ஆழ்வார்கள் போற்றவே ஆடிர் ஊசல்

This entry is part 7 of 12 in the series 9 ஏப்ரல் 2017

 

பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரிப்பனையங்கார் பாடியுள்ள “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஆறாம் பாடல் முக்கியமான ஒன்றாகும். இப்பாசுரத்தில் ஆழ்வார்களின் திருநாமங்கள் எல்லாம் கூறப்பட்டு அவர்கள் சூழ்ந்திருக்க சீரங்கநாயகியார் திருஊஞ்சல் ஆட வேண்டுமென நூலாசிரியர் அருளிச் செய்கிறார்.

 

”வீறுபொய்கை பூதத்தார் இருபால் ஞான

விளக்கேந்த மயிலையர்கோன் வியந்து காண

மாறன்மறைத் தமிழ்மதுர கவிநின் றேத்த

வாழ்குல சேகரன்பாணன் கலியன் போற்ற

ஆறுசமயத் திருந்தோன் அருகில் வாழ்த்த

அணிபுதுவை வேதியன்பல் லாண்டு பாடத்

தேறுதொண்டர் அடிப்பொடிதார் அடியிற் சூட்ட

சீரங்க நாயகியார் ஆடிர் ஊசல்”

 

“மிகப்பெருமை கொண்ட பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் தங்களின் இருபக்கத்திலும் நின்று ஞானவிளக்கை ஏந்துகின்றனர்; அந்த ஞான விளக்கின் ஒளியில் பேயாழ்வார் உம்மை வியப்புடன் பார்க்கின்றார். நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரும் உங்கள் அருகில் நின்று தங்கள் புகழைப் பேசுகின்றனர். குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் உங்களைப் போற்றுகின்றனர்.

 

ஆறு சமயங்களயும் ஆய்ந்து அறிந்த திருமழிசை ஆழ்வார் உம்மைப் போற்றுகின்றார். திருவில்லிபுத்தூர் வேதியரான பெரியாழ்வார் தங்களுக்குப் பல்லாண்டு பாடுகின்றார். தொண்டரடிப் பொடியாழ்வார் தங்களின் திருவடிகளில் சிறந்த மாலையைச் சூட்டுகின்றார். இத்தகைய மெருமை மிக்க சீரங்கநாயகித் தாயாரே! ஊஞ்சல் ஆடுவீராக” என்பது இப்பாடலின் பொருளாகும்.

 

திருக்கோவலூரில் முதலாழ்வார்கள் மூவரும் ஒன்று சேர்கின்றனர். அப்போது அவர்களிடையே புகுந்த பெருமாள் அவர்களை நெருக்குகிறார். அவர் யார் என அறிய பொய்கையாழ்வார், “வையம் தகளியா,வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோனை விளக்காக ஏற்றுகிறார். ஆனால் அப்பாசுரத்தில் திரி கூறப்ப

டவில்லை. ஆனால் பின்னால் வந்த திருவரங்கத்து அமுதனார், “மறையின் குருத்தின் பொருளையும், செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றாகத் திரித்து” [இராமானுச நூற்றந்தாதி-8]எனக்குறிப்பிடுவதிலிருந்து வேதாந்தமும், சேந்தமிழும் சேர்ந்து ஒன்றாகத் திரித்த திரி என்று கொள்ளலாம்.

 

அடுத்து பூதத்தாழ்வார், “அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புரு சிந்த இடுதிரியாக ஞான விளக்கேற்றினார். இந்த அரிய இரு விளக்குகளின் ஒளியில் பேயாழ்வார் நெருக்கிய பெருமானைத் ”திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்” என்று தரிசித்தார். இந்த வரலாற்றைக் கூறும் முதல் இரண்டு அடிகளில் கூறி அம்மூன்று ஆழ்வார்கள் நாயகியாரைத் தரிசிப்பதைப் பாடல் காட்டுகிறது. அடுத்து, “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றும் “உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் “ என்றும் போற்றப்படும் நம்மாழ்வாரும், “வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி” என்று உபதேசரத்தின மாலை போற்றும்  மதுரகவி ஆழ்வாரும் நாயகியாரைப் புகழ்கின்றனர்.

 

தொடர்ந்து “பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள், சேரலர்கோன், எங்கள் குலசேகரன்” என்று போற்றப்படும் குலசேகர ஆழ்வார் போற்றுவது காட்டப்படுகிறது. அடுத்து, “வாழி பரகாலன், வாஅழி கலிகன்றி, வாழி குறையலூர் வாழ்வேந்தன்” என்று எம்பெருமானாரால் அருளிச் செய்யப்பெற்றவரும், பெருமாளால் திருவெட்டெழுத்து மந்திரம் ஓதப்பெற்றவருமான திருமங்கை ஆழ்வார் துதிப்பது தெரிகிறது.

 

இப்பாசுரத்தில் திருமழிசையாழ்வார் ”ஆறு சமயத்திருந்தோன்” என்று அருளப்படுகின்றார். அதாவது, காணபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம், சைவம், வைணவம் எனும் ஆறு சமயங்களையும் ஆய்ந்தவர் திருமழிசையாழ்வார் என்று அவர் பெருமை பேசப்படுகிறது.

 

திருவில்லிபுத்தூர் வேதியராகிப் பொற்கிழியறுத்துப் பெருமாளுக்கே பல்லாண்டு பாடி அருளிச் செய்தவரான பெரியாழ்வார் சீரங்க நாயகியாருக்கும் பல்லாண்டு பாடுவது கூறப்படுகிறது. பெரியாழ்வாரைக் குறிப்பிட்டபடியால் ஆண்டாள் நாச்சியாரை கூறாமல் விடப்பட்டது எனலாம். திருநந்தவனம் அமைத்துப் பெருமாளுக்குத் துளவத் தொண்டு புரிந்து, ‘திருமாலை’ மற்றும் திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களை அருளிச் செய்தவருமான தொண்டரடிப்பொடியாழ்வார் நாயகியின் திருவடிகளுக்குப் பூமாலை சூட்டி மகிழ்கின்றார். இவ்வாறு அனைத்து ஆழ்வார் பெருமக்களும் சூழ்ந்திருந்து சீரங்கநாயகியாரின் ஊஞ்சல் வைபவத்தைக் கண்டு களிக்கின்றனர்.

 

வளவ. துரையன், 20, இராசரசேசுவரி நகர், கூத்தப்பாக்கம் கடலூர், 607002

பேச : 93676 312228; மின்னஞ்சல் : valavaduraiyan@gmail.com

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம்: சாத்திரியின் தரிசனங்களாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *