[ புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் 5—ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆற்றிய பேருரை ]
அன்பார்ந்த நண்பர்களே!
அனைவர்க்கும் வணக்கம். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் தொடர்பான ஓர் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் தலைவர், செயலாளர், உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிலும் திருக்குறளின் பெயரால் அமைந்த ஓர் இலக்கிய அமைப்பில் நான் பேசிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. அடிப்படையில் நான் வளவனூர் திருக்குறட் கழகத்தில் வளர்ந்தவன். நாங்கள் திருக்குறளின் பெயரை வைத்து அங்கே இயங்கிக் கொண்டிருந்தாலும் பல்வேறு இலக்கியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தோம். ஆனால் இந்தத் திருக்குறள் இயக்கம் திருக்குறள் தொடர் சொற்பொழிவை மட்டுமே அதுவும் மாதம் தோறும் நிகழ்த்தி வருவது பாராட்டுக்குரியது ஆகும். இலக்கிய நிகழ்ச்சிகளை பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்குவது என்பதோர் அக்னிப்பரிட்சை ஆகும்.
இந்த அரங்கில் இந்த மதிய வேளையில் இவ்வளவு கூட்டம் வந்திருப்பது இந்த இயக்கம் தொடர்ந்து இயங்குவதற்குக் கிடைத்த வெற்றியாகும். ஒவ்வொரு மாதமும் பிற்பகல் 3 மணிக்கே தொடங்கி நடத்துகிறார்கள் என்பது தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாததாகும். இந்த இயக்கத்திற்கு இன்னுமொரு சிறப்பு ஓர் ஆண்டிற்கான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அமைத்து அதை அச்சடித்தும் கொடுத்து விடுவதுதான்.
நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் வளவனூர் திருக்குறட் கழகத்தில் வளர்ந்தவன் நான். பாவிசைத்தென்றல் அர. இராசாராமன் என்பவர் அதை நிறுவி ஏறக்குறைய 500 நிகழ்ச்சிகள் எல்லாரின் ஒத்துழைப்புடன் நடத்தினார். அதைத் தொடக்கத்தில் அமைத்தது இப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். வளவனூர் குமாரக்குப்பத்தில் இருக்கும் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில் அப்பொழுதெல்லாம் அப்பர் திருநட்சத்திரவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அந்த விழாவை ஒட்டிச் சொற்பொழிவுகள் நடைபெறும். அவற்றில் குன்றக்குடி அடிகளார், கி.வா. ஜகந்நாதன் போன்ற சொற்பொழிவாளர்கள் வருகை தந்து உரையாற்றுவர்.
ஒருமுறை அந்த விழாவில் மதுராந்தகம் திருக்குறள் பீடம் அழகரடிகள் அவர்கள் வந்து உரையாற்றினார். நிகழ்ச்சி முடிந்து அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் தமிழ்நாடெங்கும் ஓர் அதிகாரத்துக்கு ஒரு நிலையம் வீதம் 133 கிளை நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். வளவனூரிலும் ஒன்று அமைக்க அனுமதி கேட்டபோது அவர் கிளை நிலையங்கள் எல்லாம் பாடல் பெற்ற தலங்களில்தான் அமைக்க வேண்டும் என்ற விதி வைத்திருப்பதாகவும் அத்தலங்களையும் முன்பே திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் மேலும் நாங்கள் கேட்க அவர், “உங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் விழுப்புரத்திற்கருகில் திருவாமாத்தூர் எனும் பாடல் பெற்ற தலம் உள்ளது. அங்கு திருக்குறளின் 39-ஆம் அதிகாரமான இறைமாட்சிக்கு ஒரு நிலையம் அமைக்க வேண்டும். அங்கு யாரும் அமைக்க முன் வரவில்லை. நீங்கள் வேண்டுமானால் அதை உங்கள் ஊரில் அமைத்து நடத்துங்கள்; அங்கு பிற்காலத்தில் யாரேனும் தொடங்கினால் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். அதன்படிதான் திருக்குறள் கிளை நிலையம் என்று 1967-இல் தொடங்கிப் பின் அது வளவனூர் திருக்குறட் கழகம் என்று பெயர் மாறியது.
நான் கடலூர் வந்த பிறகு இலக்கியப்பேரவை என்ற அமைப்பு நண்பர்களின் உதவியோடு தொடங்கப்பட்டது. பிறகு அது இலக்கியச்சோலை என்ற பெயரில் தற்போது சுமார் 150 நிகழ்ச்சிகளுக்கு மேல் தொடர்ந்து நடத்திவருகிறது.
என்னை இங்கு பேசவேண்டும் என்று அழைத்தபோது பொதுவாகத் திருக்குறள் பற்றி உரையாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். எனவே திருவள்ளுவர் பற்றிச் சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து விட்டதால் நாம் அவரின் பிறப்பு, வாழ்ந்த ஊர், எழுதிய பிற நூல்கள் முதலியவற்றில் சரியான பதிவுகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் செவிக் கதைகள் வள்ளுவர் பற்றி நிறைய உண்டு.
நண்பர்களே! ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றால் அங்கிருந்து ஏதேனும் ஒரு புதிய செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். திருவள்ளுவர் பற்றி எனக்கு அண்மையில் கிடைத்த சில செய்திகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்குச் சங்க காலப் புலவர் கபிலர் என்பவரைப் பற்றித் தெரியும் என எண்ணுகிறேன். அவரின் பாடல்களைப் பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. அவர் ‘கபிலர் அகவல்’ எனும் நூல் ஒன்றை இயற்றி உள்ளார். இந்த நூல் 19-ஆம் நூற்றாண்டில் பதிப்பு கண்டுள்ளது. இதை திருத்தணிகை வீர சைவப்புலவர் சரவணப் பெருமாள் மற்றும் விசாகப் பெருமாள் என்பவரும் இணைந்து பதிப்பித்துள்ளனர்.
அந்த நூலில் கபிலர் ‘திருவள்ளுவரின் இளவல்’ என்று அறியப்படுகிறார். இதை அவரே எழுதி உள்ளார். கபிலர் தம் பெற்றோரின் பெயரை ‘ஆதி மற்றும் பகவன் என்று கூறுகிறார். தான் பிறந்ததை அவர் இப்படி எழுதுகிறார்.
”அருந்தவ மாமுனி யாம்பக வற்கு
இருந்தவா ரிணைமுலை யேந்திழை மடவரல்
ஆதி வயிற்றினில் அன்றவ தரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே”
கபிலரின் தந்தை பகவனுக்கு ‘யாளி’ என்ற ஒரு பெயரும் உண்டு. அவர் முழுப்பெயர் யாளிதந்த முனிவர் என்பதாகும். யாளிதந்த முனிவர் ஆசிரமம் அமைத்து யாகங்கள் செய்து வருகிறார். அவரது ஆசிரமத்தில் ஆதி எனும் பெயர் கொண்ட ஒரு பணிப்பென் முனிவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வருகிறாள். அவள் புலையர் இனத்தைச் சார்ந்தவள். மிகுந்த அறியாமை குணம் கொண்டவள். ஒரு கட்டத்தில் அவள் ஏதோ பெரும்பிழை செய்ய முனிவர் அவளைக் கிணற்றில் தள்ளி விடுகிறார். அவளைக் கிணற்றிலிருந்து ஒரு பார்ப்பனர் எடுத்து வடநாட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் வளர்த்து வருகிறார். அந்தப் பார்ப்பனர் ஆதியைத் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்து யாளிமுனிவருக்கே மனைவியாக்குகிறார். யாளி எனப்படும் பகவனுக்கும் ஆதிக்கும் இவ்வுலகில் ஆண் பிள்ளைகள் மூன்றும் பெண் பிள்ளைகள் நான்குமாக ஏழு குழந்தைகள் பிறக்கின்றன. இச்செய்தி கபிலரின் பாடலிலிருந்தே அறியப்படுகிறது.
”யாளி கூவற் றூண்டும் ஆதப் புலைச்சி
காதற் காசினி யாகி மேதினி
இன்னிசை எழுவர்ப் பயந்தோள் ஈண்டே”
ஆதம் எனும் சொல்லுக்கு அறியாமை எனும் பொருள் சொல்லப்படுகிறது. ஆதி என்பதுகூட காரணப்பெயராக இருக்கலாம். இதற்குப் பிறகு இக்கதை வளர்ந்து கொண்டு போகிறது. இந்தப் பகவன் என்பவன் பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவன். ஓரிடத்தில் நிலையாகத் தங்காதவன். பல ஊர்களுக்குச் செல்லும் விருப்பம் உடையவன். அப்படி யாத்திரை செல்லும்போது அவன் தன் மனைவி ஆதியையும் அழைத்துக் கொண்டு செல்கிறான்.
அவர்கள் இருவரும் ’ஊற்றுக்காடு’ என்னும் ஊருக்கு வருகின்றனர். அங்கே அவர்களுக்கு ஒரு பெண் மகவு பிறக்கிறது. அவ்வூரில் இருந்த துணி வெளுக்கும் வண்ணார் இனத்தைச் சேர்ந்த ஒருத்தி தனக்குப் பிள்ளைப் பேறில்லை; அப்பெண் குழந்தையை எனக்குத் தாருங்கள் என்று வேண்டுகிறாள். அக்குழந்தைக்கு ’உப்பை’ என்று பெயரிட்டு அவளுக்குத் தந்து விட்டு ஆதியும் பகவனும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அங்கிருந்து கிளம்பியவர்கள் காவிரிப்பூம்பட்டினம் வருகின்றனர். அங்கு சிலகாலம் தங்குகின்றனர். அப்போது அவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றுக்கு முறையே ’உறுவை’ மற்றும் ‘ஔவை’ என்று பெயரிடுகின்றனர். இங்கும் இருவர் வேண்ட தம் குழந்தைகளைக் கொடுத்து விடுகின்றனர். தங்கள் பயணங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் இடையூறாக இருக்கும் என நினைத்தே அவர்கள் தங்கள் குழந்தைகளை எல்லாம் பிறர் வேண்ட அவர்களுக்குத் தந்து விடுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
காவிரிப்பூம்பட்டினத்தில் கள் இறக்கும் சான்றார் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு உறுவையையும், யாழ் இசைத்துப் பாடும் பாணர் குடியைச் சேர்ந்தவருக்கு ஔவையையும் அளித்து விடுகின்றனர். பிறகு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றனர். வழியில் ஒரு மலையின் அடிவாரத்தை அடைகின்றனர். அம்மலையில் குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அம்மலைச் சாரலில் சில காலம் தங்கும்போது பகவனுக்கும் ஆதிக்கும் மீண்டுமொரு பெண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு அவர்கள் வள்ளி எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். அங்கிருக்கும் குறவர் இனத்தலைவனுக்குக் குழந்தையே இல்லை. எனவே அங்கிருந்து கிளம்பும் போது வள்ளியை அத்தலைவனுக்குக் கொடுத்து விட்டுக் கிளம்புகின்றனர்.
இப்போது அவர்கள் இருவரும் மைலாப்பூரை அடைகின்றனர். இங்கு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தையையும் பிள்ளையில்லாத வேளாளர் ஒருவர் கேட்க அவருக்குத் தந்து விட்டுச் செல்கின்றனர். ஆனால் அக்குழந்தையை வாங்கிய வேளாளர் குலத்தைச் சார்ந்தவர்கள் அதை வாங்கியதற்காக வாங்கியவரை இகழ்ந்து பேசுகின்றனர். எனவே வாங்கியவர் அம்மகவைப் பறையடிக்கும் குலகுருவான வள்ளுவரிடத்தில் தந்து வளர்க்கச் சொல்கிறார். அக்குழந்தைதான் வள்ளுவர். இப்பெயர் பகவனும் ஆதியும் சூட்டியதா அல்லது வள்ளுவர் வளர்த்ததால் வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை
ஆதியும், பகவனும் தம் யாத்திரையில் இப்போது வஞ்சி மாநகர் அடைகின்றனர். அங்கே அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறக்கிறது. அதை அங்கிருக்கும் அதியமானிடம் அளித்துவிட அக்குழந்தையானது அஞ்சி எனப்பெயரிடப்பட்டு வளர்கிறது. தொடர்ந்த அவர்களது பயணத்தில் திருவாரூர் வருகின்றனர். அங்கேயும் ஆண் பிள்ளை பிறக்கிறது. அம்மகவு அந்தணர் குலத்தில் கபிலர் என்னும் பெயருடன் வளர்கிறது. இவற்றை எல்லாம் கபிலரே தன் கபிலர் அகவல் நூலில் எழுதி உள்ளார். சரி, இதெல்லாம் கபிலருக்கு எழுதும் அளவிற்கு எப்படித் தெரியும்?
சில ஆண்டுகள் கழித்து ஆதியும் பகவனும் தம் பிள்ளைகளைக் காண வருகின்றனர். பிள்ளைகளிடம் இவ்வரலாற்றைக் கூறுகின்றனர். அதைக் கேட்ட கபிலர் இதை எழுதினார் என்றறியலாம்.
என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில்
ஆண்பான் மூவர் பெண்பால் நால்வர்
யாம்வளர் திறம் சிறிது இயம்புவல் கேண்மின்
ஊற்றுக் காடெனும் ஊர்தனில் தங்கியே
வண்ணார் அகத்தில் உப்பை வளர்ந்தனள்;
காவிரிப் பூம் பட்டினத்தில் கள்வினைஞர் சேரியில்
சான்றார் அகம்தன்னில் உறுவை வளர்ந்தனள்;
நரப்புக் கருவியோர் நண்ணிருஞ் சேரியில்
பாணர் அகத்தில் ஔவை வளர்ந்தனள்;
குறவர் கோமான் கொய்தினைப் புனம்சூழ்
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்;
தொண்டை மண்டிலத்தில் வண்டமிழ் மயிலையில்
நீளாண்மை கொள்ளும் வேளாண் மரபுயர்
துள்ளுவ ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்;
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி
அதியமான் இல்லிடை அதியமான் வளர்ந்தனர்;
பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில்
அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்;
மைலாப்பூரில் வள்ளுவர் வளர்ந்து பிள்ளைப்பருவம் அடைகிறார். கல்வி, கேள்விகளில் நன்கு தேர்ச்சி பெறுகிறார். கவியாற்றல் அவருக்குக் கை கூடி வருகிறது. இளமைப் பருவம் அடைந்தபோது தந்தை போலவே இவரது பயணம் தொடர்கிறது. காவிரிப்பாக்கம் எனும் ஊரை அடைகிறார். அவ்வூர்த் தலைவராக மார்க்க சகாயம் என்பவர் பொறுப்பு வகிக்கிறார். அவர் பெரும் செல்வந்தர்; ஆயிரம் ஏர் வைத்துத் தம் வயலில் உழவு செய்யும் அளவிற்கு வசதி மிக்கவர். ஏழை எளியோர்க்குத் தம்மால் முடிந்த அளவிற்குப் பொருளுதவி செய்து வாழ்ந்து வருபவர்.
ஓரிரு பருவங்களில் மழைவளம் பொய்த்தது. அவரின் வயல்களில் விளைச்சல் இல்லை; அவரால் பிறருக்கு உதவிகளும் செய்ய முடியவில்லை. எங்கும் பசிப்பிணி பெருகியது. மார்க்கசகாயம் மிகவும் வருத்தம் அடைந்தார். அச்சமயத்தில் அந்த ஊருக்கு வருகை புரிந்த வள்ளுவரிடம் தன் மனக்குறையை அவர் கூறினார். அதைக் கேட்ட வள்ளுவர் தம்மை அவரின் வயலுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். மார்க்கசகாயத்தின் வயலுக்குச் சென்ற வள்ளுவர் அங்கே
”வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்”
என்று பாடினாராம். அந்தப் பருவத்தின் அறுவடையின்போது விளைச்சல் பெருகியது. மார்க்கசகாயம் மனம் மகிழ்ந்தார். ஆனால் இது போன்று நடக்குமா என்று சிந்திக்கும்போது எனக்கு மறைந்த சாலிச்சந்தை திருக்குறள் தசாவதானி இராமையா அவர்கள் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ஒரே நேரத்தில் பத்துச் செயல்களைப் புரியும் தசாவதான நிகழ்ச்சியை அவர் நடத்துவார். பெரும்பாலானவை திருக்குறள் தொடர்பானவைதாம். அவர் மறைந்த பிறகு அவர் மகன் கனகசுப்புரத்தினம் தற்போது அந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வளவனூர் திருக்குறட்கழகத்தில் தசாவதான நிகழ்ச்சி நடந்தபோது அவரிடம் “விதை கூட இடல் வேண்டுமா? என்று வள்ளுவர் கேட்கிறாரே என்று கேட்டபோது “ஆமாம்; எங்கள் ஊரில் இதுபோல் நடந்தது” என்று கூறி விவரித்தார்.
அவர்கள் ஊரில் பிறர்க்கு நல்லது செய்யும் ஒரு பணக்காரர் இருந்தாராம். அவருக்கு நிறைய நிலபுலன்கள் இருந்தன. ஒருமுறை மழை பெய்யக்கூடிய சூழலே இல்லாதபோது யாருமே தங்கள் தங்கள் நிலத்தில் விதை விதைக்க முன்வரவில்லை. ஆனால் அந்த நல்லவர் தம் நிலத்திற்குச் சென்று விதை விதைத்தார். அந்த ஆண்டு மழை பெய்யவில்லை. ஆனால் அடுத்த பருவத்தில் மழை பொழிந்தது. பிறர் சென்று நிலங்களில் விதை விதைத்தனர். இந்த நல்லவர் நிலத்தில் யாரும் சென்று கொஞ்சம் கூட பணம் செலவழிக்காமலே விதைவிதைக்காமலே பயிர் முளைத்திருந்தது. இதுதான் அந்த “வித்தும் இடல் வேண்டும் கொல்லோ?” எனும் குறளுக்கு விளக்கமாகும் என்று தசாவதானி கூறினார்.
மார்க்கசகாயம் கேட்டுக்கொண்டதற்கேற்ப அவர் மகளை வள்ளுவர் மணந்துகொண்டு அங்கேயே தங்கினார். சிலகாலம் அங்கு இல்லறத்தைச் செவ்வனே நடத்திவந்தார். காலப்போக்கில் வள்ளுவரின் மனைவி காலமானார். வள்ளுவர் மிகவும் மனம் உடைந்தார். மனைவியின் மறைவிற்காக ஒர் இரங்கற்பா பாடினார். இதுதான் அந்தப் பாடல்:
அடிசிற் கினியாளே! அன்புடை யாளே!
படிசொற் கடவாத பாவாய்!—அடிவருடிப்
பின்தூங்கி முன்னெழூஉம் பேதையே! போதியோ?
எந்தூங்கும் என்கண் இரா”
வள்ளுவர் அங்குதான் தம் திருக்குறளை எழுதி முடித்தார். அதை அறிந்த ஔவை மற்றும் கபிலர் ஆகியோர் அங்கு வந்து அவரைப் பாராட்டினராம்.
அங்கேயே வாழ்ந்த வள்ளுவர் சிறிது காலத்தில் மறைந்தார். வள்ளுவரின் முதல் மாணவனாக இருந்த ஏலேலசிங்கன் என்பவர் வள்ளுவருக்கு மைலாப்பூரில் ஒரு படிவம் அமைத்தார்.
நண்பர்களே! வள்ளுவர் பற்றிய இந்தச் செய்திகளை எல்லாம் நீங்கள் நம்புவதும், நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். நான் படித்த இச்செய்திகள் இதுவரை கேள்விப்படாத புதியனவாய் இருந்ததால் உங்களிடம் சொல்லி வைத்தேன். இவை இடைச்செருகல்களாக யாரேனும் ஒரு புலவர் எழுதி வைத்ததாகவும் இருக்கலாம்.
இந்தச் சொற்பொழிவுக்காக திருவள்ளுவர் பற்றிய ஒரு சில நூல்களைப்படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது மறைமலை அடிகள் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சி எனும் நூலைப் படிக்க நேர்ந்தது.
அந்நூலிலிருந்துதான் இச்செய்திகள் கிடைத்தன. ஆனால் அவர் முழு நம்பகத்தன்மையோடு இவற்றை எழுதி உள்ளார் என்று கூறலாம். எப்படியோ? திருவள்ளுவர் பற்றிச் சில புதிய செய்திகளைப் படிக்கவும் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளித்த இந்த திருக்குறள் இயக்கத்திற்கும், இவ்வளவு நேரம் பொறுமையுடன் செவிமடுத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.