நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வாழும் மக்கள் பரதவர் ஆவர். மீன் பிடித்தலும் உப்பு விற்றலும் அவர்களது தொழில்கள். உள்ளம் ஒருங்கிணைந்த காதலர் பின்னர் கடமை காரணமாகப் பிரிந்த காலத்து ஒருவரை ஒருவர் நினைத்து இரங்குவதே நெய்தல் திணைக்கு உரிய பொருள் ஆகும். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களை எழுதியவர் அம்மூவனார் ஆவர். இவர்தம் இயற்பெயர் மூவன் என்பதாகும்.
தாய்க்குரைத்த பத்து—1
இதில் இருக்கற பத்துப் பாட்டுகளுமே தோழி சொல்றதுதான்; அதாவது தாய்க்குத் தோழி செவிலி; செவிலியோட பொண்ணு தலைவிக்குத் தோழியாவாள். அந்தத் தோழி தன்னோட தலைவி ஒருத்தனை விரும்பி அவனோட களவுல கலந்துட்டா: அதால அவளை அவனுக்கே கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு தலைவியோட அம்மாகிட்ட சொல்றதாகவே இந்தப் பாட்டெல்லாம் இருக்கும்.
”அன்னை வாழி!வேண்[டு] அன்னை! உதுக்காண்-
ஏர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே!
[உதுக்கண்=அங்கே அதோ பாராய்; ஏர்கொடி=அழகிய கொடி; பாசடும்பு=பசுமையாக விளங்கு அடும்பு என்னும் கொடி,[அடம்பங் கொடி, அடப்பங் கொடி என்றும் இது கூறப்படுவதுண்டு, தற்காலத்தில் இதனை குதிரைக் குளம்புக் கொடி என்பர். இதன் இலைகள் குதிரையின் குளம்பு போல இருக்கும்] ஊர்பு இழிவு=ஏறியும் இறங்கியும்; மயக்கி=சிதைத்து; கொண்கன்=நெய்தல் நிலத் தலைவன்[
தோழி சொல்றா,
”அம்மா, நான் சொல்றதைக் கொஞ்சம் மனசுக்குப் புடிச்சதா நெனச்சுக் கேளு; அதோ அங்கே பாரு; அழகா பச்சையா அடும்புக் கொடி இருக்கு; அது நசுங்கி வருத்தப்படற மாதிரி ஒரு தேரு அது மேல ஏறியும் இறங்கியும் வேகமா வருது; அத்தோட நெய்தலும் சிதைஞ்சு போகுது அதுதான் இவளுடைய மனசுக்குப் புடிச்சவனின் தேரு; ஒன் பொண்ணோட நீலமா இருக்கற, மை பூசி இருக்கற கண்ண்களிலே நாம்ப பாக்கற ஏக்கத்துக்கு மருந்து அவன்தான்”
இந்த அடும்புன்றது, “பொம்மல் அடும்பின் நன்மலர் –நற்றிணை-272; “மாக்கொடி அடும்பின் மாஇதழ் அலரி—குறுந்தொகை-243; ஆய்பூ அடும்பின் அலர்கொண்டு உதுக்காண்—கலி-27; அடும்பின் செங்கேழ் மென்கொடி-அகம்-80; என்று பல நூலகளில் சொல்லப்படுதாம்;
கொடிங்க சிதைஞ்சு போறது இத்தனை நாளு அவன் வரலியேன்னு கன்னாபின்னான்னு பேசினவங்க வாய் அடைக்கற மாதிரி அவன் கல்யாணம் பெச வரான்னு காட்டுது
தாய்க்கு உரைத்த பத்து-2
”அன்னை வாழி! வேண்டு அன்னை! நம்மூர்
நீனிறப் பெருங்கடற் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க.
இன்புற இசைக்கும்அவர் தேர்மணிக் குரலே!
போன பாட்டு மாதிரிதான் இதுவும்; தோழி தன் அம்மாகிட்ட சொல்றா,
”அம்மா! நீ நல்லா இருக்கணும்; நான் சொல்றதைக் கொஞ்சம் புடிச்சமாதிரிக் கேளு; நம்ம ஊரில நீல நெறமாக் கடலு இருக்குல்ல; அதுலப் பறக்குறப் பறவையைப் போல ஒம்பொண்ணு எப்பவும் மனசுல துன்பப்பட்டுக்கிட்டே இருக்கா; அந்தத் துன்பம் போயிடவும், நாம எல்லாரும் மகிழ்ச்சியடையவும் அவரு வர்ற அந்தத் தேரோட மணிக்குரலு கேக்குது பாரு”
மீனைக் கொத்தறதுகாக கடல்ல இருக்கற பறவை மேலயும் கீழயும் பறந்து துன்பப்படுது. அதேபோல அவளும் அவன் வருவான்னு சோலைக்குப் போயி தெனம் திரும்பி வந்துகிட்டிருக்கான்;
பறவை எல்லாம் துன்பம் நீங்கிச்சுன்னு சொல்றது இத்தனை நாளு அவன் வராததால தப்பாப் பேசினவங்க அவன் இப்ப வர்றதால வாய் அடைச்சுப் போயிடுவங்கன்னு மறைவா சொல்லப்படுது.
தாய்க்கு உரைத்தபத்து—3
அன்னை வாழி!வேண்டுஅன்னை—புன்னையோடு
ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்கமைந் தன்னால் தானே
தனக்கமைந் தன்றிவள் மாமைக் கவினே
[ஞாழல்=புலிநகக் கொன்றை; மாமைக்கவின்=மாந்தளிரைப் போல அழகு]
தலைவி அவனைப் பாத்தா; அவனும் அவளைப் பாத்தான். ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் ரொம்பவும் விரும்பினாங்க; அதைத் தெரிஞ்சிகிட்ட தோழி செவிலிகிட்ட சொல்லிக் கல்யாணமும் நடந்துச்சி; அவனோட பக்கத்துல அவளும் ரொம்ப மகிழ்ச்சியா ஒக்காந்துகிட்டு இருக்கா; அதைப் பாத்தத் தோழி அவங்க அம்மாகிட்ட சொல்ற பாட்டு இது:
”அம்மாவே! இதைப் பாரு; இவன் யார் தெரியுமா? புன்னையோட ஞாழலும் பூத்துக் குலுங்கற கடற்கரைக்குச் சொந்தக்காரன்; அவன் இப்ப இவளைக் கல்யாணம் செஞ்சுகிட்டு இவளுக்கேன்னு வந்திட்டான்; அதால இத்தனை நாளு வராம இருந்த மாந்தளிர் மாதிரி அழகு இப்ப வந்து சேந்துட்டுது”
புன்னை ஞாழல் ரெண்டையும் காட்டறதால அவனோட அப்பறம் அவளோட ரெண்டு குடும்பமும் ரொம்ப நல்லா இருக்கும்னு தெரியுது.
நெய்தல்—தோழிக்கு உரைத்த பத்து—4
அன்னை வாழி! வேண்டு அன்னை!—நம்மூர்ப்
பலர்மடி பொழுதின் நலமிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கண் செல்வன் அஃதூரே
[பலர் மடி பொழுது=பலரும் உறங்கும் நடுச் சாமப் பொழுது; சாஅய்=தளர்ந்து; நள்லென=நல் என்னும் ஒலியோடே; கொண்கண்=தலைவன்]
இந்தப் பாட்டு நாம இதுவரை பார்க்காத புது சூழலைச் சொல்லுது; அதாவது அவளுக்குக் கொழந்தை பொறந்திருக்குது; அதைப் பாக்க செவிலி அங்க வர்றா: அப்ப தோழி சொல்றா:
”அம்மா! நீ நல்லா இரு; இதைப் பாரு; அன்னிக்கு நம்ம ஊர்ல எல்லாரும் நல்லாத் தூங்கும்போது நடு ராத்திரியில ரொம்பவும் சோர்வா தேர்ல வந்தானே; அப்படிப்பட்ட பணக்கரனோட புள்ளயோட ஊர் இதுதான்”
இந்தப் பாட்டுல நெறைய சேதிகள மறைவாச் சொல்றாங்க; அம்மா! நீ அன்னிக்கு இவன் நம்ம பொண்ணுக்குப் பொருந்துவானான்னு சந்தேகப்பட்டயே! இப்ப பாரு அவன் ஊரு எப்படி இருக்குன்னு; அன்னிக்கு சோர்வா இருந்தாலும் அவன் நம்ம பொண்ணைப்பாக்க வந்தானு சொல்றதால அவனோட அன்பையும் சொல்றா;
அந்தக் காலத்துல மொதப்புள்ள, அதாவது தலைச்சன் புள்ள பொறக்கறது புருஷன்காரன் ஊட்லதான் இருந்திருக்குன்னு தெரியுது. இந்தக் காலத்துக்கேற்ப எடுத்துக்கணும்னா புள்ள பொறந்ததுக்கு அப்பறமா தாயையும், புள்ளையும் கொண்டுபோய் உடறதுக்கு அம்மாபோறா; அப்பதோழி சொல்றான்னும் வச்சுக்கலாம்.
தோழிக்கு உரைத்த பத்து—–5
அன்னை வாழி! வேண்டு அன்னை—முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தெனப்
பொன்னினும் சிறந்தன்று; கண்டிசின் நுதலே
[திரை=அலை; முத்தம்=முத்து]
அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் கட்டறதுக்கு அவளைப் பெத்தவங்க சம்மத்திச்சுட்டாங்க; கல்யாணத்துக்குக் காசு வேண்ம்ல; அவங்களும் பணம் கேக்கறாங்க; அதைச் சம்பாதிக்கறதுக்கு அவன் போயிட்டான். அதால அவ அவனைப் பிரிஞ்சு கெடக்கறா. அவ நெத்தி எல்லாம் பசலை பூத்துடுச்சு; கொஞ்ச நாலு போச்சு; அவன் பணத்தோட வந்து கௌவரமா நிக்கறான். எல்லாரும் ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்காங்க; அவளோட நெத்தியில இருந்த பசலை எல்லாம் போயி இப்ப பொன்னை விட அழகா இருக்கு. அதைப் பாத்த தோழி செவிலிகிட்டசொல்றா.
“அம்மா! நீ நல்லா இரு! இதைக் கொஞ்சம் பாரு; எப்பவும் அலைகள் அடிக்கறதா சத்தம் போட்டுக் கிட்டே இருக்குள்ள கடலு; அந்த அலைகள்ளாம் முத்துகளைக் கொண்டாந்து கடற்கரையில வெள்ளை மணல்ல போடுதுங்க; ஆனா அதுங்கள எடுக்கறவங்க யாரும் இல்ல; அப்படிப்பட்ட கடற்கரைக்குச் சொந்தக் காரன் இப்ப வந்துட்டான்; அவன் வந்த ஒடனேயே இவளொட நெத்தி பளிச்சினு பொன்னை விட அழகா மாறிட்டுதே”
அவன் இப்ப வந்ததாலயே அவ நெத்தி அழகா மாறிடுச்சின்னா அவங்க பிரியாம இருந்தா அவ இன்னும் எவ்வளவு அழகா இருப்பான்றதை அவ மறைச்சு சொல்றா;
அலையெல்லாம் தாமே கொண்டுவந்து முத்துகளைப் போடறதுன்னு சொல்றது அவன் ரொம்ப முயற்சி இல்லாம பொருள் கொண்டுவந்துட்டான்னு சொல்லுது.
தாய்க்கு உரைத்தபத்து—6
அன்னை வாழி! வேண்டு அன்னை!—அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தண்டகல் வளையினும் இலங்குமிவள்
அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே!
[துதி=தோல் உறை; துதிக்கால்=தோல் அடி; செத்து=துணை போலும் எனக் கருதி; வளை=வெண்சங்கு; ஆகம்=உடல்;
அவனும் அவளும் யாருக்கும் தெரியாம சந்திச்சுப் பேசி வர்றாங்க; இது தோழிக்குத் தெரியும்; அதால அவங்க ரெண்டு பேருக்கும் எப்படியாவது கல்யாணம் செய்யணும்னு தோழி நெனக்கறா. செவிலிகிட்ட கொஞ்சம் அழுத்தமாவே சொல்றா.
“அம்மா! நீ நல்லா இருக்கணும்; இதையும் கொஞ்சம் கேளு; அவன் நாட்ல பெரிசு பெரிசா வெள்ளையான சங்கு கெடக்கும். அதைப் பாத்துட்டு வெள்ளையான அன்னம் அதைத் தன்னோட துணைன்னு நெனச்சுக்கும். அதால அந்தச் சங்கு மேல ஏறித் தன்னோட தோலான காலடியால மிதிக்கும். அதாவது அதோட சேர்றதுக்கு முயலுமாம். நீயே பாக்கற; இவளோட ஒடம்பு அழகு கடல் சங்கை விட வெள்ளையா இருக்கு அதால நீயே நெனச்சுப் பாத்க்து செய்ய வேண்டியதைச் செய்யணும்”
அன்னம் சங்கை மிதிக்கறதை ஏன் சொல்றான்னு பாத்தா, அவன் இவகிட்ட ரொம்ப அன்பு காட்டறவன்தான்; ஆனா அவனும் வேற செயல்ல ஏதாவது செஞ்சு வைச்சுடப்போறன்னு சொல்றதுக்காகத்தான்;
அதேபோல வெள்ளையான சங்கைப் பாத்து அதோட துணைன்னு அன்னம் மயங்கினாப் போல நீங்கள்ளாம் இவ ஒடம்போட நெறத்தை வச்சு இதுக்கு வேற ஏதோ காரணம்னு நெனச்சு ஏதாவது செஞ்சு வச்சிடாதீங்கன்னு சொல்றதுக்காகத்தான்;
தாய்க்கு உரைத்த பத்து—-7
அன்னை வாழி! வேண்டு அன்னை!—என் தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப், படர்மெலி
தண்கடல் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல், நோகோ யானே!
[சாஅய்=வருந்தித் தளர்ந்து; படர்=காமநோய்; படுதிரை=மோதி ஒலிக்கும் அலை]
அவனும் அவளும் நெறைய நாள் சந்திச்சது தோழிக்குத் தெரியும்; அதால அந்தத்தோழி செவிலிகிட்ட சொல்றா.
“அம்மா! நீ ரொம்ப நல்லா இரு; இதைக் கொஞ்சம் கேளு; அவ எப்படி இருக்கான்னு பாரு; அழகா இருந்த நெத்தி எல்லாம் பசலை பூத்துக் கெடக்கு; ஒடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு; எவ்ளோ மெலிசாப் போயிட்டா பாரு; ராத்திரியில கடல்ல அலையெல்லாம் வந்து கடலோட கரையில மோதும் இல்ல; அப்ப வர்ற சத்தம் இருக்க; அதைக் கேக்கும் போதெல்லாம் அவ தூங்கவே மாட்டேங்கறா. அதால நானும் மனம் வருத்தமா இருக்கேன்”
இதேமாதிரி மெலிஞ்சு போயி தூக்கம் வராம இருந்தா அவ ரொம்ப நாள் உயிர் வாழ மாட்டா; அதால அவள அவனுக்குச் சீக்கிரமா கல்யாணம் செஞ்சு வைங்கன்னு தோழி மறைவா சொல்றா
==============================================================================
தாய்க்குரைத்த பத்து—8
அன்னை வாழி! வேண்டு அன்னை—கழிய
முண்டகம் மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்நோள் துறந்தனள் ஆயின்
எவன்கொல் மற்றவன் நயந்த தோளே
[முண்டகம்=நீர்முள்ளி]
அவனும் அவளும் சந்திச்சுப் பேசினாங்க; மனம் ஒண்ணா ஆயிட்டுது; தோழிக்குத் தெரிஞ்சுது; ஒடனே தோழி செவிலிகிட்ட சொன்னா; சரி அவனுக்கே அவளைக் கல்யாணம் செஞ்சு கொடுக்கலாம்னு முடிவும் செஞ்சுட்டாங்க; ஆனா அவன்தான் இப்ப ரொம்ப நாளு கடத்தறான்; இப்ப தோழிக்கு சந்தேகம் வருது; ஒருவேளை அவன் வேற ஏதாவது பொண்ணக் கல்யாணம் செஞ்சுக்கப் போறானோன்னு அவ நெனக்கறா; அதால குறிப்பா செவிலிகிட்ட சொல்றா;
”அம்மா! இதைக் கொஞ்சம் கேளு; கழின்ற உப்பளத்துல கூட நீர் முள்ளின்ற பூ நெறய பூத்து வாசனையா இருக்கற குளிர்ச்சியான கடற்கரையில இருக்கறவன் அவன்; எங்களோட தோளே வேண்டாம்னு இப்ப போயிட்டான்னா அவன் மனசில நெனச்சுகிட்டு இருக்கற மத்த பொண்ணுங்களோட தோளெல்லாம் என்ன ஆகுமோ?”
வாசனையே இல்லாத கழின்ற எடத்துல கூட முள்ளிப் பூ மலர்ந்து கெடக்கும்னு சொல்லறது அவன் காலம் கடத்தற மாதிரி தெரிஞ்சாலும் அவன் நல்லவன் அன்பு உள்ளவன்தான்னு மறைமுகமா சொல்றா
தாய்க்கு உரைத்த பத்து–9
அன்னை வாழி!வேண்டு அன்னை!—நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எம்தோள் துறந்த காலை எவன்கொல்
பன்னாள் வருமவன் அளித்த பொழுதே
[நீர்ப்படர்=நீரிலே படரும்; தூம்பு=உள்ளே துளையுடைய தன்மை]
அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு; ஆனா அவன் இன்னும் சீக்கிரம் வரல; பல நாளு போயிடுச்சு; செவிலிக்குக் கவலை அதிகமாப் போயிடுச்சு; அவ தோழிகிட்ட, “அவன் ஒங்கள வெலக்கிட்டானா? என்னாதாண்டி சொல்லிட்டுப் போனான்”னு கேக்கறா. அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”அம்மா! இதைக் கேளு! தண்ணியில நெய்தல் படர்ந்துகிட்டு இருக்கும்; அதோட கொடி உள்ள தொளை எல்லாம் இருக்கும்; அந்தக் கொடியில பூவெல்லாம் நெறைய பூத்திருக்கும். அப்படிப்பட்ட எடத்துல இருக்கறவன் அவன்; அவன் அன்னிக்கு எங்களை உட்டுட்டுப் பிரிஞ்சபோது இவ தோளைத் தழுவிட்டுதான் போனான்; அப்படி அவன் தழுவிட்டுப் போனதே இன்னும் எங்க நெனவில பல நாளா இருக்கே இது எதனால தெரியுமா?”
அவன் நாள் பல கடத்தினாலும் அவன் நெனவு இன்னும் இருக்கறதால அவன் கண்டிப்பா வந்து கல்யாணம் செஞ்சுப்பான்னு மறைவா சொல்லிக் காட்டறா;
நெய்தல் கொடி தண்ணி உள்ளயே கெடக்கும்; ஆனா அதோட பூ எல்லாரும் பாக்கற மாதிரி வாசனை கொடுக்கும்; அதேபோல அவன் வராம இருந்தாலும் கல்யாணம் செஞ்சுக்க கண்டிப்பா வருவான்னு சொல்றா;
தண்ணி உள்ள இருக்கறவரைதான் நெய்தல் செழிப்பா வளரும்; அதே. போல அவன் கூட இருந்தாதான் இவ நல்லா மகிழ்ச்சியோட இருப்பா. அது அவனுக்கும் தெரியும்; அதால அவ்னும் சீக்கிரம் வந்திடுவான்னும் சொல்றா.
தாய்க்கு உரைத்த பத்து—10
அன்னை வாழி! வேண்டு அன்னை!—புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே—இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ? வாழியே பாலே!
[என்னை=என்+ஐ; என்தலைவன்; பால்=ஊழ்; ஆங்குமோ=செய்யுமோ]
அவனைப் பாத்து, அவனோடயே பழகிப் பேசி, கனவுல கூட அவனையே நெனச்சுக்கிட்டிருக்கா அவ; அவனோட எப்ப கல்யாணம் ஆகும்னு நெனச்சுக்கிட்டு இருக்கா; ஆனா இப்ப அவளக் கட்டிக் குடுக்குமாறு வேற சிலபேரு கேட்டு வராங்க; அப்ப தோழி சொல்ற பாட்டு இத்கு.
”அம்மா! இதைக் கேளு; புன்னைப் பூவெல்லாம் பொன்னைப் போல பூத்துக் கெடக்கு; அந்த எடத்துல இருக்கற தலைவனையே நாங்க எங்க தலைவன்னு சொன்னோம்; ஆனால் இந்த ஊர்ல உள்ளவங்க வேற ஒருத்தரைக் காட்டி சொன்னா அது விதியால மாறுமா? ஆகாது;”
===========================================================================
- தொடுவானம் 182. தலையில் விழுந்த இடி.
- கவிதைகள்
- கம்பனின்[ல்] மயில்கள் -1
- சூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறது
- நபிகள் நாயகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 20—08—2017 ஞாயிறு மாலை 5.30 மணி
- நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்து
- ஏனென்று கேள் !
- வெறி
- திருடன்