மணிமாலா மதியழகன்
“பாலியில் இந்த ஹோட்டலில் தங்கலாமா” என்று கணினியை சுட்டிக்காட்டியபடி பிள்ளைகளைக் கேட்டேன்.
பிள்ளைகள் உடனே வந்து அந்த விடுதியின் வசதிகளைப் பற்றி ஆராய்ந்தனர். அஷ்டகோணலாக அவர்களது முகம் போன போக்கை வைத்து என் மனைவி “ஏன் பிடிக்கலையா?” என்று கேட்டாள்.
உடனே “ஆமாம்” என்று பிள்ளைகள் இருவரது குரலும் ஒன்றிணைந்து வெளிப்பட்டன.
“ஏன் நல்லாத்தானே இருக்குது?” நான் வினவினேன்.
“அங்கு Wi-Fi யே இல்லை” என்பது இருவரது குற்றச்சாட்டாக இருந்தது.
“நாம் விடுமுறையைக் கழிக்கப் போவதே குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே. இதில் Wi-Fi இருந்தால் ஆளாளுக்கு போனுடன் ஐக்கியமாகிடுவீங்கன்னுதான் இந்த ஹோட்டலைத் தேர்ந்தெடுத்தேன்”, என்றவாறு நிலைமையை விளக்கினேன்.
“Wi-Fi இல்லாத ஹோட்டல் வேண்டாம்” மகனது ஆட்சேபனைக்கு மகளும் உடந்தையாக, மனைவியோ வழக்கம்போல பிள்ளைகள் பக்கம் சாய்ந்தாள்.
ஒருகாலத்தில் நான் சொல்வதை வேதவாக்காக செவிமடுத்தவள்தான் ஆனால் இன்றோ நிலைமையே தலைகீழாகிவிட்டது. வந்த புதிதில் சீரும் சிறப்புமாகப் போற்றப்பட்ட ஐநூறு ரூபாய் இன்று சீந்துவாரின்றி போனதுபோல என் நிலைமையாகிவிட்டது.
வேறு வழியின்றி Wi-Fi வசதியுடன் கூடிய விடுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். என்ன பண்றது, நம்ம பேச்சு எடுபடாதயிடத்தில் மாற்ற முயற்சிப்பதில் ஏதும் பலன் கிட்டுமா என்ன?
சற்றுமுன், “ஏம்மா இவரைக் கல்யாணம் பண்ணிகிட்டீங்க” என்று என் காதில் விழாது என நினைத்து அம்மாவிடம் முணுமுணுத்த மகன் சமாதானத்துடன் கிளம்ப, மகளும் புன்னகையுடன் தன் கைத்தொலைபேசியைப் பார்த்தவாறே அகன்றாள்.
‘அறிவியலின் வளர்ச்சி மனித உறவுகளை சிதைத்து விட்டதோ’
‘கையடக்க சொர்க்கமாக கைத்தொலைபேசி மாறியது விந்தைதானோ’ என்று என்னுள் பலவாறாக சிந்தனைகள் முளைவிட்டன.
என்னுள் எழும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த வேண்டுமென்பதே என் கொள்கையாகயிருந்தபோதிலும், இப்போதெல்லாம் அது முடியாமலே போய்விடுகிறது. சாதாரணமாகப் பேசுவதற்குக்கூட யாரும் விரும்புவதில்லை என்பது விந்தையாகவுள்ளது. பத்து வருடங்களுக்குமுன் யாராவது, மனிதர்கள் இப்படியெல்லாம் இருப்பார்கள் என்று சொன்னால், சொன்னவனைப் பைத்தியக்காரன் என்று சொல்லுமளவிற்கு இருந்த உலகம் இன்று மாறிக்கொண்டேயுள்ளது. இந்த மாற்றத்திற்கெல்லாம் காரணகர்த்தாவானக் கைத்தொலைபேசி கிறுகிறுத்தது. நண்பர் ஒருவர் புதியவடிவில் காலைவணக்கத்தைத் தெரியப்படுத்தியிருந்தார். வெறுப்புடன் பதிலளித்த நான் அதை அலுப்புடன் சட்டைப்பையிலிட்டேன்.
முன்பெல்லாம் வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதில்கூட சூறாவளியானது சுழன்று சுழன்று அடிக்கும். அந்த பாதிப்பில் சிலசமயங்களில் ரிமொட்டுகள்கூட சேதாரமாயிருக்கும். பிள்ளைகளிருவரும் ஒரேநேரத்தில் தாங்கள் விரும்பும் சேனலைக்காணப் போட்டியிட என்னுள் ஓர் எரிமலையே உருவாகும். இப்போது தொலைக்காட்சியானது என் மனைவியின் சீரியலுக்காகவும், எனது செய்திக்காகவுமே உரியதாகிவிட்டது. அது ஒரு வேண்டாத பொருளாய் போய்விட்டது பிள்ளைகளின் பார்வையில். காலம்தான் எத்தனை மாற்றங்களைக் கொண்டுவருகிறது?
அவரவர் விருப்பப்பட்ட நேரங்களில் தங்களது ஒளிவழியைக்காண கைத்தொலைபேசியில் வசதிகள் வந்துவிட்டன. இப்போது சண்டை போட்டுக்கொள்ளவாவது பிள்ளைகள் பேசிக் கொள்ளமாட்டார்களா என என் மனம் ஏங்குகிறது. என்னக்கேட்டாலும் பிள்ளைகளிடமிருந்துப் பெரும்பாலும் “ஆம், இல்லை” என்ற பதிலே வருகிறது. இயந்திரத்தனமாய் போய்க்கொண்டுள்ள வாழ்க்கைமுறையில் மனிதர்களும் அப்படியே மாறிவிடுகின்றனரோ?
விடுமுறைநாட்களில்கூட வீடு புயல் கரையைக் கடந்ததுபோல வெறிச்சோடித்தானிருக்கிறது. கல்லும் சிமெண்டும் கலந்து கட்டப்பட்ட கட்டிடம்போல எதிலும் பற்றின்றி இருக்க இவர்களால் எப்படி முடிகிறது? கைத்தொலைபேசியைக் காட்டிலும் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறதென்பதை எப்போது இவர்கள் உணரப்போகின்றனர்? புயலில் சிக்கிய படகுபோல மனம் சின்னாபின்னமாகிப்போனது.
“கோதை, இதென்ன வீடு வீடாகவாயிருக்கு. நீயென்னவோ சீரியலே உலகமென்றிருக்கிறாய். நம் பிள்ளைகளோ கைத்தொலைபேசியே கதி என்றிருக்கின்றனர்”, என் ஆதங்கம் வார்த்தைகளாய் பொங்கி வந்தது. வீட்டில் போனால் போகிறதென்று அவ்வப்போது பதிலளிக்கும் ஒரு ஜீவன் அவள் ஒருத்திதானே!
“காலம் மாறும்போது நாமும் அதுக்கேத்தமாதிரிதான் நம்மள மாத்திக்கணும். இது புரியாதா உங்களுக்கு?” அவள்குரலில் தொனித்த வெறுப்பு இனிமேல் பேசாதீர்கள் எனும் எச்சரிக்கையை விடுத்தாலும், வேறுவழியின்றி என் கருத்தை முன்வைத்தேன்.
“எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமென்பதில்லையே கோதை?”
“எதுக்கெடுத்தாலும் இப்படியே வறட்டு பிடிவாதம் பிடிச்சா பிள்ளைங்க எப்படி நம்மை மதிப்பாங்க?”
எனது நியாயமான கேள்வி அவளுக்குப் பிடிவாதமாகத் தெரிகிறது. எங்கு தவறு நிகழ்கிறது? பிள்ளைகளின் விருப்பத்திற்கு நாம் போனால்தான் அவர்கள் நம்மை மதிப்பார்களா? இது முற்றிலும் முரணாக உள்ளதே!
“நீயாவது புரிஞ்சிக்கோ. இது பிடிவாதம் கிடையாது. உறவுகளில் உண்டாகும் இடைவெளிதான் என்னை கலக்கமுறச் செய்யுது.”
“புதுசை ஏத்துக்கிற பக்குவம் உங்ககிட்ட இல்லை அவ்வளவுதான்” தன் கருத்தில் அவள் தீர்மானமாக இருந்தாள்.
“புதுசா இருக்குங்கிறதால எல்லாத்தையும் நாம எடுத்துக்குறோமா என்ன? பிளாஸ்டிக்ல அரிசி, காய்கறி, முட்டை இதெல்லாம் கூட புதுசுதான், அதுக்கு மட்டும் ஏன் கொடிபிடிக்கிறோம்?” என்னிடமிருந்த பொறுமை சிறிது சிறிதாக விலகிக்கொண்டிருந்தது.
என்னை ஏதோ வேற்றுக்கிரகவாசியைப்போலப் பார்த்தவள், “எல்லாப் பிள்ளைகளும் இந்தக்காலத்துல இப்படித்தானிருக்காங்க. நீங்கதான் என்னவோ பழையப் பஞ்சாங்கத்திலிருந்து வெளிவராம ஒத்தக்கால்ல இருக்கீங்க” என்று தொலைக்காட்சியிலிருந்து பார்வையை எடுக்காமலே பதிலளித்தாள் என் தர்மபத்தினி. இனி இதுபற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லையெனும் தொனியில் தொலைக்காட்சியின் ஒலியினளவு உயர்த்தப்பட, பற்களை கடித்தபடி வெளியில் வந்தேன்.
பாட்டு கேட்டபடியே, கைத்தொலைபேசியைப் பார்த்தபடியே செல்லும் பிள்ளைகளைத்தான் சாலையில் காண முடிந்தது. போனைப் பார்த்து சிரிக்கும் பிள்ளைகள் வீட்டில் அம்மா அப்பாவைப் பார்த்து சிரிப்பார்களா? எனும் கேள்வியும் என்னுள் எழுந்தது.
‘ம்…வீட்டில் மட்டுமா இந்நிலை…!’
முன்பெல்லாம் திருமண வீடுகளிலோ, பொது நிகழ்வுகளிலோ நண்பர்களைப் பார்த்தால் நேரம் போவதே தெரியாமல் அளவளாவிக்கொண்டிருப்போம். மகிழ்ச்சிகள் வெடிச்சிரிப்புடன் பகிர்ந்து கொள்ளப்பட, வருத்தங்களுக்கு வார்த்தைகளால் ஒத்தடம் தரப்படும். இப்போதும் நண்பர்களைக் காண்கிறேன். கைகுலுக்கி புன்முறுவலுடன் இரண்டு நிமிடங்கள் பேசுகிறவர்கள், அடுத்தநொடியிலேயே கைத்தொலைபேசியில் மூழ்கிவிடுகின்றனர். நாள்தவறாமல் விதவிதமான காலைவணக்கங்களும், இரவுவணக்கங்களும் என்னை இம்சிக்கின்றன. இவர்கள் வணக்கம் சொல்லி எதை வாழவைக்கப் போகின்றனர்? நேரில் காண்கையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதென்ன அவ்வளவு பாவமான காரியமா? எனக்கு மட்டுந்தான் இந்தப்பிரச்சினையா என்ற எண்ணத்தில், என்னுள் எழும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்.
போதாக்குறைக்கு தங்களுக்கு வந்த அத்தனைத் தகவலையும் பகிர்ந்துகொள்கிறேன் பேர்வழியென்று நேரங்காலந்தெரியாம அனுப்பி வைப்பாங்க. இந்த மெசேஜ் வரும் ஒலியைக்கேட்டாலே தலைவலிதான் வருது. நேரில் பார்க்கையில் பேச விஷயமே இல்லாததுபோல போனில் மூழ்கிவிடுபவர்கள், வெட்டித் தகவலை பகிர்ந்துகொள்வதில் மட்டும் பஞ்சம் வைப்பதில்லை. என்ன மனிதர்கள் இவர்கள், எதை நோக்கி இவர்கள் செல்கின்றனர்? வயதில் சிறியவர்கள் ஒரு கருவியுடன் தங்களை இணைத்துக்கொள்வதைக்கூட பொறுத்துக்கலாம் போலுள்ளது, இவர்கள் படுத்தும்பாட்டை தாங்கமுடிவதில்லை!
கல்யாணம், காதுகுத்து என்று விழாக்கொண்டாடுவதுபோல, பேசுவதற்காகவே ஒரு விழா கொண்டாடப்படவேண்டுமா? ‘வாங்க பேசலாம்’ என்று அழைத்தால் அப்போதாவது வந்து பேசுவார்களா? எனும் சிந்தனையும் கூடவே பிறந்தது.
என் உற்றத்தோழன் ரவியின் நினைவு வந்தது. நான் வேலைதேடி சிங்கைவர, அவன் தன் தந்தையின் வியாபாரத்தைப் பெருக்கும் முயற்சியில் இறங்கினான். நீண்டகாலமாக எங்களுக்குள் கடிதப்போக்குவரத்துத் தொடர்ந்தபடியேயிருந்தது. எங்களது மனவுணர்வுகள் வார்த்தைகளால் வடிக்கப்பட்டுத் தபாலாய் பறந்துகொண்டிருந்தன. சில வருடங்களாய் அவன் வியாபாரத்தில் மேன்மேலும் முன்னேறும்பொருட்டு கடுமையாய் உழைக்க, எனக்கும் வீடு, வேலையென்று நேரம் விழுங்கப்பட கடிதத்தொடர்பில் பெருத்த இடைவெளி ஏற்பட்டிருந்தது.
என் உள்ளப்போராட்டத்தை எல்லாம் வெளிப்படுத்தி ரவிக்கு மடலெழுதினேன். எழுதியபிறகு என்னவோ கனத்திருந்த மனது சுமையை இறக்கி வைத்தாற்போன்று லேசானது மாதிரி தோன்ற புது தெம்பும் பிறந்தது. முன்பெல்லாம் ஒருவாரத்தில் பதில் வந்துவிடும். அந்த எதிர்பார்ப்பில் ஒவ்வொருநாளும் ஆவலுடன் தபால்பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஒருமாதத்திற்குப் பிறகு….
‘ஐம்பது வயதிற்குமேல் பெரும்பாலானவர்களுக்குத் தோன்றும் எண்ணம் இதுவென்றும், நல்ல மனநல மருத்துவரைக் காண்பது நல்லதென்றும்’ வந்தது பதில் வாட்சப்பில்.
- காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 7
- வாங்க பேசலாம்!
- நாலு பேர்..
- தொடுவானம் 164. அறுவை மருத்துவப் பயிற்சி.
- படித்தோம் சொல்கின்றோம்: சாத்திரியின் தரிசனங்களாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்
- ஆழ்வார்கள் போற்றவே ஆடிர் ஊசல்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.
- தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2017 – (குறும்படங்களுக்கு மட்டும்)
- தூங்கா மனம்
- பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்): மறுமலர்ச்சி காலம் (la Renaissance) (1453-1600)