மொழிவது சுகம் ஜூன் 24 2017

This entry is part 10 of 13 in the series 25 ஜூன் 2017

macron

 

அ.  அறிவுடையார் ஆவதறிவார்

 

அறிதலுக்கு அவதானிப்பு மட்டுமே போதுமா ?

Pour connaître, suffit-il de bien observer ?

பிரான்சு நாட்டில் பள்ளி இறுதிவகுப்பு மாணவர்களுக்கு விருப்ப ப் பாடம் எதுவென்றாலும்  தத்துவம் கட்டாயப் பாடம். இவ்வருடம் இலக்கியத்தை  முதன்மைப்பாடமாக எடுத்திருந்த மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் சில தினங்களுக்கு  முன்பு கேட்டிருந்த  இரண்டுகேள்விகளில் ஒன்றையே  மேலே காண்கிறீர்கள்.

இக்கேள்வியில் இரண்டு முக்கியமான சொற்கள். : ஒன்று அறிதல், மற்றறொன்று அவதானிப்பு. இரண்டுமே  வினைச்சொற்கள். எனினும் அறிதலுக்கு அவதானிப்பு முக்கியமா என வினாவைத்திருப்பதிலிருந்து , அறிதலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றாகிறது. இந்த அறிதலின் நோக்கம் ஒரு பெருளைப் பற்றிய அறிவை – இயற்கைப் பண்பை- உண்மையின் நிர்வாணத்தை பகுத்தறிதல். ஆக அவதானித்தல் –> அறிதல்  –> தெளிதல். (மெய்ப்பொருள் காண்பது அறிவு-வள்ளுவன்)

அவதானிப்பு அறிதலுக்கு  தோழமை வினை. இத்தோழமை நம்பகமானதா, இறுதிவரை துணைக்கு நிற்குமா என்பது நம்முன் னே நிறுத்தப்பட்டுள்ள கேள்வி.  பிரெஞ்சு மொழியில் அவதானித்தல் என்ற சொல்லை  ‘observer’ என்கிறார்கள். அதாவது ‘regarder attentivement’ எனும் பொருளில் , தமிழில் உற்று நோக்கல் என்றாகிறது. கண் புலன் சார்ந்த வினைச்சொற்களாக தமிழில்  பார்த்தல், பார்வையிடல், காணல், கவனித்தல், காணல், நுணுகிக் காணல், நோக்குதல் உற்று நோக்குதல், படித்தல், சந்தி த்தல் , தேடல்  எனப்பலச்சொற்கள் உள்ளன. இவை அனைத்துமே அறிதலில் பின்னர் தெளிதலில் முடிவதில்லை. பார்த்தலும், பார்வையிடலும், காணலும், கவனித்தலும் அறிதலுக்கு உதவலாம் தெளிதலுக்கு உதவுமா ? முற்று முழுமையான உண்மையை கண்டறிய உதவுமா ? ஆக வெறும் பார்வை போதா து, ஆழாமன, நுட்பமான  ஆய்வாளர் பார்வை அதன்  அடிப்படைத்தேவை . ஆனால் இந்த அவதானிப்பு கூட சிற்சில நேரங்களில் பொய்யான முடிவுகளை, பாசாங்கு உண்மைகளை கண்டறிவதில் முடியலாம்.

அவதானிப்பு ஒரு கட்டாயத்தேவை.

அவதானிப்பு என்பது அறிதலுக்குத் துணை  நிற்கும் முதற்காரணி, இதனுடன்  பிற புலன்களில் பண்புகளும் வேதியல் பொருட்களாக பகுத்தாய்தலுக்கு கட்டாயமாகின்றன. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல் சுவைத்தல்  என அனைத்துமே  நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப இசைந்தோ, முரண்பட்டோ   நம்மைச் செயல்பட வைக்கின்றன, அதன் மூலம் நமது உயிர்  வாழ்க்கையை முனெடுத்துச் செல்கிறோம்.  அவதானிப்பு என்றசொல் பார்த்தல், பார்வையிடல், கவனித்தல் என்பது போல மேலோட்டமான சொல் அல்ல அவதானிப்பு பார்வையுடன் பிறபுலன்களின் குணங்களையும் இணைத்துக்கொள்ளும்  செயல். அவதானிப்பிற்குள், கேட்டல், தொட்டுண்ர்தல், சுவைத்தல் அனைத்தும் கைகோர்த்து ஒரு பொருளை, அல்லது கிடைத்தத் தகவலைப்  புடைத்து, பதர் நீக்கி , தெறிப்பான உண்மையை அறியும் சாத்தியத்தைத் தருகின்றன.  ஆனால் இந்த அவதானிப்புத் திறன் மனிதருக்கு மனிதர் வேறு படக்கூடும். வயது, கல்வி, அனுபவம், சமூகம் போன்றவை அத்திறனின் எடையைக் கூட்டவோ குறைக்கவோ  செய்கின்றன.   «  நான் பிறந்த தில் இருந்து சூரியன் கிழக்கில் உதிக்கிறது, எனவே  நாளையும் சூரியன்  கிழக்கில் உதிக்கும் » என்றெனக்குத் தெரிவந்த உண்மையும்  அவதானிப்பில் கிடைத்த  நன்மைதான்..

 

அவதானிப்பில் தவறுகள்.

அவதானிப்பு மட்டுமே உண்மையை கண்டெடுக்க உதவுமா ?. சூரியன் தின மும் கிழக்கில் உதிக்கிறது நாளையும் கிழக்கில் உதிக்கும் என்ற முடிவு சரியானதாக இருக்கலாம். « ஆனால் பத்துவருடமாக அவரை பார்க்கிறேன் அவர் திருந்தவேமாட்டார்  »என்கிற அவதானிப்பு தரும் உண்மை அந்த மனிதரின் பதினோராவது வருட த்தில் வேறாக இருக்கலாமில்லையா.  திரையில்  நல்லவராகவும்  வல்லவராகவும் இருக்கிற மனிதன்  நாளை முதலமைச்சர் ஆகிறபோதும் அப்படித்தான் இருப்பார்  என்கிற அவதானிப்பில் எத்தனை விழுக்காடு உண்மைகள் தேறும். தவிர அவதானிப்பில் உள்ள இன்னொரு சிக்கல் அவதானிக்கின்ற நபர் ? அவர் வயது,  கல்வி, அனுபவம் , சீர்தூக்கி பார்க்கும் திறன் இவற்றையெல்லாம் பொறுத்தே அவரது ‘அவதானிப்பு உண்மை’ மதிப்பு பெறும்.  அதாவது அவதானிப்பிற்குப்பின் கண்டறிந்த உண்மையை பல்வேறு கூறுகளின் அடிப்படையில் ஆய்ந்து முடிவுக்கு வருவது மட்டுமே சரியானதாக இருக்க முடியும். ஆக அவதானிப்பு மட்டுமே அறிதலுக்கு உதவாதென்பதில் உண்மை இல்லாமலில்லை.

அவதானிப்பிற்கு நடுவுநிலைமையும்  ஒரு தகுதி, குலம் கோத்திரம் ரிஷிமூலம் பார்த்தும் முடிவெடுப்பதல்ல :

«  மனுஷி கவிதையை வாசித்திருக்கிறேன், அதி ல் ஒன்றுமே இல்லை, எப்படி பரிசு கிடைத்த தென்று தெரியவில்லை » என ஒருவர் கருத்துத்  தெரிவித்திருந்தார்.. இன்னொருவர் « நம்ம பிள்ளைக்குத்தான் கிடை த்த து, அதனால் பிரச்சினை இல்லை » என்ற வகையில் எதிர்வினையாற்றியிருந்தார். இருவருக்கும் பிரான்சு நாட்டு மருத்துவரும், உடலியல் நிபுணருமான குளோது பெர்னார்ட் (Claude Bernard)  கூறும் அறிவுரை  «தூய்மையான மனதுடன் அவதானித்தல் வேண்டும் ».  நமது வள்ளுவனும் இவர்களுக்குப் பதில் வைத்திருக்கிறான் :.

« தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின் »  (குறள் 111, நடுவுநிலமை)

ஆ.  பிரான்சு பாராளுமன்றத் தேர்தல் ஜூன் 2017

எதிர்  பார்த்த தைப் போலவே, அதிபர் மக்ரோனுடைய (Macron) புதிய கட்சி  ‘Le Parti en marche’ நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றது. எனினும் இத்தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 42.6% சதவீத த்தினர் வாக்களிக்கவில்லை. வாக்களிக்காத 57,4 விழுக்காடு மக்களில் நானும் ஒருவன். முதல் சு ற்றுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு அதிபரின் புதிய கட்சி 400லிருந்து 450 உறுப்பினர்களைப்பெறும் எனத் தெரிவித்த து இந்த ராட்சத பலத்தை அதிபருக்குத் தர அவருக்கு ஆதரவாக அதிபர் தேர்தலில் வாக்களித்தவர்களே மறுத்தார்கள். இது ஜனநாயகத்திற்கு உகந்த து அல்ல என்பது பெரும்பான்மையோரின் எண்ணமாக இருந்த து. எனவே வாக்களிக்கச் செல்லவில்லை .  கடந்த நான்கைந்து தேர்தல்களாகவே, குறிப்பாக பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுகளுக்கு வாக்களிக்காதோர் விழுக்காடு பிரான்சு நாட்டில் குறைந்து வருகிறது என்கிறபோதும் இந்த முறை மிகவும் அதிகம்.  எனினும் அதிபர் கட்சி  577 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 450 உறுப்பினர்களை ப் பெற்றுள்ளது. அதிபர் கட்சி கணிசமான உறுப்பினர்களைப் பெறும் என  எதிர்பார்த்த து போலவே, நாட்டை இதுநாள்வரை மாறி மாறி ஆண்ட வலது சாரி கட்சிக்கும் இடதுசாரி கட்சியான சோஷலிஸ்டுகளுக்கும் இழப்பு அதிகம். அதிலும் சோஷலிஸ்டு கட்சி க்கு இனி எதிர்காலமில்லை என்கிறார்கள். இருந்தும் அக்கட்சி புத்தியிர் பெறவேடும் என்பதுதான் என்னைப்போன்றவர்களின் கனவு. இதேவேளை தீவிர இடதுசாரியான  மெலான்ஷோன் என்பவரின் கட்சியும் தீவிர வலதுசாரியான மரின் லெப்பென் கட்சியும் தலா 17, 8 உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள். மெலான்ஷோன் கனவு நாயகர். . வயிற்றெரிச்சல் ஆசாமி, வாயும் அதிகம். அதிபர் கனவு, பிரதமர் கனவு எல்லாமிருந்தன. பிரெஞ்சு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆட்டின் வாலை அளந்துவைப்பார்கள் . இப்புதிய அவையில் வரலாறு காணாத அளவிற்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம், ( 244 பெண்கள்).. அவ்வாறே முதன் முதலாக பலதுறைகளில் சாதி த்த வல்லுனர்கள் உறுப்பினர்கள் அதாவது 432பேர் பாராளுமன்றத்திற்குப் புதியவர்கள், அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். அதிபர் கட்சியின் 30 பேர்கொண்ட அமைச்சவரையில் 15 பெண் அமைச்சர்கள். குற்றச்ச்சாட்டிற்கு  உள்ளானவர்களை வெளியேற்றியும் இருக்கிறார்கள். நிறைய எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

————————————————————————————————————————–

 

Series Navigationஅருணா சுப்ரமணியன் –மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது – இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *