வழி

This entry is part 2 of 10 in the series 24 டிசம்பர் 2017

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


நானோடு நான் போய்க்கொண்டிருக்கிறேன்.
தொலைந்துபோன கைப்பேசிக்குள் சிலவும்
செயலிழந்துபோன கைப்பேசிக்குள் சிலவுமாய்
கண்காணிப்புக்காமராக்கள் காலாவதியாகிவிட்டன.
எல்லாநேரமும் என்னைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த
உளவாளிக் குறுஞ்செய்திகள்,
கண்றாவி விளம்பரங்கள்,
கையறுநிலைக்குத் தள்ளும் வந்த வராத அழைப்புகள்,
பார்த்த மாத்திரத்திலேயே பிச்சைக்காரியாக உணரச்செய்யும் எண்கள்,
நினைத்த நேரமெல்லாம் நான் கேட்காமலேயே திரையரங்குகளிலோடும்
புதுப்படங்களைப் பட்டியலிடும் பாக்ஸ்-ஆபீஸ் லாண்ட்லைன் எண்,
பாட்டுக்கேள் என்று பிடிவாதம் பிடிக்கும் எண்,
தொலைவின் தொலைவை எண்ணி
அலைக்கழிக்கவைக்கும் அண்டார்ட்டிகா அலைபேசியெண்,
ஆணாயிருந்தால் பெண்வேண்டுமா என்றும்
பெண்ணாயிருந்தால் ஆண்வேண்டுமா என்றும்
அன்றாடம் மாலை ஆறுமணிக்குக் கேட்கும் ‘ப்ரோக்ராம்ட்’ பெண்,
பச்சைக்குழந்தையின் விசும்பலில் அழைக்கும் கிராதக எண்,
எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்டு
விட்டு விடுதலையாகி
நான் நடைபயின்றுகொண்டிருக்குமிடம்
நீலவான் விரிபரப்பு
கும்மிருட்டுக் குகை
நீளும் ஒற்றையடிப்பாதை
நரம்புமுடிச்சுகளிடை
எல்லாமும்
எதுவுமில்லையாகப்
பரவும்
நிம்மதியொரு கணம்
மெய்பொய்யாகாத்
தருணமிதில்
நானோடு நான் அற்ற நான் மற்ற நான்
இன்னும் நடைபழகிக்கொண்டிருக்கிறேன்.

Series Navigationஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ‘ மீன்களைத் தின்ற ஆறு’
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *