அகோரப்பசியெடுத்த நாய் அங்குமிங்கும் அலைந்தது
இரைதேடி.
பிய்ந்த ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும்
பாதி தோசை கிடைத்தால் பிரமாதம்.
பால் பாக்கெட்டை யாரும் கைநழுவவிட வாய்ப்பில்லை.
தெருவெங்கும் உறுமியபடி மோப்பம் பிடித்தவாறு
சென்றுகொண்டிருந்த நாய்
ஒரு குப்பைத்தொட்டிக்குள் கண்டந்துண்டமாய் வெட்டப்பட்ட
பெண் இதயமொன்று
அதன் இறுதி லப்-டப்பில் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து
அருகே சென்றது ஆவலே உருவாய்.
ஆனால், பலவீனமாய் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த அவலத்தை ஆற்றாமையை ஆறாக் காயத்தின்
வலியோசையைக் கேட்கக் கேட்க
கண்கலங்கிவிட்டது அந்த நாய்க்கு.
தெளிவற்று என்னென்னவோ பிதற்றல்கள் _
அந்த மனதின் அடியாழத்திலிருந்து.
அதென்ன, அந்தச் சின்ன இதயம் முழுக்க
சிறியதும் பெரியதுமாய்
அத்தனை ஆழமான வெட்டுக்காயங்கள்….
அசிங்கப்பட்டுப்போனதன் அடையாளமாய்…..
சமச்சீரான வடிவங்களில்; சாகசக் கிறுக்கல்களில்
கிளைபிரிகின்ற குறுக்குவெட்டுப் பள்ளங்களிலெல்லாம்
ஆலகால விஷமேறிய குருதி
ஆங்காங்கே கசிந்தபடியும் வழிந்தோடியபடியும்.
’அய்யோ… எத்தனை சித்திரவதைப்பட்டிருக்கிறது இந்தச் சிறு இதயம்…’
அலறியழவியலா வாதையில் ஒடுங்கிச் சுருண்டுகிடக்கிறது…
நின்றுவிடப்போவது நிச்சயம் என்று நன்றாகவே தெரிந்தது.
அதற்குள் அண்டங்காக்கையோ இன்னொரு நாயோ
அதைக் குதறிவிடாமலிருக்கவேண்டும்….
என்றெண்ணியபடியே
கவனமாய் பல்படாமல் அதைக் கவ்வியெடுத்துக்கொண்ட நாய்
சற்று தூரத்தில் இருந்த ஒரு குழிக்குள் அதை
பத்திரமாய் வைத்து
பசி மறந்து அதனருகே படுத்துக்கொண்டது பாதுகாவலாய்.