கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)

This entry is part 5 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

Boopathy

கவிஞர் தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த கருத்தரங்கம் 29-07-2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரின்,’முடிவற்ற நண்பகல்’, கவிதை நூல் குறித்து உரையாற்றினேன். அந்த உரையின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம்.

சமகாலத்தில், நான் சந்திக்கிற சமூகப் பிரச்சனைகளைத் தானும் சந்திக்கிற, நான் எதிர்கொள்கிற அரசியல் சூழல்களால் ஏற்படும் சிக்கல்களைத் தானும் எதிர்கொள்கிற, பண்பாடு, சாதி, மதம் இன்ன பிற கட்டமைப்புகளால் நிகழும் சம்பவங்களுக்குச் சாட்சியாக நான் புழங்கும் மொழியிலேயே கவிதைகள் எழுதும் சமகாலக் கவிஞன் பற்றியும் அவனது கவிதைகள் பற்றியும் பேசுவதென்பது , நான் கவிதை எழுதும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியைத் தருகிறது.

அவ்விதத்தில் இந்நிகழ்வில், தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த அரங்கில் கலந்து கொள்ள அழைத்த போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம், கவிஞர், நண்பர் தேவேந்திர பூபதியோடு இணக்கமான நட்பு எப்போதும் எனக்குண்டு. தேவேந்திர பூபதி கவிஞர் மட்டுமல்லர். இலக்கியச் செயல்பாட்டாளர். மதுரையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதில் முக்கியப் பங்கும் முதன்மைப் பங்கும் இவருக்கு உண்டு என்பதை நான் அறிவேன். ஒரு முறை நானும் சென்றிருக்கிறேன்.

என்னுடைய ,’புறவழிச் சாலை’, கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தேன். 2009 ஆம்

wrapper (1)

ஆண்டு. பல்வேறு பணிகளுக்கிடையில் மதுரையிலிருந்து விமானத்தில் வந்து கலந்து கொண்டு திரும்பினார். சக கவிஞர்கள் மீது பிரியமும் மதிப்பும் கொண்டவராக இருப்பவர்.
அவரோடு மட்டுமல்லாது அவரின் கவிதைகளோடும் தொடர்ந்து பயணிப்பவன் நான். அவரது ‘வெளிச்சத்தின் வாசனை’, நூல் வெளியான போது அந்நூல்குறித்த விமர்சனத்தை, திண்ணை இணைய தளத்தில் எழுதியதோடு, அது என்னுடைய ,’சொல் விளங்கும் திசைகள்’, கட்டுரைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. இப்போது இங்கே பேசுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை , என் முனைவர் பட்ட ஆய்வின் முதன்மைச் சான்றுக்கான நூல்களில் ஒன்றாக பயன் படுத்தியிருக்கிறேன். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும்,’ வார்த்தைகளை சுமந்து செல்கிறவன்’, கவிதை ஆய்வில் முக்கிய மேற்கோளாக இடம் பெற்றிருக்கிறது.

செய்தித் தொடர்பில் கடிதம் எத்தகைய முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் இப்போது நிலைமை அதுவல்ல. வங்கிக் கடன் தொகையைத் தெரிவிக்கிற கடிதங்களைத் தவிர வேறு கடிதங்கள் வீட்டுக்கு வருவது அரிதாகி விட்டது. ஒரு காலத்தில் தபால் காரரின் வருகை என்பது தேவதூதனின் வருகைக் கிணையான எதிர்பார்ப்பைக் கொடுப்பது. ஏனெனில் வார்த்தைகளைச் சுமந்து வருகிற அவர்கள் வார்த்தைகளை மட்டுமல்ல வாழ்க்கையையும் சுமந்து வருகிறார்கள். மனிதர்களின் சுகதுக்கங்களை உறைக்குள் வைத்து ஒட்டிய படி கொண்டு வருகிறார்கள். நம் நாட்டில் கற்றோர் சதவீதம் என்பது கையெழுத்துப் போடத்தெரிந்தவர்களையும் சேர்த்துத்தான். கவிஞர் இளம்பிறையின் ,’அப்பாவின் கையெழுத்து’, கவிதை நினைவுக்கு வருகிறது.
கொடுக்கப்பட்ட கட்டத்திற்குள் கையெழுத்திட முடியாமல் அடுத்த வரியில் கையெழுத்தை எழுதட்டுமாவெனக் கேட்கும் அப்பா. இந்த அப்பாக்களும் இணைந்தது தான் நம்மின் கற்றோர் சதவீதம். அப்படியான சூழலில் வரும் தபால்களில் இருக்கும் வார்த்தைகளை வாசிப்பது யார் என்பது முக்கியம். தேவேந்திர பூபதியின் ,’வார்த்தைகளைச் சுமந்து செல்கிறவன் ‘, கவிதை இப்படி முடிகிறது
இத்தேசத்தின்
களைத்த குடிசைகளின் முன்பு
எத்தனை கடிதங்களை நீயே
பிரித்து வாசித்து விட்டுப் போனாயோ?
உனக்கு என் மரியாதை.

காலம் வெளி இவையிரண்டையும் கடந்து வெளியே எந்த ஒரு கலையும் இயங்க முடியாது என்பதை நாம் அறிவோம்.
இடமும் பொழுதும் நம் வாழ்வின் இன்றியமையாத கூறுகள். அவற்றைப் பகுத்து இலக்கணம் வகுத்த மரபு நம் மரபு. காலத்தைப் பெரும்பொழுது சிறு பொழுது எனவும் நிலத்தை ஐந்திணையெனவும் பகுத்தார்கள். தேவேந்திர பூபதியின் இத் தொகுப்பு காலத்தின் ஊடாகவே பயணம் செய்வதாக உணர்கிறேன்.

நூலின் தலைப்பு ,’முடிவற்ற நண்பகல்’.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது இலக்கணம். அதிலும் குறிப்பாக கவிதைகளில் சிறப்புப் பொருள் குறித்தனவாகச் சொற்கள் இருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியும்.
முடிவில்லாத நண்பகல், என்று இதற்கு ஈடாக சொல்லிப் பார்த்தேன். அச்சொல்லைப் பயன் படுத்தும் போது, பொழுதுக்கு வெளியே நிகழ்வின் முடிவின்மையை உணர்த்துவதாகத் தோன்றியது. ’முடிவற்ற’ என்னும் போது பொழுதின் முடிவின்மையை உணர்த்துவதாகப் படுகிறது.அவ்வாறு பொழுதின் முடிவின்மையைச் சாத்தியப் படுத்தவேண்டுமாயின் இரண்டு விஷயங்கள் கவனம் கொள்ளத்தக்கவையாக உள்ளன.
காலம் என்பது தொடர்ந்து இயங்குவது. ஒரு கணமும் நிற்காது. கடந்த ஒரு நொடிப்பொழுதைக் கூட மீட்க முடியாது. ஆனால்,’ முடிவற்ற’ எனில் நிறுத்த வேண்டும். இயங்கும் காலத்தை நிறுத்த வேண்டும். திரைப்படத்தில் காலத்தை நிறுத்தும் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். பறவைகள் பறப்பதைக் காட்டி அப்படியே freeze செய்து காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். கவிதையில் காலத்தை நிறுத்துவது எங்ஙனம். அதற்கான காட்சியைக் கவிஞன் இப்படி யோசிக்கிறான்.
நண்பகலில் நடக்கும் காந்தி
காந்தி சிலையைக் காட்சிபடுத்துகிற போது, இயக்கமற்று நிற்கும் அந்தச்சிலை நடக்கும் பாவனையில் இருந்தபோதும் இயக்கமற்ற பொழுதின் காட்சியை வாசகனிடம் உருவாக்கி விடுகிறது.

ஏற்கனவே, இத்தொகுப்பு முழுவதும் காலம் குறித்த கவிதைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டேன். சிலகவிதைகளின் தலைப்புகளே அதற்கு வெளிப்படைச் சாட்சியங்களாகும்.
‘காதலின் கோடைக்காலம்’, ‘வெகு காலத்திற்கு முன்னால் நடந்தது’, பொழுதின் நிறங்கள்’, ’அர்த்த ராத்திரிப் புலம்பல்கள்’, ஆறுதலற்ற ஆயுட்காலம்’, ‘ பதற்றம் கூடும் காலம்’, ‘முடிவற்ற காலவெளி’,’அந்தியில் மூழ்கும் பகல்’, என்று பல கவிதைகள்.

சில கவிதைகளை முன் வைத்து என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பாதரஸ ஏரி என்றொரு கவிதை.
பாதரஸம் –ஏரி என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கை. ஏரி என்பது மிகவும் அறிமுகமான சொல். நீரால் நிறைந்த நிலை. ஏரி ஒரு நீர்நிலை. இயற்கையின் கொடை. பாதரஸம் என்பது சொல்லாக மட்டுமல்லாமல் அதன் தன்மைகளை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ளும் போது தான் கவிதை பேசும் பிரச்சனையை அணுக முடியும்.
நீரின் அடர்த்தி ஒன்று. அதாவது 1கி/கன செ.மீ. பாதரஸத்தின் அடர்த்தியோ 13.56 கி/கன செ. மீ. . நீர் போல 13 மடங்கு அடர்த்தியான திரவம். இப்போது,
நீர் நிரம்பியிருக்க வேண்டிய ஏரியில் பாதரஸம் நிரம்பியிருக்குமேயானால் என்ன ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
‘இயற்கையின் இயக்கவிதிகளை அறிந்து கொள்ளும் முனைப்பாகவும் அதனோடு ஒத்திசைவு கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கும் வழியாகவும் உருப்பெற்றிருப்பவை தேவேந்திர பூபதியின் கவிதைகள்’, என்னும் நூலட்டையில் இருக்கும் குறிப்பினைக் கவனம் கொள்கிறேன்.
சரி. ஏரி இப்படி ஆகிப்போவதற்கான சூழலை உருவாக்கியவர்கள் யார்? நாம் தானே. இயற்கையின் மீது எத்தகைய கவனம் இருக்கிறது. அவ்வப்போதைய நலன்களேப் பிரதானமாகிப் போகிறது. இன்றைக்கு வெப்பமயமாதல் குறித்து பல நாட்டுத் தலைவர்கள் பங்கு கொள்ளும் மாநாடுகள் நடக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதுகிறார்
உருவம் வடிவமிழக்கும் இருளில்
அந்த ஓவியனைத் தேடுகிறேன்
செந்நிறம் பொங்கும் கிழக்கில்
தூரிகையால் அதைச் சற்று
நிறம் குன்றச் செய்யவேண்டும்
ஏரியின் மீது ஆவியாய் மிதக்கும் வெப்பம்
கச்சிதமாகத் தீட்டப்பட்டிருக்கிறது
பார்வையாளனாக
அவ்வோவியத்தின் இருளில் இருப்பதை
அக்கோடைக் கால ஓவியன்
அறியும் படி செய்ய வேண்டும்
என்கிறார். இயற்கையின் மீதான இவரின் ஈடுபாடும் ஒத்திசைவும் வெளிப்படுவதும் அதனை ஒரு அறிவியல் நுட்பம் மிக்க பார்வையாளனாக முன்வைத்தபின் கவிஞனின் மனம் வெளிப்படும் இடம் ஒன்று உண்டு.

அப்பொழுது
ஏரிப்பறவைகள்
என்முன் எழும்பிப் பறந்து செல்லக் கூடும்.
கவிமனத்திற்கு அது மிக முக்கியமானது. அவர் முன் ஏரிப்பறவைகள் பறப்பது முக்கியம். அதற்கு இயற்கையின் மீதான அக்கறையும் அதனைப் பாதுகாப்பதும் அதி முக்கியம்.

’ஓவியங்கள் புகைப்படமாவதில்லை’, என்னும் கவிதை, என் கவனம் ஈர்த்தது.
ஓவியம் என்பது விரலால் வரைவதெனக் கொண்டால் புகைப்படத்தை விழியால் வரைவதெனக் கொள்ளலாம். ஒரு காட்சிச் சித்திரத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று கலைமனம் சொல்கிறதோ அவையெல்லாம் ஓவியத்தில் இடம் பெறல் சாத்தியம் தான். புகைப்படத்தில் என்ன இருக்கிறதோ அதுவே சாத்தியம். ஓவியத்துக்குப் புனைவு மனம் வேண்டும் . புகைப்படத்திற்கோ ரசிப்பு மனம் வேண்டும்.
இவர் ஓவியம் வரைகிறார். கவியோவியம்.
வானம் வரையும் ஓவியன்
சிறு பறவைகளை தொடுவானத்தில் வைக்கிறான்
அதுபோலவே
வயல் வெளியில் செம்மறி ஆடுகள்
புல்லென்ற பசுமையிடையே ஒரு கடும்பாறை
சாலையென்றால் வாகனங்களும்
கடலென்றால் கப்பல்களும்
ஆறென்றால் தூரத்து மலைகளும் தான்
சூரியனை முடியவில்லையென்றால் என்ன
நிழல்களும் கதிர்களும் இருப்பதில்லையா
ஒரு கவிமனம் வரையும் ஓவியம் வெறும் காட்சிகளோடு நின்று போகுமா?.தத்துவத்திற்குத் தாவும் என்பதும் சாத்தியமானது தானே. சித்திரமாய் வானத்தை ,செம்மறி ஆட்டை, கடலை, மலையை, பறவையை ,சூரியனை, அதன் கதிரை நிழலை யென வரைபவர்,
அதிகம் பிரியமானவர்களுடன்
முரண்பாட்டின் கண்ணீரற்று அல்லது
பெருமிதத்தின் பரவசங்களற்று
தனியாக மிகத்தனியாக
ஒரு புகைப்படம் இருப்பதில்லை யாரிடமும்
காலங்களின் மீதான உத்திரவாதம்
நழுவிச் செல்லும் குளிர்கால நிலவைப் போல அல்லது
அந்நியமாகிப் போன தந்தையைப் போல
அனைத்தையும் விட்டுச் செல்லும்
ஒரு தத்துவத்தின் முன்
ஏன் உறைந்ததில்லை ஒரு நிகழ்கணம்
என்னும் கேள்வியின் இடத்தைச் சென்றடைகிறது.
இவரின் ,’காதோர நரை’, பால்யத்தினை நினைவு கூர்வது. நினைவு கூர்தல் என்பதே ஒரு கலை. எல்லா பால்யங்களும் இன்பமானவையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆயினும் அனேகமான பால்யங்கள் துன்பங்களின் ஊடாகவும் இன்பத்தைக் கண்டடைந்தவை என்பதை வயோதிகம் உணர்த்துகிறது. மிக்குந்த அங்கதச் சுவை கொண்ட கவிதை இது.
பரிமளாவின் ஊருக்குப் போவது
குளத்து மீன்களின் வாசம் நிரம்பியது
ஆடுமாடுகளின் சாண வீச்சம்
ஓடைக்கரை தாண்டினால் திராட்சைத் தோட்டம்
பரிமளாவின் நடமாட்டமே வாசம் மிக்கது.
நில வெளியின் கட்டமைப்பும் காற்றில் கலந்த மணம் குறித்துப் பேசுவதெல்லாம் அங்கதத்தின் குணத்துடன், பரிமளாவின் வாசத்தின் நினைவின் எதிர்ப் பாட்டு என்று நகரும் போது சிரிப்பு வருவதைத் தவிர்க்கவியவில்லை.
பரிமளாவின் ஊருக்குப் போனேன்
என் காதோர நரையை விடுங்கள்
ஆச்சர்யமான அதிசயம் நம்பமாட்டீர்கள்
அதே வயது பரிமளா
நான் அழைக்க அழைக்க
ஓடிக் கொண்டிருக்கிறாள்
ஆச்சர்யமென்ன இருக்கிறது. அதிசயம் என்ன இருக்கிரது. நம்புகிறோம். ஆமாம் ஒரு போதும் பரிமளாக்களுக்கு வயதாவதில் நமக்கு உவப்பில்லை தானே. எனக்கு மனத்தின் நெருக்கத்தில் வந்த கவிதையிது.

‘பொழுதின் நிறங்கள்’, கவிதையில் பொழுதுக்கு நிறங்களைச் சொல்கிறார். பொழுதுகளுக்கு குணமுண்டு. ஒவ்வோர் பொழுதுக்கும் ஒரு தன்மையுண்டு. இவர் பொழுதுகளுக்கு நிறம் வரைகிறார்.

மற்றொரு கவிதையில்,
அடர்ந்து வீழும் நீர்வீழ்ச்சியில்
எனது கிண்ணத்தின் கொள்ளளவு
உனது முத்தத்தின் சில மில்லி மீட்டர்கள் தான்
ஆயினும் என்னுடலில் தாவரங்கள் வளர
அது போதும்.
கணக்கிடவியலா அளவில் பேரருவியில் நீர் கொட்டுகிறது. என்றபோதிலும் ,கிண்ணத்தின் கொள்ளளவு போதும் என்பது தான் ஜென் தத்துவம். எத்தனை எளிதாய் பேசிவிட முடிகிறது கவிஞனால். உடலில் தாவரம் வளர்வது என்னும் புனைவு, அடடடே.
’காலணிகளை விட முக்கியமானது கால்கள்’

’வனத்தின் நிறம் அறியா உனக்கு
அதன் மௌனங்களின் வசீகரங்கள்
புதிரானவை’

’மொழி
அது கடல் உணவு
பசு நெய்யின் புலவு’
இப்படி நிறைய வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

மொழியின் பயன்பாட்டில் இருக்கும் இவரின் தெளிவு மகிழ்ச்சிதருகிறது. அருகாமை என்னும் சொல்லைப் பலரும் அருகில் என்னும் பொருளிலேயே பயன்படுத்தக் காண்கிறோம். அருகு என்பதன் எதிர்ப்பதம் தான் அருகாமை. கொல்-கொல்லாமை போல.
பிம்பங்கள் கடந்து போகும்
கோடைக்காலத்தில்
கண்மறைத்துப் போகிறது
நீயற்ற நிகழ்காலம்
ஒரு அருகாமையின் துயரம்
என் நினைவின் ஒர் நாளை
அருகாமை என்னும் சொல்லை, தொலைவு என்னும் பொருள்படப் பயன் படுத்தியிருப்பதற்காக தீராத தமிழ் ஆர்வலன் என்னும் முறையில் என் தனித்த பாராட்டுகள்.

அறிதுயில் நீங்கி
ஆதி அந்தம் காணாத மிருகம்
பாதிக் கனவில் விழித்தது போலிருக்கிறது உலகு
என்பது இந்நூலில் காணக்கிடைக்கும் நல்ல உவமைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டே.

ஒரு கவிதையோடு நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.
‘வேடனின் வலை’, என்னும் கவிதை.
பகலின் நிறம் கிளிப்பச்சை
அது மலையருவியிலும் கரும்பாறையிலும்
வண்ணம் குழைத்துப் பிறந்தது
கிளிபிடிக்கும் இரவொரு வேடன்
வேடன் பிறந்தது மலைக்குப் பின்புறம்
மலைக்கு இப்பக்கம் மனிதர்கள்
மனிதர்கள் பேசக்கற்றுக் கொண்டது கிளியிடம்
கிளிப்பேச்சு விட்டில்களுக்குத் தெரியாது
விட்டில்கள் துள்ளுவது புல்வெளி
புல்வெளி நிறம் கிளிப்பச்சை
பகல் நேரப் பச்சைக்கிளி
இரவுப் பாடலை ஏன் இசைக்கிறது
வேடனின் வலைபோலத் தான் விரிகிறது இவ்விரவு.
சரிதான். அப்புறம். மொழியின் பரிசோதனை முயற்சிகள் யாவும் கணிசமான அளவு கவிதைகளிலேயே செய்து பார்க்கப் படுகின்றன. திரும்பவும் இந்தக் கவிதையை வாசிப்போம்.

A+B=C
A+20=C
A+20=35
A=C-B
A=35-20
A=15
அல்ஜீப்ரா படித்தது நினவுக்கு வருகிறது. இப்போது இந்தக் கவிதையை படித்தால் வேறு தளம் அடைய முடியும். ஆனால் எத்தகைய பரிசோதனை முயற்சிகளில் கவிதை எழுதினாலும், அது மானுடத்தின் மனவெளியில் எழுதப் பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம். இந்தக் கவிதையின் கட்டமைப்பைப் புரிந்து கொண்டு எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் முனை முறியாது என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

மானுடத்தின் மீதும் உயிர்களிடத்தும் இயற்கையின் மீதும் மிகுந்த அக்கறையும் பிரியமும் கொண்டு படைப்பின் வழி தனித்த அடையாளமாக இருக்கிற கவிஞர் தேவேந்திர பூபதிக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்துகளும்.

Series Navigationஅணுயுகப் பிரளய அரங்கேற்றம் !தொடுவானம் 181. பதிவுத் திருமணம்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *