வளையாபதியில் பெண்ணியம்.

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 19 in the series 31 டிசம்பர் 2017

மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்நூலின் பார்வை பெண்மை பற்றி,கற்புடைப் பெண்டிர், பொதுப் பெண்டிர்(கணிகையர்),இல்லிருந்து வழுவிய பெண்டிர்(ஒருவனுக்கு உரியவளான பின் வேறொருவன்பால் மனம் செலுத்திய பெண்டிர்) என மூன்று வகையினதாய் அமைகிறது.

1.போற்றற்குரியார்;(கற்புடைப் பெண்டிர்)

நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும்

பீடுறும் மழைபெய் கவெனப் பெய்தலும்

கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்

பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே.(7)

இல்லறத்தில் கருத்தொருமித்து வாழும் தலைவன் தலைவியரில் நாடும் ஊரும் புகழுமாறு வாழ்தலும்,பருவமழை பெய்யெனப் பெய்வதும் தலைவியின் திறத்தால் மட்டுமே விளையும் எனும் இக்கருத்தினை வலியுறுத்தும் பாடல்களைப் பிற இலக்கியங்களிலும் காணலாம்.

சான்றாக,

தெய்வந் தொழாஅள் கொழுநர்த் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.(குறள்-55)

(கணவனையே வணங்கி வாழ்பவள் மழையைப் பெய்விப்பாள்)

(சிலம்பு-புகார்க்காண்டம்-கனாத்திறம் உரைத்தகாதை.)

சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கி

————————————————

————————————————

——————————-யாம்ஒரு நாள்

ஆடுதும்.(இவ்விரு குளங்களில் நீராடி காமனை வணங்கினால் துயர் தீருமென்ற தேவந்தியிடம்,பீடு அன்று

என மறுக்கிறாள் கண்ணகி.)

இனி மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கவுந்தியடிகள் மாதரியிடம்.

,

`இன்றுணை மகளிர்க்கு இன்றி யமையாக்

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது

பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்`

(கற்பெனும் உறுதி கொண்ட கண்ணகியைத் தவிர

வேறோர் பெருமை வாய்ந்த தெய்வத்தை தான் கண்டதில்லை) என்கிறார்.

இராவணனால் சிறையெடுக்கப் பட்ட சீதாபிராட்டியும்,

`எல்லை நீத்த வுலகங்கள் யாவுமென்

சொல்லி னால்சுடு வேன்அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாறென்று வீசினேன்’

(உலகங்கள் அனைத்தையும் தன் ஒரு சொல்லால் சுட்டு

அழித்துவிட இயலும்.(இந்தச் சிறையொன்றும் பெரியதில்லை)ஆனால் அவ்வாறு செய்தால் தன் கணவன்

இராமனின் வீரத்திற்கு அது இழுக்காகும் என்பதால் அவ்வெண்ணத்தைத் தூக்கி எறிந்ததாகக் கூறுகிறாள்.

சானகி சொல் நடைபெறக் கூடியதே என்பதனைச் சிலம்புச் செல்வி மதுரையைத் தீக்கிரையாக்கியதே மெய்ப்பிக்கும்.

2.போற்றப்படாதார்(கணிகையர்);

.

இவர்களின் வாழ்க்கை பிற ஆடவர் தரும் பொருளையே நம்பி இருந்தது.முடியாட்சி நிறைந்திருந்த

அக்காலத்தில் போர் மலிந்திருந்தது.இதனால் வீரர் பலரின்

மரணம் நிகழ்ந்தது.இதனால் இளம் விதவைகளும், ஆதரவிழந்த பெண்களும் அதிகரித்தனர்.இவர்கள் இந்த

நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இவ்வாறே பொதுப்பெண்டிர்

உருவாயினர் எனலாம்.

இவர்களைச் சேர்ந்தொழுகுதல் நன்மை தராது என்னும் சமூகத்தின் குரல் வளையாபதியில் எதிரொலிக்கிறது.

இம்மகளிர் ஆறு,யாழ்,தீக்கடைக்கோல்,வண்டு,குரங்கு,

பூங்கொடி,மரக்கலம்,விலங்கு,நிலவு போன்றவற்றோடு

ஒப்பிடப் படுகின்றனர்.

ஆறு மழை பொழிந்து வெள்ளம் வருமாயின் நீர்நிறைந்தும்,நீர்வரவு குறைந்தால் வறண்டும் போகும்.இவரும் விரும்புவோரின் பொருள் குறைந்தால்

மாறுவர்.

விலங்கு மேய்ச்சல் நிலத்தில் புல் குறைந்தால் வேறிடம் தேடும்.

மரக்கலம் வணிகர்களின் பொருள் கொண்டு கடலில் மூழ்கும்.

குரங்கு கிளை விட்டு கிளை தாவும், வண்டு மலர் விட்டு மலர் போகும்.

இவர்களின் இயல்பும் இப்படி மாறும்.

நாள்தொறும் நாள்தொறும் நந்திய காதலை

நாள்தொறும் நாள்தொறும் நய்ய வொழுகலின்

நாள்தொறும் நாள்தொறும் நந்தி உயர்வெய்தி

நாள்தொறும் தேயும் நகைமதி யொப்ப (56)

நிலவானது நாளும் நாளும் வளர்ந்து முழுமதி ஆகும். பின்னர் நாளும் நாளும் தேய்ந்து மறைந்து விடும்.

தாம் விரும்புவோரிடம் பொருள் உள்ளவரை இம்மகளிர்

அன்பு மிகக்காட்டுவர்.பொருள் தீர்ந்தபின் அன்பிலாது போவர்.

இவ்வாறு பொதுப்பெண்டிர் பற்றி உரைக்கிறது இந்நூல்.

3.தூற்றப்படுபவர்(இல்லிருந்து வழுவியோர்).

பள்ள முதுநீர்ப் பழகினும் மீனினம்

வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்

கள்ளவிழ் கோதையர் காமனோடு ஆயினும்

உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ.(8)

காலம்காலமாய்த் தான் உறையும் நீர்த்துறையே ஆனாலும்

புதுவெள்ளத்தின் வரவினை விரும்பும் மீன் இனம் போல்

மன்மதனைப் போல் அழகுடைய கணவனைப் பெற்றிருந்தாலும் மனம் வேறுபடும் மகளிர் சிலரும் உளர்.

எனவும்.பிறிதொரு பாடலில்,

உண்டியுள் காப்புண்டு உறுபொருள் காப்புண்டு

கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு

பெண்டிரைக் காப்பது இலமென்று ஞாலத்துக்

கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே (9)

உணவையும்,

தேடிய செல்வத்தையும்,கல்வியால் பெற்ற அறிவையும் காத்திட இயலும்,பெண்களைக் காத்திட இயலாது.

எனவும் கூறும் இந்நூலின் கருத்தினை உடன்படும்

இலக்கியங்களும் உள.அவையாவன,

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை. (குறள்-57)

(மகளிர்க்கு அவர்கட்கு உரியோர் தரும் பாதுகாப்பினைக்

காட்டிலும் அவர்கள் தாமே தமக்கமைத்துக் கொள்ளும் பாதுகாப்பே சிறந்தது.)

கற்பின்மக ளிரின்நலம் விற்றுணவு கொளும்

பொற்றொடி நல்லார் நனிநல்லர்.(நீதிநெறிவிளக்கம்-84)

(இதன் பொருளாவது,

இல்லறத்தில் நின்று வழுவி ஒழுகும் பெண்டிரைக் காட்டிலும் தம்மை விற்று வாழும் (வாழ்வாதாரத்திற்காக இவ்வொழுக்கம் புரிவார் ஆதலின் இவர்பால் குற்றமில்லை

எனப்பட்டது.)பெண்டிர் சிறந்தவராவர்.)

பின்னுறு பழியிற்கு அஞ்சாப் பெண்ணுயிர் (யசோதர காவியம்)

(இதன் பொருளாவது, ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும்

பழிபாவத்திற்கு அஞ்சிடாத பெண்டிர் என்பதாம்) என்பனவாம்.

4.எழும் சிந்தனைகள்;

இலக்கியம் என்பது அது எழுதப்பட்ட காலச் சமுதாயத்தைப்

பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.இந்நூலைப் பொறுத்தவரை

1.குலவொழுக்கம் அதாவது சாதிப் பிரிவினைகள் வழக்கில்

இருந்தன.

2.உயர்ந்த குலத்து ஆண்கள் மற்ற குலப்பெண்டிரை விழைவது தவறில்லை .மணம் புரிவது மட்டும் கூடாது.

3.ஆடவர் பல பெண்டிரை மணம் புரியலாம்,..

.4.சமுதாயம் ஆணாதிக்கம் பெற்றதாகவே அமைந்திருந்தது.

5.பெண்கள் மூன்று நிலையினராய் கணிக்கப்பட்டனர்.

அ.ஒன்று தெய்வ நிலைக்கு உயர்த்தப் பட்டனர்.

ஆ.இன்னொன்று இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர்.வரைவின் மகளிர்(கணிகையர்)எனப்பட்டனர்.

இ. வேற்று சாதி ஆடவனை மணம் செய்யும் பெண் ஒழுக்கம் இல்லாதவளாகக் கருதப்படுதல்

(.தன்னை மெய்ப்பிக்க அவளுக்குத் தெய்வம் துணை

வர வேண்டுமாம்).

6.வினையே ஆடவர்க்கு உயிரே,

மனையுரை மகளிர்க்கு ஆடவர் உயிரே-என்னும் தொல்காப்பியரின் கூற்றே பேசப்பட்டது.

7.பெண்களின் கல்வி மற்றும் கலைகள் பற்றி ஏதும் தெரியவில்லை.

8.ஆணாதிக்கம் பெற்ற சமுதாயத்தில் வரையறுக்கப்பட்ட

கோட்பாடுகளைக் கடைபிடித்தால் மட்டுமே வாழலாம் என்ற

நிலைப்பாடு.

9. சங்க இலக்கியங்கள் பொதுப்பெண்டிர் பற்றிப் பேசுவதுண்டு.ஆயினும் இந்த அளவிற்கு இழித்துரைப்பதில்லை.

10.இன்று பாரதியின் கூற்றுப்படி சாதம் படைத்த பெண்மை

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வந்து விட்டது.

11.நாகரிகம் வளர்ந்தது, வாழ்க்கை வசதிகள் பெருகியது.

.ஆனாலும் இன்னும் பெண்மைக்கு விடியல் மட்டும் வந்து சேரவில்லை…,வன்கொடுமை,அமிலவீச்சு,வீச்சறிவாள்,மிரட்டல்

எத்தனை எத்தனை?. புது வருடம் வசந்தம் ஏந்தி வருமோ? .

Series Navigationஈரமுடன் வாழ்வோம்2017 ஒரு பார்வை
author

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    சிலம்பு கம்பன் ஆகியவற்றிலிருந்தும் சான்றுகள் காட்டி உள்ளமை பாராட்டுக்குரியது. இறுதியில் தற்காலப்போக்கிற்கேற்றவாறு முடித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *