தொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.

This entry is part 8 of 13 in the series 10 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.
New Jerusalem Church
டாக்டர் பார்த் அவரின் மனைவியுடன் மிஷன் பங்களாவில் தங்கியிருந்தார். அதுபோன்று மொத்தம் நான்கு பங்களாக்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்தன. அவற்றைக் கட்டி பராமரித்தவர்கள் சுவீடன் தேசத்தைச் சேர்ந்த சுவீடிஷ் மிஷன் சபையினர். அவர்களின் பிரதிநிதிகளாக திருப்பத்தூரில் அப்போது இரண்டு மிஷனரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவவர்தான் டாக்டர் பார்த். இன்னொருவர் சிஸ்டர் சோஞ்ஜா பெர்சன் என்னும் பெண்மணி. அவர்தான் விழியிழந்தோர் பள்ளியின் மேலாளர். அவர் ஒரு முதிர் கன்னி. அவர்கள் போன்று தமிழகத்தில் வேறு சில சுவீடன் தேசத்து மிஷனரிகள் தஞ்சாவூர், மாயவரம், தரங்கம்பாடி, கிணத்துக்கடவு, திண்டுக்கல், பொறையார், தரங்கம்பாடி ஆகிய ஊர்களில் உள்ளனர். அவர்கள் கோடைக் காலத்தில் தங்குவதற்கு கொடைக்கானலில் வேறு சில பங்களாக்களும் இருந்தன. அந்தப் பகுதிக்கு ” சுவீடிஷ் செட்டில்மென்ட் ” என்று பெயர்.
மருத்துவமனை வளாகத்திலிருந்த நான்கு பங்களாக்களில் ஒன்றில் தலைமை மருத்துவ அதிகாரி இருப்பதால் அது மருத்துவமனையின் பராமரிப்பில் இருந்தது. அதற்கென பூந்தோட்டத்தைப் பராமரிக்க ஒரு முழுநேர தோட்டக்காரரும் இருந்தார். அவரின் பெயர் ஆதீனமிளகி. அவரின் மனைவி பர்மாவைச் சேர்ந்தவர். அவர்களுக்கு நாச்சி என்ற பையனும் லெட்சுமி என்னும் மகளும் இருந்தனர். இருவரும் சிவப்பாக இருப்பார்கள். அதுபோன்று மற்ற மூன்று பங்களாக்களுக்கும் முழுநேர தோட்டக்காரர்கள் பணியில் இருந்தனர். அந்த மூன்று பங்களாக்களும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன.
நான் திருப்பத்தூரில் சேர்ந்தபோது மருத்துவமனை வளாகம் மூன்று பிரிவாகச் செயல்பட்டது. அவை சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை, தாதியர் பயிற்சிப் பள்ளி, விழியிழந்தோர் பள்ளி. இவற்றில் பணிபுரிந்தோருக்கு அந்தந்த பிரிவில் உள்ள நிர்வாகம் ஊதியம் வழங்கியது. அந்த நிறுவனங்களுக்கு தேவையான பணத்தை திருச்சியில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் தலைமையகத்தின் கருவூலத்திலிருந்து அனுப்பப்படும். அங்குதான் சுவீடன் தேசத்து மானியம் நேரிடையாக பெறப்படும். அத்துடன் திருச்சபையின் பள்ளி ஆசிரியர்களுக்கான அரசு மானியமும் அங்குதான் வரும்.
அந்த மூன்று நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஞாயிறு ஆராதனைக்கு ஆரோக்கியநாதர் ஆலயமும் அதையடுத்த கல்லறைத்தோட்டமும் இருந்தன. அதைக் கண்காணிக்க சபைகுரு பி.ஏ.ராஜன் இருந்தார். அந்த ஆலயத்தை நிர்வகிக்க ஊழியர் அனைவரும் மாதந்தோறும் சம்பளத்தில் பத்து சதவிகிதத்தைக் கட்டாயமாக ஆலயத்தில் செலுத்துவிட வேண்டும். அது சம்பளத்தில் பிடிக்கப்பட்டு ஆலய பொருளாளரிடத்தில் சேர்க்கப்படும். அதை வைத்து சபைகுருவின் சம்பளமும், ஆலயச் செலவுகளும் ஈடு செய்யப்படும். அவ்வாறு ஆலய நிர்வாகத்தைக் கவனிக்க ஓர் ஆலோசனைச் சங்கம் இருந்தது. அதில் உள்ள எட்டு உறுப்பினர்களும் ஆலயத் தேர்தலில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போது திருப்பத்தூர் ஆரோக்கியநாதர் ஆலய சபைச் சங்கத்தில் வயதான சிலரே பல வருடங்களாக திரும்பத் திரும்ப வெற்றிபெற்று ஆலய நிர்வாகத்தை தங்களின் கைவசம் வைத்திருந்தனர். அவர்கள் பெரும்பாலும் நிறுவனங்களின் உயர் பதவியிலிருப்பவர்கள். .சாதாரண சபை மக்கள் அந்தச் சபையில் அங்கம் பெற இயலாத நிலையில் அடக்கி ஆளப்பட்ட ஒரு நிலை இருந்ததும் தெரிந்தது! அந்த நிலையை நான் மாற்ற வந்துள்ளேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது!
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை அவ்வாறு தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிறப்புடன் செயல்பட்டது.. பெரும்பாலும் அவை நகரின் ஒரு பெரிய தேவாலயத்தை மையமாகக்கொண்டு இயங்கிவந்தன. ஒரு தேவாலயம் உள்ள பட்டணத்தில் அதை ஒரு குருசேகரம் என்று அழைக்கிறார்கள். உதாரணம் திருப்பத்தூர் குருசேகரம். அதுபோன்று. புரசவாக்கம், கீழ்ப்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை, கும்பகோணம், பொறையார், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், கிணத்துக்கடவு ,ஈரோடு, காரைக்குடி, மதுரை,சாத்தூர், திண்டுக்கல், கொடை ரோடு , கொடைக்கானல்.விருதுநகர் , உசிலம்பட்டி.,என்று மொத்தம் 110 குருசேகரங்கள் இயங்கிவந்தன. ஒரு குருசேகரத்தில் ஒரு சபை குரு இருப்பார். அதன் கீழ் சில கிராம சபைகள் இயங்கின. உதாரணமாக திருப்பத்தூர் குருசேகரத்தின் கீழ் எஸ்.வி. மங்களம் கிராம சபை இயங்கியது. அங்கெல்லாம் உபதேசியார் பொறுப்பு வகிப்பார். ஒரு மாவட்டத்தில் இயங்கும் ஐந்து முதல் பத்து குருசேகரங்கள் ஒரு மறை மாவட்டம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மறைமாவட்டத்துக்கு ஒரு தலைவர், ஒரு செயலர், ஒரு பொருளர், சில செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தம் 11 மறைமாவட்டங்கள் உள்ளன.
இங்கு மருத்துவமனை உள்ளதுபோல் வேறு பெரிய ஸ்தாபனங்கள் இயங்கின .தரங்கம்பாடியில் ஆண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், உசிலம்பட்டியில் பெண்கள் ஆசிரியை பயிற்சிப் பள்ளியும், திண்டுக்கல்லில் தொழிற் பயிற்சிப் பள்ளியும் இயங்கின.பொறையாரில் ஒரு கலைக் கல்லூரியும் இருந்தது.புரசைவாக்கத்தில் தரங்கை அச்சகமும் பதிப்பகமும் இயங்கியது. தஞ்சையில் முதியோர் இல்லமும், உடல் ஊனமுற்றோர் இல்லமும் இயங்கின.
திருச்சபையின் கல்விப்பணியில் மொத்தம் 1360 பள்ளிகள் உள்ளன. அனைத்தும் ஒரு கல்விக் கழகத்தின் கீழ் இயங்கியது. அதற்கு ஒரு தலைவர் இருந்தார். ஆசிரியர்களின் பணி அமர்த்துதல், இடமாற்றம் முதலிய அனைத்தையும் அவர்தான் கவனிப்பார். கல்விக் கழகத்தின் தலைவராக அப்போது திரு.வீ தனராஜ் இருந்தார். அவரை தாடி தனராஜ் என்று அன்போடு அழைத்தனர். அவர் எப்போதுமே தாடி வைத்திருப்பார். அவர் பொறையாரிலிருந்த டி.பி.எம்.எல். கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலம் அருமையாகப் பேசுவார்.
பேராயர் டீல் ஒய்வு பெற்று அவரின் தாயகமான சுவீடன் திரும்பிவிட்டார். அவர்தான் தமிழகத்தில் பணியாற்றிய கடைசி சுவீடிஷ் பேராயர். அவருக்குப்பின்பு பேராயர் ஆர்.பி. மாணிக்கம் முதல் இந்திய பேராயராகப் பதவி ஏற்றார். அவர் பேராயர் தேர்தலில் வென்று தரங்கைப் பேராயர் ஆனார். சபைச் சங்கத் தேர்தலில் திரு. விக்டர் வென்று செயலர் ஆனார். அவர் அப்போது பொறையார் கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார். திரு. பிச்சை ராபர்ட் பதவி விலகி மருத்துவக் கழகத்தின் தலைவராக மட்டும் செயல்பட்டார். அவர் கோயம்பத்தூர் மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவராகத் தொடர்ந்தார். டாக்டர் மனோகர் டேவிட் என்பவர் செயலர் விக்டரின் தம்பி. அவர் கண் மருத்துவம் பயில ஓராண்டு வியன்னாவுக்கு திருச்சபைச் செலவில் அனுப்பிவைக்கப்பட்டார்.
திருப்பத்தூரில் டாக்டர் ஃரெடரிக் ஜான் அறுவை மருத்துவம் பயில வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனை முழு சம்பளம் வழங்கியது. படித்து முடித்தபின்பு அவர் கட்டாயம் திரும்பி வந்து திருப்பத்தூரில் மூன்று வருடம் சேவை செய்யவேண்டும். டாக்டர் செல்லையாவுடன் டாக்டர் செல்லப்பாவும், டாக்டர் ராமசாமியும் அறுவை மருத்துவப் பகுதியில் தொடர்ந்து பணியாற்றினர்.
நான் ” ஆன் கால் ” என்னும் தயார் நிலை மருத்துவராக வாரம் ஒரு நாள் இருந்தேன். அப்போது கடும் ஆஸ்த்மா, மாரடைப்பு, கடும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்றவற்றுக்கு அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் வந்தனர். மருத்துவம் தொடர்பானவர்களை நான் டாக்டர் பார்த்தை அழைக்காமலேயே சிகிச்சை செய்யப் பழகிக்கொண்டேன். மாரடைப்பால் பலர் வந்ததால் அதைச் சமாளிக்க மருத்துவ நூலைப் பயன்படுத்தினேன். ஈ.சி.ஜி. எடுத்து அதை சரியாக அறிந்து கொள்ளவும் நானே முயன்று வெற்றி பெற்றேன்.அது தொடர்பான நூலையும் எப்போதும் கைவசம் வைத்திருந்தேன்.நாட்கள் செல்ல செல்ல இருதய நோயாளிகளை சிறப்பாக கவனித்து குணப்படுத்தும் ஆற்றல் பெற்றேன். குணமாகி வீடு திரும்பியவர்கள் என் கைகளைப் பற்றி நன்றி சொன்னதோடு அவர்களின் இல்லத்துக்கு விருந்துக்கும் அழைத்தனர். அங்கு செல்ல சிலர் வாகனமும் அனுப்பிவைத்தனர். செட்டி நாட்டில் இந்த விருந்து உபசரிப்பு அப்போது பிரபலமாக இருந்தது. அதுபோன்று நான் பல செட்டியார்களின் இல்லம் சென்று அறுசுவை உணவு அருந்தி வந்தேன். அப்படி செல்லும்போது அவர்கள் மகிழ்ந்தார்கள். மறுத்தால் முகம் சுளிப்பார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் காரைக்குடியில் நகைக்கடை வைத்திருந்த சிதம்பரம் செட்டியார். அவரின் குடும்பத்தினர் அனைவரும் அங்குதான் மருத்துவம் பார்க்க வருவார்கள்.. தமிழரின் விருந்தோம்பலை நான் அங்குதான் கண்டேன். அப்போதெல்லாம் .திருக்குறளின் விருந்தோம்பல் அதிகாரம் நினைவிற்கு வரும்.
தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டு மன்னர் ஃபிரெடரிக் அனுப்பிய இறைத்தூதர் சீகன்பால்க் தமிழ் பயின்று இறைப் பணியுடன் தமிழ்ப் பணியையும் மேற்கொண்டார்.அவர் தமிழ் எழுத்துகளை அச்சில் ஏற்றி தமிழுக்குப் பெருமை சேர்த்தார். அங்கு அவர் தொடங்கிய இறைப்பணி தமிழகம் முழுதும் பரவி இறைப்பணியுடன், கல்விப்பணி, மருத்துவப் பணி, சமூகப் பணி ஆகியவற்றை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை ஆற்றிவருவது பாராட்டுதற்குரியது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்நெய்தல்—பாணற்கு உரைத்த பத்து
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *