வறு ஓடுகள்

author
1
0 minutes, 1 second Read
This entry is part 3 of 11 in the series 14 மே 2017

சோம.அழகு

எப்போதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெரிசலோடும் இருக்கும் பாளையங்கோட்டையின் தெருக்களில் அன்று அவ்வளவாகக் கூட்டம் இருக்கவில்லை. எனவே அப்பா மகிழுந்தை சிறு மகிழ்ச்சியுடனேயே வடக்கு ரத வீதியில் செலுத்தினார்கள் (தாம் பிறந்து வளர்ந்து ஓடித் திரிந்த வீதிகள் தற்போது மக்களால் செயற்கையாக மிகவும் சிறிதாக்கப்பட்டது பற்றி வருத்தமும் கோபமும் அப்பாவுக்கு உண்டு). எதிரே 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் மிதிவண்டியில் கடந்து சென்றார். மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் தளர்ச்சி என்றே அம்மனிதரின் சோர்வைப் புரிந்து கொண்டேன். ஆனால் அப்பாவின் பெருமூச்சு, அதன் பின் வெளிப்பட்ட ‘ப்ச்….எப்படி இருந்த மனுஷன்?’ – இவை அவரது சோர்வைத் தாண்டி இருந்த சோகத்தை அரைகுறையாக உணர்த்தியது.

அவரது தந்தை ரேலி சைக்கிள் விற்பனை ஏஜன்டாகவும் விஜயராணி ஒயின்ஸ் உரிமையாளராகவும் இருந்தவர். எனவே இவரும் இவரது தம்பியுமான ஸ்டாலின் அங்கிளும் டெர்லின் ஷர்ட், பெல்பாட்டம் பேன்ட், ஸ்டைலான கிராப்புத்தலை என மிடுக்காக வலம் வந்த காட்சி அப்பாவின் மனத்திரையில் ஒரு நொடி மின்னலென வந்து சென்றிருக்க வேண்டும். வெகு சிலரே ஸ்கூட்டர் வைத்திருந்த அக்காலத்தில் கம்பீரமாக ஸ்கூட்டரில் வலம் வந்த ஸ்டாலின் அங்கிள் இன்றும் அதே பழைய ஸ்கூட்டரில்தான் செல்கிறார் – பழம்பொருட்கள் மீது உள்ள நாட்டத்தால் அல்ல…. பொருளாதாரத்தில் நொடிந்து போனதால் வேறு வழியின்றி. அவ்வண்டிக்கான உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு பல வருடங்களாகி விட்ட நிலையில், ஆங்காங்கே நின்று தொலைக்கும் அவ்வண்டியிடம் (மனதினுள்) கெஞ்சிக் கூத்தாடி பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஓட வைக்கும் ஸ்டாலின் அங்கிளின் முன் சர்ர்ர் புர்ர்ர்ரென்று பல விதமான வாகனங்கள் பறக்கின்றன. இவ்வுலகிலும் வாழ்க்கையிலும் ‘முன்னேற்றம்’ என்னும் பெயரில் பழமையை நிராகரித்து எரிச்சலைத் தரும் வகையில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு நடுவில், முதன்முறையாக ஸ்டாலின் அங்கிளின் பழைய ஸ்கூட்டர் மாற வேண்டினேன்.

பாளையங்கோட்டை வீதிகளில் தற்காலத்தில் பன்மடங்கு உயர்ந்திருக்கும் போக்குவரத்தைக் கணக்கில் கொள்ளுகையில் அங்குள்ள கடைகளின் வியாபாரம் பல்கிப் பெருகியிருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழ். தினமும் தெற்கு பஜாரைக் கடக்கும் மக்களில் கால்வாசியாவது தமது கடைக்கு வருவார்களாயின் வியாபாரம் ஓகோவென்றிருக்கும் என்றார் சண்முகம் ஸ்டோர்ஸ் உரிமையாளர். மிகவும் சுமாரான விற்பனை என்றாலும் கூட, “அது என்னமோ தெனமும் காலைல கடைய தொறந்து, வாசல பெருக்கி, தெளிச்சு, பிள்ளையாரக் கும்பிட்டு, சேர்ல ஒக்காந்தாத்தான் பொழுது விடிஞ்சாப்புல இருக்கு. அப்பிடியே பழகீட்டு சார். என்ன செய்ய?” என்கிறார். தமது கடையைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்பவர்கள் மீது இவருக்குக் கோபமோ வெறுப்போ வந்திருக்காதா? ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் கூட துணிமணி, நகை இன்னும் பிறவற்றுக்கும் தங்கள் பகுதியில் இருக்கும் கடைக்குத்தான் செல்வார்கள் மக்கள். தற்காலத்தைப் போல் பல மாடிகளைக் கொண்ட குளிரூட்டப்பட்ட பெரிய கடைகளுக்கு மட்டுமே கூட்டங்கூட்டமாகப் படையெடுக்காமல், மக்கள் கூட்டம் சிறு கடைகளிலும் பிரிந்து கிடந்தது. எனவே ஒவ்வொரு கடையும் அவ்வப்பகுதி மக்களின் புண்ணியத்தில் நன்றாக வாழ்ந்திருந்தன. “1500 ரூபாய்க்கு இதுல அப்படி என்ன பெரிசா இருக்கு? ரொம்ப அநியாயம்….” என முணுமுணுத்தபடி வாங்கினாலும் வாங்குகிறோமே ஒழிய, பேரம் பேச அனுமதிக்கும் (கூடுதல் சிறப்பு இருந்தும்) சிறிய கடைகளை நாம் ஏன் சீண்டுவதில்லை?

‘தமது தந்தை உரிமையாளராக இருந்த காலத்தில் வியாபாரம் செழித்திருந்ததைப் போலவே தமது காலம் முடியுமட்டும் இருக்கும்’ என்பதை உலக நியதியாக ஏற்றுக்கொண்ட பலருடைய நம்பிக்கையின் அச்சாணி முறியத் தொடங்கிய அல்லது முறிந்த அந்த நொடியை, வாழ்க்கை தனது குரூர முகத்தைக் காட்டத் துவங்கிய காலகட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார்கள்? காலப்போக்கில் கழுத்தை நெறிக்கத் துவங்கிய பொருளாதார நெருக்கடியை, செலவுகளைச் சுருக்கக் கற்றுக் கொடுத்த கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ளும் மனவலிமையை எங்கிருந்து பெற்றிருப்பார்கள்? தாம் விரும்பியதை எல்லாம் தமது தந்தை வாங்கித் தந்ததைப் போல் தமது பிள்ளைகள் ஆசைப்படுவதை வாங்கித் தர முடியாமல் போன இயலாமையின்கண் பிறக்கும் குற்றவுணர்விலிருந்து எங்ஙனம் மீண்டிருப்பார்கள்? தந்தையின் வழியில் அல்லாமல் கால வெள்ளத்தில் தாம் வேறு திசையில் இட்டுச் செல்லப்படும் நிதர்சனத்தை எப்போது உணர ஆரம்பித்திருப்பார்கள்? சுதாரிப்பதற்குப் போதிய நேரம் இருந்திருக்குமா? நேரம் இருந்திருந்தாலும் வேறு புதிய பாதையைத் தெரிவு செய்யக் கற்றுத்தரப்பட்டிருப்பார்களா? கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவர்கள் பின்னர் பிழைப்புக்காக இன்னொருவர் முன் கை கட்டி வளைந்து நிற்கும் போது முதுகை விட அதிகம் வலித்த மனதிற்கு எவ்வாறு மருந்திட்டிருப்பார்கள்? எல்லாவற்றிற்கும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என கைகாட்டித் தப்புவதில் உடன்பாடில்லை.

“வாழ்ந்து கெட்டவன் வறு ஓட்டுக்கும் ஆக மாட்டான்” – வாழ்ந்து கெட்டவர்கள் மீது எழுந்த அனுதாபத்தின் பிரதிபலிப்பாய் உருவான பழமொழி. ஏனெனில் அவர்களுக்கு அவலத்தைத் தாங்கிய வாழ்க்கை முறை தெரியாது. மண் பானை உடைந்த பிறகு அதன் கீழ் பாகத்தில் (சேதமாகாத பட்சத்தில்) மணல் இட்டு கடலை வறுக்கப் பயன்படுத்துவார்கள். அக்கீழ் பாகமே வறு ஓடு எனப்படும். வியாபாரம் படுத்துக் கொண்டதாலோ சொத்துக்களை இழந்ததாலோ நலிவடைந்தவர்கள் ஒருபுறம் எனில் பொன்னம்மா ஆச்சியைப் போல் வலுக்கட்டாயமாகக் குன்றிப் போனவர்கள் மறுபுறம். நொடிந்து போனவர்கள் பாவப்பட்டவர்கள் எனில் நோகடிக்கப்பட்டவர்கள் மட்டும் பாக்கியசாலிகளா என்ன?

பொன்னம்மா ஆச்சி – சோமசுந்தரம் தாத்தா ; தாத்தாவிற்கு மதுரா கோட்ஸ் பஞ்சாலையில் கிளார்க் வேலை. சொந்தமாகக் குதிரை வண்டி (வண்டிக்காரனுக்கு மாதம் 25 ரூபாய் சம்பளம்) வைத்திருந்தார்கள் என்றும் அதில்தான் தினமும் பணிக்குச் செல்வார்கள் என்றும் அப்பா கூறக்கேட்டிருக்கிறேன். விக்கிரமசிங்கபுரத்தின் மூணு லாம்ப் ஸ்டாப் அருகில் உள்ள தெருவில் ஒரு குட்டி மாளிகை போன்ற வீடு. தமக்குப் பிள்ளைகள் இல்லாவிடினும் தமது சகோதர சகோதரிகளின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தமக்குரியவர்களாகவே பாவித்துச் சீராட்டுவார்களாம். ஊரே மூக்கின் மேல் விரல் வைக்கும்படி எனது தாத்தா ஆச்சியின் திருமணத்தைத் தமது வீட்டில் வைத்துத் தாமே முன்னின்று நடத்தினார்களாம் சோமசுந்தரம் தாத்தா. அன்னார் இறைவனடி சேர்ந்த பிறகு, உறவினர்கள் அனைவரும் விக்கிரமசிங்கபுர வீட்டிற்காய் பொன்னம்மா ஆச்சியைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார்கள். ஆச்சியும் சற்று தளர்ந்த பிறகு வீட்டை உறவினர் ஒருவர் பெயருக்கு மாற்றியிருக்கிறாள். அதன் பிறகு, அப்பெரிய வீட்டின் பின்புறத்தில் ஒரு குச்சு வீடு அமைக்கப்பட்டு அதில் கிடத்தப்பட்டிருக்கிறாள். ஜன்னல் வழியாகப் போவோர் வருவோரைப் பார்த்தபடியே கடைசிக் காலத்தை ஓட்டியிருக்கிறாள். தனது சொந்த வீட்டின் ஓர் ஒதுக்குப்புறத்தில் அநாதையாகக் கிடந்தவளின் மனம் எவ்வளவு பாடுபட்டுத் துடித்துப் போயிருக்கும்? சோமசுந்தரம் தாத்தா அவளை இதற்கெல்லாம் மனதளவில் தயார் செய்திருப்பார்களா? ஒரு நாள் அவ்வூருக்குச் செல்ல நேர்ந்த என் ஆச்சி பொன்னம்மா ஆச்சியைப் பார்க்க சென்றிருக்கிறாள். “பெரியம்ம…நல்லா இருக்கியா” என்று கேட்ட ஆச்சியிடம், மொத்தத் திராணியையும் திரட்டி எழுந்து அமர்ந்து “வாம்மா….ஏதோ இருக்கேன்…” என்றவாறே எதிரில் அமர்ந்திருந்த என் ஆச்சியைத் தாண்டி பார்வையைச் சுழல விட்டு, “வெளக்கு பக்கத்துல என்னமோ இருக்கோ? என்னது?” என்று கேட்டிருக்கிறாள் பொன்னம்மா ஆச்சி. (அக்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் வாங்கி வரும் பலகாரம் விளக்கின் அருகில்தான் வைக்கப்படுமாம்) அவள் எதைக் கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட என் ஆச்சி முட்டிக் கொண்டு வந்த அழுகையை மறைக்க முற்பட்டு நா தழுதழுக்க “ஒண்ணுமில்ல பெரியம்ம…. திருநீறுதான் இருக்கு” என்றிருக்கிறாள். “எல்லாருக்கும் பான பானயா சுட்டு வழங்குனனே…. இப்ப காப்பிக்கும் அதுல முக்கி சாப்பிட ஒரு துண்டு முறுக்குக்கும் வழி இல்லாம போய்ட்டனா?” என்றவாறே படுத்துக்கொண்டாளாம். கண்ணீர் துளிர்க்க பொன்னம்மா ஆச்சி கேட்டதாக ஒவ்வொரு முறை கூறும் போதும் என் ஆச்சி அன்று அவள் முன் அடக்கிய அழுகையை குரல் உடைத்து அழுது தீர்ப்பாள். அன்று அவசர கதியில் ஒன்றும் வாங்காமல் சென்றதற்காய் இன்னும் குற்றவுணர்வில் புழுங்குகிறாள்.

இதே போல் போகிற வருகிறவர்களுக்கெல்லாம் சோறு போட்ட தூத்துக்குடி ஆச்சி ஒருத்தி படுத்த படுக்கையான பிறகு வீட்டில் உள்ளவர்கள் ஒரு இட்லி ஒரு தோசை தரவும் கசடியதைத் தாங்க இயலாமல் வீட்டினர் வெளியே சென்ற சமயம் கட்டிலில் இருந்து புரண்டு கீழே விழுந்து மெல்ல மெல்ல நகர்ந்து மண்ணெண்ணையின் உதவியுடன் அக்கொடிய புறக்கணிப்பில் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டாள். அவள் முக்கால்வாசி எரிந்து கொண்டிருந்தபோது அக்கம்பக்கத்தினர் வந்து தகவல் தரவும் அங்கு விரைந்து சென்ற சிவகாமி ஆச்சிக்கு அவள் முழுதும் எரிந்து முடியும் வரை சற்று எட்ட நின்று அழுதபடியே காத்திருப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை. அவள் ஜுவாலைகளுக்கிடையில் கல்லென அமர்ந்திருந்ததைப் பற்றிக் கூறுகையில் சிவகாமி ஆச்சியின் கண்ணீர் அந்நெருப்பை இப்போதும் அணைக்க முயல்கிறது.

நான் பிறப்பதற்கு முன்னதாகவே இறந்துவிட்ட அவர்களைப் பற்றி கேட்ட அந்த நாள் முழுக்க அழுது தீர்த்தும் போதவில்லை. கால இயந்திரத்தின் உதவியோடு பின்னோக்கிச் சென்று பொன்னம்மா ஆச்சியையும் தூத்துக்குடி ஆச்சியையும் இறுகக் கட்டிக் கொண்டு மனது லேசாகும் வரை அழ வேண்டும் போல் இருக்கிறது. பலரும் சுற்றியிருக்கத் தனித்து விடப்பட்ட அவர்களை அழைத்து வந்து என்னுடனேயே வைத்துக் கொள்ளத் துடித்தது மனது.

இவர்களைப் போன்ற ஆச்சி தாத்தாக்களைப் பார்த்துக் கொள்ள மனம் கோணும் இவர்களது பிள்ளைகளுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை – தங்கள் பிள்ளைகள் தங்களைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கப் போகிறார்கள் என்று. பேரன் பேத்திகளின் மூலம் மீதமுள்ள வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேட முயலும் முதியோர்களை வெறும் பண இயந்திரங்களாகப் பார்க்கும் பிசாசுகளுக்குத் தெரியாதோ – பிசாசுகளுக்குப் பிறந்தவை கண்டிப்பாய்ப் பிசாசுகளாகத்தான் இருக்கும் என்று.

எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் இக்கட்டுரையை எவ்வாறு முடிப்பது எனத் தெரியவில்லை. காலச் சக்கரத்தில் அகப்பட்டு ஒடிந்து போன இம்மனிதர்களின் வலி என்னை உலுக்கியதன் விளைவான இப்பதிவை இப்படியே மௌனத்தோடே முடிக்கிறேன்………

– சோம.அழகு

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! அத்யாயம் 12இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 168]
author

Similar Posts

Comments

 1. Avatar
  பேரா ந கிருஷ்ணன் says:

  // ஆச்சி தாத்தாக்களைப் பார்த்துக் கொள்ள மனம் கோணும் இவர்களுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை – தங்கள் பிள்ளைகள் தங்களைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கப் போகிறார்கள் என்று. … முதியோர்களை வெறும் பண இயந்திரங்களாகப் பார்க்கும் பிசாசுகளுக்குத் தெரியாதோ – பிசாசுகளுக்குப் பிறந்தவை கண்டிப்பாய்ப் பிசாசுகளாகத்தான் இருக்கும் என்று.// நெத்தியடி! ஏனோ ஒரே பழமொழியின் பலமொழிகள் தாரை தப்பட்டையுடன் குதியாட்டம் போட்டன! காய்ஞ்ச ஓலையைப் பாத்து குருத்தோலை சிரிச்சதாம்! பழுத்த ஓலயப் பாத்து, பச்ச ஓல சிரிச்சதாம்! காவோலை விழுந்ததெண்டு குருத்தோலை சிரிச்சதாம்! சாரோலையப் பார்த்து சிரிச்சதாம் குருத்தோலை! கீழ்மட்டையைப் பார்த்து மேல் மட்டை சிரிச்சதாம்! பழுத்தோலையைப் பாத்து சிரிச்சதாம் குருத்தோலை! சரித்திரத்திலிருந்து மனிதன் எப்போதுமே பாடம் கற்றுக்கொள்வதில்லை! எனவேதான் சரித்திரம் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. நெஞ்சம் கனக்கிறது!
  நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
  இது பொறுப்பதில்லை -தம்பி!
  எரி தழல் கொண்டு வா!
  தம்வேர்களைப் பொசுக்குவோரின்
  கைகளை எரித்திடுவோம்!” எனக்குள் பாரதியை எழுப்பிவிட்ட பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *