(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)
2.
மறு நாள். கிஷன் தாசின் பங்களாவின் சாப்பாட்டுக் கூடத்தில் அழகிய பெரிய கருங்காலி மர மேஜைக்கு முன்னால் அவரும் பிரகாஷும் அமர்ந்திருக்கிறார்கள். சமையல்காரர் நகுல் இருவருக்கும் முன்னால் தட்டுகளையும் கோப்பைகளையும் கொண்டுவந்து வைக்கிறார்
தந்தையும் மகனும் சிற்றுண்டியைச் சுவைக்கத் தொடங்குகிறார்கள்.
நகுல் நாகரிகத்துடன் சமையல்கட்டு வாசற்படிக்கு நகர்ந்து சென்று நிற்கிறார். ஆவி பறக்கும் இட்டிலி, சட்டினி, சாம்பார் வகையறாக்கள் அவர்கள் நாவுகளில் உமிழ்நீர் துளிக்கச் செய்கின்றன.
சாம்பாரில் தோய்த்த இட்டிலித் துணுக்கைச் சுவைத்தவாறு, பிரகாஷ், “நகுல்! இட்டிலிகள் சுவையாக இருக்கின்றன. கடைசியில் எப்படியோ மதராஸ்காரர்கள் போல் பூப்போன்ற இட்டிலியைச் செய்யக் கற்றுக்கொண்டு விட்டீர்கள்! நீங்களும் பல நாள்களாக இட்டிலி சரியாக வரவில்லை, வரவில்லை என்று புலம்பிக்கொண்டே அதைத் தயாரித்துக்கொண்டிருந்தீர்கள். இப்போது கற்றுக்கொண்டுவிட்டீர்கள்!” என்று புன்னகை புரிந்தவாறு நகுலைப் புகழ்கிறான். நகுல் வெட்கத்துடன் தலை குனிகிறார்.
பிரகாஷ், ”அப்பா! நகுலைப் புகழ்ந்து நீங்கள் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இருக்கிறீர்கள். அதனால்தான் அவர் சிரிப்பற்று நிற்கிறார். நீங்களும் புகழ்ந்த பிறகுதான் அவர் முகத்தில் புன்சிரிப்புத் தோன்றும்!” என்கிறான்.
சாம்பாரில் மூழ்கிய இட்டிலியைச் சுவைத்து மென்றபடியே, கிஷன் தாஸ், “நீ சொன்னால் அது நானும் சொன்னது போலத்தான்! நான் வேறு புகழ வேண்டுமா என்ன! ரப்பர் பேப்பர்-வெய்ட்கள் மாதிரி நகுல் ஒரு காலத்தில் இட்டிலி பண்ணிக் கொண்டிருந்ததை நான் மறக்கவில்லை. கொஞ்ச நாளாக அவன் செய்கிற இட்டிலிகள் பூப்போலத்தான் இருக்கின்றன,” என்ற பின், “ஹேய், நகுல்! அந்த சூட்சுமத்தை எப்படியப்பா நீ கற்றுக்கொண்டாய்? உனக்கு மதராசி சிநேகிதர்கள் யாரையாவது தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டே இன்னொரு துணுக்கு இட்டிலியைச் சட்டினியில் தோய்த்து வாயில் போட்டுக்கொள்ளுகிறார்.
“ஆமாம், அய்யா! கொஞ்ச நாள்களுக்கு முன்னால் நான் என் சொந்த ஊருக்குப் போயிருந்த போது பக்கத்து வீட்டுக்குப் புதிதாய்க் குடிவந்திருந்த ஒரு தமிழ்ப் பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது. அவரிடமிருந்து நான் மென்மையான இட்டிலிகளைச் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்…. அரிசி, உளுந்து ஆகியவற்றின் அளவு, அவற்றை அரைக்கின்ற சரியான பக்குவம் ஆகியவற்றைப் பொறுத்தது அது. அதுதான் வித்தை!” என்கிறான் நகுல்.
“ஓகோ! அவள் ஒரு நல்ல பெண்மணியாக இருக்க வேண்டும். சிலர் பிறருக்கு இது போல் சொல்லித்தர மாட்டார்கள். மனசு வராது!…நகுல்! பிரகாஷ் இன்று மதராசுக்குப் புறப்பட்டுப் போகிறான். அங்கிருந்து அமெரிக்காவுக்குப் போகிறான்…”
“தெரியும், அய்யா! சின்னய்யா சொன்னார். பத்து நாள்கள் வரை தாக்குப் பிடிக்கக்கூடிய நொறுக்குத் தீனிகளைச் செய்து தருகிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அங்கே என்ன கிடைக்கிறதோ அதையே சாப்பிட்டுக்கொள்ளுகிறாராம்!”
“பிரகாஷ் சொல்லுவது சரிதான். வேலை மெனக்கெட்டு அவற்றைச் சுமந்துகொண்டு போவானேன்? அங்கே என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஒரு மாறுதலுக்காக! அப்போதுதான் உன் சமையலின் அருமை அவனுக்குத் தெரியும்! அங்கிருந்து கிளம்பும் போது உன் பதார்த்தங்களுக்காக அவன் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு வருவான் என்பதில் சந்தேகமில்லை!”
கிஷன் தாசின் புகழ்ச்சி மொழிகளைக் கேட்டதும் நகுலின் முகம் மலர்கிறது. பிரகாஷ் சிரிக்கிறான்.
“நகுல்! அப்பா உங்களை ஏன் இவ்வளவு புகழ்கிறார், தெரியுமா?”
“சொல்லுங்கள், சின்னய்யா!”
“நீங்கள் உண்மையில் திறமையான சமையல்காரர்தான், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் புறப்பட்டுப் போனதும் அவரது இரத்த அழுத்த நோய்க்கு எதெல்லாம் ஆகாது என்று நான் தடை செய்திருக்கிறேனோ, அதையெல்லம் சமைத்துப் போடும்படி உங்களை நிர்ப்பந்தப் படுத்துவதற்காகத்தான்! புரிகிறதா?”
“ஓ! அப்படியா சங்கதி? ஆனால் அந்த விஷயத்தில் அய்யாவுக்கு நான் இடம் கொடுக்கமாட்டேன்! அது பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம், சின்னய்யா! நீங்கள் அது பற்றி இப்படி மறைமுகமாக எனக்குச் சொல்ல வேண்டியதில்லை…. உங்கள் கார் டிரைவரிடமும் சொல்லிவையுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் தடை செய்துள்ளவற்றையெல்லாம் அவர் ஏதேனும் ஓட்டலுக்கு முன்னால் காரை நிறுத்தி அங்கே போய் வாங்கித் தின்றுவிடுவார்!”
“நன்றி, நகுல்! நான் ஏற்கெனவே சொல்லி வைத்திருக்கிறேன் டிரைவரிடம். இருந்தாலும், மறுபடியும் சொல்லுகிறேன்!” – இவ்வாறு சொல்லிவிட்டு, பிரகாஷ் புன்னகை செய்யவே கிஷன் தாஸ் ஒரு பொய்க் கோபத்துடன் நகுலை முறைக்கிறார்.
“என்ன இது, நகுல்! உன் அய்யாவுக்கு எதிராக நீ பிரகாஷுக்கு யோசனை யெல்லாம் சொல்லுகிறாய்!”
“அப்படி யெல்லாம் இல்லை, அய்யா! ஒரு தாயார் தன் மகனைக் கவனித்துக்கொள்ளுவது மாதிரி உங்களைக் கவனித்துக்கொள்ளுவது என் கடமை!”
“என்னது! ஒரு தாயார் தன் மகனைக் கவனித்துக் கொள்ளுவது மாதிரியா! அப்படி யென்றால் உனக்கு நான் புடவை வாங்கித் தருகிறேன். அதைக் கட்டிக்கொள் இனிமேல். அப்போதுதான் அம்மாவின் பங்கு சரியாக அமையும்!”
நகுலின் முகம் சிவக்கிறது. பிரகாஷ் இருவரையும் புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
”ஹேய், சகுல்! நீ வயதில் என்னைவிட மூத்தவனாக இருந்தால் நீ சொல்லுவதை ஓரளவு ஏற்கலாம். நீயோ இளையவன்…. அது கிடக்கட்டும் உனக்கு இப்போது என்ன வயதாகிறது?”
“எனக்குத் தெரியாது, அய்யா. ஆனால் நான் நம் நாடு குடியரசாகிய அன்று பிறந்தேனாம். என் மாமா சொல்லக் கேட்டிருக்கிறேன்.”
“ஓ! ஜனவரி 26, 1950! அப்படியானால், நீ என் அம்மா மாதிரி என்று சொல்ல முடியாது. உனக்கு நாற்பத்து மூன்று வயதுதான் ஆகிறது, … சரி, காப்பி கொண்டு வரலாம் நீ!”
நகுல் சமையலறைக்குள் நுழைந்து காப்பியைக் கலக்கிறார்.
“அப்பா! நகுல் மாதிரி ஒரு சமையல்காரர் கிடைத்திருப்பது நம் அதிருஷ்டம்! இல்லையா, அப்பா?”
“கண்டிப்பாக! அது வெறும் அதிருஷ்டத்துக்கும் மேல் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் தன்னை அம்மா மாதிரி என்று சொன்னதை நான் கிண்டல் செய்தாலும், அதுதான் உண்மை!”
“எனக்கும் தெரியும், அப்பா. நீங்கள் சொல்லவே வேண்டாம்!”
நகுல் காப்பிக் கோப்பைகளைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைக்கிறார். இருவரும் காப்பியைச் சுவைத்துப் பருகுகிறார்கள்.
“இட்டிலி மாதிரி காப்பியும் மதராஸில் தான் தனி ருசி!”
“ஆனால், வட இந்தியாவில்தான் தேநீர் நன்றாக இருக்கும்!”
“நீங்கள் சொல்லுவது சரிதான், அப்பா!”
நகுல் தட்டுகளையும் மற்ற ஏனங்களையும் சாப்பாட்டு மேஜையிலிருந்து எடுத்துச் சென்று சமையலறைக் கழுவுதொட்டியில் போடுகிறார். அவற்றைக் கழுவுவதில் அவர் முனைந்திருந்தாலும், அப்பாவும் பிள்ளையும் பேசுவதைக் கேட்பதில் கருத்தாக இருக்கிறார்.
“பிரகாஷ்! நேற்றிரவு நான் சொன்னது பற்றி யோசித்துப்பார்.”
“எதைப் பற்றி?”
“வேறு எதைப் பற்றி? உன் கல்யாணத்தைப் பற்றித்தான்! எவ்வளவு விரைவில் செய்துகொள்ளுகிறாயோ அவ்வளவு நல்லது. எனக்கும் வயது ஆகிக்கொண்டிருக்கிறது, பார். முன் மாதிரி ஆரோக்கியமாகவும் நான் இப்போது இல்லை!”
“என்னுடைய பேச்சை நீங்கள் கேட்டு டாகடரைப் பார்த்தால், நானும் உங்கள் பேச்சைக் கேட்கத் தயார்!”
“வீண் பிடிவாதம் பிடிக்காதே, பிரகாஷ்!”
சமையலறையில் இருந்தபடியே, நகுல், “அப்பாவின் பேச்சைக் கேட்டு விரைவில் கல்யாணம் செய்துகொள்ளுங்கள், சின்னய்யா!” என்று குரல் கொடுக்கிறார்.
”நகுல்! இந்த ஒற்றுக் கேட்கும் வழக்கத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?”
“நான் ஒன்றும் ஒற்றுக் கேட்கவில்லை, சின்னய்யா! நீங்கள் தான் சத்தமாய்ப் பேசுகிறீர்களே- நான் ஒற்றுக்கேட்கத் தேவையே இல்லாமல்!… ஒருவேளை சின்னய்யா யாரையேனும் காதலிக்கிறாரோ என்னவோ! அய்யவிடம் சொல்ல வெட்கப்படுகிறார் என்று தோன்றுகிறது!”
“நானே அந்தப் பேச்சை எடுக்கும்போது அவன் வெட்கப்படுவானேன்? … என்ன, பிரகாஷ்! நகுல் என்னவோ சொல்லுகிறானே? அப்படி ஏதாவது விஷயம் இருக்கிறதா?”
“அப்படியெல்லாம் எதுவுமே இல்லை, அப்பா. நீங்கள் டாக்டரைப் பார்க்கிறீர்கள்! நான் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன்!”
“சின்னய்யா சொல்லுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை, அய்யா! அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும் சின்னய்யா அதைப் பற்றி உங்களிடம் பேசுவார். அல்லது, அந்தப் பெண்ணின் பெற்றோர் மூலம் விஷயத்தைத் தெரிவிக்க உங்களைப் பார்க்கச் சொல்லுவார்!”
“அப்படி எதுவுமே இல்லை, நகுல்! … வீட்டில் பொழுது போக்க நிறைய டி.வி. தொடர்கள் பார்க்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!”
“இதற்குப் போய் டி.வி. தொடர்கள் பார்க்க வேண்டுமாக்கும்! இது என் ஊகம். தனிப்பட்ட கருத்து!”
“ஒருவேளை தனிப்பட்ட அனுபவமாகவும் இருக்கலாம்…” – பிரகாஷ் இவ்வாறு சொன்னதற்கு நகுலிடமிருந்து பதில் இல்லை.
“என்ன, நகுல்? பதிலைக் காணோம்? வெளியே வந்து என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!”
“இதோ வருகிறேன், சின்னய்யா!” என்று சொல்லிவிட்டு நகுல் அவர்கள் முன் வந்து நிற்கிறார்.
‘”ஆக, நீங்கள் காதல்திருமணத்துக்கு ஆதரவு அளிப்பவர்! சரிதானே?”
தலை குனிந்து ஒரு கணம் மவுனமாக இருந்த பின் நகுல் வாயைத் திறக்கிறார்: “ஆமாம். என்னுடையது காதல் திருமணம். அதனால்தான் என் மனைவி இறந்த பின் நான் மறுமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு மனம் இசையவில்லை… சின்னய்யா! நீங்கள் மணம் செய்துகொள்ளுவதற்கு இதுதான் சரியான வயது. எதையும் காலாகாலத்தில் செய்யவேண்டும். அதிலும், முக்கியமாய்த் திருமணத்தைத் தள்ளிப்போடக் கூடாது.”
“இன்றைக்கு நகுல் ஒரே அறிவுரையாய்ச் சொல்லுகிறானே!” என்று புன்சிரிப்புடன் கிஷன் தாஸ் குறுக்கிடுகிறார்.
“தப்பான அறிவுரை! … நகுல்! இரவில் திடீரன்று அலறும் அப்பா டாக்டரைப் பார்க்கச் சம்மதித்த பிறகுதான் நான் கல்யாணத்துக்குச் சம்மதிப்பேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டேன். நள்ளிரவுக்கு மேல் அப்பா எப்படி அலறுகிறார்! உங்களுக்குத்தான் தெரியுமே, நகுல்!”
நகுலிடம் பிரகாஷ் அப்படி வெளிப்படையாய்ப் பேசியதை ரசிக்காத கிஷன் தாஸ் அவனை முறைக்கிறார்.
அவரது பார்வையின் பொருளைப் புரிந்துகொள்ளும் பிரகாஷ், “மன்னித்துக்கொள்ளுங்கள், அப்பா!” என்கிறான்.
”சரி, சரி….பயணத்துக்கு வேண்டியதை யெல்லாம் தயார் செய்து விட்டாய்தானே? உன் பெட்டி, பைகள் முதலியவற்றை?”
“செய்தாகிவிட்டது, அப்பா. இருந்தாலும், இன்னும் ஒரு முறை சரிபார்த்துவிட வேண்டும்.”
“நான் வேண்டுமானால் செய்யட்டுமா?”
“தேவையில்லை, அப்பா! நானென்ன, முதன் முதலாகவா விமானப் பயணம் போகிறேன்?”
“சரி…”
பிரகாஷ் எழுந்து தன்னறைக்குப் போகிறான்.
jothigirija@live.com
- கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)
- இலக்கிய சொல்லாடல்கள் : 1அவான் – கார்ட் (Avant-Garde)
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்
- மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா ( 11-03-2017)
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! -2
- கவியெழுதி வடியும்
- கிழத்தி கூற்றுப் பத்து
- தொடுவானம் 160. பட்டமளிப்பு விழா
- அட கல்யாணமே !
- குடைவிரித்தல்
- அருணகிரிநாதரும் அந்தகனும்
- சுவடுகள்
- திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி