வளர்ந்த குழந்தையை இடுப்பிலிடுக்கிக்கொண்டவள்
உணவூட்டினாள்; உடுப்பு மாட்டிவிட்டாள்;
’ஆடுரா ராமா ஆடுரா ராமா ’ என்று அன்றாடம் பாடிப்பாடி
ஆன விலங்கிட்டு வானரமாக்கிவிட்டாள்.
குதித்தபடி குட்டிக்கரணம் போட்டவாறிருக்கும் வளர்ந்த பிள்ளை
சில சமயங்களில் சொன்ன பேச்சைக் கேட்பதில்லையென்று
கல்லுரலிலும் கட்டிவைக்கிறாள்.
மண்ணைத் தின்னாமலிருக்க மூக்கின் கீழ் மிகப்பெரிய
பிளாஸ்திரி ஒட்டிவைத்திருக்கிறாள்.
காணக்கிடைக்குமோ வளர்ந்த குழந்தை வாயிலும்
அண்டசராசரத்திருவுருவை. ..
என்றேனும் எண்ணிப்பார்த்திருப்பாளோ
அம்மங்கைத் தெரிவை.