தரங்கம்பாடி சென்றபோது அங்கு அண்ணி ஆவலுடன் காத்திருந்தார். புதுப்பெண்ணை கட்டி அணைத்து வரவேற்றார். அன்று இரவு தடபுடலாக மீன், இறால் நிறைந்த இரவு உணவு தயார் செய்து வைத்திருந்தார். அன்று இரவே திருமணம் பற்றி பேசினோம். பெண் தரங்கம்பாடியிலேயே இருப்பது என்று முடிவு செய்தோம் . திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தபின்பு திருமணத்தின் முதல் நாள் இரவு பெண்ணை வீட்டுக்கு அழைப்பது என்றும் முடிவு செய்தொம். இடையில் நான் கோயம்புத்தூர் சென்று வேலை பற்றி அறிந்து வரலாம்.
அடுத்த நாள் திருமண நாள் குறித்தோம். திருமண அழைப்பிதழ் தயாரித்தோம். திருமணம் தெம்மூர் அற்புதநாதர் ஆலயத்தில் நடைபெறுவதால் குமராட்சியிலிருந்த சபைக்குருவைச் சந்தித்து அவரின் சம்மதம் பெறவேண்டும். திருமண வைபவம் ஆலயத்தில் நடந்தேறியவுடன் வீட்டில் உடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதில் வாழ்த்துரை வழங்க அண்ணனுக்குத் தெரிந்த சிலரிடம் தெரிவித்தாக வேண்டும். ஆகவே நான் உடன் கோயம்புத்தூர் சென்று விடுப்பை இன்னும் சில நாட்கள் எடுத்துக்கொண்டு உடன் திரும்ப வேண்டும். முதலில் திருமணத்தை முடித்துவிடவேண்டும். காரணம் பெண்ணை நான் என்னுடன் கூட்டிவந்துள்ளேன்!
கோயம்புத்தூர் செல்வதற்கு பதிலாக தொலைபேசி வழியாக பேசலாமே என்று அண்ணன் சொன்னார். அது சுலபம் என்று தோன்றியது. அப்போதெல்லாம் கைபேசி வசதி இல்லை. தரங்கம்பாடி அஞ்சல் நிலையம் சென்று ” ட்ரங்க் கால் ” போட்டு டாக்டர் பிச்சை ராபர்ட்டிடம் பேசினேன். அவர் குறித்த நாளில் திரும்பவில்லை என்று கோபத்துடன் பேசினார். அதோடு அந்த வேலைக்கு ஆள் தேவையில்லை என்றும் கூறிவிட்டார். பின்னால் வேறு மருத்துவமனைக்கு தேவைப்பட்டால் தெரிவிப்பதாகவும் கூறினார். அவர்தான் மருத்துவக் கழகத்தின் தலைவரும், திருச்சபையின் செயலருமாவார். அவரை மீறிக்கொண்டு வேறு யாரும் ஏதும் செய்யமுடியாது. திருச்சபையின் அத்தனை அதிகாரமும் அவரிடம்தான் இருந்தது. அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியது.திருமணம் செய்யும் வேளையில் வேலை இல்லாமல் போனதே என்று கவலையடைந்தேன் கைச்செலவுக்குக்கூட பணம் இல்லாமல் போய்விடுமே. சோகத்துடன் எதிரே ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலை நோக்கி நடந்தேன். கடற்கரை மணலில் அமர்ந்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன்.
காலதாமதமாக சிங்கப்பூர் சென்றதால் அங்கு வேலை போனது. காலதாமதாமாக இங்கு திரும்பியதால் இங்கும் வேலை போய்விட்டது! இரண்டுக்கும் காரணம் காலதாமதம்! இனிமேல் எதிலும் இப்படி காலதாமதம் செய்யக்கூடாது!
என்னிடம் எம்.பி.பி.எஸ். பட்டம் உள்ளது. சொந்தத்தில் ஒரு கிளினிக் தொடங்கலாம். ஆனால் அதற்கு நிறைய பணம் தேவை. எனக்கு கிராமப் புறத்திலேயே ஒரு கிளினிக் வைத்து ஏழை எளிய மக்களுக்கு சேவை புரியவேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதில் அதிக வருமானம் கிடைக்காது. இருந்தாலும் முயன்று பார்க்கலாம். அதற்கு இடம் கூட பார்த்திருந்தேன். தெம்மூர் கிராமத்திலிருந்து சிதம்பரம் செல்ல பேருந்து ஏறும் இடம் தாவரத்தாம்பட்டு. அங்கு ஒரு இடிந்துபோன கட்டிடம் உள்ளது. அது பார்ப்பதற்கு ஒரு சத்திரம்போல் தோன்றும்.அது யாருக்குச் சொந்தமான கட்டிடம் என்பது தெரியவில்லை. அநேகமாக பஞ்சாயத்துக்குச் சொந்தமாக இருக்கலாம். அந்த இடத்தை வாங்கி ஒரு கட்டிடம் எழுப்பி கிளினிக் வைக்கலாம். சுற்றுவட்டார கிராமத்து மக்கள் குமராட்சி அல்லது சிதம்பரம் செல்ல பேருந்துக்காக அங்குதான் காத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கும் அங்கு நின்றுதான் பேருந்து எற வேண்டும். அங்கு மட்டும் ஒரு கிளினிக் இருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும். இதை நிறைவேற்ற நிறைய பணம் தேவை. அதோடு தவர்த்தாம்பட்டு கிராம மக்களின் ஒத்துழைப்பும் தேவை. இது மனதில் உள்ள ஒரு திட்டம். பின்னாளில் பொருளாதார வசதி இருந்தால் இதை நிறைவேற்றலாம்.
ஆனால் தற்போது உடனடியாக எனக்கு வேலை வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தபோது வேலூர் ஞாபகம் வந்தது.முதலில் திருமணத்தையும் அதன் தொடர்புடைய விருந்து உபசரணைகளையும் முடித்துக்கொள்ளவேண்டும். பின்பு வேலூருக்கு வேலை தேடி செல்லவேண்டும். இந்த முடிவுடன் வீடு திரும்பினேன். என்னுடைய முடிவை அண்ணன் அண்ணியிடம் தெரிவித்தேன். அவர்கள் அதுவே நல்லது என்றனர்.
நாங்கள் திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினோம். அழைப்பிதழை அண்ணன் எழுதி பொறையாரிலிருந்த அச்சகத்தில் தந்தார். அது அச்சாகி இரண்டு நாட்களில் வந்தது . மஞ்சள் .நிறத் தாளில் எழுத்துகள் அனைத்தும் தங்க நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன. அதன் பின்பக்கத்தில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியல் இருந்தது. அதில் குறிப்பிடத்தக்கவர் எல். இளையபெருமாள்.எம்.பி. அவர்கள். அவர்தான் காட்டுமன்னார்கோவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். இந்திய சுதந்திரத்துக்குப்பின்பு நடந்த தேர்தல்களிலெல்லாம் அவர்தான் அந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவருகிறார். இதனால் இவரை இளையபெருமாள் என்று பெயர் சொல்லி அழைக்காமல் எம். பி. என்றே எங்கள் பகுதியில் அழைத்தனர். பழுத்த காங்கிரஸ்வாதி . பிரதமர் இந்திரா காந்தியின் அபிமானத்துக்கு உரியவர். தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவும் திகழ்ந்தார். இந்தியாவின் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பரிந்துரை செய்ய இளையபெருமாள் கமிஷன் என்பதை பிரதமர் காந்தி அமைத்து அவருக்கு சிறப்பு செய்துள்ளார். எங்கள் திருமணத்துக்கு எல்.இளையபெருமாள் அவர்களின் வருகை சிறப்பு தரும்.
அண்ணனின் இன்னொரு நண்பர் அதிஷ்டம் பிச்சைபிள்ளை. இவர் மயிலாடுதுறையில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர். தமிழ்ப் பற்றும் இனப்பற்றும் மிக்கவர். நன்றாக சொற்பொழிவு ஆற்றும் திறமை கொண்டவர். பின்னாட்களில் இவர் திருச்சபையின் செயலராகவும் திறம்பட செயலாற்றியவர். இவரையும் வாழ்த்துரை வழங்க அண்ணன் அழைத்திருந்தார்.
மறைத்திரு ஏ.ஜே. தேவராஜ் இன்னொரு சொற்பொழிவாளர்.இவர் லுத்தரன் திருச்சபையின் சபைகுரு. .திருச்சபையில் பலவிதமான சீர்திருத்தங்கள் தேவை என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.இவரும் அண்ணனின் நெருங்கிய தோழர்தான்.
இத்தகைய சொற்பொழிவாளர்கள் எங்களை வாழ்த்த வருவார்கள். நிச்சயமாக அந்த வரவேற்பு நிகழ்ச்சி ஓர் அரசியல், இலக்கிய நிகழ்வாகவே மாறும். அந்த நேரத்துக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன்.
அந்த சனிக்கிழமை மாலையில் நான் மட்டும் தெம்மூர் சென்றேன். அன்று மாலை உபதேசியார் இஸ்ரவேலைச் சந்தித்து என்னுடைய திருமணம் பற்றி சொன்னேன். அவர் மறுநாள் ஞாயிறு ஆராதனையில் முதல் ஓலை கூறுவதாகச் சொன்னார். நான் பெண்ணின் பெயர் ஜெயராணி தேவகிருபை என்று ஒரு தாளில் எழுதித் தந்தேன்.
ஓலை கூறுதல் என்பது கிறிஸ்துவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கும் ஒரு வழிமுறை. திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் அதை ஆலய சபைகுருவிடம் தெரிவிக்கவேண்டும் . மணமக்களின் பெயர்களை அவரிடம் தந்துவிட்டு திருமணநாளையும் சொல்லவேண்டும். அவர் ஞாயிறு ஆராதனையின்போது அதை சபை மக்களுக்கு அறிவிப்பார். அந்த திருமணத்துக்கு யாராவது தடை சொல்ல விரும்பினால் தெரிவிக்கலாம் என்பார். இதை முதல் ஓலை என்போம். இது போன்று மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் ஓலை வாசிக்கவேண்டும். சபைமக்களில் யாராவது தடை சொன்னால் அந்த திருமணம் தடைபடும். இல்லையேல் குறித்த நாளில் திருமணம் ஆலயத்தில் நடந்து பதிவு செய்யப்படும்..
அந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கான முதல் ஓலை வாசிக்கப்பட்டது. அன்று மதியம் உறவினருக்கு விருந்து வைத்தோம். அதில் எசேக்கியேல் பெரியப்பா, மோசஸ் சித்தப்பா , சாமிப்பிள்ளை தாத்தா, செல்லக்கண்ணு மாமா, சாமிதுரை மாமா ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
திருமணத்துக்கு அணிந்துகொள்ள ” சூட் ” நான் மலாயாவிலிருந்தே கொண்டு வந்திருந்தேன். சிங்கப்பூரில் சார்லஸ் தந்த நீல நிற ” டை ” யை அணிந்துகொள்வேன்.பெண்ணுக்கு கல்யாணப் புடவை வாங்க அண்ணியும் அவளும் கும்பகோணம் சென்று வந்தனர். அங்கு பட்டுச் சேலைக் கடைகள் அதிகம்.
வீட்டு வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டது. சமையல்காரர்கள் முதல் நாளே வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தோட்டத்தில் வெப்ப மர நிழலில் சமையல் செய்ய இடம் ஒதுக்கப்பட்டது. வாழை இலைகள் குமராட்சியில் கிடைக்கும்.
மாலைகள், பூக்கள், பழங்கள், வெற்றிலைப் பாக்கு, பன்னீர் போன்றவற்றை பெண்ணை அழைத்து வரும் வேளையில் சிதம்பரத்தில் வாங்கலாம்.
அப்பாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் விரும்பிய அவருடைய சின்ன மாமன் மகளை நான் மணந்துகொள்ள சம்மதித்துவிட்டேன்! பெரியப்பாவும் மோசஸ் சித்தப்பாவும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர்.அவர்கள் இருவருக்கும் என்னை மிகவும் பிடிக்கும் – நான் சிறு வயதிலிருந்தே நன்றாகப் படிக்கிறேன் என்பதால். நான் சிங்கப்பூரில் கல்வி கற்றபோது அவர்கள் இருவரும் மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இருந்தவர்கள். நான் ஆரம்பத்திலிருந்தே வகுப்பில் முதல் மாணவன் என்பதை இருவரும் நேரில் பார்த்தவர்கள்.
இன்னும் இரண்டு வாரத்தில் எங்களுக்குத் திருமணம்! ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன. திருமண அழைப்பிதழை சுற்று வட்டார கிராமங்களில் இருந்த அனைத்து உறவினர்களுக்கும் நேரில் தருவதற்கு பலர் கால்நடையாகவும், சைக்கிளிலும் , பேருந்திலும் புறப்பட்டனர்.
நான் சில நாட்கள் தெம்மூரில் இருந்துவிட்டு எல்லா ஏற்பாடுகளையும் சரிபார்த்துவிட்டு பெண்ணை அழைத்துவர தரங்கம்பாடி புறப்பட்டேன். பேருந்தில் பிரயாணம் செய்தபோது மனதில் இனம் தெரியாத மகிழ்ச்சி குடிகொண்டது.
( தொடுவானம் தொடரும் )
- சொற்கள் புகழோடு தோன்றுகின்றன
- மாய உலகம்
- காலைப் புகை!
- ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017
- ஓவியா
- ‘மோகத்தைத் தாண்டி’
- புவியீர்ப்பு விசை
- வேறொரு வனிதை
- உலகத்தமிழ் குறுநாவல் போட்டி
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள்
- தொடுவானம் 188. திருமண ஓலை
- புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!
- பூதவலு ஹர்ரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா ?