சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

கே. ஜோதி
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு..கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் கூட நெசவில் ஈடுபட்டிருந்தனர். அது நசிந்து விட்டது. அந்த நெசவாள சமூகம் பற்றிய ஒரு நாவலை திருப்பூரை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன். நெசவாள சமூகம் பற்றிய இன்னொரு நாவலை முன்பே எழுதியிருக்கிறார். ” தறிநாடா “ என்ற பெயரில். எழுதியிருக்கிறார். அதுவும் திருப்பூரை மையமாகக் கொண்டதே. இந்த நாவலில் திருமணமாகாத ஒரு முதிர்கன்னிப் பெண் தன் குடும்பத்திற்காக தானே நெய்து பிழைக்கிறாள். அப்பா குடிகாரன். சிறுவயது சின்னம்மிணி அவளுக்குத் தோழி. பகிர்ந்து கொள்ள சிறு ஜீவன். அவள் வேதகாரனான, கிறிஸ்துவனான ஜெயராஜிடம் நட்பு கொண்டிருக்கிறாள். ஆனால் கல்யாணம் என்று வரும் போது மதமாற்றம் அவசியமாகிறது . அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள்.அவளின் திருமணத்திற்காய் தானே பட்டு சேலை நெய்கிறாள். குடிகார அப்பா அதை விற்று விடுகிறார். அதைத் தேடி ஜவுளி வியாபாரிகளிடம் செல்கிறாள். கிடைக்கவில்லை. அவள் நெய்த சேலையின் ஒரு பாகத்தை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். சப்பரம் கடவுள் சிலைகளை கொண்டு செல்லும் வாகனம். இப்போது அவளின் பிணத்தை கொண்டு செல்வதையும் சப்பரம் என்றே சொல்கிறார் சுப்ரபாரதிமணியன். நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால் அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவல நிலை என்பதை நாவல் சொல்கிறது. பட்டு சேலை, நூல் சேலைக்கும் இடையிலான சில குழப்பங்கள் இதில் உள்ளன. நெசவுத் தொழில் பற்றிய பிரத்யேக வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நாவலின் வெகு எளிமையான கதை சொல்லும் முறை வசீகரமாயிருக்கிறது.. சில வர்ணனைகள் மனதை வெகுவாக்க் கவர்கின்றன. பாவு -மயில் தோகை போல் விரிந்து கிடந்த்து.கருவேலா மரத்து பிசின் பெண்ணின் கழுத்து நகை போல் மின்னியது.பூசப்படாத கல் சுவற்றில் நீட்டிக் கொண்டிருந்த கற்கள் இளம் வயது ஆணின் முகப்பரு போல இருந்தது. மீனின் செதில் போல் வீட்டின் ஓடுகள் இருந்தன,வீட்டு கேட் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்கும் இளைஞனைப்போல் நிற்கிறது. இது போல் பலதைச் சொல்லலாம். ஒரு திரைப்பட்த்திற்காக நாவலாக எழுதப்பட்டு பின் அது வேறொரு படமாக வெளிவந்த திருட்டு அனுபவத்தை முன்னுரையில் வேதனையுடன் சொல்கிறார். நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.சவுண்டியம்மன் கோவில் விசேசங்கள், .அண்ணன்மார்சுவாமிகதை, நாட்டுப்புற வழக்குகள் மனதைக் கவர்கின்றன. நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோவில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “ சப்பரம் “ மனதில் பாரமாய் கிடக்கிறது.

Series Navigationதொடுவானம் 183. இடி மேல் இடிசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு
author

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *