கிழத்தி என்பது தலவியைக் குறிக்கும். கிழவன் என்னும் தலைவனுக்கேற்ற தகுதியை உடையவள் இவள். இப்பத்துப் பாடல்களும் புறத்தொழுக்கம் பேணிய
தலைவன் தம் இல்லம் வந்தபோது தலைவி ஊடல் கொண்டு கூறியனவாகும்.
கிழத்தி கூற்றுப் பத்து–1
நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்
கைவண் மத்தி கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை அயர விரும்புதி நீயே
[நறுவடி=நறுமணமுள்ள மா வடுக்கள்; நற்றிணையிலும் “நறுவடிமா” என்று வரும்-[நற் 243]; மத்தி=கழாஅர் என்னும் ஊரைச் சேர்ந்த வள்ளல்; வதுவை=திருமணம்;]
தலைவியை உட்டுட்டு அவன் அங்க போயி வேற ஒருத்தியைக் கட்டிக்கிறான்; அப்பறம் கொஞ்ச நாளு கழிச்சு அங்கயே வேற ஒருத்தியைக் கட்டிக்கிட்டான்; இதெல்லாம் தலைவிக்குத் தெரிய வருது. இப்ப அவன் தன் சொந்த ஊட்டுக்குத் தலைவிகிட்ட வர்றான். அப்ப தலைவி சொல்றா.
“கழாஅர்னு ஒரு ஊரு இருக்குது; அங்க மத்தின்னு ஒரு வள்ளல் இருக்கறான்; அந்த ஊரு வளமானது. எப்படித்தெரியுமா? அந்த ஊருல மாமரத்துல நல்ல வாசனையான மாவடு எல்லாம் இருக்கும்; அதோட அந்த மரத்தோட இனிமையான பழமெல்லாம் ஆழமான கொளத்துல ’துடும்’ற ஓசையோட உழும். அப்படிப்பட்ட வளமான ஊரைப் போல இருக்கற நல்ல பொண்ணுங்களைத்தான் ஒனக்குப் புடிக்கும். ஆனா இங்க அது நடக்காது”
மாம்பழம் எப்படி தண்ணியில விழுதோ அதேபோல அங்க இருக்கற பொண்ணுங்க அவங்களோட சொந்தத்தை எல்லாம் உட்டுட்டு ஒங்கூட வந்தாங்களேன்னு சொல்றது மறைபொருளாம்
கிழத்தி கூற்றுப் பத்து—2
இந்திர விழவின் பூவின் அன்ன
புன்தலைப் பேடை வரிநிழல் அகவும்
இவ்வூர் மங்கயர்த் தொகுத்து இனி
எவ்வூர் நின்றன்று—மகிழ்ந—நின் தேரே
[புன்தலை=மெல்லிய தலை; பேடை=குயிற்பேடை]
இந்தப் பாட்டுல இந்திரவிழா சொல்லப்படுது; அரசனே இந்திரனுக்காக மருத நெலத்துல எடுக்கற விழா இது; அன்னிக்கு நெறய பேரு வந்து கூடுவாங்க; அதுல பொண்ணுங்களும் இருக்கும்; அவங்கள்ளாம் வெவ்வேறு வகையா பூக்களைப் போல அழகா இருப்பாங்க;
”அவங்களை எல்லாம் ஒன் தேருலதான் கொண்டு வந்து நீ சேத்தே; அங்கதான் பெட்டைக் குயிலு பிரிவால கூவிக் கொண்டிருக்கும்; அப்படி அவங்களைச் சேத்த ஒன் தேரு இப்ப எங்க போயி நிக்குதோ?” ன்னு தலைவி கேக்கறா;
அவன் எல்லாப் பொண்ணுங்களையும் கொண்டு வந்ததால தலைவிக்குச் சந்தேகம் வந்து சொல்ற பாட்டு இது;
கிழத்தி கூற்றுப் பத்து—3
பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர!
எந்நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே!
[பள்ளி=வாழும் இடம்; நாளிரை=காலை வேளையில் பெறும் உணவு; துன்னல்=பொருந்தத் தழுவல்; பிறர்=உரிமையற்ற பரத்தையர்]
அவன் கொஞ்ச நாள் வேற ஒருத்தி ஊட்டுக்குப் போய் இருந்தான்; இப்ப தான் கட்டியவள் கிட்ட வந்தான்; இவகிட்ட சேர்றதுக்குக் கூப்புடறான்; அப்ப தலைவி சொல்றா
”நீர்நாய்னு ஒண்ணு இருக்கு; அது பொய்கைன்ற நீர்நெலயில வாழுது; அதுமேல புலவு நாத்தமா இருக்கும்; அது வாளை மீனைத்தான் தெனந்தோறும் தன்னோட எரையா ரொம்ப விரும்பித் தின்னும்; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவந்தான் நீ! இங்க பாரு; என் அழகெல்லாம் சுத்தமா அழிஞ்சு போனாலும் வேற பொண்ணுங்களை சேந்த ஒன் மார்பை நான் கண்டிப்பா கூட மாட்டேன்”
நீர் நாய் மேல நாத்தம் இருக்கும்னு சொன்னதால அவன் மேல வேற பொண்ணுங்களைக் கூடியதால இருக்கற அடையாளங்க இருக்கும்னு சொல்றா; வாளை மீனு நாத்தம் அடிக்கும்; மொத நாளு அதைத்தின்ன நீர்நாய் மறுநாளும் அதையே தின்னும்; ரொம்பவும் ஒசத்தியான நீ மறுபடியும் அவங்க ஊட்டுக்கே போறயேன்னு கேக்கறா.
கிழத்தி கூற்றுப் பத்து—4
அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்
பலரே தெய்ய; மறையா தீமே!
[அலமரல்=சுற்றிச் சூழ்ந்த; அமர் துணை=விரும்பிய பரத்தை; மறையா தீமே]
அவன் போயி அவங்களோட நீர் நெலயில ஒண்ணா சேந்து குளிச்சான்; அது அவளுக்குத் தெரிஞ்சுடுத்து; இப்ப அவன் அவ ஊட்டுக்கு வர்றான்; அவ அவன்கிட்ட குளிச்சதப் பத்திக் கேக்கறா; அவனோ இல்லன்னு சாதிக்கறான்; அப்ப அவ சொல்றா.
”எப்பவும் ஒன்னயே சுத்திச் சூழ்ந்திட்டுருக்கற அவங்களொட ஒனக்குப் புடிச்ச ஒருத்தியக் கட்டிக்கிட்டு நீ அங்க குளிச்சத ஒருத்தரு ரெண்டு பேரு இல்ல; பல பேரு பாத்திருக்காங்க; அதால நீ என்கிட்ட மறைச்சுப் பொய் சொல்லாத.”
கிழத்தி கூற்றுப் பத்து—5
கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்பசி களையும் பெரும்புனல் ஊர!
புதல்வனை ஈன்றவெம் மேனி
முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே
[கலித்த=வளர்ந்து செழித்த; சுரும்பு=வண்டு]
அவளுக்குப் பையன் பொறந்திருக்கான்; இப்ப அவன் வறான்; அவகிட்ட தழுவ வர்றான்; அப்ப அவ சொல்றா.
”ஒன் ஊர்ல கரும்பு நடறதுக்காக பாத்தி கட்டுவாங்க; ஆனா அதுல தானா ஆம்பலு வளரும்; வளந்த அது வண்டுகளோட பசியையும் போக்கிடும். அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவனே! எனக்குப் பையன் பொறந்துருக்கான்; அதால என்கிட்ட வராதே; அப்பறம் ஒன் மார்புல இருக்கற புச்செல்லாம் கலைஞ்சு போயிடும்”
கரும்புப் பாத்தியில ஆம்பலு வளருதுன்னு சொன்னது நல்லா இருந்த குடும்பத்துல அவ பழக்கம் வந்துதுன்னு சொல்லிக்காட்டறாளாம்
கிழத்தி கூற்றுப் பத்து—6
உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ
யாரவள் மகிழ்ந! தானே தேரொடுநின்
தளர்நடைப் புதல்வனை உள்ளிநின்
வளமனை வருதலும் வௌவி யோளே?
[உடலல்=சினத்தல்; வௌவல்=கவர்ந்து கொண்டு போதல்]
அவனுக்கும் அவளுக்கும் கொழந்தை பொறந்திருக்கு; அதுவும் நல்லா பெரிசா வளந்துடுச்சி; அவனுக்குப் புள்ள மேல ரொம்ப அன்பு இருக்கு; புள்ளயக் கொஞ்சம்கூட அவன் பிரியாமதான் இருந்தான்; ஆனா ஒரு நாளு அவன் என்ன செஞ்ச்சன்? அவளையும், புள்ளையும் உட்டுட்டுப் பிரிஞ்சு போயி வேற ஒருத்தி ஊட்டுக்குப்போயி தங்கிட்டான்; அப்பறம் ஒரு நாளு வர்றான்.
அப்ப தலைவி சொல்றா, “மகிழ்நனே! ஒன் புள்ள நல்லா சின்ன தேரை உருட்டி வெளயாடறான்; அசைந்து அசைந்து சின்ன நடை போட்டுக்கிட்டு வர்றான்; அவனைப் பாக்க ஆசைப்பட்டு நீயும் நம்ம ஊட்டுக்கு வந்தே; ஆனா அவளோ ஒன் பின்னாலயே வந்தா; ஒன்னைக் கவர்ந்து கூட்டிண்டுப் போயிட்டா; அவ யாருன்னு எனக்குச் சொல்லு; நான் ஒன் பேர்ல கோச்சுக்க மாட்டேன்; அதனால உண்மை என்னன்னு நீயே சொல்லிடு”
வௌவல்ன்றது நல்ல சொல்லு; கம்பன் வாலியானவன் தாரையை வௌவினான் என்று சொல்லியிருப்பாரு.
கிழத்தி கூற்றுப் பத்து—7
மடவள் அம்ம,நீ இனிக்கொண் டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெருநலம் தருக்கும் என்ப விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலரே
ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே
[மடவள்=மடமை உடையவள்; கொண்டோள்=தலைவனைக் கொண்டவள்; நிகரி=நிகராகக் கருதி மாறுபட்டு; விரிமலர்=மொட்டழிந்த புது மலர்]
அவன் வேற ஒருத்தி ஊட்டுக்குப் போயி இருக்கறான்; அப்ப அங்க இருக்கறவ கட்டினவளப் பத்தி ஏதோ இழிவாப் பேசிட்டா; அவன் தன் சொந்த ஊட்டுக்கு வரான்; அப்ப அவன் எங்க போயி இருந்தானோ அங்க இருக்கறாவங்கள்ளாம் கேக்கற மாதிரி தலைவி சொல்றா.
”நீ இப்ப போயி வேற ஒருத்தியோட இருந்தியே; அவ என்னை அவளுக்குச் சரியா நெனச்சு என்ன விட தான் ஒசத்தின்னுக் கருவமாப் பேசினாளாமே! அவளுக்கு ஒண்ணு தெரியாது. அதான் நீ இதே போலச் சேந்து இருந்தவங்க பல பேருன்னு அவளுக்குத் தெரியாது; எண்ணிக்கையில பாத்தா வண்டு போயி தேனு எடுத்து வந்த பூக்களைவிட அவங்க எண்ணிக்கை அதிகமாம்; இதெல்லாம் தெரியாத மடமையை கொண்டவதானே அவ”
வேற யாரோ ஒருத்தித் தன்னைப் பத்தி சொன்னதற்குக் காரணம் அவன்தானேன்னு அவன் செஞ்சதையும் குத்திக் காட்டறா; அதே நேரத்துல அவன் வண்டு மாதிரின்னு சொல்றா; அதால அவன் தன்னைப் பத்தி சொன்ன அவளையும் உட்டுட்டுப் புதுசா யார் கூடவாவது போயிடுவான் அப்படின்றதையும் சொல்றா.
கிழத்தி கூற்றுப் பத்து—8
கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே
யான்தன் அடக்கவும் தான்அடங் கலளே
[கன்னி விடியல்=இளங்காலைப் பொழுது; பேணாளோ=காக்க மாட்டாளோ;]
அவன் எங்க போயி யாருகிட்ட இருக்கானோ அவ அவன் கட்டினவளையே பழிச்சுப் பேசறா; ஆனா கட்டிக்கிட்ட ஒன் பொண்டாட்டிதான் என்னைப் பத்தித்தான் தப்பா பேசறான்னு சொல்லிக்கிட்டுத் திரியறா; அதைக் கட்டினவ கேள்விப்பட்டா; அவன் வந்தபோது அவன்கிட்ட சொல்றா.
”ஒன் ஊர்ல ஆம்பலு விடியல் பொழுதில தாமரை மாதிரி மலரும்; நான் என்ன விட்டு நீ போட்யிட்டேன்னு தெரிஞ்சும் என மன வேதனையை அடக்கிட்டு வாழறேன்; ஆனா அவ அடக்மே இல்லாம இத மாதிரி பேசறாளே? அவ எப்பவுமே அடக்கத்தை காக்க மாட்டாளோ”
இதுல மறஞ்சிருக்கறது ,“நீ அப்படிப்பட்டவளயே விரும்பிப் போறயே”ன்னு சொல்றான்றதுதான். அவன் போயிட்டான்னு தெரிஞ்சாலும் கூட தலைவி வேற ஒருத்தியைப் பத்தி எதுவுமே சொல்லாம அடக்கமா இருக்கா; ஆனா வேற ஒருத்தியோ அடக்கமில்லாமதான் பேசிட்டு இருக்கா; இதுல கட்டினவளோட குடிப்பண்பு அடக்கம் எல்லாம் தெரியுது;
கிழத்தி கூற்றுப் பத்து—9
கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின்பெண்டே?
பலராடு பெருந்துறை மலரொடு வந்த
தண்புனல் வண்டல் உய்த்தென
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே
[வண்டல்=மணலாற் கட்டிய சிறு வீடு; உய்த்தென=அடித்துக் கொண்டு போனதென]
தலைவன் வேற ஒருத்தியோட போயி சேந்ததைத் தெரிஞ்சுகிட்டா தலைவி. வந்த அவன்கிட்ட அதைப் பத்திக் கேக்கறா; ஆனா அவனோ அப்படியெல்லாம் இல்லன்னு மறுக்கிறான். அப்ப அவன்கிட்டத் தலைவி சொல்றா.
’மகிழ்நனே; அன்னிக்கு ஒரு நாளு எல்லாரும் குளிச்சிக்கிட்டிருந்த அந்த தண்ணித் துறையில மணல்ல தான் கட்டின சின்ன ஊடு தண்ணியால அடிச்சுக்கிட்டுப் போயிடுச்சுன்னு கண்ணெல்லாம் செவந்து போயி அழுதுகிட்டு நின்னாளே ஒருத்தி; அவதான ஒன்னோட இருக்கறவ; நானும் அவ யாருன்னு பாத்துட்டேன்ல”
மணல்ல கட்டின ஊடு அடிச்சுகின்னு போனதுக்கே அழுதவ ஒன்ன உட்டுட்டு எப்படி இருப்பா நீ அங்கியே போன்னு சொல்ற மாதிரி பாட்டு இது.
கிழத்தி கூற்றுப் பத்து—10
பழனப் பன்மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர்; நறியர் நின் பெண்டிர்
பேஎய் அனையம் யாம்சேய் பயந்தனமே
[பழனம்=ஊர்ப் பொது நிலம்; சென்னி=உச்சி; சேக்கும்=சென்று தங்கியிருக்கும்; தூயர்=பால்நாற்றம் இல்லாதவர்; நறியர்=நறுமணப் பொருள்களால் புனையப் பெற்றவர்; பேஎய்=வெறுக்கத் தக்க உருவம்]
வேற பொண்ணுங்களோடு போயித் தங்கிட்டு வர்றவன்கிட்ட தலைவி சொல்ற பாட்டு இது.
”ஊருக்குப் பொதுவான எடத்துல இருக்கற மீனையெல்லாம் நாரை ஒண்னு தின்னுது. அப்பறம் அது கழனியில இருக்கற மருதமர உச்சியில போய்த் தங்குது. அப்படிப்பட்ட தண்ணித்துறை இருக்கற ஊரைச் சேந்தவன் நீ. எனக்கு இப்பக் கொழந்தை பொறந்திருக்கு. அதால நான் ஒன் கண்ணுக்கு இப்பப் பேயைப் போலதான் தெரிவேன். நீ அங்க வச்சிருக்கறவங்க சுத்தமா வாசனையுமா இருப்பாங்க”
கொழந்தை பொறந்ததால மெலிசான உருவமும் குழிவான கண்களும் பால் வாசனை உள்ள மார்பகமும் இருக்கறதால என்னை ஒனக்குப் புடிக்காதுன்னு மறைமுகமா சொல்றா. அப்பறம் அங்க இருக்கறவங்க ஒடம்பாலதான் சுத்தமானவங்க; வாசனையெல்லாம் போட்டுக்கறதாலதான் அழகா இருப்பாங்க அன்பால இல்லன்னும் சொல்றா. அத்தோட நாரை ஊர்ப் பொது எடத்துல மீனைத்தின்னுட்டு, மருத மரத்துல போய்த் தங்குற மாதிரி நீ இப்ப அவங்களோட இருந்துட்டு எங்கிட்ட தங்கறதுக்கு வந்திருக்கன்னும் சொல்றா.
=====================================================================================
- கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)
- இலக்கிய சொல்லாடல்கள் : 1அவான் – கார்ட் (Avant-Garde)
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்
- மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா ( 11-03-2017)
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! -2
- கவியெழுதி வடியும்
- கிழத்தி கூற்றுப் பத்து
- தொடுவானம் 160. பட்டமளிப்பு விழா
- அட கல்யாணமே !
- குடைவிரித்தல்
- அருணகிரிநாதரும் அந்தகனும்
- சுவடுகள்
- திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி