைக் கொடியாலயே அவ வெரலு செவந்து போச்சு’ அதேபோல ஒன்னால காக்க வேண்டிய இவளை நீ அழவைக்கப் போறயா?ன்னு கேக்கறாங்கறது மறைபொருளாம்
தோழி கூற்றுப் பத்து-3
துறைஎவன் அணங்கும் யாமுற்ற நோயே?—
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர!—நீயுற்ற சூளே!
[அணங்கு=தெய்வம்; சிறை=அணை; பழனம்=ஊர்ப்பொதுநிலம்]
அவ தன்னைக் கட்டினவன் கூடப்போயி தண்ணித்துறையில குளிக்கறா; அப்ப இதே துறையில்தானே இவன் அவங்க கூட எல்லாம் குளிச்சிருந்தான்னு அவளுக்கு நெனப்பு வருது; ஒடனே அவ ஒடம்பு வாடுது; மெலிஞ்சு போவுது; ஒடனே அவன் இங்க இந்தத் துறையில தெய்வம் இருக்குன்னு பயப்படறயாண்ணு கேக்கறான்; அப்ப அவ சொல்ற பாட்டு இது:
”அணையை ஒடைச்சுக்கிட்டு புது வெள்ளம் வருது; கழனியில பாயறதால அங்க இருக்கற தாமரைப் பூ எல்லாம் மலருது; அப்படிப்பட்ட நெலம் எல்லாம் இருக்கற ஊரைச் சேந்தவனே! நீ என்கிட்ட ஒன்னைப் பிரிஞ்சு போக மாட்டேன்னு சொன்னதுபோல அவகிட்டயும் சொல்லியிருப்பியே? அதையும் பொய்யாக்கிட்டயே! அதுக்காக ஒன்னைத் தெய்வம் தண்டிக்குமோன்னு நெனச்சுதான் என் ஒடம்பு வாடுது; மெலிஞ்சு போச்சு”
தோழி கூற்றுப் பத்து-4
திண்தேர்த் தென்னவன் நன்னாட்[டு] உள்ளதை
வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர் அன்னஇவள் தெரிவளை நெகிழ
ஊரின் ஊரனை நீதர வந்த
பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம! அம்முறை வரினே!
[திண்தேர்=வலிமையான தேர்; வேனில்=வறட்சிக் காலம்; தேனூர்=மதுரைக்கு அருகில் உள்ள ஊர்; பஞ்சாய்க் கோதை மகளிர்=பஞ்சாய்க் கோரைபோலும் தலை மயிர் நீண்டிருக்கும் மகளிர்;]
வேற ஒருத்தி ஊட்டுக்குப் போயிருந்த அவன் திரும்பி வரான். சொந்த ஊட்டுக்கு உள்ள போகறதுக்கே வெக்கம்; மனசில குத்தம்; அதால வெளியேயே நிக்கறான். அவளோட தோழி கிட்ட கொஞ்சம் ஒதவி செய்யேன்னு கேக்கறான். அப்பத் தோழி சொல்ற பாட்டு இது.
இந்தப் பாட்டுல தேனூர்னு ஒரு ஊரைச் சொல்றாங்க; அந்தக் காலத்துல அந்தப் பேரில நெறய ஊருங்க இருந்திருக்கு. நடு நாட்ல ஒண்ணு, பாண்டி நாட்ல ரெண்டுமா இருந்திருக்கு; நடுநாட்ல இருந்ததைப் “பெண்ணைத் தென்கரை மகதை நாட்டுத் தென்கரைப் பழங்கூர்ப்பற்றுத் தேனூர்”னு சொல்றாங்க; பாண்டி நாட்ல முதுகுளத்தூர் கிட்ட ஒண்னு இருந்திருக்கு; இதை நெறய கல்வெட்டுகள்ள சொல்றாங்க; திருமரவுகந்த நல்லூர், ஏழூர்ச் செம்பிநாட்டுத் தென்முனைப் பற்றுத் தேனூரான திருமாகவுந்த நல்லூர்னு அதைச் சொல்றாங்க; வைகை ஆத்தங்கரையில திருவேடகம் பக்கத்துல ஒண்ணு இருந்திருக்கு; இதைப் பத்திப் பதினோராம் நூற்றாண்டின் கல்வெட்டுக்கள் ’பாகனூர்க் கூற்றத்துத் தேனூர்த் திருவேடகம்’னு சொல்லுதுங்க. இங்க வெத்தல நல்ல வெளயுமாம்.தேனூர் வெத்தலயும் மானூர் சுண்ணாம்பும்னு ஒரு பழமொழியே இருந்திருச்சாம். அப்பறம் திருஞான சம்பந்தர் “வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்தகத்தான் தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான்”ன்னு அதைப் பாடறாரு.
அந்தத் தேனூரைத் தோழி தன் தலைவிக்கு உவமையாச் சொல்றா. அந்த ஊர் மழையே பெய்யாத காலத்திலும் குளிர்ச்சியா இருக்குமாம். அது நல்ல வலிமையான தேர் வச்சிருக்கற பாண்டியனோட நாட்ல இருக்குது. அதேபோல இருக்கறவதான் இவ. இவளோட வளையெல்லாம் கழண்டு போறபடி நீ வேற ஊட்ல போய்த் தங்கறயே! அந்த ஊடு இருக்கற தெருவில நான் நெய்யணி போட்டுக்கிட்டு வருவதற்குப் பயப்படறேன்னு தோழி சொல்றா. நெய்யணி பூணறதுன்னா கொழந்தை தலைவிக்குப் பொறந்த ஒடனே அந்தச் செய்திய வேற ஒருத்தி ஊட்ல இருக்கற அவன் தெரிஞ்சுக்கணும்னு தோழி நெய்யணி, செவ்வாடை போட்டுகிட்டு அவங்கள்ளாம் இருக்கற தெரு வழியாப் போவாளாம். அதை பாத்து அவன் தெரிஞ்சுக்குவானாம், அவன் செஞ்ச கொடுமையை எண்ணித் தோழி பயப்படறா. பஞ்சாய்க் கோரைன்றது ரொம்ப நீட்டாயிருக்குமாம். அதேபோல தலைமுடி இருக்கற அங்க ஒன் கூட இருக்கறவங்களுக்கும் நான் பயப்படறேன். அதால நீ இங்க வர்றதைவிட அங்கேயே இருக்கறதுதான் நல்லது போ’ன்னு தோழி சொல்றா.
தோழி கூற்றுப் பத்து-5
கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான் தேனூர் அன்ன இவள்
நல்லணி நயந்து நீ துஇறத்தலின்
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே
அவன் இப்ப என்ன செய்யறான் தெரியுமா? கட்டினவகிட்டயே திரும்பி வரான்; “என் ஒடம்பெல்லாம் எப்படி மெலிஞ்சு போயிருக்கு பாரு; அதால எப்படியாவது என்னச் சேத்துக்கச்சொல்லு”ன்னு அவளோட தோழிக்கிட்ட கேக்கறான்; அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”பாண்டியனோட தேனூர்ல கரும்பாலைங்க இருக்கு; அதோட ஓசை ஆண்யானை பிளிற்றுமே அதுக்கு எதிரா ஒலிக்குமாம். அப்படிப்பட்ட அருமையான் தேனூர் போல அழகா இருக்கறவ இவ. நீ மொதல்ல ஒனக்குப் புடிச்சுதான இவளைக் கட்டிக்கிட்ட; அப்பறம் இவளைப் பிரிஞ்சு விட்டுட்டு அவகிட்டப் போயிட்ட; அதால ஊராரெல்லாம் ஒன் கொடுமை தெரிஞ்சு இவளைத் தூத்தி இவளோட நெத்தி எல்லாம் பசலை பூத்துடுச்சு; தெரிஞ்சுக்கோ” ன்னு தோழி சொல்றா.
கரும்பாலைக்கு எதிரா ஆண்யானை கத்தும்னு சொல்றதால நீ மெலிஞ்சு போயிருக்கறதை விட இவ நெத்தி அதிகமா பசலை பூத்துக் கெடக்குன்னு சொல்றாளாம்.
============================================================================================
தோழி கூற்றுப் பத்து—6
பகல்கொள் விளக்கோடு] இராநாள் அறியா
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்னஇவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப
எவன்பயம் செய்யும் நீதேற்றிய மொழியே?
தலைவிக்கு அவன் வேற ஒருத்தி ஊட்டுக்குப் போறது தெரிஞ்சிருக்கு; அதால அவ ஒடம்பு மெலிஞ்சு போயி வாடறா; அப்ப அவன் ”அதெல்லாம் இல்ல நீ கவலப் படாத”ன்னு சொல்றான். அப்ப தோழி அவங்கிட்ட சொல்றா
”ஆமூர்னு ஓர் இருக்கு; அந்த ஊர்ல இரவுல கூட எப்பவும் நல்லா வெளிச்சம் இருக்குமாம்; ஏன் தெரியுமா? பகல்லியே ரொம்ப அதிகமா வெளிச்சம் தர்ற வெளக்கையெல்லாம் ராத்திரியிலயும் நெறய ஏத்தி வச்சிருப்பாங்களாம்; அதால ராத்திரியே தெரியாதாம்; அப்படிப்பட்ட அழகுடைய யாராலும் வெல்லவே முடியாத சோழரோட ஊரு அது; அதே போல ஒளியா அழகா இருக்கற இவ நெத்தி நீ போயிட்டதால பசலை வந்து ஒளியே போயிடுச்சு; நீ என்னடான்னா என்னமோ சொல்லிச் சொல்லி இவளைத் தேத்துற; அதால பயனே இல்லியே”
தோழி கூற்றுப் பத்து—7
பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பலஞ் செறுவின் தேனூர் அன்ன
இவள்நலம் புலம்பப் பிரிய
அனைநலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே
[செறு=வயல்; ]
அவன்கிட்ட தோழி கேக்கறா, “தேனூர்னு ஒரு அழகான ஊர் இருக்கு; அந்த ஊருல இருக்கற வயலில் கூட ஆம்பல் பூவெல்லாம் நெறய இருக்கும்; அதே போல அழகான பெருமை எல்லாம் உடையவ நீ கட்டிக்கிட்ட என் தலைவி; நடுப்பகல்ல வந்திருக்கற கடுமையான வெயில்ல எது மாட்டினாலும் அழிஞ்சு போயிடும்; அதேபோல இவ அழகெல்லாம் உன்னைப் பிரிஞ்சிருக்கறதால வெந்து அழிஞ்சு போகுது; இவளை உட்டுட்டு நீ வேற ஒருத்திகிட்ட போயி சேந்துகிட்டயே; நீ சேந்து இருக்கற பொண்ணு இவளை விட அவ்வளவு அழகா சொல்லு பாப்போம்?”
தோழி கூற்றுப் பத்து—8
விண்டு அன்ன வெண்ணெற் போர்வின்
கைவண் விராஅன், இருப்பை அன்ன
இவள்அணங்[கு] உற்றனை போறி:
பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே!
[விண்டு=மலை;]
அவன் வந்து தலைவிகிட்ட ஒன்னை இத்தனை நாள் பிரிஞ்சிருந்தேனேன்ன் சொல்லி வருத்தப்படறானாம்; அப்ப அவனைப் பாத்துத் தோழி சொல்றா.
இப்ப விராலிமலைன்னு சொல்றமே; அந்த எடத்துல ”விரா அன்” னுன்ற பேரில ஒரு வள்ளல் இருந்தானாம். அவன் மலைபோல இருக்கற வெண் நெல்லுப் போரை எல்லாம் வர்றவங்களுக்கு வாரி வாரி வழங்கிடுவானாம். அவன் ஊருக்கு ‘இருப்பை’ ன்னு பேரு; அவனோட அந்த ஊரைப் போல அழகான வளமானவ இவ; இவளைப் பிரிஞ்சதால வருத்தமாஇருக்குன்னு சொல்றநீ; ஆனா நீ இதே மாதிரி மத்த பொண்னுங்க கிட்டயும் இதே மாதிரிதான சொல்லுவே?”
இந்த இருப்பையைப் புறநானுறுல 391-ஆம் பாட்டுல “மலிபுனல் வாயில் இருப்பன்னைன்னு சொல்றாங்க; வெண்ணெல்னு ஒரு வகையான நெல்லு இருந்திருக்குது;
நற்றிணையில கூட 350-ஆம் பாட்டுல தேர்வண் கோமான் விராஅன் இருப்பைன்னு பரணர் பாடறாரு.
தோழி கூற்றுப் பத்து—9
கேட்டிசின் வாழியோ மகிழ்ந! ஆற்றுற
மையல் நெஞ்சிற்[கு] எவ்வம் தீர
நினக்கு மருந்தாகிய யான், இனி,
இவட்கு மருந்தன்மை நோம், என் நெஞ்சே!
கேட்டிசின்=கேட்பாயாக; ஆற்றுற=ஆறுதல் அடைய; நோம்=வாடுதம்;
அவன் கட்டினவ ஊட்டுக்கு வருவது கொஞ்சம் கொஞ்சமா கொறையுது; அவன் தலைவி ஊட்டுக்கு வராததற்கு வேற ஒருத்தி ஊட்டுக்குப் போறதுதான்னு தோழி தெரிஞ்சுக்கறா அப்ப அவ சொல்ற பாட்டு இது.
“ஏ மகிழ்நனே ! நீ ரொம்ப நல்லா இரு! இதையும் கொஞ்சம் கேளு; அன்னிக்கு இவளைப் பாத்த ஒடனே ஒனக்கு இவ மேல ஆசை வந்தது; அந்த ஆசையான நோயிக்கு மருந்தா இருந்து நீ ஆறுதல் அடைய நான்தான் இவளை ஒன் கூட சேத்து வச்சேன்; ஆனா இன்னுக்கு நீ வேற ஒருத்தி ஊட்டுக்குப் போறதால இவ படுற தும்ப நோய்க்கு மருந்தா என்னாலே இருக்க முடியலியே! ரொம்ப வருத்தமா இருக்கே!”
தோழி கூற்று பத்து—10
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனி யூரன்நின் மொழிவல்! என்றும்
துஞ்சுமனை நெடுநகர் வருதி,
அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே!
[பழனம் வயல்; கம்புள்=சம்பங் கோழி என்னும் பறவை; பயிர்ப் பெடை=துணையைப் பிரிந்து குரல் எழுப்பும் பெட்டை; துஞ்சுமனை=உள்ளே இருப்பவர் உறங்கியிருக்கும் வீடு; நெடுநகர்=பெரிய மாளிகை]
தோழி சொல்றா
”வயல்ல கூடு கட்டி வாழற சம்பங்கோழியானது, பிரிஞ்சு போயிறுக்கற தன் ஆண் சேவலை வரச் சொல்லிக் கூவுது அப்படிப்பட்ட கழனியெல்லாம் இருக்கற ஊரை உடையவனே! நீ ராத்திரி நேரத்துல இவளைத் தேடி வர்றயே? அப்ப ஊட்டு உள்ள இருக்கறவங்க தூங்கிட்டுதான் இருப்பாங்க; அதால நீ பயப்படாம வர்ற; ஆனா இவ அப்பா கையில இருக்கற வேலுக்குக் கூட நீ பயப்பட மாட்டாயா?”
அதாவது நீ இப்படி பயப்படாம வர்ற; ஒனக்கு என்னா ஆபத்து வந்துடுமோன்னு நாங்க பயப்படறோம்; அதால எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி நீ சீக்கிரம் இவளைக் கட்டிக்கணும்னு மறைபொருளாம்.

Series Navigationஜல்லிக்கட்டுப் போராட்டம்   ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்தொடுவானம் 156. தேர்வும் சோர்வும்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *