ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …

author
0 minutes, 4 seconds Read
This entry is part 5 of 13 in the series 2 ஏப்ரல் 2017

 

 

‘ ஹைக்கூ தோப்பு ‘ கவிதைத் தொகுப்பை எழுதியவர் ஏகாதசி ! திரைப்படப் பாடலாசிரியர் — இயக்குநர். 80 பக்கங்களில் ஹைக்கூ கவிதைகள் தந்துள்ளார். இவர் கவிதைகளைப் பற்றி ச. தமிழ்ச்செல்வன் கூறுகிறார் : ” உணர்ச்சி அலைகளும் கிராமத்துக் காற்றும் மோதித் தெறிக்கும் இவ்வரிகள் கவித்துவமிக்க வெளிப்பாடுகள். ”

கவிதைகள் நிறைவு தருகின்றன.

வீட்டிற்குள் மழை

தண்ணீரால் நிறைகிறது

என் பள்ளிக்கூடத் தட்டு

கிராமத்துச் சிறுவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு.

அடுத்து ஒரு கவிதை சவுக்கடியாய் விழுகிறது.

திருமணம் நடக்காததால்

செத்துப்போனாள் அக்கா

எத்தனை மாலைகள்

 

மளிகைக் கடைக்குப் போடுங்கள்

புத்தகங்களை

மக்களைச் சென்றடையட்டும் கவிதைகள்

— பலரது மனத்தின் வலி சிறுகவிதையாகி நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.

விடுமுறைக் காலம்

கரும்பலகை எழுத்துக்களை வாசிக்குமா

காலி இருக்கைகள்

மாணவர்கள் இல்லாத , காலி வகுப்பறையை யார்தான் ரசிக்க முடியும் ?

யாரும் கேட்பதில்லை

காற்றைத் திருடி விற்கிறான்

பலூன்காரன்

— இதை என்னால் ரசிக்க முடியவில்லை. பலூனுக்குள் இருப்பது ஒரு மனிதனின் மூச்சுக்காற்று —

உயிர்க்காற்று. அக்காற்று வாழ்க்கைப் போராட்டத்தின் வாயு வடிவமல்லவா

சும்மா கிடக்கும் மரக்கால்

மண் நிரப்பி

செடி வளர்க்கிறாள் மகள்

— என்பதில் ஒரு பெரும் சோகக் கதை ஒளிந்துகொண்டிருக்கிறது. விவசாயம் இல்லாத வெற்று வாழ்க்கையை மௌனமாகச் சொல்கிறது பயனில்லாமல் போன மரக்கால்.

ஏழ்மையை அழுத்தமாகச் சொல்கிறது ஒரு கவிதை !

காசு கேட்டு அழுதபடி

தூங்கிப் போன சிறுவன் கனவில்

மிட்டாய் மரம்

வாழ்க்கையைக் கூர்ந்து பார்க்கும் கவிமனத்தைக் காட்டுகிறது ஒரு கவிதை !

வெட்டுக் கத்தி

பயமின்றி உட்கார்ந்திருக்கின்றன

கறிக்கடை ஈக்கள்

— இது பலரும் பார்த்த காட்சிதான். கவிதையாகப் பதிவாகும் போதுதான் இலக்கிய பீடம் ஏறியிருக்கிறது.

யதார்த்தம் கவிதையாவது கவிதைக் கலைஞன் பார்வையில்தான்.

திரை மறைவில்

பீடி குடித்துக்கொண்டிருக்கிறான்

பெண் வேசக்காரன்

தண்ணீர் பற்றாக்குறையை முன் வைக்கிறது.

கோழிக் கூடாகிப் போனது

தாத்தா நீர் இறைத்த

கமலை சால்

— வயல்கள் நீர் பெற , பம்புசெட் வந்துவிட்ட நவீன தொழில் நுட்பத்தைக் கட்டுவதாகவும் இக்கவிதையைப் பார்க்க முடியும்.

வீடற்ற பரிதாப நிலையைப் பேசுகிறது ஒரு கவிதை !

நிறுத்தத்தில் உட்கார்ந்திருக்கிறாள்

பேருந்திற்காக அல்ல

மூட்டை முடிச்சுகளுடன் பிச்சைக்காரி !

 

ஹைக்கூ கவிதைகளால் உலகை அளக்கும் வேலையை வெற்றிகரமாகச் செய்துள்ளார் ஏகாதசி ! எளிய ,

கூர்மையான சொல்லாட்சி இவர் வெற்றிக்கு மிகவும் உதவியுள்ளது.

 

Series Navigationதொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சிஇரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *