(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)
கிஷன் தாசின் பங்களா. கிஷன் தாஸ் பீமண்ணாவுடன் நுழைகிறார். சமையல்காரர் நகுல் சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கிறார். படித்துக்கொண்டிருக்கும் பிரகாஷ் தன் தலை உயர்த்தி ஒரு சிறுவனுடன் உள்ளே வரும் கிஷன் தாஸைக் கேள்விக்குறியுடன் நோக்குகிறான்.
“யாரப்பா இந்தப் பையன்? அவனுக்கு உடம்பு சரி இல்லையா? உடம்பில் யூகலிப்டஸ் ஆயில் தடவிக்கொண்டிருக்கிறானா, என்ன! இந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வருவதற்காகத்தான் நீங்கள் ஜெய்ப்பூருக்குப் போனீர்களா?” என்று பிரகாஷ் கேள்விகளை அடுக்குகிறான்.
சோபாவில் விழாத குறையாய்ப் பொத்தென்று சரிந்தபடி, “உன் கேள்விகள் எல்லாவற்றுக்கும் நிச்சயம் பதில் சொல்லுவேன். அது பெரிய கதை. என் சிறு வயது வாழ்க்கைக் கதையின் தொடர்ச்சியாக அது இருக்கும்!…. வா, பீமண்ணா, வா. வந்து இப்படி என்னருகில் உட்கார்ந்துகொள். நன்றாக வசதியாக உட்கார்!” என்று கிஷன் தாஸ் பீமண்ணாவை உபசரிக்கிறார். சற்றே தயங்கும் அவனைப் பிடித்து இழுத்துத் தம்மருகில் உட்கார்த்திக்கொள்ளுகிறார்.
பிறகு, “நகுல்! எல்லாருக்கும் காப்பி கொண்டுவா!…. பிரகாஷ்! இவன் பெயர் பீமண்ணா! இந்தப் பெயார் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? .. ஆமாம். இவன் என்னைப் படிக்க வைத்த பீமண்ணாவின் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவருடைய கொள்ளுப்பேரன். ராமதாசுக்கு மிகச் சிறுவயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் அவனுக்கு இந்தப் பேரன் பிறந்துவிட்டான். என்னைப் போல் இல்லை!….ம்… நான் ஏன் அவசர அவசரமாய் ஜெய்ப்பூருக்குப் போனேன், எப்படி இவனை அங்கே சந்திக்க வாய்த்தது, அவன் இன்னார் என்பதை எப்படித் தெரிந்துகொண்டேன் ஆகியவை மிகவும் சுவையான கதைகள்! நான் குளித்துவிட்டு வந்த பின் எல்லாம் விவரமாய்ச் சொல்லுகிறேன். சரியா?”
நகுல் காப்பிக் கோப்பைகள் எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் போகிறார். எல்லாரும் சுவைத்துக் குடிக்கிறார்கள். கோப்பைகளும் ஏந்துதட்டுகளும் உரசிக்கொள்ளும் ஓசைகள் தவிர அங்கே முழு அமைதி நிலவுகிறது.
காப்பியைப் பருகிய பின், “பிரகாஷ்! நான் சுமதிக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். அவளால்தான் நான் இவனைச் சந்திக்க வாய்த்தது. அப்படியே தற்செயாய்ச் சந்தித்திருந்தாலும், இவனைப் பற்றிய முழுவிவரமும் எனக்குத் தெரிந்திருக்க முடியாது. ஏனெனில் இவனைப் பார்த்துப் பேசும் தேவையே உண்டாகி யிருந்திருக்காது!…”
“ஏதோ புதிர் போடுவது போல் பேசுகிறீர்கள்! ஒன்றும் தெளிவாக இல்லை. ஆனால் சுமதி என்ன செய்திருந்தாள் என்பது தெரிந்தால் நீங்கள் இப்படி அவளுக்கு நன்றி யெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டீர்க்ள்!”
“எனக்கு எல்லாமே தெரியும், பிரகாஷ்! குளித்துவிட்டு வந்து எல்லாம் விவரமாய்ச் சொல்லுகிறேன். குளிக்கும் போது அப்படியே என் பாவங்களையும் கழுவி என்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!… சரி நீ பீமண்ணாவுடன் பேசிக்கொண்டிரு. நான் அரை மணியில் வந்து விடுவேன்,” என்று எழும் கிஷன் தாஸ் குளியல் அறைக்குள் நுழைகிறார்.
பிரகாஷ் எழுந்து பீமண்ணாவுக்கு அருகில் உட்கார்ந்து அவனது இடுப்பைச் சுற்றி வளைத்துக்கொண்டு, “பீமண்ணா! உன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் இந்த மாமாவுக்கு இப்போது சொல்லு, கேட்போம்! சொல்லுவாய்தானே?” என்கிறான்.
புன்னகை புரியும் பீமண்ணா, “கண்டிப்பாய்ச் சொல்லுகிறேன், மாமா!” என்ற பின் தொண்டையைக் கனைத்துக்கொண்டு சொல்லத் தொடங்குகிறான்.
… கொஞ்ச நேரம் கழித்துக் கிஷன் தாஸ் அங்கு வந்து அவர்களுக்கு அருகில் உட்கார்ந்துகொள்ளுகிறார். “இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டீர்கள் போலிருக்கிறதே!” என்கிறார்.
“ஆமாம், அப்பா. அந்த விவரங்களை இனி நீங்கள் எனக்குச் சொல்லத் தேவையில்லை. பீமண்ணா முழுக் கதையையும் சொல்லிவிட்டான். அவனிடம் மிகுந்த நடிப்புத் திறமை இயல்பாகவே குடிகொண்டிருக்கிறது. குரலின் ஏற்ற இறக்கத்துடன் அவன் சொன்னதைக் கேட்டிருந்தால் நீங்கள் வியந்து போயிருப்பீர்கள்! நடிப்புத் துறைக்குப் போனால் இவன் பிரமாதமாக வருவான்!”
“அப்படியா! … சரி…. ஆனால், முதலில் நான் பீமண்ணாவை வீட்டிலேயே வைத்து ஓர் ஆசிரியர் மூலம் அவன் விட்டதிலிருந்து மேற்கொண்டு கல்வி கற்க ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்லுகிறாய், பீமண்ணா?”
“நானே உங்களிடம் அப்படி வேண்டிக்கொள்ள எண்ணியிருந்தேன், மாமா!”
“பிரகாஷும் மாமா! நானும் மாமாவா! அதெப்படி? ஒரு மாமாவின் அப்பாவும் உனக்கு இன்னொரு மாமாவாக முடியாதே!”
“நான் உங்களைப் பெரிய மாமா என்று கூப்பிடுவேன்! அவர் சின்ன மாமா!”
கிஷன் தாஸ் சிரிக்கிறார். பிறகு, “… அதோ அந்த அறையில் இன்னொரு டி.வி. இருக்கிறது. அங்கே போய் உட்கார்ந்து அதில் கார்ட்டூன் பார். நான் உன் சின்ன மாமாவுடன் பேசவேண்டி யிருக்கிறது!” என்கிறார்.
பீமண்ணா புன்சிரிப்புடன் அந்த அறைக்குப் போகிறான்.
கிஷன் தாஸ் நகர்ந்து பிரகாஷின் கையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, கலங்கிவிட்டிருக்கும் கண்களுடன், “பிரகாஷ்! நான் ஒரு மிகப் பெரிய தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். அதை நீ கட்டாயம் ஏற்பாய் என்று எனக்குத் தெரியும்!” என்கிறார்,
“என்ன தீர்மானம் அப்பா அது?”
“நான் அநாதைக் குழந்தைகளுக்கான ஓர் இல்லம் தொடங்கி அதில் எல்லாக் குழந்தைத் தொழிலாளர்களையும் வைத்துப் பராமரிக்கப் போகிறேன். அவர்களின் கல்விக்குத் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களை நியமிக்கவும் போகிறேன். எல்லாரும் தேர்வுகள் எழுதிச் சான்றிதழ் பெறச் செய்வேன்…. எந்தச் சிறுவர்களின் பெற்றோர்களின் இருப்பிடங்களைக் கண்டுபிடிக்க முடிகிறதோ அவர்களை யெல்லாம் அந்தச் சிறுவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் சம்மதம் பெற்றதன் பின் அங்கங்கே சேர்த்துவிடுவேன். பெற்றோர்கள் மிகவும் ஏழைகளாக இருந்தால், அவர்களின் பராமரிப்புக்காக மாதந்தோறும் ஒரு தொகையையும் அவர்களுக்கு அனுப்பிவைப்பேன். நாம் நடத்தும் தொழிலகங்களில் குழந்தைத் தொழிலாளிகளே இனி இருக்கப் போவதில்லை. என் சொத்துகளில் ஒரு பாதியை உனக்கும், மறு பாதியைச் சுமதிக்கும் எழுதிவைக்கவும் போகிறேன்….”
வியப்பில் விரியும் விழிகளுடன், “என்ன! சுமதிக்கா!” என்று பிரகாஷ் வினவுகிறான்.
“ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்? உனக்கு அதில் மறுப்பு உண்டா?”
”எனக்கு எந்த மறுப்பும் கிடையாது. நான் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன். அதுதான் அப்படி உங்களைப் பார்த்தேன்,”
“சுமதிக்குக் கொடுப்பது என்பது இப்போதைக்கு இல்லை. அவள் உன்னைக் கல்யாணம் செய்துகொண்ட பிறகுதான். இப்படி நான் தரும் சொத்துகளை என்ன வேண்டுமானாலும் செய்யவும், எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யவும் உங்கள் இருவருக்கும் உரிமை உண்டு. ரத்தினம் போன்ற என் மகனுக்கு, மாணிக்கத்துக்கு நிகரான மனைவியை மணம் செய்துவைக்கப் போகும் நான் கொடுத்து வைத்தவன். இருவரும் நல்ல முறையில்தான் என் சொத்துகளைக் கையாளுவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உயிலைத் தயார் செய்ய நாளை என் வக்கீல் வருவார். இன்னும் ஓர் ஆச்சரியம் உனக்குக் காத்திருக்கிறது. உனக்கு என்பதை விடவும், பீமண்ணாவுக்கு என்று சொல்லுவதே சரியாக இருக்கும். அவன் தங்கை பானுவை விலைக்கு வாங்கி இங்கே கொண்டு வரவும் ஏற்பாடு செய்துவிட்டேன். இன்னும் இரண்டொரு நாள்களில் அவள் இங்கு வந்து சேருவாள். இப்போதைக்கு இது பீமண்ணாவுக்குத் தெரிய வேண்டாம்!”
“ஆனால் இரட்டையர்களில் ஒருத்தியான அந்தப் பெண் இதுநாள் வரையில் எங்கே இருந்தாள்? அவள் இருப்பிடம் எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது? அவளை விலைக்கு வாங்கி இங்கே கொண்டுவரப் போவதாகச் சொல்லுகிறீர்களே, அதற்கு என்ன பொருள்?”
“என்னைப் போன்ற தொழிலதிபர்களுக்குச் சிறுவர் சிறுமியரை விற்கும் பத்ரிநாத் பெற்றோர்கள் தாங்களே விற்க முனையும் குழந்தைகளையும், அநாதைகளான தெருக்குழந்தைகளையும்தான் கொண்டுவருவது பொதுவாய் வழக்கம். இந்தப் போக்கிரி பீமண்ணாவையும் அவன் தங்கையையும் பலவந்தமாய்க் கடத்திக் கொண்டுவந்திருக்கிறான். அது பற்றியும் பீமண்ணா உனக்குச் சொல்லியிருப்பானே? ஆனால் அவன் குழந்தைகளைக் கடத்துபவனும் கூட என்பது எனக்குத் தெரியாது. நான் வாங்கிய குழந்தைகள் எல்லாரும் பெற்றோரே விற்பவர்கள் அல்லது அநாதைகள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். … அதிருஷ்டவசமாய், ஜெய்ப்பூர் மேலாளர் சேகர் அண்மையில் அந்த பத்ரிநாத்தைச் சந்திருக்கிறார். உடனேயே அவனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்…. அந்த ராஸ்கல் பானுவை ஒரு….ஒரு… விபசார விடுதித் தலைவிக்கு விற்றிருந்திருக்கிறான்…. என் ஆப்த நண்பன் ராமதாசின் மகளுக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் நான் எத்தகைய பரிசைக் கொடுத்து விட்டிருக்கிறேன்!….” – இவ்வாறு குழறும் குரலில் புலம்பிய பின் கிஷன் தாஸ் நொறுங்கிப் போய்த் தோள்கள் குலுங்க, ஒரு சிறுவனைப் போல் அழுகிறார்.
மிகச் சில கணங்களுள் உணர்விழந்து சாய்ந்தும் விடுகிறார். அவரைத் தாங்கிக்கொள்ளும் பிரகாஷ், “நகுல்! நகுல்!” என்று கூவுகிறான்.
விரைந்து வரும் நகுலிடம், “சீக்கிரம் அப்பாவின் முகத்தில் தண்ணீர் தெளியுங்கள்!” என்கிறான்.
நகுலும் அப்படியே செய்கிறார். சில நொடிகளில் கிஷன் தாஸ் கண் விழிக்கிறார். சமாளித்துக்கொண்டு சரியாக உட்காருகிறார்.
“நம் டாக்டரைக் கூப்பிடட்டுமா, அப்பா?”
“தேவை இல்லை, பிரகாஷ்! களைப்பு, இடைவிடாத பரபரப்பு, மன உளைச்சல், அதிர்ச்சி, குற்ற உணர்வு, எதிர்பாராது விளைந்த மகிழ்ச்சி ஆகிய எல்லாம் என்னைப் பாதித்துவிட்டன. எல்லாம் ஒருசேர என்னைத் தாக்கவே என்னால் தாங்க முடியவில்லை…. அதனால்தான் மயக்கமாகிவிட்டேன். அதைப் பெரிது படுத்திக் கவலைப்படாதே…இப்போது நான் சரியாகிவிட்டேன். … சுமதியைக் கொஞ்சம் தொலைபேசியில் கூப்பிடுகிறாயா? நான் பேச வேண்டும்.”
”சரி, அப்பா.”
மதராஸ் தொலைபேசியின் இணைப்புக் கிடைத்ததும், “சுமதி! நான் பிரகாஷ் பேசுகிறேன். அப்பாவுக்கு உன்னோடு பேச வேண்டுமாம்… அப்பா! சுமதி! பேசுங்கள்!” என்று பிரகாஷ் கிஷன் தாசிடம் ஒலிவாங்கியைத் தருகிறான்.
“சுமதி! என் அன்பான மருமகளே! நான் மிக, மிக வருந்துகிறேன், சுமதி! செய்யக் கூடாதவற்றை யெல்லாம் நான் செய்து வந்திருக்கிறேன், கண்ணம்மா. குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய உன் கொள்கையும் நீ அதன் பொருட்டுச் செய்தவையும் மிகவும் சரியே, சுமதி. இந்தப் பெரும் பணியில் இனி நானும் உன்னோடு இணைவதாக இருக்கிறேன். பேராசையே உருவான – தேசபக்தி இல்லாத – இந்த முட்டாள் கிழவனை நீ மன்னிப்பாயா, சுமதி? இனி என் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளிகளே இருக்க மாட்டார்கள். அவர்களுக்காக நான் ஓர் அநாதை இல்லம் துவக்கப் போகிறேன். அவர்களின் பெற்றோர்களைக் கண்டுபிடித்து அவர்கள் விரும்பினால் எல்லாரையும் திருப்பி அவர்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அநாதைகளை நானே பராமரிப்பதாக இருக்கிறேன். … அம்மா, சுமதி! நீ எனக்கு மிகப் பெரிய பாடம் கற்பித்திருக்கிறாய்! என் குழந்தைப் பருவ நிகழ்வுகள் பற்றியும், என் கடந்த காலம் பற்றியும், சென்ற இரண்டு நாள்களில் நடந்துள்ளவை பற்றியும் அறிய நேர்ந்தால் நீ அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைவாய். உண்மை என்பது கற்பனையையும் விஞ்சுவது என்று சொல்லப்படுவது சரிதான். நீ ஏன் டில்லிக்கு உடனே கிளம்பி வரக்கூடாது? உன்னை உடனே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது, பெண்ணே! உன்னிடம் நேரிலும் நான் மனம்விட்டுப் பேசி மன்னிப்பும் கேட்க விரும்புகிறேன், சுமதி!… என்னது! நீயும் என்னிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறாயா! எதற்கு…. ஓ! பிரகாஷின் முகவரி அட்டையைத் திருட்டுத்தனமாய்ப் பயன்படுத்திய குற்றத்துக்காகவா! ஹோ…..ஹோ…. ஹோ….” – கிஷன் தாஸ் அடக்க மாட்டாமல் சிரித்து ஓய்கிறார்,
பிறகு, “அடுத்த விமானத்தில் கிளம்பி வா. உன் பெற்றோரிடம் ஏதேனும் காரணத்தைக் கற்பித்துச் சொல்லிவிட்டுப் புறப்படு. உனக்குத் தெரியாத தந்திரமா! ….. சரியம்மா……. அப்படியே செய்!” – பேசி முடித்துவிட்டு அவர் இணைப்பைத் துண்டிக்கிறார்.
“என்ன சொன்னாள், அப்பா? வருகிறாளாமா?”
“ஆமாம். ஹைதராபாத் போவதாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறாளாம். ஆனால் அங்குதான் முதலில் போகிறாள். போய் அவள் தோழி சுந்தரியையும் அழைத்துக்கொண்டு இங்கே வருகிறாளாம்!” – கிஷன் தாஸ் நிம்மதிப் புன்சிரிப்புடன் சோபாவின் முதுகில் தளர்ச்சியுடன் சாய்ந்துகொள்ளுகிறார். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் பிரகாஷும் மலர்ச்சியுடன் அவரை நோக்குகிறான்.
jothigirija@live.com
- இயற்கையின் ஊடே சமூகப் பயணம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20
- தொடுவானம் 177. தோழியான காதலி.
- ஒரு சொட்டுக் கண்ணீர்
- சொல்லாத சொற்கள்
- அதிகாரம்
- ”மஞ்சள்” நாடகம்
- English translation in poetical genre of Avvaiyaar’s poems
- கவிதைகள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- ‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
- மொழிவது சுகம் 8ஜூலை 2017
- நூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்
- கவிதை
- ‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..
- கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.