படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…?
முருகபூபதி – அவுஸ்திரேலியா
” எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை. ஆனால், என்னிடம் இன்னமும் விடைதெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம்தான் என்ன…? இந்தக்கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியும் ஆகும்…”
இந்த வரிகளுடன் சாத்திரியின் ராணியக்கா என்ற சிறுகதை முடிகிறது. இந்த ராணியக்கா மட்டுமல்ல அவரைப்போன்ற பல ராணியக்காக்களின் கதைகள் மட்டுமல்ல ஈழத்தின் அனைத்து மக்களுமே என்ன பாவம் செய்தார்கள்…? என்ற கேள்விதான் ஒரு வாசகன் என்ற நிலையிலிருந்து எம்மிடம் எழுகின்றது.
ஈழத்திற்கான போரைத்தொடங்கியவர்களில் பலர் இன்றில்லை. அவர்களைப்பின்பற்றியவர்கள் பரதேசிகளாக சென்றுவிட்டனர். சென்றவிடத்தில் ஈழத்தின் நினைவுகள் துரத்திக்கொண்டிருக்கின்றன.
சாதாரண மனிதனாக இருந்தால் அந்த நினைவுகள் வரும்போதெல்லாம் நீண்ட பெருமூச்சை காற்றில் பரவச்செய்துவிட்டு மற்றவேலைகளை கவனிக்கலாம்.
ஆனால், சாத்திரி போன்ற எழுத்தாளர்களினால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவர்களின் ஆழ்ந்த பெருமூச்சுக்கள்தான் கதைகளாக வெளியே தள்ளப்படுகின்றன. எழுத்தில் பதிவாகிவிடுகின்றன.
கி.மு. – கி.பி. என்ற சொற்பதம் உலகவரலாற்றில் இடம்பெற்றுவருகிறது. அதுபோன்று போ. மு. – போ. பி. என்று நாம் எமது தமிழின வரலாற்றை எழுத நேர்ந்திருக்கிறது.
அதாவது போருக்கு முன்னர், போருக்குப்பின்னர்.
சாத்திரி இரண்டு காலங்கள் பற்றியும் எழுதிவரும் படைப்பாளி. அதனால் அவரது ஆயுத எழுத்து படித்தோம். தற்பொழுது அவரது மற்றும் ஒரு பதிவாக அவலங்கள் படிக்கின்றோம். இவர் எழுதிய அன்று சிந்திய இரத்தம் இதுவரையில் எனக்கு படிக்கக்கிடைக்கவில்லை.
ஈழப்போர் முடிவுற்ற பின்னர்தான் இந்த மூன்று நூல்களையும் சாத்திரி வரவாக்கியிருக்கிறார். இன்னும் சரியாகச்சொல்லப்போனால், விடுதலைப்புலிகள் களத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர்தான் இவற்றை நூலாக்குகின்றார்.
அவர்கள் தோற்கடிக்கப்படாதிருந்தால், சாத்திரியிடமிருந்து இந்த மூன்று நூல்களையும் இலக்கிய உலகம் பெற்றிருக்காது. விடுதலைப்புலிகளின் வெற்றியின் நியாயங்கள்தான் அவரது எழுத்தில் பேசப்பட்டிருக்கும்.
எம்மைப்பொறுத்த மட்டில் இந்தப்போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட ஜென்மங்கள் இலங்கையின் மூவின மக்களுமே. அதிலும் ஏழை மக்கள். நீடித்த ஈழப்போரின் முடிவும் விடுதலைப்புலிகளின் தோல்வியும் பலரையும் சுதந்திரமாக, எவருக்கும் பயமின்றி துணிந்து எழுதவைத்திருக்கிறது.
அதனால் போரை நீடிக்கச்செய்த தரப்புகளின் உள்விவகாரங்களும் மறைக்கப்பட்ட இரகசியங்களும் அம்பலமாகின்றன. அதில் ஒரு தரப்பின் தீவிர ஆதரவாளராக ஓருகாலத்திலிருந்த ஒருவரிடமிருந்து எழுத்துமூல வாக்குமூலம் வரும்பொழுது, அவர் சார்ந்திருந்த தரப்பின் செயல்களின் மௌன சாட்சியாகவும் அவரையும் இனம் காண்கின்றோம்.
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவல் வடிவத்தில் பேசிய அவலங்களை தற்பொழுது அதே பெயரில் சில சிறுகதைகளிலும் பார்க்கின்றோம்.
இந்தத்தொகுதியினை எதிர் வெளியீடு என்ற பதிப்பகம் தமிழ்நாடு பொள்ளாச்சியில் வெளியிட்டிருக்கிறது. சாத்திரி கனவு கண்ட ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இலங்கைப்படைகளிடம் வீழ்ந்த கிளிநொச்சியிலிருந்து கருணாகரன் ” உண்மை மனிதர்களின் கதைகள்” என்ற தலைப்பில் சிறந்த முன்னுரை தந்திருக்கிறார்.
அவலங்கள் கதைகளை எழுதியவரும் – முன்னுரை தருபவரும் நீடித்த அந்தப்போரின் மௌனசாட்சிகளே.
நீடிக்கும் போரில் முதல் கட்டமாக பெரிதும் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான், இரண்டாம் மூன்றாம் கட்டங்களிலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது போர் வரலாற்று ஆசிரியர்களின் சரியான கூற்று.
அந்தப்போர், வியட்நாமில் நடந்தாலென்ன, ஈராக், லெபனான், பாலஸ்தீனம், சிரியா, காஸ்மீரில் நடந்தால் என்ன, இலங்கையில் நடந்தாலென்ன முதலிலும் இறுதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்கள்தான்.
படைகளின் தேடுதல் வேட்டையில் இளைஞர்களோ ஆண்போராளிகளோ சிக்கவில்லையென்றால், அந்த வலையில் சிக்கிச்சீரழிவது அவர்களின் சகோதரிகள் அல்லது தாய்மார்தான்.
காணாமல்போய்விட்டவரை தேடிச்செல்லும் பெண்ணுக்கும் நிலை இதுதான். போரில் குடும்பத்தலைவனை இழந்த பின்னர் சுமைகளுடன் போராடுவதும் பெண்தான். போரினால் விதவையாகிவிட்டால் சமூகத்தின் பார்வையில் நீடிக்கும் விமர்சனங்கள் மற்றும் ஒரு போராட்டம்.
இவ்வாறு நீடிக்கும் போர் வழங்கும் அறுவடைகள் அனைத்தும் பெண்களையே சார்ந்திருக்கிறது.
சாத்திரியும் தமது கதைகளில் பெண்களின் அவலங்களையே உயிரோட்டமாக பதிவுசெய்திருக்கின்றமையால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் வரலாறாகியிருக்கிறது இந்த அவலங்கள் கதைத்தொகுதி.
அவலங்கள் தொகுப்பின் முதல் கதையில் வரும் ராணியக்கா தனது நீண்ட தலைமுடியை பராமரிக்கவே தினமும் அரைமணிநேரம் செலவிடுபவர். முழுகிய பின்னர் தலைமுடியை ஒரு கதிரையில் படரவிட்டு அதனை சாம்பிராணி புகையுடன் உறவாடச்செய்பவர். தினமும் புதிய வார்ப்பு படப்பாடலை – இதயம் போகுதே – பாடிக்கொண்டிருப்பவர்.
அவ்வாறு ஊரில் வாழ்ந்த ராணியக்கா, இந்திய ஆமியிடம் அசிங்கப்பட்டு, இறுதியில் இந்தியாவிலேயே வாழநேர்ந்து, அந்த நாட்டின் தமிழ் மாநிலம் சென்னையில் வளசரவாக்கத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்.
ராணியக்காவின் கதையைச்சொல்பவர், அவரது தாயக வாழ்வுக்கும் இந்திய இடப்பெயர்வு வாழ்வுக்கும் இடையில் நடந்தவற்றை சொல்லும்போது, ராணியக்காவின் கூந்தலை சித்திரிக்கிறார்.
அந்தக்கூந்தலை இந்திய சீக்கிய சிப்பாயும் பற்றிப்பிடிக்கின்றான். இறுதியில் அவர் தனது உளப்பாதிப்புக்கு எடுத்த மருந்து மாத்திரைகளே அந்த அழகிய நீண்ட கூந்தலை படிப்படியாக அகற்றிவிட்டன. இறுதியில் கூந்தலற்ற மொட்டந்தலையுடன் காட்சிதரும் ராணியக்கா, இறுதியில் இந்த உலகைவிட்டே நிரந்தரமாக விடைபெறுகிறார்.
அவரது தற்கொலை மரணம், அவரது கதையை எழுதியவருக்கு கோபத்தைத்தரவில்லை.
ஈழப்போரில் பல பெண்போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலைசெய்துகொண்டார்கள். ராணியக்காவும் தொடர்ந்து ஈழத்திலிருந்திருப்பின் பெண்போராளிகளுடன் இணைந்திருக்கக்கூடும். சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டாலும் அதனை வீரமரணம் என்று வர்ணிக்கும் எமதுதமிழ்ச் சமூகம், இந்தப்போரினால் உடல் உளப்பாதிப்புக்குள்ளான ராணியக்கா அளவுக்கு அதிகமாக நித்திரைக்குளிசை எடுத்தார் என்பதனால் அவரது மரணத்தை தற்கொலையாக்கிவிட்டது.
சயனைற்றுக்கும் அளவுக்கு அதிகமாக எடுக்கப்படும் நித்திரைக்குளிசைக்கும் இடையில் நூலிழை வேறுபாடுதான். இந்த வேறுபாட்டை இச்சிறுகதையின் வாசிப்பு அனுபவத்திலிருந்தும் தெரிந்துகொள்கின்றோம்.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 06-11-2015 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட பதினொரு கதைகளையும் திகதி குறிப்பிடப்படாத அஞ்சலி என்ற கதையுடனும் அவலங்கள் வெளியாகியிருக்கிறது.
வழக்கமாக சிறுகதைகளை தொகுத்து வெளியிடும் படைப்பாளிகள் ஒவ்வொரு கதையின் இறுதியிலும் அவை வெளியான இதழ் மற்றும் ஆண்டு முதலான விபரங்களையும் தருவது வழக்கம். ஆனால், சாத்திரி தமது கதைகள் எழுதப்பட்ட காலத்தை தொடக்கத்திலேயே தந்திருப்பதன் மூலம் புதிய கதைத்தொகுப்பு நடைமுறைக்கு அறிமுகம் தந்துள்ளார்.
இவரின் கதைகளின் பிரதான பாத்திரங்கள்: ராணியக்கா, மல்லிகா, மலரக்கா, அலைமகள், கைரி முதலான பெண்கள்தான் என்றாலும் ஏனைய கதைகளும் பெண்களுடன்தான் பயணிக்கின்றன.
இவர்கள் அனைவரும் நீடித்த போரினாலும், சமூகச்சிக்கல்களினாலும், குடும்ப உறவுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்தான். அந்தவகையில் சாத்திரி பெண்களின் குரலாக ஒவ்வொரு கதையிலும் ஒலிக்கின்றார்.
மல்லிகா – இவளின் கதையை எழுதியவர், அன்றைய சமூகத்தில் சாதி அடிப்படையில் தனது குடும்பத்தினால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டாள் என்பதைச் சித்திரிக்கின்றார். இவளது தந்தைக்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் வாசல் காவலாளி வேலை கிடைக்கிறது. அந்த வேலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் விநோதனின் புண்ணியத்தால் கிடைத்ததாகவும் சொல்கிறார்.
அத்துடன் விநோதன் வாக்குவேட்டைக்காக சுதந்திரக்கட்சியால் நிறுத்தப்பட்டார் என்ற தொனியிலும் எழுதுகிறார். இதே விநோதனை இயக்கங்கள் அவருடை தொகுதி அலுவலகத்தில் சுட்டுக்கொல்ல முயன்றன.
இறுதியில் அவர் கொழும்பில் அவருடைய வீட்டின் முன்னால் ஒரு இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டது அவரது மனைவி ஜெயந்தியும் அவருடைய குழந்தையும்தான் என்பது எமக்குத்தெரிந்த கதை.
மக்களுக்கு, அதிலும் எமது சமூகத்தின் அடிநிலையில் வாழ்ந்தவர்களுக்கு உதவியவர்களுக்கு இயக்கங்கள் அளித்த பட்டமும் தண்டனையும் அனைவருக்கும் தெரிந்த கதைதான்.
ஆனால், எமக்கெல்லாம் தெரியாத கதைகளை தமது நாவல், சிறுகதைகளில் தொடர்ச்சியாகச்சொல்லிக்கொண்டிருக்கிறார் சாத்திரி.
ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படாத சமூகத்திலிருந்து வந்திருக்கும் மல்லிகா, புலம்பெயர்ந்து கொலண்டில் வாழத்தலைப்பட்டு பிறிதொரு சந்தர்ப்பத்தில் போர் முடிந்த காலப்பகுதியில் ஊருக்குச்சென்று, ஆலயம் சென்று போரில் மடிந்த போராளி நந்தனின் பெயரில் பூசையும் செய்து அன்னதானமும் கொடுக்கிறாள்.
இங்குதான் இந்தத்தொகுப்பின் வாசிப்பு அனுபவத்தில் தொடக்கத்தில் சொல்லப்பட்ட போ. மு. – போ. பி. என்ற காலத்தை நாம் அடையாளப்படுத்துகின்றோம்.
விடுதலை இயக்கங்கள் எமது சமூகத்தில் சில சீர்திருத்தங்களை செய்திருந்தாலும், அவை ஓரணியில் திரளவில்லை. திரண்டிருப்பின் வரலாறு வேறுவிதமாகத்தான் எழுதப்பட்டிருக்கும்.
ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத சமூகத்திலிருந்து வந்திருக்கும் மல்லிகாவால் அங்கு பிரவேசித்து பஞ்சபுராணம் பாட முடிந்திருக்கிறது. நாடுகடந்து சென்றாலும் ஊர் வரும்பொழுது ஆலயம் வந்து பூசை செய்யவும் அன்னதானம் வழங்கவும் முடிந்திருக்கிறது.
அவள் கைபட்ட நெல்லிக்காயை உண்ணக்கூடாது என்று தடுத்தது போருக்கு முந்திய சமூகம். அவள் தந்த அன்னதானத்தை அதே சமூகம் வாங்கி உண்ணச்செய்தது போருக்குப்பிந்திய காலம்.
இவ்வாறு காலத்தின் வேறுபாடுகளை படிமமாக பதிவுசெய்துள்ளார் சாத்திரி.
1972 இல் – யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில் புதிதாய் கலியாணம் செய்துகொண்ட தோற்றத்தில் அருகருகே அமர்ந்து வெள்ளிவிழா படம் பார்க்கும் அந்த இளம் தம்பதியினரை பெரிதும் கவர்ந்துவிடுகிறது “காதோடுதான் நான் பாடுவேன்… காதோடுதான் நான் பேசுவேன்…” பாடல். இந்தப்பாடல் அவர்கள் இருவருடனும் கடல்கடந்தும் பயணிக்கிறது. படத்தின் நாயகியின் காதில் ஆடும் சிமிக்கியைப்போன்று தனது மனைவிக்கும் வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்டு, ஆசைப்பட்டவாறே (விமானப்பயணத்தில்) அவள் காதில் அணிவிக்கும் கணவனின் கதை… துருக்கி -சிரியா நாடுகளின் எல்லை மலைப் பகுதியில் I.S.I.S அமைப்பின் ஏவுகணையின் சீற்றத்தில் முடிவுக்கு வருகிறது.
அந்தக்கணவன் இறுதியாகக்கேட்டதும் “காதோடுதான் நான் பாடுவேன்… காதோடுதான் நான் பேசுவேன்…” பாடல் வரிகளைத்தான்.
இங்கும் சாத்திரி இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பிக்கின்றார்.
இத்தொகுப்பில் எம்மை மிகவும் பாதித்த கதை மலரக்கா. வாழ்வில் பலரால் பந்தாடப்பட்ட மலரக்கா இறுதியில் பிரான்ஸ் நாட்டின் ஒரு புறநகரில் எழுந்திருக்கும் எம்மவர் கோயிலொன்றில் திருப்பணி செய்கிறார்.
இக்கதையை வாசித்தபோது தமிழ்த்திரைலகில் பந்தாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற நடிகை நினைவுக்கு வந்தார். அவர் கர்னாடகா மாநிலத்தில் ஒரு கோயிலில் இருப்பதாக ஒரு செய்தி. அவர் பற்றியும் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.
மலரக்காவை ஒரு காலத்தில் நாடிச்சென்றவரே நீண்ட இடைவெளிக்குப்பின்னர் புகலிட நாட்டில் எதிர்பாராதவிதமாக சந்திக்கநேர்கிறது.
எனினும் மலரக்காவுடன் மீண்டும் அறிமுகமாகியபின்னரும், தனது தொலைபேசி இலக்கத்தை பிழையாக எழுதிக்கொடுக்கும் தயக்கத்தையும் காண்பிக்கிறது. முடிந்த கதை தொடர்வதில்லை என்ற பாடலும் எழுதியவரின் நினைவுக்கு வரலாம்.
மலரக்காவின் கதையை தனது மனைவியிடம் சொல்வதன் ஊடாக வாசகருக்கும் தெரிவிக்கும் பாங்கில் எழுதப்பட்ட கதை இது. மலரக்காவிடம் வழங்கிய “இனிமேல் சந்திக்கப்போவதில்லை” என்ற சத்தியவாக்கை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் பல வருடங்களின் பின்னர் சந்திக்க நேர்ந்தபோதும் தொலைபேசி இலக்கத்தை பிழையாக எழுதிக்கொடுத்ததாக மனைவிக்குச்சொல்கிறார்.
” ஊகும்…. இவர் பெரிய அரிச்சந்திரன். காப்பாத்திட்டாராம். இன்னும் இப்படி எத்தனை கதை இருக்கோ…?” அவர் மனைவியிடமிருந்து பெருமூச்சுவருகிறது.
” இவரிடம் இப்படி எத்தனை கதை இருக்கோ…?” என்ற கேள்வி எமக்கும் எழுகிறது.
நாட்டை மீட்பதற்கான போரில் கடல்பயணங்கள் மேற்கொண்ட ஒரு கடல் பெண் புலியின் கதை, நாட்டை விட்டு தப்பியோடி மடிந்த கதையாக முடிகிறது. போர்க்காலத்தில் ஒரு பெண்போராளிக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் இருந்த மரியாதைக்கும் போரில் தோற்றபின்னர், சரணடைந்து வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர் கிடைக்கும் அவமானத்திற்கும் இடைப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசுகிறது அலைமகள்.
இதனை 22-09-2012 இல் எழுதுகிறார் சாத்திரி.
2009 மே மாதத்திற்கும் 2012 செப்டெம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் கடற்புலியான அலைமகளின் கதையின் இறுதியில், அவள் பேசும் கடைசி வார்த்தைகள் இவை:
” கலியாணமா…? இயக்கத்துக்கு போகேக்குள்ளை இருபது வயது. பதினைஞ்சு வருசம் இயக்க வாழ்க்கை. இரண்டரை வருசம் தடுப்பும் புனர்வாழ்வும். இப்ப வயது முப்பத்தெட்டை எட்டித்தொடப்போகுது. ஒற்றைக்கண்ணும் இல்லை. வசதியும் இல்லை. இப்பவெல்லாம் மனசுக்கு முடியாதெண்டு தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறேல்லை ஜேக்கப்.”
அவள் தன் கதையை இரத்தினச்சுருக்கமாகவே சொல்லி முடிக்கையில் அவளருகில் நெருக்கமான ஜேக்கப், ” நீ சம்மதம் எண்டால் சொல்லு உன்னை நானே ….” அவன் முடிக்கும் முன்பே கடலில் எழுந்த பேரலை அவர்களையும் அந்தப்படகில் வந்தவர்களின் கதையையும் முடித்துவிடுகிறது.
கடலில் எதிரிப்படையுடன் தாக்குப்பிடித்து தாயக மீட்புக்கான போரில் களமாடியவள், நாடு கடந்து தப்பி ஓடலுக்கான முயற்சியில் கடல் அலையோடு அள்ளுண்டு போகிறாள்.
இப்படி எத்தனை கதைகளை கேட்டுக்கொண்டிருக்கப்போகிறோம்….?
இத்தொகுப்பில் கடைசி அடி என்ற கதை புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு, நீடித்த போருக்காக நிதிவசூலித்து உசுப்பேத்திக்கொண்டிருந்தவர்களின் வாழ்வுக்கோலத்தை சித்திரிக்கிறது.
” வரலாற்றுக்கடமையை செய்யத்தவறாதீர்கள்” என்று சொல்லிச் சொல்லியே தண்டலில் ஈடுபட்டு கொழுத்துப்போனவர்கள், இன்று வேறு வடிவத்தில் வரலாற்றுக்கடமைக்கு கதை அளந்துகொண்டிருக்கிறார்கள்.
அங்கே போர் முடிந்து மக்கள் நிம்மதியாக வாழத்தொடங்கினாலும் புலன்பெயர்ந்தவர்கள் தமது இருப்புக்காகவும் வாழ்வுக்காகவும் வரலாற்றுக்கடமை பற்றிப் புலம்புவதை நிறுத்த மாட்டார்கள்.
” எமது கைகள் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள் ” என்ற தேசியத்தலைவரின் உச்சாடனத்தை புலம்பெயர்ந்த நாடொன்றின் பார்க்கில் அமைந்திருக்கும் சுவர் ஒன்றில் தனது கையில் வடிந்த இரத்தத்தினாலேயே எழுதி, அப்பாத்துரை என்ற நிதிசேகரிப்பாளனின் கதையை முடிக்கிறான் இயக்கத்தை நம்பி மோசம்போன அமுதன்.
இயக்கம் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தும், வங்கியில் கடன் பெற்றும் கொடுத்து ஏமாந்துவிடும் அமுதன், அதனால் தனது இல்லற வாழ்வையும் நிம்மதியையும் இழக்கிறான். நடைப்பிணமாக அலைகிறான்.
அவனையும் அவனைப்போன்ற அப்பாவிகளையும், ஈழப்போரின் கடைசி அடி என்று சொல்லிச்சொல்லியே சுரண்டி AUDI போன்ற சொகுசு வாகனங்களில் வலம்வருபவர்களின் ஒரு குறியீடாக அப்பாத்துரை என்ற பாத்திரத்தை சாத்திரி சித்திரிக்கிறார்.
இவ்வாறான அவலங்கள்தான் போரின் பின்னர் நம்மவர் மத்தியில் எழுதப்பட்டிருக்கும் முடிவுரை எனச்சொல்லவருகிறார் சாத்திரி.
சுயவிமர்சனங்களின் ஊடாகத்தான் தனிமனிதர்களும் சமூகமும் திருந்த முடியும். சுயவிமர்சனம் சத்திர சிகிச்சைக்கு ஒப்பானது. சிகிச்சை கடினமானது. வலி நிரம்பியது. அதனால் சுகம் வரவேண்டும்.
அந்தச்சுகத்திற்காக வலிகளையும் சகித்துப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
இவை எம்மவர்களின் அவலங்களை படிக்கும் வாசகர்களுக்கும் இருத்தல் வேண்டும்.
—-0—
- காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 7
- வாங்க பேசலாம்!
- நாலு பேர்..
- தொடுவானம் 164. அறுவை மருத்துவப் பயிற்சி.
- படித்தோம் சொல்கின்றோம்: சாத்திரியின் தரிசனங்களாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்
- ஆழ்வார்கள் போற்றவே ஆடிர் ஊசல்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.
- தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2017 – (குறும்படங்களுக்கு மட்டும்)
- தூங்கா மனம்
- பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்): மறுமலர்ச்சி காலம் (la Renaissance) (1453-1600)