தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.

This entry is part 12 of 15 in the series 5 நவம்பர் 2017
          சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக்  கட்டிடக்கலைப்  பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர்.
          நுழை வாயிலினுள் நுழைந்ததும் வலது பக்கத்தில் மருந்தகம் இருந்தது. அங்கு சுருள் சுருளான கேசத்துடன் மாநிறம் கொண்ட ஒருவர்  என்னைப் பார்த்து, ” கூட மார்னிக் டாக்டர். ” என்றார்.  அவரிடம் சென்று கை குலுக்கி என்னை அறிமுகம் செய்துகொண்டு அவருடைய பயரைக் கேட்டேன்.
          ” கிறிஸ்டபர் . வெல்கம் டாக்டர். ” என்று வரவேற்றார். நான் மருந்தகத்தினுள் சென்றேன். அங்கு ஒரு அழகான இளம் பெண் இருந்தார். அவர் என்னைப் பார்த்து எழுந்து நின்று புன்னகைத்தார்.
          ” இவர் என் தங்கை. பெயர் சித்ரா. நாங்கள் இருவரும் இங்கு பார்மசிஸ்ட்ஸ். ” என்றார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு பிடித்துவிட்டது… மிகவும் மரியாதையுடன் பேசினார். நான் அங்கு ஷெல்ப்களில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மருந்துகளை நோட்டமிட்டேன். அவை தரமானவையாகக் கண்டேன்.
          ” நோயாளிகள் எப்படி  மருந்து வாங்குவார்கள்? ‘ அவரிடம் வினவினேன்.
          ” டாக்டர்கள் மருந்து சீட்டு தருவார்கள். அதை அவர்கள் எங்களிடம் கொண்டு வருவார்கள். நாங்கள் விலை போடுவோம். அவர்கள் பணத்தை கேஷியரிடம் கட்டிவிட்டு திரும்புவார்கள். நாங்கள் மருந்து தருவோம். ” கிறிஸ்டோபர் விளக்கினார்.
          ” நோயாளிகளைப் பார்த்தால் ஏழை கிராமவாசிகள் போல் தெரிகின்றனரே.அவர்களால் பணம் கட்ட முடியுமா? “இது என்னுடைய கேள்வி.
          ” இங்கு வசதி உள்ளவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு ஏழைகளுக்கு இலவசமாக தரப்படும். ” என்றார்.
          ” யார் வசதி படைத்தவர், யார் ஏழை என்பதை யார் நிர்ணயம் செய்வார்கள்? “
          ”  டாக்டர்கள்தான். நோயாளிகளிடம்  பேசும்போதே தெரிந்துகொள்வார்கள். சிலருக்கு மொத்தம் இவ்வளவுதான் என்பதை அவர்களே எழுதிவிடுவார்கள்.சிலருக்கு மொத்தத் தொகையில் குறைப்பார்கள். சிலருக்கு இலவசம் என்றும் எழுதுவார்கள்.”
          ” இலவசமாகத் தரும் அளவுக்கு இங்கு வருமானம் உள்ளதா? “
          ” நிச்சயமாக இல்லை டாக்டர்.”
          ” பின்பு எப்படி இத்தகைய இலவச மருத்துவம் செய்து சமாளிக்கிறீர்கள்? “
          ” இது மிஷன் மருத்துவமனை டாக்டர். ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவைக்கு சுவீடன் தேசத்திலிருந்து பெரிய தொகை வருகிறது. அதிலிருந்துதான் செலவாகிறது. அதோடு வசதி படைத்தவர்களிடமிருந்தும் தாராளமாக வசூல் ஆகிறது. “
          ” வசதி படைத்தவர்கள் இங்கு வருகிறார்களா? “
          ” வருகிறார்கள் டாக்டர். இது செட்டி நாடு. காரைக்குடி, கண்டரமாணிக்கம், தேவகோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வசதியான செட்டியார்கள் இங்கு வருகிறார்கள். வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். பெரிய தொகைகளும் கட்டி திருப்தியுடன் ஊர் திரும்புகிறார்கள். “
        “எத்தனை வருடமாக இங்கே பணியில் உள்ளீர்கள்? “
          ” ஐந்து வருடம் டாக்டர். “
          ” வேலை பிடித்துள்ளதா” “
          ” எந்த பிரச்னையும் இல்லை. பிடித்துள்ளது. ” என்றார். முதல் சந்திப்பிலேயே கிறிஸ்டோபர் நேர்மையான ஊழியர் என்பது தெரிந்தது.
          ” தகவலுக்கு நன்றி. பின்பு சந்திப்போம். ‘ அவரிடம் கை குலுக்கிவிட்டு வெளியேறினேன்.
          இடது பக்கத்தில் கண் வெளிநோயாளிப் பிரிவு இருந்தது.அந்த அறையின்  வெளியில் சில நீட்டு பெஞ்சுகள் காணப்பட்டன. நோயாளிகள் சென்றுவிட்டனர். அறைக்குள் நுழைந்து மருத்துவரைக் கண்டேன். அவர் காந்தாமணி செல்லையா.
          ” நீங்கள் கண் மருத்துவரா ? “அவரிடம் கேட்டேன்.
          ” இல்லை. பயிற்சிதான் பெற்றேன். தற்போது நான்தான் கண் பிரிவைப் பார்க்கிறேன். அறுவை சிகிச்சைக்கு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையிலிருந்து நிபுணர் குழுவினர் வருவார்கள். ” என்றார்.
           அங்கிருந்து இருட்டு அறைக்குச் சென்றோம்.அங்குள்ள கருவிகளைக் காண்பித்தார். அனைத்தும் சுவீடன் நாட்டிலிருந்து நன்கொடையாக வந்தவையாம்.
          கண் பிரிவிலிருந்து வெளியேறி நுழைவாயிலின்  சுவரைப் பார்த்தேன். அதில் டாக்டர் கூகல்பர்க், அவரின் மனைவி ஈவா கூகல்பர்க் ஆகிய இருவரின் புகைப்படங்கள் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தன. இந்த மருத்துவமனையை உருவாக்கியவர் டாக்டர் கூகல்பர்க். இவர் சுவீடன் தேசத்தைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்.
          ஒரு மணிக்கு செல்லப்பா வீடு சென்றேன். அவர்கள் இருவரும் எனக்கு காத்திருந்தனர். மதிய உணவு உண்டோம்.டாக்டர் பார்த் பற்றி பேசினோம். அவரும் அவருடைய மனைவியும் இங்கு ஒரு பங்களாவில் தங்கியுள்ளார்களாம். அவர்தான் சுவீடன் தேசத்திலிருந்து இங்கு வந்து பணிபுரியும் கடைசி மருத்துவராம்.  அவருக்கு முன் டாக்டர் உல்சன் இருந்தாராம். அவர் அறுவை மருத்துவ நிபுணராம். அதற்கு முன் வேறு மருத்துவர்கள் இங்கு இருந்தார்களாம். டாக்டர் பார்த் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவராம். அவருடன் வேலை செய்வது எனக்கு பிடிக்கும் என்றனர். உணவுக்குப் பின் நாங்கள் ஓய்வெடுத்தோம். நான் என் அறைக்குச் சென்று படுத்து உறங்கினேன். மீண்டும் மதியம் மூன்று மணிக்குத்தான் வேலை. ஐந்து மணிக்கு வேலை முடிந்துவிடும். அதன்பின்பு மருத்துவமனையை மீண்டும் சுற்றி பார்க்கலாம். அதற்கு யாராவது துணைக்கு வந்தால் நன்றாக இருக்கும்.
          மூன்று மணிக்கு நான் பனிரெண்டாம் அறைக்குச் சென்றேன். அங்கு டாக்டர் பார்த் வந்தார். வெளியில் சில நோயாளிகள் காத்திருந்தனர். அவர்களை இருவரும் பார்த்தோம்.நான்கு மணிக்கு வார்டுகளுக்குச் சென்றோம். புதிதாக அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்தோம். இரவு எட்டு மணிக்கு ஒருமுறை வார்டுக்கு வரச் சொன்னா ர். அது இரவு ரவுண்ட்ஸ் என்றார்.
          அவரிடமிருந்து விடை பெற்றபின்பு நான் அலுவலகம் வழியாக திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞர் என்னைப் பார்த்து, ” வணக்கம் டாக்டர். ” என்றவாறு  கை குலுக்கி வரவேற்றார்.,.
          ” நான்  பால்ராஜ். ” தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் நல்ல  நிறத்தில் இருந்தார். முகத்தில் அகலமான சிரிப்பு. எல்லாரிடமும் நன்றாகக் பழகுவார் போலிருந்தது.
          ” நீங்கள் ஆபீசில் வேலை செய்கிறீர்களா? ” நான் கேட்டேன்.
          ” ஆமாம் டாக்டர். ஆபீஸ் கிளார்க்.” என்றார்.
          ” எத்தனை வருடமாக ? ” அவரிடம் கேட்டேன்.
          ” மூன்று வருடம் டாக்டர். “
          ” மொத்தம் எத்தனை பேர்கள் ஆபீசில் உள்ளீர்கள்?  ” வினவினேன்.
          ” ஆறு பேர்கள் உள்ளோம். … எங்கே டாக்டர் தனியே? ” அவர் கேட்டார்.
          ” வேலை முடிந்தது. இந்த மருத்துவமனையைச் சுற்றிப்பார்க்கணும். ” என்றேன்.
          ” நான் வேண்டுமானால் உடன் வரவா? ” அவர் முன்வந்தார்.
          ” நல்லது . ” நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.
          நாங்கள் இருவரும் முதலில் கேன்டீன் சென்று தேநீர் அருந்தினோம். நான் அவரைப்பற்றி விசாரித்தேன். அவர் தாயாருடன் இருப்பதாகக் கூறினார். ஒரு அக்காளும் உடன் இருப்பதாகச் சொன்னார். என்னைப் பற்றியும்  நான் சொன்னேன்.
          முதலில் நாங்கள் கண் வார்டைப் பார்த்தோம். அங்கு சிலர் கண்ணில் கட்டு போட்டு படுத்திருந்தனர். அவர்களுக்கு கேட்டரேக்ட் அறுவைச் சிகிச்சை செய்துள்ளதாகக் கூறினார். கண் பார்வையற்ற ஏராளமான வயதானவர்கள் வருவார்களாம். ஆரம்பத்தில் இது கண் மருத்துவமனைதானாம். பின்புதான் பொது மருத்துவமனையாக மாறியதாம். தற்போது மாதம் ஒருமுறை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுமாம். அப்போது வரும் நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை, மருந்து, மூக்குக் கண்ணாடி,ஐந்து நாட்கள் உணவு ஆகிய அனைத்தும் இலவசமாம். இந்த மருத்துவமனையை  கண் ஆஸ்பத்திரி என்றுதான் சுற்றுவட்டார மக்கள் அழைப்பார்கள் என்று பால்ராஜ்  விளக்கினார்.
          ” இது எப்படி சாத்தியம்? நிறைய செலவாகுமே ?  ” நான் அவரிடம் கேட்டேன்.
          ” இதற்கு ஜெர்மனியிலிருந்து பணம் வருகிறது டாக்டர். ” என்றார்.  இந்த  மருத்துவமனைக்கு சுவீடனிலிருந்தும் ஜெர்மனியிலிருந்து பணம் வருகிறதே என்று எண்ணி வியந்தேன்.
          கண் வார்டைத் தாண்டி வராந்தாவின் இடது பக்கம் திரும்பினோம். அங்கு அறுவைக்கூடத்தின் நுழைவாயில் இருந்தது. அது மூடியிருந்தது.அதனுள் நாங்கள் செல்லவில்லை. நேராக நடந்து இடது பக்கம் திரும்பினோம்.
          பெரிய திறந்த அரங்கம் காணப்பட்டது. அங்கே  பூப்பந்து விளையாடுவார்களாம்.  அங்கு ஒரு பெரிய மேடையும் இருந்தது. திருமண வரவேற்பு  விருந்துகளும்  அங்கு நடக்குமாம். அதைக் கடந்து சென்று மண் வீதியை அடைந்து அதைத் தாண்டினோம்.
          எதிரே  தனியாக ஒரு கட்டிடம் இருந்தது. அதன் வெளியில் நிறைய பேர்கள் காத்திருந்தனர். அதுதான் பிரசவ வார்டு என்றார்.
          அந்த மண் சாலையில் தொடர்ந்து நடந்தபோது வரிசையாக சிறு சிறு வீடுகள் காணப்பட்டன. அப் பகுதிக்கு சமாதானபுரம் என்று பெயராம். அங்கு கடை நிலை ஊழியர்கள் குடியிருக்கிறார்களாம். அங்கு சென்றபோது  சிலர் எங்களைப் பார்த்து வணங்கினார்கள். அவர்களுக்கு என்னை புதியடாக்டர் என்று அறிமுகம் செய்துவைத்தார் பால்ராஜ் .
          அப் பகுதியில் பெரிய கிணறு இருந்தது. அங்கிருந்துதான் மருத்துவமனை வளாகத்திற்கு குடிநீர் வருகிறதாம். அப்பகுதியில் ஒரு பெரிய துணி துவைக்கும் ஆலையும் இருந்தது. அதற்கென இரண்டு மூன்று குடும்பங்கள் உள்ளார்களாம். தொடர்ந்து நடந்தால் காடு. நாங்கள் திரும்பி நடந்தோம். அலுவலகம் நெருங்கியபோது வலது பக்கத்தில் தனியாக ஒரு கட்டிடமும் , பூந்தோட்டமும், ,  சுற்றிலும் தாழ்வான சுவரும் இருந்தது. அந்த கட்டிடம்  ஒரு அரண்மனை போன்ற சாயலில்  இருந்தது. அதுதான் ஈ வார்டு என்றார். அது ஈரோப்பியன் வார்டாம். அதில் வெள்ளைக்காரர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கி சிகிச்சைப் பெறுவார்களாம்.  அதை சிவகங்கை  மன்னர் கட்டியுள்ளார். தன்னுடைய அரசி இங்கு   பிரசவத்துக்காக வந்தபோது அவர் தங்குவதற்கு அது கட்டப்படடதாம். பிரசவம் ஆனபின்பு  அந்த கட்டிடத்தை  மருத்துவமனைக்குத் தந்துவிட்டாராம்!
          மாலை ஆறு மணியாகிவிட்டது.
          ” இந்த கேம்ப்பஸ்  மிகவும் பெரியது. நாளை இன்னும் பார்ப்போம் டாக்டர். ” என்று கூறிய பால்ராஜ் விடைபெற்றார்.
         நான் செல்லப்பா வீடு திரும்பினேன். வீட்டின் வலது பக்கத்தில் இருந்த இரட்டை வீடுகளின் வலது பக்க வீட்டின் வாசலில் டாக்டர் ராமசாமி நின்றுகொண்டிருந்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் வீட்டினுள் என்னை அழைத்துச் சென்றார். ஒரு கூடம், ஒரு  படுக்கை அறை,  குளியல் அறை,  சமையல் அறை கொண்ட வீடு அது. . மாடியில்  பெரிய கூடம் இருந்தது. ஒரு குடும்பத்துக்குப் போதுமானது. ராமசாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வயது இருபத்தைந்து இருக்கும். அவர் அறுவை மருத்துவப் பகுதியில் இருப்பதாகச் சொன்னார். என்னைப்பற்றி விசாரித்தார். அவர் திருச்சி மாவட்டத்து கரூரைச் சேர்ந்தவர். இங்கு இரண்டு வருடங்கள் வேலை செய்கிறார். டாக்டர் செல்லையாவிடம் அறுவை மருத்துவம் கற்றுக்கொள்கிறாராம். அவர் மிகவும் எளிமையுடன் காணப்பட்டார்.
          அநேகமாக அவருடைய பக்கத்துக்கு வீடு எனக்குக் கிடைக்கும் என்றார். அந்த வீடு போதுமானது. வீட்டின் வாசலில் பூந்தோட்டம் இருந்தது. வண்ண நிறங்களில் குரோட்டன் செடிகள் அழகூட்டின. டாக்டர் டேவிட் ஜான் காலையிலேயே வீட்டை காலி செய்துவிட்டார். அவர் மலேசியாவைச் சேர்ந்தவர். இங்கு இரண்டு வருடம் சேவைக்குப் பின் மலேசியா திரும்பிவிட்டார். அநேகமாக நாளை டாக்டர் செல்லையா எனக்கு அந்த வீட்டைத் தருவார். அப்போது ராமசாமி நல்ல துணையாக இருப்பார்.
          அவரிடம் விடைபெற்று செல்லப்பா வீடு திரும்பினேன். மாடிக்குச் சென்று குளித்துவிட்டு கீழே வந்தேன். செல்லப்பாவும் ஆலீசும் எனக்காக காத்திருந்தனர். மூவரும் பேசிக்கொண்டே இரவு உணவை உட்கொண்டோம். ராணியின் சமையல் சுவையாக இருந்தது. அன்று பூரியும் உருளைக்  கிழங்கும் பொரித்த முட்டையும் தாயார் செய்திருந்தார்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationகிருதுமால்மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *