வெள்ளாங் குருகுப் பத்து

This entry is part 6 of 10 in the series 24 டிசம்பர் 2017

வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது. ஆணை விடப் பெண் வேறு சில வண்ணங்களுடன் அழகாக இருக்கும். பெண்குருகின் வாலில் 26 முதல் 28 இறகுகளும், ஆண் பறவையின் வாலில் 14 முதல் 16 இறகுகளும் இருக்கும். நிலத்தில் இருக்கும்போது இது தன் வாலை மேலும் கீழும் அசைத்துக் கொண்டே இருக்கும். அதனால் இதை வாலாட்டி என்று வழங்குவதும் உண்டு.
இந்த இனத்தில் ஆணைக் காட்டிலும் பெண்பறவைகளே அதிகமாம். கருக்கொள்ளும் பருவம் வந்த்தும் பெண்ணானது ஆண் பறவையைக் கவரத் தொடங்கும். அம்முயற்சியில் ஏனைய பெண்பறவைகளுடன் சண்டை இடுவதும் உண்டு. போர் முடிந்த பின் ஆணைக் கூடி மூன்று முதல் நான்கு முட்டைகளை இடும். இட்ட முட்டைகளை ஆண் பறவையை அடைகாக்க வைத்துப் பெண் பறவை வேறோர் ஆணைத் துணையாகக் கொள்ளப் பறந்து போய்விடும். அந்தப் பறவையிடமும் கூடி முட்டையிட்டுப் பின் அந்த ஆண்குருகை அடைகாக்கச் செய்துவிட்டுப் போய்விடும்.
ஆண் பறவை 21 நாள்கள் அடை காக்கும். குஞ்சுகள் பொரிந்தவுடன் அவை தாமாக இரை தேடும் வரை அவறிற்கு இரை கொண்டுவந்து காக்கும் செயலைத் தாய்மையோடு அது செய்யும். வெள்ளாங்குருகின் குஞ்சு சிவந்து நீண்ட காலும் சிறிது நீண்ட மூக்கும் கொண்டு, கொக்கு, நாரை போன்றவற்றின் குஞ்சு போலவே இருக்கும் வளர வளரத்தான் வேறுபாடு தெரியும். இவை மழைக்காலம் எங்கெங்கு வருகிறதோ அங்கங்கே போய்த்தங்கி வாழும் இயல்புடையது.
ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுக்கும் சென்று திரும்பக்கூடியது. இமயமலைப்பகுதியிலுக்ம் கூட 6000 மற்றும் 7000 அடிகள் உயரம் உள்ள நீர்ப்பகுதிகளிலும் இவை வாழும். சேறுகளில் காணப்படும் சிறுசிறு புழு, பூச்சிகளையும், சிறு மீன்களையும் இவை பிடித்து உண்ணும் பழக்கம் உடையவை.[உரையாசிரியர் : வித்துவான் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை]
மேலும், இப்பத்துப் பாடல்களிலும் “வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநாரை” என்னும் இரணடு அடிகளும் காணப்படுகின்றன.
வெள்ளாங்குருகு என்பது பரத்தையாகவும், பிள்ளை என்பது தலைவனின் ஒழுக்கமாகவும், மடநாரை என்றது தூது போகும் வாயில்களகளாகவும் செத்தென என்பது அந்த ஒழுக்கமானது இடையிலே நின்றுவிட்டதைக் குறிப்பதாகவும் கொள்ள வேண்டும்.
வெள்ளாங் குருகுப் பத்து—1
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப, நக்க கண்போல் நெய்தல்
கட்கமழ் பானாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே!
[மடநடை=மடமையோடு கூடிய நடை; இது கால் மடங்கி நடக்கும் நடையெனக் கூறுவார்கள். நக்க=நகையாடிய; கள்=தேன்; நெக்க=நெகிழ்ந்து சிதைந்த; நேர்கல்லேன்=இசையேன்; பிள்ளை=பறவைக் குஞ்சு]
அவனை ஏத்துக்கோன்னு சொல்ற தோழிக்கு அவ பதிலா சொல்ற பாட்டு இது.
ஒரு நாரையானது வெள்ளாங்குருகின் குஞ்சினைத் தன் குஞ்சென நினைச்சுக்கிச்சாம். அதால அதைப் பாக்கப் போச்சாம். அந்த நாரை போகும்போது தன் காலால மிதிச்சலால நெய்தல் பூ மலந்துச்சாம். அதுலேந்து தேன் வாசனை வீசிச்சாம். அப்படிப்பட்ட எடத்தைச் சேந்த அவனை நான் இனிமே சேத்துக்க மாட்டேன்ன்னு அவ தோழிகிட்ட சொல்றா.
நாரை மிதிச்சதால நெய்தல் மலர்ந்து போச்சு; அதுபோல அவன் நெறைய பேர தூதா அனுப்பினான். ஆனா என் மனசு உடன்படலன்றது மறைவா சொன்னா.
வெள்ளாங்குருகு வேற, தன் குஞ்சு வேறன்னு தெரியாம நாரை போனது போலத்தான் நான் வேற அவ வேறன்னு நெனக்காம அவன் பிரிஞ்சு போயிட்டான்றதும் மறைபொருளாம்.
வெள்ளாங் குருகுப் பத்து—2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்று கானலம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப;
அறவன் போலும்; அருளுமார் அதுவே!
[கையற்பு இரற்று=செயலற்றுத் துயரத்துடன் கூப்பிடும்; புலம்பு=கடல்நிலம்; அறவன்=அறநெறி பேணுவோன்; அருள்=எவ்வுயிர்க்கும் இரங்கும் இரக்கம்]

அவன் வேற ஒருத்திகிட்ட போய்ச் சேந்து இருந்தான். ஆனா இப்ப திரும்பி வந்து சேரக் கட்டினவளுக்குப் பலபேரத் தூது உடறான். வரான். அவ சேக்க மாட்டேன்றா. அப்ப தோழி அவனைப் பத்தி ”அவன் ஒன்மேல ரொம்ப அன்பு வச்சிருக்கான்; ஒன் ஒறவையும் உடாம இருக்கான். அதால அவனைச் சேத்துக்கோன்”னு சொல்றா. அதுக்கு அவ பதில் சொல்ற பாட்டு இது.
வெள்ளாங்குருகின் குஞ்சை, நாரை தன் குஞ்சு நெனச்சுக்க்கிட்டுப் போச்சு. ஆனா போனபின்தான் அதுக்கு உண்மை தெரிஞ்சது. தன் குஞ்சு இல்லையேன்னு பொலம்புது. அது மாதிரியான கானல் இருக்கற கடல்கரையைச் சேந்தவன் அவன். அவன் அந்த வேற ஒருத்தியைத்தான் போய்ச் சேருவான்னு எல்லாரும் சொல்வாங்க. அவன் என்கிட்ட வச்சிருக்கற இரக்கமும் அதேபோல்தான். அவன் மத்தபடிக்கு அவங்களுக்குத்தான் துணையாவாண்டின்னு அவ சொல்றா.
வெள்ளாங் குருகிற் பத்து—3
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
உளர ஒழிந்த தூவி குவவுமணற்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடும் கூந்தல் நாடுமோ மற்றே
[உளர=கோத; ஒழிந்த=கழித்து விழுந்த; குவவு மணல்=உயர்ந்த மணல் மேடு]

அவன் அவள உட்டுட்டு வேற ஒருத்திகிட்டப் போயிட்டான். அப்பறம் கொஞ்ச நாள்ல திரும்பி கட்டினவ கிட்டயே வரலாமான்னு பல பேரைத் தூது அனுப்பினான். அவ எல்லாரையும் மறுத்துத் திருப்பி அனுப்பிட்டா; அவன் இப்ப தான் செஞ்ச தப்பை உணர ஆரம்பிச்சான். அதால மறுபடியும் ஒரு தூதை அனுப்பி
அவ ஊட்ல என்னா நடக்குதுனு ஒளிஞ்சிருந்து பாக்கறான். அப்ப தோழி வந்த தூதும் அவனும் கேக்கறமாதிரி சொல்ற பாட்டு இது.
”வெள்ளாங்குருகின் பிள்ளையைத் தன் பிள்ளைன்னு நெனச்சுகிட்டுப் போன நாரை அது இல்லன்னு தெரிஞ்சுக்கிட்டுத் துயரமா இருக்குது. அது அதோட இறகையெல்லாம் கோதிக் கழிக்குது அதால தூவிகள் போர் மாதிரி குவிஞ்சு கெடக்குது. அப்படிப்பட்ட எடத்துல இருக்கிறவன் அவன்; நல்ல அழகா கூந்தல் இருக்கற இவ அவன மறுபடியும் கூடுவாளோ?”
இறகைக் கோதிக்கழித்த தூவிகள் எல்லாம் போர் மாதிரி இருக்குன்னு சொல்றது அவன் வேற ஒருத்தி கிட்டக்கொண்டு போய்க் குடுத்த காசு எல்லாம் ரொம்ப அதிகம்னு மறைவா சொல்றா.
வெள்ளாங் குருகிற் பத்து—4
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநாரை
கானற் சேர்க்கும் துறைவனோடு
யான எவன் செய்கோ? பொய்கும் இவ்வூரே?
[கானல்=கானற் சோலை; சேக்கும்=தங்கும்; பொய்க்கும்=பொய்யாகப் பலவும் கூறும்]

அவன் வந்துட்டாண்டி, அவன சேத்துக்கோன்னு தோழின் சொல்றா. அப்ப அவ சொல்ற பாட்டு இது.
”ஒரு நாரையானது வெள்ளாங்குருகோட புள்ளையைத் தன் குஞ்சுன்னு நெனச்சுக்கிட்டு போவுது. அந்தக் கானலிலே தங்கிடுது. அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவன் அவன். அவனோட நான் என்ன செய்வேண்டி? ஊரெல்லாம் அவனப் பத்திப் பொய் பேசுதே”
நாரை அங்கியே போய்த் தங்கினது போல அவனும் அங்கியே தங்கிக் கிடப்பான்னு மறைவா சொல்றா.
வெள்ளாங்குருகிற் பத்து—5
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே!
[பதைப்ப=கோத; மறு=புள்ளி]
அவ அவனைச் சேக்க மாட்டேன்னு சொல்றா. அப்ப தோழி, “இவ்வளவு பிடிவாதமா ஏண்டி இருக்க; ஒனக்கு இப்ப மகப்பேறு வர காலம்டி. அந்தக் காலம் கழிஞ்சு போற மாதிரி நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கியே; அவன சேத்துக்க” ன்னு சொல்றா. அப்ப ஆவ் சொல்ற பாட்டு இது.
[பதைப்ப=அசைய; ததைத்த=நெருங்கிய; ஓதம்=கடல் அலை; பைஞ்சாய்ப் பாவை=சிறுமியாய் இருந்தபோது வைத்தாடிய கோரைப் பாவை]
”வெள்ளாங்குருகோட புள்ளைய தன் புள்ள நெனச்சுப் போன நாரையானது, அங்கியும் இங்கியும் சிறகடிச்சு அசையறதால அந்த நெய்தல் நெலத்துல அலையெல்லாம் பெரிசா அடிக்கும். அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவ அவனுக்கு நான் சின்ன வயசில வெளயாடின கோரைப் பாவையத்தான் புள்ளயா வச்சுக்கணும்”
அவனைக் கட்டிக்கிட்டவ நான்தான்னும் தெரியும், எனக்கு மகப்பேறு நாளுன்னும் தெரியும், அப்படி இருக்கச்சே அவன் என்ன மறந்து வேற ஒருத்திக் கிட்டப் போய் சேந்துட்டானேன்னு அவ சொல்றா.
வெள்ளாங் குருகிற் பத்து—6
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெண்கழிப் பரக்கும் துறைவன்
எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!
[பதைப்ப=கோத; மறு=புள்ளி]

அவன் கொஞ்ச நாள் வேற ஒருத்திக்கிட்ட போயிருந்தான். அவளும் அவன்கிட்ட கோவிச்சுக்கிட்டா. அதால அவகிட்ட தூது உட்டான். ஆனா அவ அவன ஏத்துக்கல்; அதால அவன் அப்பறம் கட்டினவகிட்டே போய்ச் சேந்துடலாம்னு நெனச்சான். அதால கட்டினவகிட்ட தூது உட்டான். தூதா வந்தவங்களுக்குப் தோழி பதில் சொல்ற பாட்டு இது.
”வெள்ளங்குருகோட புள்ளயைத் தன் புள்ளன்னு நெனச்சு நாரை அங்க போகுது. ஆனா தன் புள்ள இல்லன்னு தெரிஞ்சத்கப்பறம் தன் இறகெல்லாம் கோதி உடுது. அந்தக் கடற்கரையில அந்தச் செவப்பான புள்ளி இருக்கற இறகெல்லாம் பறக்குது. அப்படிப்பட்ட எடத்தைச் சேந்த அவன் எனக்கென்னவோ கட்டினவகிட்ட ரொம்ப அன்பா இருக்கற மாதிரிதான் தெரியறான். ஆனா அவளுக்கு வேற மாதிரி தெரியறானே? நான் என்ன செய்வேன்”ன்னு தோழி சொல்றா.
வெள்ளாங் குருகுப்பத்து–7
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை இருந்து மாலை சேக்கும்
தெண்கடற் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனனெங் காதலோனே
[சேக்கும்=தங்கும்; காதலோன்=புதல்வன்; சேயோன்=தலைவன்]

வேற ஒருத்திக்கிட்ட போனவன் கட்டிக்கிட்டவ மறுபடியும் வர நெனக்கறான். அதால தூது உட்டும் அவ ஒத்துக்கல; ஆனா தெருவுல வெளயாடிக்கிட்டிருக்கற அவளோட புள்ளயத் தூக்கிட்டு வந்தா நான் அவன வெறுக்க முடியாதேன்னு அவ நெனக்கறா. ஆனா அவளோட புள்ள மட்டும் தனியா வரான். அப்ப நிம்மதியா அவ சொல்ற பாட்டு இது
வெள்ளாங்குருகோட புள்ளய தன் புள்ளன்னு நெனச்சுக்கிட்டு போன நாரை காலையிலேந்து மாலைவரை அங்கியே தங்கிக் கெடக்கு. அந்த எடத்தைச் சேந்தவனான அவன் கூட சேந்து என் புள்ள வரல. தனியா அவன் மட்டுமெ வரான்.
போன நாரை காலையிலேந்து மாலைவரை அங்கியே தங்கிட்ட மாதிரி அவனும் வேற ஒருத்திக்கிட்ட போனவன் அங்கியே தங்கிட்டான்னு மறைவா சொல்றா.
வெள்ளாங் குருகிற் பத்து—8
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிகும்
அம்மா மேனிஎன் தோழியது துயரே!
[கண்டிகும்=கண்டோம்; அம்மாமேனி=அழகிய மாமை நிறம் பொருந்திய மேனி=கொட்கும்=திரியும்=

கட்டினவள உட்டுட்டு வேற ஒருத்திக்கிட்ட போயிட்டான். அவளும் அவன்கிட்ட லேசா கோபம் காட்டறா. அதால திரும்பவும் கட்டனவகிட்டயே போற மாதிரி போக்குக் காட்டினா அவ கோபத்தை கொறைச்சுப்பான்னு நெனச்சான். அதால வரான். ஆனா அவன் வர்ற காரணம் தோழிக்கித் தெரிஞ்சு போச்சு. அப்ப அவன மறுத்துத் தோழி சொல்ற பாட்டு இது.

”வெள்ளாங்குருகோட புள்ளயைத் தன் புள்ளன்னு நெனச்சுக்கிட்டுப் போன நாரை போன காரியத்தை மறந்து அந்தக் குளிர்ச்சியான கடற்கரையிலத் தன் துணையோட திரியுது. அப்படிப்பட்ட எடத்தைச் சேந்த அவன் அழகான மாமை நெறம்கொண்ட என்தலைவியோட துயரத்தைத் தீர்க்க வந்திருக்கானே! இது என்னாடி ஆச்சரியம்!”.
தோழி அவன் வந்திருக்கறதைக் கிண்டலாச் சொல்றா. போன நாரை அங்கியே போன காரியத்தை மறந்து திரியறாப்ல அவனும் அவகிட்ட அன்பு இல்லாம வேற ஒருத்திகிட்டத்தான் போய்த் திரிவான்றது மறைபொருளாம்.

வெள்ளாங் குருகிற் பத்து—9
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அலகும் பனிநீர்ச் சேர்ப்ப!
நின்னொன்று இரக்குவென் அல்லேன்;
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே
[பசிதின=பசிபெரிதும் வருத்த; பனிநீர்=குளிர்ச்சியான நீர்; அல்கும்=தங்கியிருக்கும்]

அவன் கட்டிக்கிட்டவளை உட்டுட்டு வேற ஒருத்திக்கிட்ட போயிட்டாலும் கட்டினவளைப் பத்தி நல்லாவே தெரியும். அவ சாப்பிடற நேரத்துல போனா தன்னை வெறுக்கமாட்டா; போன்னு சொல்ல மாட்டா; ஏத்துக்குவான்னு நெனச்சுக்கிட்டு வரான். அப்படி வர அவனைத் தோழி பாத்துட்டுச் சொல்ற பாட்டு இது.
”வெள்ளாங் குருகோட புள்ளயத் தன் புள்ளன்னு நெனச்சுக்கிட்டுப் போன நாரை, பசியால வருந்திக்கிட்டு இருக்கற குளிர்ச்சியாய் இருக்கற எடத்தச் சேந்தவனே! நான் ஒங்கிட்ட வேற ஒண்ணும் கேக்கல; இவளோட அழகை நீதான் எடுத்துகிட்டுப் போன; அதை மட்டுமாவது இவளுக்குத் திரும்பிக் குடுத்திடு”
இவ அழகு நீ போனதாலத்தான் போச்சு அதால அதைத் திருப்பிக் குடுன்னு கேக்கறா; ஒன்கிட்ட இருக்கறத ஒண்ணும் நாங்க கேக்கல. எங்ககிட்ட இருந்து எடுத்துக்கிட்டுப் போனியே அதைக் குடுன்னு கேக்கறா. நாரை பசியோட இருக்கற மாதிரி நீயும் பசி வந்ததாலத்தான் இங்க வந்திருக்கன்னு மறைவா சொல்றா.
வெள்ளாங்குருகிற் பத்து—10
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ!
பண்டையின் மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி பெரும! மயங்கினள் பெரிதே
[இனைஇ=வருந்தி; முயங்குமதி=தழுவாவாயாக]

அவள உட்டுட்டு அவன் வேற ஒருத்திக்கிட்ட போனான். அந்த ஒருத்தியும் இப்ப லேசாக் கோபம் காட்டறா; சரி, நாம்ப மறுபடி கட்டினவகிட்ட போனா, எங்க தன்ன சுத்தமா மறந்துடுவானோன்னு நெனச்சு அந்த ஒருத்தி அவ கோபத்தை மறந்து தன்னைச் சேத்துப்பான்னு நெனக்கறான்; அதால அவன் ஊட்டுக்கு வரான். அப்ப அவன் வர்ற காரணம் தெரிஞ்சுக் கட்டனவ சொல்ற பாட்டு இது.
”வெள்ளாங்குருகோட புள்ளையத் தன் புள்ளன்னு நெனச்சுக்கிட்டு அதைப் பாக்கப் போன நாரை மனசு ரொம்பவும் துன்பப்பட்டு கெடக்கற எடத்தைச் சேந்தவனே! அந்த ஒருத்தி நீ இங்க வந்துட்டேன்னு தெரிஞ்சு மயங்கிக் கெடக்கறா; அதால நீ அவகிட்டயே போயி அங்கியே மறுபடி நல்லா அன்பு காட்டி அவளையே தழுவிக்கிட்டு இரு”
அவன் இங்க இருக்கறதுதான் அவளுக்குப் பிடிக்கும்; ஆனாலும் அந்த ஒருத்தி செஞ்ச செயலால மனம் வெதும்பி இதைமாதிரிப் பேசறா.

நிறைவு
.

Series Navigationவளையாபதியில் வாழ்வியல் .தொடுவானம் 201. நல்ல செய்தி
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *