மலேசியா ஏ.தேவராஜன்
கடவுளே கூடி கடவுளே ஏற்பாடு செய்த மாநாடு என்கிறபோது அந்த விழாக்கோலத்தைச் சாமான்யக் கண்களால் உருவகப்படுத்த முடியுமா? அப்பேர்ப்பட்ட மா மாநாடு அது. ஏகப்பட்ட கடவுளர்கள் திசையறியா வெளிகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். எல்லோரும் மனிதர்களைப் போலவேதான் தெரிந்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய படைப்பு மனிதர்களைப் போல்தானே இருக்கும்? ஒரு சிலருக்கு அமானுட தோற்றம் இருந்தாலும்,பெரும்பான்மை கடவுளர்கள் சாந்த சொரூபிகளாகத் தென்பட்டனர். சிலரை மட்டும் ஏனோ பார்க்கவே சகிக்கவில்லை. தோற்றந்தான் அப்படியென்றால் அவர்களது சொற்கள் எப்படியோ? இது குறித்து மற்றக் கடவுளர்க்கும் அவ்வளவாய்த் தெரிய வாய்ப்பில்லை. இதில் இன்னொரு வேடிக்கை இம்முறை கூடிய கடவுளரின் எண்ணிக்கை. பூமிக்கு வேண்டுமானால் இந்த எண்ணிக்கை பற்றிய பிரக்ஞை தேவையில்லாமல் இருக்கலாம்.ஆனால்,இங்கு நிச்சயமாக இந்த எண்ணிக்கையைக் குறித்துக் கேள்விகளை எழுப்புவர். அதற்குத் தோதாகச் சிலரது முகங்கள் கடுகடுவென்று மாறிக் கொண்டிருந்தன. அவர்களது நாவுகள் அந்நிய மொழிகளில் முணுமுணுத்தபோது ஏதோ மந்திர உச்சாடனத்தைச் செப்பிப்பது போல் இருந்தன.
இனிப் புதிய கடவுளரின் நுழைதலைத் தடுக்க இயலாது என்றாகிவிட்டது. என்றாலும்,மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடுகளோடு சான்றுகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். பூமியில் தங்களது ஆட்சிக் கட்டுப்பாட்டுக் குறித்த விகிதாச்சாரத்தையெல்லாம் விரல் நுனியில் வைத்துக்கொண்டு கேள்விக்கிடமின்றிச் கேட்கும்போதெல்லாம் சொடுக்கி விடுகிறார்கள்.அதனால்,அவர்களை விரட்டுவதற்கான மார்க்கம் எந்தக் கடவுளருக்கும் வசப்படவில்லை. எல்லோருக்கும் முகத்தைத் தொங்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது.
இதில் இன்னொரு சிக்கலும் இருந்தது. மாநாட்டு மேசையில் கடவுளர்களுக்கு மத்தியில் ஒரே குழப்பம். எந்தக் கடவுளர்களும் தங்கள் அங்கியில் பெயர்ப்பட்டையைப் பொருத்தவில்லை. கேட்டால் பிரபஞ்சத்துக்கே தெரிந்த பெயர்தான் என ஒரே வரியில் முடித்துக் கொள்கிறார்கள்.
“அது சரி. இப்பொழுது நான் உங்களை எப்படித்தான் அழைப்பது? அதற்கு முதலில் பதிலைச் சொல்லுங்கள்!” என்று கேட்டார் முன் வரிசையில் வீற்றிருந்த ஒருங்கிணைப்புக் கடவுள். கொஞ்ச நேரம் நிசப்தம் அசைவாடியது. யாரும் எதிர்பாரா வண்ணம் இன்னொரு கடவுளின் குரல் மூலையிலிருந்து சன்னமாய் வெளிப்பட்டது.
“ என்னைப் பாருங்கள்.நான் நிர்வாணி. விருப்பு வெறுப்பற்றவன். மனைவி மக்கள் ,குடும்பம் குட்டி இல்லாதவன்.எனக்கென்று எதுவுமில்லை. நான் இருப்பதற்கே காரணம், எல்லாம் மனித அளித்த பிச்சைதான். அவன்தான் உயிரையும் கொடுத்து இந்த அங்கங்களையும் தந்தான். இவற்றைத் தவிர வேறெந்த அடையாளங்களும் எனக்குள் இல்லை. அவை எனக்குத் தேவையுமில்லை” என்றபடி பதிவிசாய் இருக்கையைவிட்டு எழுந்தார்.
அவர் எழுந்தபோது முழுவதும் தெரிந்தது. சில அவயங்கள் தங்களிடம் இல்லாதது போல் மற்றச் சிலர் சஞ்சலப்பட்டனர். ஒரு பெண் கடவுளும் அங்கு அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் தவிர்க்கவியலா நாணத்தின் வெம்மை படர்ந்தது. ஆயிரந்தான் இருந்தாலும் பெண்ணல்லவா? அநேகமாகப் பாரத மண்ணில் பிறந்த கடவுளாக இருக்கலாம் போல.
இதற்கு முன்பும் இப்படித்தான். இஷ்மாக் எனும் பெயர் கொண்ட தேவதையொருத்தி கடவுளாகவே வருணிக்கப்பட்டிருந்தார். இந்தக் கதையெல்லாம் பழைய கடவுளருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால்,அவள் என்ன ஆனாள் என்பதைப் பற்றிச் சொல்ல விழைந்தால் இங்குள்ள பலருடைய தலைகள் உருளலாம். அதனால்தான் ஒரு முறை அனைத்துக் கடவுளரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதாவது இது போன்ற பிரபஞ்சச் சந்திப்புகளில் இனிமேல் பெண் கடவுளுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடாது என்று. தீர்மானம் சாத்தியமாவதற்குள் அந்தப் பெண் கடவுள் பொங்கி எழுந்து விளாசித் தள்ள எல்லோரும் பெட்டிப் பாம்பாய் ஆகிவிட்டார்கள். ஆக, பெண் கடவுள் என்றால் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உருவானது. கொஞ்சம் அசந்தால் தலைமைப் பீடித்தில் அவர்கள் அமர்ந்தாலும் அமரலாம்!
இது போன்ற மாபெரும் பிரபஞ்சக் கூட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் கூடும் என்பதால் சில முக்கிய அமர்வுகள் ஏற்பாடாகி இருந்தன. ஒவ்வோர் அமர்வுக்கும் தெளிவான நோக்கமும் அதற்கான ஆய்வுப்பூர்வமான படைப்பும் வரையறைக்கப்பட்டிருந்தன. இதில் யாரும் விதிவிலக்கல்ல. விதிகளுக்குட்படாத கடவுளர்களின் அமர்வுகள் நிராகரிக்கப்படுவதோடு பூமியில் அவர்களது ஆட்சியும் கட்டம் கட்டமாய் நிர்மூலமாக்கப்படும். மனிதன் உருவான நாள் முதற்கொண்டு கணக்கிட்டுப் பார்த்தால் சின்னக் கடவுள் முதல் பெரிய கடவுள் வரை அவர்களது எண்ணிக்கை எப்படியும் இலட்சத்தைத் தாண்டக்கூடும். அவர்களில் பெரும்பாலோர் இப்பொழுது இல்லை. மொஹெஞ்சாதாரோ ஹரப்பாவைப் போல் வெறுமனே அவல் மெல்ல வேண்டியதுதான். அதிகமானோர் சிதைந்துவிட்டார்கள்.அவர்களின் சரிதைகளைப் பழங்குடியினர் கர்ண பரம்பரையாகச் சொல்லி வந்தால்தான் உண்டு. அவர்களாகத் திரும்பவும் உயிர்க்க இயலாது. சிதைந்த கடவுளிடமிருந்து மாற்றுச் சித்தாந்தத்தோடு இன்னொரு குட்டிக் கடவுளர்கள் அவதரித்து அவர்களாக ஆட்சி செய்தால்தான் மீட்சி உண்டு.அப்படியான புதிய கடவுளர்களின் பிறப்பும் மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்கப்பால் மற்ற உயிரினங்களுக்கும் ஆத்திகம் இருப்பதால் அடுத்தடுத்த பருவங்களில் கடவுளரின் தோற்றங்கள் மாறுபடும்போது கடவுளர்களுக்கு மத்தியில் மேலும் சலசலப்புகள் உண்டாகலாம். இப்படியான சூழலில்தான் இந்த மா மாநாடு ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடென்றால் அப்படியோர் ஏற்பாடு!
மாநாடு களை கட்டத் தொடங்கியது. காரசாரமான விவாதங்களோடு அடர்த்தியான அமர்வுகள் நடைபெற்றன. கடவுளின் அமர்வுகள் கிட்டத்தட்ட மனிதர்களின் ஏற்பாடு போலத்தான் இருக்கும். மனிதர்களின்றி என்றைக்கு அவர்கள் சுயம்புவாய் எழுந்திருக்கிறார்கள்? பூமியில் மனிதர்கள்தானே இதுநாள் வரை சகலத்தையும் தாரை வார்த்து எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்?இன்றைய அமர்வும் அப்படித்தான்.மனிதர்களின் நகலாகத்தான் கடவுளர்கள் அந்த அமர்வுகளில் பாவனை காட்டவுள்ளனர். கடந்த முறை ஐந்து அமர்வுகள் இருந்ததாக ஞாபகம். ஐந்துதானா எனக் கேட்போருக்குப் பதில் இதுதான். ஒவ்வொரு முறையும் அமர்வுக்கான நேர அளவு மட்டுமல்ல, பிற கடவுளரின் கேள்விகளுக்கெல்லாம் விடை கூறியாக வேண்டும். தவறான விளக்கமென்றால் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.இதற்காக வேண்டியே பலர் பயந்து கொண்டு இருக்கையை மட்டும் சூடாக்கினால் போதுமெனும் முடிவுக்கு வந்தனர்.இங்கு நடைபெற்ற சில சுவாரசியமான அமர்வுகள் குறித்த விவரணையும் அதில் சம்பத்தப்பட்டவர்களின் சரிதையும் அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் காதில் பின்னர் கசிந்தன. அதன் விவரங்கள் கீழே:
அமர்வு 1 – மூத்த கடவுளருக்குக் கெளரவிப்பு
இது வழமையான நிரலில் உள்ளதுதான். இம்முறை நீண்ட காலமாய்ப் பெயர் பதித்த ஒருவருக்குக் கெளரவிப்புச் செய்யப்பட்டது. அவரது பெயர் நிக்கோண்டா ஜிகிஜா. வயது ஏழாயிரச் சொச்சம். ஆப்பிரிக்கா பழங்குடியினரிடையே பிரசித்திப் பெற்றவர். ஆப்பிரிக்கர்களால் வித்தியாசமாக வருணிக்கப்பட்டவர். நிக்கோண்டா ஜிகிஜாவின் பெயரைச் சொல்லித்தான் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. தவறிழைப்போருக்கு அவர்கள் வழங்கிய தண்டனை நூதனமானது. ஆண்களோ,பெண்களோ யார் தவறிழைத்தாலும் அவர்களது உயிர் உறுப்பாக இருப்பினும் அதை முற்றாய்த் துண்டித்துவிடுவார்கள். பிறகுதான் மற்ற வேலை.துண்டிப்பு என்பது பையப் பைய பிறர் முன் அரங்கேறுவதால் பார்ப்போர் இனித் தவறே செய்யக் கூடாதென மிரண்டு குலை நடுங்குவர். இது போன்ற தண்டனை உலக வரலாற்றில் மற்றக் கடவுளர்கள் செய்யாதது மட்டுமல்ல, மிகத் தீவிரமானதாகவும் கருதப்பட்டது. ஏனோ தெரியவில்லை, அந்நியர்களின் படையெடுப்புக்குப் பின்னர்,காலப்போக்கில் மனிதர்கள் இதனின்று விலகிப் போய்விட்டார்கள். காலத்திற்கேற்ற தண்டனைதான் இனிச் சாத்தியப்படும் என ஒருமித்த குரல் வந்த பிறகு நிக்கோண்டா ஜிகிஜாவின் ஆளுமையும் மங்கத் தொடங்கியது. ஆனாலும், நீண்ட பாரம்பரியத்தைக் கட்டிக் காத்த ஒரே காரணத்துக்காக இந்த அவை அவரைச் சிறப்புச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதியது.ஜிகிஜாவின் முகத்தில் முதன் முறையாக இத்தனை நூற்றாண்டுகளாய் அரும்பாத ஒரு புன்னகையைப் பார்த்ததில் அவைக்கு மகிழ்ச்சி.
அமர்வு 2 – மக்கள் கொந்தளிப்புப் பற்றியது
கடவுளர்களைப் பொருத்தமட்டில் இந்த அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மக்களைப் பிரித்தாளும் கலையின் வெற்றி தோல்விகளை உறுதி செய்யும் களம் இது.கடந்த பருவத்தைப் போலவே இந்த முறையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. எந்தக் கடவுளர் மக்களைப் பிரித்தாளுவதில் வென்றுள்ளனர் என்பதைச் சில மாயக் காட்சிகளோடு அலசி ஆராய்ந்தது இந்த அமர்வு. மத்திய தரைகடல் நாடுகளில் தொடர்ந்து நீடித்து வரும் பிளவுகள் இம்முறையும் அதிகமாகப் புகழ்ந்து பேசப்பட்டது. மேசியா காலந்தொட்டு நீடித்து வரும் குழுச்சண்டைகள் யாவும், வென்றுள்ளதைத் தகுந்த ஆவணங்களோடு முன்வைக்கப்பட்டபோது இதையே மற்றக் கடவுளரும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டுமென முன்மொழியப்பட்டது. ஆதி வார்த்தையென்பது அந்தம் வரை இயங்கினால்தான் தொன்ம வேதத்தின் அதிமுக்கியத்துவம் அனைவருக்கும் தெரிய வரும் எனும் உணர்தல் தோன்றியது.இந்த அமர்வின் இறுதியில், இதுவரை காவுகொள்ளப்பட்ட உயிர்களைக் காட்டிலும் கடவுளரின் ஆட்சி வலிமையும் அடுத்தடுத்த மக்கள் கொந்தளிப்புக்கான முன் தயாரிப்புப் பற்றியும் பேசப்பட்டன. ஆக, மக்கள் கொந்தளிப்பு இன்னும் பெருக வேண்டுமெனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது.
அமர்வு 3 – காழ்ப்புணர்ச்சி கொண்ட கடவுள் பற்றியது
அடுத்ததாக இந்த அமர்வில் கடவுளர்களுக்கிடையே இருக்க வேண்டிய பிணக்கம் குறித்துப் பேசப்பட்டது.இந்த அமர்வின்போது கடவுளர்கள் எல்லாம் கட்டுப்பாடாக இருக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டது. காழ்ப்புணர்ச்சியால் எழுந்த சிக்கலின் உச்சங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தக் காழ்ப்புணர்ச்சி என்பது பழங்கடவுளுக்கு மட்டுமன்று புதிய கடவுளருக்கும் சேர்த்துத்தான் என்பதை எல்லோரும் ஞாபகப்படுத்திக் கொண்டனர். பெரும்பாலும் இந்த அமர்வு சற்று உக்கிரம் கனன்றதாய் அவதானிக்கப்பட்டது. ஒரு குழு, காழ்ப்புணர்ச்சிக் கடவுள் வேண்டாமெனக் கையை உயர்த்திய பட்சத்தில் அவையில் சலசலப்புக் கூடியது. அந்தச் சலசலப்பு சில நேரங்களில் ஆகாயம் போல ஆண்டுக் கணக்கில் நீண்டு போனது. எல்லா வாதங்களையும் கேட்ட பின்னர்தான் ஒரு முடிவுக்கு எல்லோரும் வரவேண்டியிருந்தது. கடந்த முறை இந்த அமர்வில்தான் ஒரு நல்ல முடிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதாவது, குட்டிக் கடவுளர்களின் வருகையென்பது அவசியமெனச் சொல்லப்பட்டது.குறிப்பாக இது போன்ற பிரபஞ்ச கூட்டத்திற்கு எல்லாக் கடவுளரும் வந்துவிட்டால் மக்கள் யாருடைய பெயரைச் சொல்லிப் பிரிவார்கள் என்பதாக வாதம் வந்தது. உண்மையில் பார்க்கப்போனால், கடவுள் இருந்தால்தான் மக்கள் இன்னும் தீவிரமாக அடித்துக்கொள்வார்கள். அதோடு கடவுளின் பெயரைச் சொல்லி சகலமும் நிறைவேற்றப்படும்போதுதான் பார்க்கிறவர்களுக்கு ஒரு பயமும் புரிகிறவர்களுக்கு ஒரு பக்தியும் உருவாகும். அதனால், அது மாதிரியான தருணங்களில் குட்டிக் கடவுளர்களின் நடமாட்டம் நடப்பில் இருந்தால், பூமியில் நிர்வாகம் சிறப்பாக இயங்கும் என முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய கடவுளர்களின் வருகை ஒரு சிலருக்குக் காழ்ப்புணர்ச்சியைக் கிளர்த்தினாலும் சில தெளிவுகளுக்குப் பின் எல்லாம் சரியானது. இந்த அமர்வின் இறுதியில் ஒரு செய்தி வலியுறுத்தப்பட்டது. அதாவது, எத்தனை கடவுளர்கள் வந்தாலும் தங்களுக்கிடையிலான தர்க்கங்கள் தொடரப்படுமேயானால், பூமியில் தங்களது ஆட்சி நிலைபெறும் என்றும் சொல்லப்பட்டது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு மட்டுமல்ல கடவுளருக்கும் கொண்டாட்டம் என அவை நெறிக்கடவுள் நகைச்சுவையாகச் சொன்னார்.
அமர்வு 4 – சத்திய பிரமாணத்தைப் பற்றியது
இந்த அமர்வின்போது நடப்பில் இருக்கும் சட்ட திட்டங்களின் சாத்தியங்கள் இருவழி உரையாடலாகப் பேசப்பட்டது. மனிதர்கள் மாறுவதற்குள் மாற்றுப் பிரமாணத்தை அறிமுகப்படுத்துவதன் அவசியம் என இதில் பேசப்பட்டது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித சக்தி தங்களுக்கெதிராக எழும்புவதற்குள் கடவுளரின் புதிய பிரமாணங்கள் கட்டமைக்கப்பட்டால்தான் இதிலிருந்து மீள முடியும் எனச் சிலர் முன்மொழிந்தனர். எனவே, இது போன்ற ஒவ்வொரு சந்திப்பிலும் புதிய பிரமாணங்கள் வரையறுக்கப்பட்டு நடப்பில் கொண்டு வரப்பட்டால் அரசுக்கெதிராக ஏழை எளியவர்கள் இதில் வசீகரிக்கப்படுவார்கள். அவர்களைக் குறி வைத்துக் காயை நகர்த்தினால் கடவுளின் ஆட்சி பூமியில் நிலைநிறுத்தப்படும் என்றெல்லாம் உறுதியாக நம்பப்பட்டன. ஒரு சில கடவுளர்கள், இப்போதைக்கு இது குறித்த கலவரம் தேவையில்லை; சத்திய பிரமாணம் முதல் கிரியைகள் வரை அனைத்தையும் மனிதர்கள் பார்த்துக்கொள்வார்கள். நாம் வாயை மூடிக் கொண்டு இருந்தால்தான் அவர்கள் அடித்துக் கொள்வார்கள் எனச் சொன்னார்கள். அவை ஏகமனதாக ஒப்புக்கொண்டது.
அமர்வு 5 – கோயில் உடைப்புப் பற்றியது
இந்த அமர்வின்போது உலகில் எழுப்பப்பட்டுள்ள ஆலயங்களின் எண்ணிக்கை சொல்லப்பட்டது. பிரதான ஆலயங்களைவிட குட்டி ஆலயங்கள் அதிகம் என்பதைப் புள்ளி விவரத்தோடு சொன்னபோது அவையில் அமர்ந்திருந்த குட்டிக் கடவுளர்களுக்கு ஏக காலத்தில் பெருமை தாண்டவமாடியது. பெரிய கடவுளர்களுக்குச் சிறிதளவு வருத்தம் என்றாலும் எல்லாம் நம்முடைய நன்மைக்குத்தான் என வலியுறுத்தப்பட்டது. பெரிய ஆலயங்களில் நுழைவதற்கு மறுப்பு வழங்கப்பட்டு வருவதைப் பலரும் ஆமோதித்தனர். இதனால், வெளிநடப்புச் செய்த ஒடுக்கப்பட்ட சமுகம் புதிய ஆலயத்தை நிர்மாணிப்பதில் அவர்களுக்கு மட்டுமல்ல,தங்களுக்கும் நன்மைதான் எனச் சொல்லப்பட்டது. மனிதர்களால் உடைக்கப்பட்ட ஆலயங்கள் அதிக கவனத்தைப் பெற்றன. சம்பந்தப்பட்ட ஆலயத்திற்குரிய இரு சாரார்க் கடவுளர்களும் அவையில் எழுந்து நின்று சிறப்பிக்கப்பட்டனர். சிறப்பிக்கப்பட்ட கடவுளர்கள் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கிக் கொண்ட காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வரும் காலங்களில் நவீன கருவிகளைக் கொண்டு மேலும் அதிகமான ஆலயங்கள் உடைபடலாம் என ஆருடம் கூறப்பட்டது.
அமர்வு 6 – இறுதி நாளைப் பற்றியது
இந்த அமர்வுதான் அனைத்துக் கடவுளரின் புருவங்களையும் விரியச் செய்தது. ஒவ்வொரு கடவுளரும் இந்த அமர்வுக்கான நேரத்தில் மிகவும் விழிப்பு நிலையில் நெஞ்சு நிமிர்த்தி அமர்ந்தனர். நிக்கோண்டா ஜிகிஜா தமதிரு கைகளையும் உயர்த்தி இந்தத் தேர்விலிருந்து தம்மை விலக்கி வைக்குமாறு அன்பு வேண்டுகோளை விடுத்தார். அப்பாடா ஒருவர் விலகிவிட்டார் என மற்றக் கடவுளர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அப்படி என்னதான் உண்டு இந்த அமர்வில்? உலகில் வல்லரசு நாடுகளுக்கெல்லாம் ஒரு வல்லரசு இருந்தால் என்னவாகும்? அது போலத்தான் இதுவும். இங்கிருக்கின்ற ஒரு கடவுளுக்கு மட்டுந்தான் அந்தப் பேராதிக்கப் பொறுப்பும் தலைமையும் வழங்கப்படும். அடுத்தடுத்து நிகழப்போகும் அனைத்துச் சம்பவங்களுக்கும் மொத்த உருவத்தின் சூத்திரதாரியாகத் திகழப் போகிறவரே அவர்தான்.
இந்த மாநாடு முடிந்த மறு நடவடிக்கையாக அவசர அவசரமாகச் சில திட்டங்களை அவர்தான் அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பிரபஞ்சமே அவரது ஒரே ஆளுமையின் கீழ் அடிபணிகிற அளவுக்கு அதிரடியான சம்பவங்களைப் பூமியின் மேல் பாய்ச்சி, பூமியின் ஒட்டு மொத்த பார்வையும் அவர் மீது திருப்புகிற அளவுக்குக் காரியத்தில் இறங்கியாக வேண்டும். உலகின் கடைசி உயிரினம் வரை அவருக்குப் பயந்து கட்டுப்பட்டு எல்லோருமாகக் கைகளை உயர்த்தி அவரது பெயரை மட்டும் உச்சரிக்கிற வரையில் அவரது அகோரங்கள் தொடரும்.
எல்லாம் சுமுகமாக அரங்கேறுவதற்குத் தோதாக அவர்தான் வன்மத்தைப் பூமியின் மீது அக்கினியாகப் பொழிய வேண்டும். அது இயற்கையின் சீற்றங்களாகவோ, கடவுளின் பெயரால் மனிதன் முடுக்கிய யுத்தங்களாகவோ இருக்கலாம்.சகலமும் ஓலமிட்டு ஒப்பாரியிட வேண்டும்.உயிர்களின் கதறல்களின்போது தம் பெயர் உச்சரிக்கப்படுவதை அவர் தம் காதுபட கேட்கக் கேட்க இறுதி நாட்களின் நிர்ணயத் திகதி அண்மித்து வரும். இறுதியாக அவர்தான் உலகத்துக்குத் தீர்ப்புரைப்பார்.
ஒரு மாபெரும் பொறுப்பு இது. சாமான்யக் கடவுளரால் இது போன்ற செயல்களை நிறைவேற்றவே முடியாது. அதற்கான அத்தனை தகுதிப்பாடுகளும் இருந்தால்தான் தேர்வு செய்யப்படுவார். பூமியில் இது சம்பந்தமாக மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அவை நெறிக் கடவுள் கேட்க அதற்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. யாரைத் தேர்வு செய்வதில்தான் குழப்பம் நீடித்தது. அழிப்பதும் அழிச்சாட்டியம் செய்வதும் மிகச் சுலபம் என்பதால் தலைமைப் பொறுப்புக்கு எல்லோரும் கையை உயர்த்தினர். அவை நெறிக் கடவுளுக்கு இது தர்மசங்கடமான நேரந்தான். எல்லோரும் கையைத் தூக்கிக் கொண்டு நிற்கையில் ஒருவர் மட்டும் சாவகாசமாக எழுந்து நின்றார். போச்சுடா! மறுபடியும் நிர்வாணியா? என முணுமுணுத்தனர்.
அவை அமைதியான பிறகு நிர்வாணி பேசத் தொடங்கினார்.
“ இதோ பாருங்க, நீங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு இந்தப் பட்டம்,பதவி,பொறுப்பு எல்லாம் வேணவே வேணாம். நான் நிர்வாணி. இப்போ நீங்க பேசுறத பார்த்தோன எனக்கும் ஆசை வந்துடுச்சி.”
“ என்னது! உங்களுக்கும் ஆசையா?”
“ நீங்க நெனைக்கிற மாதிரி இறுதி நாளுங்கிறது அவ்வளவு சுலபம் இல்ல. எல்லாத்தையும் அழிச்சிப்புட்டு அப்புறம் நாம என்ன பண்றது? நம்பள யாரு கும்பிடுறது? மனுசங்க இல்லாம நம்மால ஒரு வினாடிகூட வாழ முடியுமா சொல்லுங்க? நிர்வாணியான எனக்கே வாழ ஆசை வரும்போது,இத்தனையும் அனுபவிச்ச உங்களால ஆசைய அறுத்து வாழ முடியுமா?.”
“ இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க நிர்வாணி?” எல்லோரும் ஆச்சரியத்துடன் ஒருமித்த குரல் எழுப்பினர்.
“ அப்படி வாங்க வழிக்கு! சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு இருக்கக்கூடாது. மனுசங்கக்கிட்ட இருக்கிற மூளைகூட நம்மக்கிட்ட இல்லாட்டி லோகத்துல பேர் போட முடியுமா? அதனால, இந்த இறுதி நாளுங்கிற விசயத்தை அப்படியே ஒத்திப் போட்டுட்டு எப்போதும்போல அடிச்சிக்கிட்டே வாழ்க்கைய ஓட்டலாம்னு நெனைக்கிறேன். இல்ல நான் தெரியாமதான் கேட்கிறேன்..நாமலா அடிச்சிக்கிறோம்? சனங்கதானே அடிச்சிக்கிறாங்க.. கொன்னுக்கிறாங்க.. நாம நல்லாதானே இருக்கிறோம்? அதனால, எப்போதும்போல இயற்கைப் பேரிடரை உண்டு பண்ணுவோம். தட்ப வெப்ப நிலையை மாற்றி விடுவோம்.உயிர்க்கொல்லி நோயைப் பரப்பி விடுவோம். தேசங்களுக்கெதிரா யுத்தத்தை ஆரம்பிப்போம். இப்படியே ஓட்டுனாதானே சனங்களுக்கு நம்ம மேல ஒரு மரியாதை இருக்கும்? உடனே, போயி நான்தான் அந்தக் கடவுள்னு நின்னாக்கா நம்மல ஒரு பயலும் மதிக்க மாட்டானுங்க. அதனால, இறுதி நாளுன்னு சொன்னது சொன்னதாகவே இருக்கட்டும். அதையும் நாம சொல்லலியே.. டபார் டபார்னு போயின் நின்னீங்கன்னு வச்சுக்குங்க, அப்புறம் அதுவே நமக்கும் இறுதி நாளா ஆயிடும்.இதான் என்னோட கருத்து. இதுக்கு நீங்கதான் ஒரு நல்ல முடிவைச் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு சம்மணம் போட்டார் நிர்வாணி.
அவை நெடிய நேரம் சிந்தனையில் ஆழ்ந்தது. அக்கம் பக்கமாய் எல்லோரும் கலந்துரையாடிய பிறகு,நிர்வாணியின் கூற்றில் முழுமைத்துவம் இருந்ததை அநேகர் நம்பினர்.
“உங்களுக்கு வாழணும்னு ஆசை இருக்கா இல்லையா?” நிர்வாணி சற்றுக் கோபத்துடன் கேட்க அனைவரும் ஆமோதித்தனர்.
ஆறாவது அமர்வு இப்படி முடியுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பொழுது போக்காக எல்லோரும் லோகத்தை எட்டிப் பார்த்தனர். அங்கே ஒரு சண்டை நடந்து கொண்டிருந்தது.ஆத்திகனும் ஆத்திகனும், நாத்திகனும் நாத்திகனும்,ஆத்திகனும் நாத்திகனும் அழகாய்ச் சண்டை போடுகிறார்கள் எனக் கைத்தட்டினர் கடவுளர்கள்!………………… முற்றும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
- வெளி ரங்கராஜனின் ‘இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்’ நூல் அறிமுகக் கூட்டம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 8
- சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை
- புலவி விராய பத்து
- பால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது
- தொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி
- உமர் கயாம் ஈரடிப்பாக்கள்
- ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா
- (வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”
- ஒரு மாநாடும் ஆறு அமர்வுகளும்
- இவனும் அவனும் – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை