பொருனைக்கரை நாயகிகள். தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 14 in the series 5 பெப்ருவரி 2017

எஸ். ஜயலக்ஷ்மி.

tiruppavai_paasuram9-sm இன்று ஆழ்வார் திருநகரி என்று வழங்கப்படும் குருகூர் பொரு்னையாற்றின் தென் கரையில் அமைந் துள்ளது. ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது தொலை வில்லி மங்கலம். இன்று இவ்வூர் இரட்டைத் திருப்பதி என்று வழங்கப் படுகிறது. நவதிருப்பதிகளு்ள் இத்தலமும் ஒன்று.

தொலைவில்லிமங்கலப் பெருமான்
குருகூரிலிருந்த நாயகியை
(பராங்குச நாயகி) அவள் பெற்றோர்கள் தொலைவில்லி மங்கலத் திற்கு அழைத்துச் சென்றார்கள். நோக்கும் பக்கமெல்லாம் கரும் போடு செந்நெல்லும் தாமரையுமாக இருக்கும் அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அரவிந்தலோசனப் பெருமானை சேவித்தார்கள். நாயகியும் சேவித்தாள். ஆனால் அன்று முதல் அடக்கம் என்ற ஒன்றை அடியோடு விட்டு விட்டாள். பெரியவர்கள் பேச்சை மீற லானாள். சொல்லும் சொல்லெல்லாம் கண்னபிரான் என்றானது.

“தோழிகளே! கண்ணபிரானின் திருக் கண்கள், கண்கள் தாமா? அல்லது என் போன்ற அப்பாவிப் பெண் களின் உயிரைப் பருகும் கூற்றமா? தெரியவில்லையே? அவை நாற்புரங்களிலும் சூழ்ந்து அன்றலர்ந்த தாமரை மலர்கள் போலவும் தோன்றுகின்றனவே!”

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ?
அறிகிலேன்
ஆழியங் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ? அறியேன்
சூழவும் தாமரை நான்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்

என்று அக்கண்களை வியந்து பேசுகிறாள்

புருவமும் முறுவலும்
அடுத்த படியாக அவனுடைய புருவம் நினைவிற்கு வருகிறது. அவை என்ன, பெண்கள் மேல் வளைக்கின்ற நீல நிற விற்களா அல்லது மன்மதனுடைய கரும்பு வில்லா என்று அயிர்க்கிறாள். ”முந்தி என்னுயிரை அம்முறுவல் உண்டதே” என்றபடி இவளும் அம்முறுவலை நினைத்துப் பார்க்கிறாள். அது என்ன மின் னலா? முத்துக்களா? திருப்பவளவாயின் சிவந்த நிறமும் முத்துக் களின் வெண்மை நிறமும் கலந்து சுடர் விடுகிறது. பாம்பணையான் திருக்குண்டலமாடும் காதுகளை நினைத்தால் அவை மகர வடிவா கத் தழைக்கின்ற தளிர்களோ என்று இவளுக்குத் தோன்றுகிறது. ஆனால் இதையெல்லாம் தோழிகளுக்கும் அன்னையர்க்கும் காட்ட முடியவில்லையே.

நாள் மன்னு வெண்திங்கள் கொல்? நயந்தார்
கட்கு நச்சிலை கொல்?
சேண் மன்னு நால் தடந்தோள் பெருமாள் தன் திருநுதலே
காண்மின்கள் அன்னையர்கள் என்று காட்டும்
வகையறியேன்
என்று தவிக்கிறாள்.

நானே அவன்!
இப்படி அவனுடைய அவயவ சோபை
களை நினைத்து நினைத்துப் பார்க்கப் பார்க்க ஒரு கட்டத்தில் இவள் தன் வசமிழந்து அவனாக மாறி விடுகிறாள். அவள் பேச்சும் நட வடிக்கையும் மாறி விடுகிறது. அதனால்

கடல் ஞாலம் செய்தேனும் யானே
கடல் ஞாலம் ஆவேனும் யானே
கடல் ஞாலம் கொண்டேனும் யானே
கடல் ஞாலம் உண்டேனும் யானே

என்று தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள். தாயார் இதைக் கேட்கிறாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றொரு நாள்

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும்
உற்றார்களைச் செய்வேனும் யானே
உற்றார்களை அழிப்பேனும் யானே

என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாள். இதையெல்லாம் கேட்ட தாய்க்குத் தன் மகளுக்கு வந்திருக்கும் நோய் இன்னதென்று தெரியவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறாள். கட்டுவிச்சியிடம் (குறிகாரி) சென்று குறி கேட்கலாமா என்று யோசிக்கிறாள். கட்டுவிச்சியிடம் செல்கிறாள்.

கட்டுவிச்சியின் பரிகாரம்.
”என் மகள் ஏன் இப்படி யிருக்கிறாள்? என்ன காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டது? எல்லாம் நானே நானே என்கிறாளே ஏதாவது துர்த் தேவதை இவளுக்குள் ஆவேசித்திருக் குமோ?” என்ற தன் சந்தேகத்தையும் தெரிவிக்கிறாள். இதற்கு ஏதா வது பரிகாரம் செய்யலாமா என்று தன் கருத்தை வெளியிடுகிறாள். கட்டுவிச்சி, “ஒரு சிறு தெய்வத்தின் சீற்றத்தால் வந்தது. அந்தத் தெய்வத்தை திருப்திப்படுத்த பூஜை போட வேண்டும்.” என்கிறாள். கட்டுவிச்சியின் சொல்படி தாயார் பரிகாரம் செய்ய முடிவெடுக்கி றாள். இதையறிந்த நாயகியின் தோழி, தாயே! நீங்கள் செய்வது சரி யில்லை. உங்கள் மகளுடைய நோய் இன்னது என்றும் அதற்குப் பரிகாரம் இன்னதென்றும் விளக்குகிறாள்.

தோழியின் அறிவுரை
”தாயே! இவளோ, சங்கு என்றும்
துழாய் என்றும் சொல்லுகிறாள் நீஙகளோ, சிறு தெய்வவழிபாடு செய்ய வேண்டும் என்கிறீர்கள். இந்த நோய் அந்தச் சிறு தெய்வங் களால் ஏற்பட்டதில்லை. இவள் நோய் மிக்க பெருந் தெய்வத்தால் ஏற்பட்டது. இவள் கேட்கும் படியாக நீங்களும் சங்கு என்றும் சக்கரம் என்றும் சொன்னால் நலமே விளையும்.

மதுவார் துழாய்முடி மாயப்பிரான் கழல் வாழத்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அருமருந்தாமே

“தாயே! கட்டுவிச்சியின் பேச்சைக் கேட்டு ஏதாவது செய்து கள்ளை யும் மாமிசத்தையும் இறைக்காதீர்கள். மேலும் பரிகாரம் செய்கி றேன் என்று கருஞ்சோற்றையும், செஞ்சோற்றையும் அத்தேவதை களின் முன் படைப்பதால் என்ன பயன்? அதை விட பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் உண்டு, உமிழ்ந்த பெருந்தேவனின் பேர் சொன்னால் இவளைப் பழையபடி பெறலாம்.”

“இன்னொன்றும் சொல்கிறேன்.. இவள் பசலை நிறத்தை அடைந்தாள். கண்களும் ஒளி இழந்தன. நீங்கள் செய்யும் பரிகாரம் இவள் நோயை அதிகரிக்கிறது. இவளைப் பழையபடி மீட்டெடுக்க ஒரு வழி சொல்கிறேன். குவலயாபீடத்தைக் கொன்ற கண்ணபிரான் திருநாமத்தைச் சொல்லி அடியார்களுடைய பாத தூளியை இவளுக்கு இடுங்கள். இட்ட அளவிலேயே சூரியனைக் கண்ட பனிபோல நோய் தணியும். மேலும் மாயப்பிரான் அடியார் களான வேத வித்துக்களை வணங்குங்கள். உங்கள் மகள் பிழைத் தெழுவாள்.”

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர்
பெருமான் திருப்
பாதம் பணிந்து இவள் நோய் தீர்த்துக் கொள்ளாது
அணங்காடுதல் முறையன்று.. ஏழ் பிறப்புக்கும் சேமமாகிற
நோய்க்கு மருந்தாகிற கண்ணபிரான் கழல் வாழ்த்துங்கள்

“இந்த அமுத மென் மொழியாளை, விழவொலித் தொலைவில்லி மங்கலம் கொண்டு நீங்கள் தானே காட்டினீர்கள்? அதன் பின் இவள் அப்பெருமான் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதையும், ஆநிரை மேய்த்ததையும் பற்றிக் கண்ணீர் வழிய பிதற்றிக் கொண்டே யிருக்கிறாள். நான்மறைவாணர் வாழும் தொலைவில்லி மங்கலம் சென்று “இழைகொள் சோதிச் செந்தாமரைக் கண்ணனைக் காட்டி னீர்கள் அல்லவா? அது முதல் இவள் அத்திசையையே உற்று நோக்கித் தொழுது கொண்டிருக்கிறாள். நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைக்கிறாள்”.

வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண்
தொலைவில்லி மங்கலம்

நோக்குமேல் அத்திசையல்லால் மறு நோக்கிலள்
வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன் நாமமே

“இவள் தொலைவில்லி மங்கலம் என்ற பெயரைத் தவிர எந்த ஒரு சொல்லையும் சொல்லவும் கேட்கவும் மறுக்கிறாள். இது அவள் முன் செய்த புண்ணியத்தாலா? முகில் வண்ணன் மாயத்தாலா? தாயே! பொருனையின் வடகரையிலுள்ள தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலத்தில் வேத கோஷங் களும் யாகங்களும் நடந்து கொண்டே யிருக்கும், திருமகளின் கடாட்சமும் நிறைந்த ஊர். இவள் அந்நாள் தொடங்கி இந்நாள் வரை தாமரைக் கண்ணா என்று உருகி உருகி நைந்து போகிறாள். இவளு டைய நிலையைப் பார்த்து மரங்களும் இரங்குகின்றன.”

திருந்து வேதமும் வேள்வியும், திருமாமகளிரும்
தாம் மலிந்து
இருந்து வாழ்பொரு நல் வடகரை வண்
தொலைவில்லி மங்கலம்
கருந்தடங்கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி
இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசன! என்றென்று
நைந்திரங்குமே

இவ்வளவு பிரியமும் பக்தியும் கொண்டி ருக்கும் இவளைப்பார்த்தால் நப்பின்னையோ? பூமி தேவியோ? திருமகளோ? என்று தோன்றுகிறது. தேவபிரானாக நின்றும், அரவிந்தலோசனனாக வீற்றிருந்தும் நித்ய வாசம் செய்யும் தொலை வில்லி மங்கலத்தைத் தலையால் வணங்குகிறாள். அவன் நாமத் தையே கேட்பதும் சொல்வதுமாக இருக்கிறாள்.

இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
தொலைவில்லி மங்கலம் சென்னியால் வணங்கும்
அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே

என்றதால் இந்த நாயகி அரவிந்த லோசனனைச் சென்று சேர்ந்திருப்பாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை

===========================================================================

Series Navigationஜல்லிக்கட்டுஈரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *