மனவானின் கரும்புள்ளிகள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 11 in the series 12 நவம்பர் 2017

பேராசிரியர் இரா.காமராசு

தமிழில் வாசிப்பும், படைப்பும் பெருகிவருவது நம்பிக்கை அளிக்கிறது. தமிழகமெங்கும் சிறிய, பெரிய நூல் காட்சிகள் நடக்கின்றன. நூல் வெளியீடுகளும், விமர்சன அரங்குகளும் தொடர்கின்றன. அச்சு ஊடகத்தைத் தாண்டி சமூக ஊடகங்களில் படைப்புக்கள் ஊற்றுக் கண்களாய் பீறிடுகின்றன. சிலர் எழுதிய காலம் போய் பலர் எழுதத் தொடங்கியிருப்பது இலக்கிய ஜனநாயகமாகப்படுகிறது. படைப்புகளின் தனித்தன்மை, புதுமை ஆகியனவே அவற்றின் வீரியத்தை உணர்த்துகின்றன. போலச் செய்தல், கூறியது கூறல் மீறிய படைப்புகள் காலத்தால் கவனிக்கப்படுகின்றன.

கவிஞர் ப.மதியழகனின் அண்மைத் தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ இவர் ஏற்கனவே தொலைந்துபோன நிழலைத்தேடி(2008), சதுரங்கம்(2011) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இலக்கிய இதழ்களிலும், இணையத்திலும் கவிதைகள், சிறுகதைகள் படைத்து வருகிறார்.

கவிஞர் ப.மதியழகன் இத்தொகுப்பில் சமகால வாழ்வின் நிச்சயமற்றத் தன்மைகளை இனம் காட்டுகிறார். பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்வின் பொருளை, இருப்பின் அரத்தத்தைத் தேடும் முயற்சியாக இவரின் பெரும்பாலான கவிதைகள் அமைகின்றன. இவர் தனி மனித மனவெளியின் சூட்சுமங்களைக் கவிதைகளாக்குகிறார். அன்பு, பாசம், காதல், கல்வி, வேலை, பொருளீட்டல், மணம், வாழ்க்கை, பிள்ளைப்பேறு, கடன், சுமைகள், குடி, ஏமாற்று, வஞ்சிப்பு, தற்கொலை எண்ணம், கடவுள், சாத்தான், பேய், பிரார்த்தனை, சித்தக்கலக்கம், ஞானத்தேடல் என்பதாக போகிற போக்கில் சொற்கோலங்களை அள்ளி வீசுகிறார்.

‘எல்லோரும் ஒருபிடி சாம்பால் தான்’, ‘மரணத்தைப் பொதுவில் வைத்து விளையாடும் இயற்கை’ என்றெல்லாம் என்னுரையில் சொல்லும் மதியழகன் மனிதனின் அந்நியமாதல் கூறுகளையே பெரிதும் பேசுகிறார்.

தலைப்புக் கவிதை ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ காதலைத் தான் பேசுகிறது.

‘அவள் சூடும் பூக்களுக்கு

எருவாகவாவது

என்னை இருக்கவிடுங்கள்’

என்கிறார். நிறைவேறா உயர் அன்பின் வெளிப்பாடாகவும், பெண்ணைக் கொண்டாடுவதாகவுமே இவரின் ஒருசில காதல் கவிதைகளும் அமைகின்றன.

 

நிகழ் வாழ்வு உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. எங்கும், எல்லாம் போலிகள் நடிப்பு தான் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறது. இயல்பு என்பதே விசித்திரமாகப் பார்க்கப்படுகிறது. நிரந்தரமற்ற வாழ்வின் நிரந்தரம் தேடி அலையும் மனிதர்கள். இத்தகுச் சூழல் சாவின் விளிம்புக்கு (அழிவு பற்றிய குறியீடு) கவிதை மனதைத் தள்ளுகிறது.

‘மயானத்தின் மேலேதான்

மனிதர்கள் வாழ்வது’ என்றும்

‘ஆனால்

இயேசு போல்

ஞாயிற்றுக் கிழமை அற்புதங்கள் செய்து

நாம் மாட்டிக் கொள்ள வேண்டாம்’

என்றும் எழுதப்படும் கவிவரிகள் கவனம் பெற வேண்டியவை.

சுடலை, இடுகாடு, பேய், பயித்தியம், சாவு என மன நெருக்கடியின் வீச்சைப் பதிவு செய்யும் கவிஞர் ஆங்காங்கே நம்பிக்கைகளையும் தூவிச் செல்கிறார்.

‘மாங்கிளைகளை வெட்டியாகிவிட்டது

இனி எந்த மரக்கிளையில்

கிளிகள் வந்தமரும்’

என்றும்

‘இலையைப் போல

இலகுவாக இருக்கமுடியவில்லை

என்றாலும் பரவாயில்லை

தண்ணீரைப் போலவாவது

சலசலத்துக் கொண்டிறேன்’

என்றும் வரும் கவித் தொகுப்புகளில் மனமென்மை பளிச்சிடுகிறது.

வாழ்க்கை ஒரு வகையில் பொருளற்றதாகிவிட்டது. மற்றொரு புறம் பொருளே வாழ்வாகிவிட்டது. நுகர்வு வெறி மனித உறவுகளைச் சிதைத்துவிட்டது. எதற்கும் லாயக்கற்றவர்களே உன்னத புருஷர்கள். எல்லாவற்றுக்கும் பயந்து, எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி, கடைசியாக என்னவாக ஆகிப் போகிறார்கள் மனிதர்கள்? இவை பற்றிய அக்கறை, கவலை, அச்சம், ஆற்றாமை கவிதைகளாக வெளிப்படுகின்றன.

‘சாக்கடையில் குளித்துவிட்டு

சந்தனத்தைப் பூசிக்கொள்வதுதான்

வாழ்க்கையோ’

என்கிறார் ஒரு கவிதையில்.

 

‘கையறு நிலையில்

நின்று கொண்டிருந்தார் கடவுள்

அவரது கட்டற்ற அற்புத

சக்தியை கடன் வாங்கிப்

போயிருந்தான் சாத்தான்’

என்கிறார் ஒரு கவிதையில்.

 

‘அல்லது வீழும் நல்லது வாழும்’ என்பது பல நேரங்களில் பொய்த்துப் போகிறது. எவ்விதச் சார்பும் அற்ற தனி மனித மனம், தன் தூய்மை சார்ந்து பொது வெளியில் ஒருவித கழிவிரக்கத்தையே தரும். என்னைப்போல் ஒருவன், அப்பாவி போன்ற கவிதைகள் சுயபச்சாதாபம் கொள்ளும் தன்மையைக் சுட்டுகின்றன.

இதன் தொடர்ச்சியாக நோய், பேதலிப்பு, மனப்பிறழ்வுத் தன்மை சார்ந்த உள்வெளி கவிக்கீற்றுகளாக வெளிப்படக் காணலாம்.

‘விட்டேத்தியாக

இருக்கும் வரைதான்

வீட்டில் இருக்கலாம் போல’ எனவும்

‘சுவர்களுக்கு மத்தியில் தங்களை

மறைத்துக் கொள்ளும்

மனிதர்களைக் கண்டு

எள்ளி நகையாடுகின்றன

வீதியில் படுத்துறங்கும் நாய்கள்’

எனவும் எழுதிச் செல்வது நம்பிக்கையிழந்த மனதின் வெளிப்பாடன்றி வேறென்ன?

‘துரோகத்தின் நிழல்’ என்றொரு கவிதை!

துரோகத்தின் நிழல் என்னைத்

துரத்திக் கொண்டேயுள்ளது

சரணடைவதற்கான நாளை

எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்

தூரத்தில் கேட்கும் ஒலி கூட

என்னை நிம்மதி இழக்கச் செய்கிறது

இந்த தண்டனையை

பாவத்தின் சம்பளமாக ஏற்றுக் கொள்ள

நான் தயாராகவே இருக்கிறேன்

தப்பிப்பதற்கான வழியைத்

தேடித்தேடி நான்

களைப்படைந்து விட்டேன்

என் ஆயுளை ஒருநாள் நீட்டித்து

கடவுள் கையெழுத்திடுகிறார்

மரணம் தரும் விடுதலையை

அனுபவிக்க ஆசைப்படுகிறேன்

என்னை வாழவைத்து சித்ரவதைக்கு

உள்ளாக்குவதை எங்கே

சென்று முறையிடுவேன்

இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்

கண்டு கொண்டேன் என்று

சொன்னால்

இந்த உலகம் என்னை

சிலுவையில் அறைந்துவிடாதா!

இந்த மனநிலையும், மனத்துயரும் கவிச் சொற்களாகப் பெருக்கெடுக்கின்றன. வாழ்க்கையை கொடூர தணடனை எனச் சுட்டும் கவிஞர், ‘வாழ்க்கையே கடவுள், வாழ்ந்து பாருங்கள்’ என்றும் சொல்கிறார். இது முரண் அல்ல. இருவேறு மனிதன் முகமற்றும், முகவரியற்றும் ஆன்மாவற்றும் ஆகிப்போனதன் விளைவு.

 

மதியழகனின் கவிதைகள் யதார்த்தச் சொல்லெடுத்து மீ யதார்த்தம் பேசுகின்றன. சார்யலிசத் தாக்கம் சற்று கூடுதலாகத் தென்படுகிறது. சொற்கள், தொடர்கள் வழியே கவிதைகளை கட்டமைத்துவிடுகிறார். இதுவே பலமும் பலவீனமுமாக. கவிதையின் மிக அடிப்படைக் குணம் சொற்சிக்கனம். மனவெளிப்பாடு என்பதால் சொற்கள் வந்து குவிகின்றன. ஒத்திசைவுவில்லாத வாழ்வைப் பேசும் கவிதை ஒத்திசைவாய் இருக்க வேண்டுமா என்ன? படைப்பாற்றலைப் பண்படுத்தினால் அரிய படைப்புகளை இவரிடமிருந்து பெறலாம்.

 

நூல்: புள்ளிகள் நிறைந்த வானம் (கவிதைகள்)

வெளியீடு

மதி பப்ளிகேசன்

தரும புரி 635 205

தொடர்புக்கு:73733 33078

arivazhagancm@gmail.com

விலை ரூ 70/-

ஆசிரியர் ப.மதியழகன்,மன்னார்குடி

mathi2134@gmail.com

தொடர்புக்கு:9597332952 9095584535

 

Series Navigationபார்க்க முடியாத தெய்வத்தை…தொடுவானம் 195. இன்ப உலா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *