பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு

This entry is part 13 of 14 in the series 30 ஏப்ரல் 2017

பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்குத்
தன்னார்வத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்

–பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர்
டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு
இந்தியாவில் கிராம மக்களின் ஆரம்ப சுகாதாரத் தேவைகள் மருத்துவ மூலிகைகள்
மூலமும் பாரம்பரிய வைத்தியர்கள் மூலமும் நிறைவேற்றப்பட்டு வந்தன.
இத்தகைய வைத்தியர்கள் சுமார் 6,000க்கும் அதிகமான மூலிகைகளை
வைத்தியத்திற்குப் பயன்படுத்தி வந்தனர்.  இவர்களுடைய அறிவு நம் நாட்டின்
மருத்துவப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.  தற்போதைய நடைமுறையில்
பாரம்பரிய வைத்தியர்களுக்கு அங்கீகாரம் இல்லை.   ஆகவே அவர்களின்
பாரம்பரிய வைத்திய அறிவுத் தகுதியை மதிப்பீடு செய்து தன்னார்வமாகத்
தகுதிச் சான்றிதழ் வழங்கும் ஒரு திட்டத்தை இந்தியத் தரக்கட்டுப்பாட்டு
நிறுவனமும் பெங்களூரில் உள்ள மக்கள் மருத்துவ மரபுகள் மறுமலர்ச்சி
அறக்கட்டளையும் இணைந்து தொடங்கி உள்ளன.  இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில்
உள்ள பாரம்பரிய சித்த வைத்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்
என்று பெங்களூரில் உள்ள பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி தெரிவித்தார்.

தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கமும், மக்கள் மருத்துவ மரபுகள்
மறுமலர்ச்சி இயக்கமும் இணைந்து நேற்று (30-4-17) வேலூரில் நடத்திய தேசிய
ஆரோக்கிய யாத்திரைக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய போது டாக்டர்
பாலகிருஷ்ண பிசுபட்டி இவ்வாறு தெரிவித்தார்.
கால்நடைகளுக்கு இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய சிகிச்சை முறைகள்
உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் தனித்தன்மை மிக்கதாக உள்ளன.  தேசிய
அளவிலும் சர்வதேச அளவிலும் பாரம்பரிய கால்நடை மருத்துவ முறைகளை இணைக்கும்
வகையில் நெட்வொர்க் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.  எங்களது பல்துறை
பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய சித்த வைத்தியர்கள் மருத்துகள் குறித்த
ஆராய்ச்சியை எப்பொழுது வேண்டுமென்றாலும் மேற்கொள்ளலாம்.  இந்திய
பாரம்பரிய வைத்திய முறைகளுக்கு சர்வேதச அங்கீகாரம் பெறுவதற்காக எங்களது
பல்கலைக்கழகம் பலவிதங்களில் முயற்சி எடுத்து வருகிறது என்று டாக்டர்
பாலகிருஷ்ண பிசுபட்டி தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு வேலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்
கே.எஸ்.டி.சுரேஷ் தலைமை வகித்தார்.  மக்கள் விரும்பும் மருத்துவ முறையைத்
தருவதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகின்றது.  தற்போது அரசு ஆரம்ப
சுகாதார நிலையங்களில் இந்திய மருத்துவ முறைகளுக்கான பிரிவுகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  தற்போது நாட்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ
சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என
டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
புதுச்சேரி களவிளம்பர உதவி இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் துவக்கவுரை
ஆற்றினார்.  காசநோய் துணை இயக்குனர் டாக்டர் ராஜாசிவானந்தம், மண்டல்
பூச்சியியல் குழுவின் முதுநிலை பூச்சியியல் வல்லுனர் முனைவர்
கி.கோபாலரத்தினம் ஆகியோரும் உரையாற்றினர்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் விஞ்ஞான ஆலோசனைக்குழு
முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.குமாரவேலு தனது உரையில் நுண்துகள் விஞ்ஞானம்
(Nano Science) இப்பொழுது கவனம் பெற்று வருகிறது.  ஆனால் சித்த
மருத்துவத்தில் உள்ள பஸ்பம், செந்தூரம், முப்பு போன்ற மருந்துகள் இந்த
நுண்துகள் விஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.  அதனால்தான் பக்க
விளைவுகள் ஏதுமின்றி சித்த மருந்துகள் விரும்பும் பலனைத் தருகின்றன.
உயர்நிலை சித்த மருந்துகள் தயாரிக்கும் முறைகளை ஆவணப்படுத்தும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

மக்கள் மருத்துவ மரபுகள் மறுமலர்ச்சி இயக்க ஆலோசகரான ஜி.ஹரிராமமூர்த்தி
பாரம்பரிய வைத்தியர்களுக்கான தன்னார்வ தகுதிச் சான்றிதழ் பெறும் திட்டம்
குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
முன்னதாக தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்தியத்தின் மாநிலத் தலைவர்
வைத்தியர் கே.பி.அருச்சுனன் அனைவரையும் வரவேற்றார். திண்டுக்கல் டாக்டர்
சுந்தரமீனாள் நிறைவில் நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கத்தில் ஆந்திராவின் குப்பத்தைச் சேர்ந்த வைத்தியர் சிவராஜ்,
செய்யாறு அகத்தியர் தவமைய நிறுவனர் பி.கே.பாலகிருஷ்ணன், சென்னை அருள்
ஹெல்த்கேர் வர்ம வைத்தியர் டாக்டர் எஸ்.அருளானந்த குமார், முத்திரை
வைத்தியர் பொன்.வாசு, மொழிபெயர்ப்பாளர் சக்கரவர்த்தி, கவிஞர் கண்ணன்
சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
***

Series Navigationதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழாபிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *