சீமானின் புலம்பல் வினோதங்கள்

This entry is part 1 of 12 in the series 7 ஜனவரி 2018

அக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில் திரு சீமான் தனக்கே உரிய கோபத்தோடும் உணர்ச்சியோடும் “தம்பி”யாக எதிரே உட்கார்ந்திருந்த பேட்டியாளரிடம் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு புதியதாக இருந்திருக்காது. ஏனெனில் இலுமினாட்டி என்பது பரவலாக தமிழில் புழங்கிவரும் சொல்லாக கடந்த சில வருடங்களில் ஆகியிருக்கிறது.

இலுமினாட்டி என்று தமிழில் எழுதி கூகுளில் தேடினார் 32800 பதிவுகள் இருக்கின்றன என்று சொல்லுகிறது.

இந்த இலுமினாட்டி என்பது அமெரிக்க புராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் பரப்பிய கட்டுக்கதை. முக்கியமாக உலகமயமாக்கப்படும் அமெரிக்க பொருளாதாரத்துக்கு எதிராகவும், அமெரிக்காவிலிருந்து வெளியேறும் வேலைவாய்ப்புகளுக்கு எதிராகவும், வட அமெரிக்க வியாபார ஒப்பந்தம் (nafta) உருவாக்கிய கிளிண்டன், அல் கோர் போன்ற அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவும், அந்த ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க பணக்காரர்களுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இந்த கட்டுகதையில் போப்பாண்டவர் (கத்தோலிக்கர்), யூத மதத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆகியோரும் வில்லன்களாக இருப்பார்கள்.

இலுமினாட்டி என்பது இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பிரபலமாக ஆவதற்கு ராபர்ட் லுட்லம் போன்ற மர்மக்கதை எழுத்தாளர்களின் புத்தகங்களும் ஒரு காரணம். ராபர்ட் லுட்லம் போன்ற மர்மக்கதை எழுத்தாளர்களின் கதைகளில் அழிவு கொலை தீமை கழகம் (அகொதீக) போன்ற மர்மமான அமைப்புகள் உலக பொருளாதாரம் போன்றவற்றை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டிருக்கும். இதனை எதிர்த்து கதாநாயகன் வீரதீரமாக போரிட்டு சதிகளை முறியடிப்பார்.

இந்த பின்னணியில் பார்த்தால், ஏன் சீமான் அவர்கள் ஜார்ஜ் புஷ், போப்பாண்டவர் ஆகியோருடன் சேர்த்து திரு ரஜினிகாந்த் அவர்களையும் கோர்த்துவிட்டார் என்று புரிந்துகொள்ளலாம்.


முதலில் அவர் காட்டிய இலுமினாட்டி படங்களை பார்ப்போம். ஜார்ஜ் புஷ், அவரது மனைவியார் ஆகியோர் பாபா முத்திரையை காட்டுகிறார்கள். ஜார்ஜ் புஷ் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர். டெக்ஸாஸில் புகழ்பெற்ற புட்பால் விளையாட்டுக்குழுவின் பெயர் டெக்ஸாஸ் லாங்ஹார்ன் என்பது. Texas Longhorn என்பது டெக்ஸாஸ் மாநிலத்தின் புகழ்பெற்ற மாடு. இதன் நீண்ட கொம்புகளால எளிதில் அடையாளம் காணக்கூடியவை. இந்த மாட்டை அடையாளமாக வைத்திருக்கும் டெக்ஸாஸ் லாங்க்ஹார்ன் புட்பால் விளையாட்டுக்குழுவின் அடையாளம் அந்த மாட்டின் முகத்தை ஞாபகப்படுத்தும் விரல் முத்திரை. அந்த விளையாட்டுக்குழுவின் ஆதரவாளர்கள் அந்த விரல் முத்திரையை காட்டுவார்கள். அவர்களுக்கு பாபாவையோ அல்லது இலுமினாட்டியையோ தெரிந்திருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

டெக்ஸாஸ் லாங்ஹார்ன்


நார்வே நாட்டுக்காரர்கள் ஜார்ஜ் புஷ்ஷின் விரல் சைகையை சாத்தான் முத்திரை என்று தவறாக கருதினார்கள் என்ற செய்தி இங்கே

அமெரிக்க ஊமையர் மொழி கைவிரல்களை வைத்து பேசுவதை அடையாளமாக கொண்டது. அமெரிக்க ஊமையர் மொழியில் இந்த பாபா முத்திரை i love you என்ற பொருள் கொண்டது. இந்த விரல் முத்திரை பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரபலமானது.

போப்பாண்டவர் பிலிப்பைன்ஸ் சென்றபோது அங்கு கூட்டத்தில் இந்த விரல் முத்திரையை காட்டினார்.
அதன் இணைப்பு இங்கே

இதில் முக்கியம் என்னவென்றால், புராடஸ்டண்ட் கிறிஸ்துவத்தில் மிக முக்கியமான எதிரி போப்பாண்டவர் மட்டுமல்ல, யூதர்களும்தான். யூதர்களுக்கு எதிராக மார்ட்டின் லூதர் எழுதியவையே பின்னாளில் யூதர்களுக்கு எதிராக பெரும் பேரழிவை ஏற்படுத்த ஊக்குவித்தன என்றும் வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். அதனை அடியொற்றியே சீமானும் யூதர்கள் தவிர வேறு யாரும் போப்பாண்டவர்கள் ஆக முடியாது என்ற பொய்யையும், போப்பாண்டவர் காட்டும் ஐ லவ் யூ விரல் முத்திரையை evil என்றும் சொல்லுகிறார். அதற்கு அவரது கிறிஸ்துவ வளர்ப்பு காரணமாக இருக்கலாம்.

இணையத்தில் சீமான் ஒரு விரலை உயர்த்தி காட்டி பேசும் புகைப்படத்தையும் isis அமைப்பில் காட்டும் ஒரு விரல் (ஏகத்துவம்) சின்னத்தையும் ஒப்பிட்டு, சீமான் “நான் உங்களை சேர்ந்தவன்” என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு சொல்லுகிறார் என்று கிண்டல் பண்ணியிருக்கிறார்கள். அது கிண்டல் தான். தீவிரமாக எடுத்துகொள்ளாதீர்கள்.

சீமான் அக்னி பரிட்சை நிகழ்வில் பேசியதை யூட்யூபில் புதிய தலைமுறை நிறுவனம் பகிர்ந்திருக்கிறது. அதற்கு பின்னூட்டம் எழுதியவர்கள் சீமான் இப்படி “உண்மைகளை” சொன்னதற்காக புல்லரித்து புளகாங்கிதம் அடைந்து தமிழ் தாய்மொழி இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து துரத்துவோம் என்று கூக்குரல் இடுகிறார்கள். (அது தனது கோரிக்கையாக சீமான் இதுவரை சொல்லவில்லை என்பது ஒரு ஆறுதல்)

__
திரு சீமானின் முக்கியமான கொள்கை ஒன்றே ஒன்றுதான். அது தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும் என்பது. தற்போதைய முதல்வரும் துணை முதல்வரும் அக்மார்க் தமிழர்கள்தான். ஆனால் அதுவல்ல அவரது கோரிக்கை. தான் முதல்வராக ஆகவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. அதற்குத்தான் தமிழன் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை. தொடர்ச்சியாக எம்ஜியார் தமிழக முதல்வராக ஆகிகொண்டிருந்தபோது கலைஞர் கருணாநிதி, தமிழன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆகக்கூடாதா என்று கெஞ்சினார். அதற்கு கலைஞர் குடும்பத்தினரை வடுகர் என்று எதிர்ப்பிரச்சாரம் செய்தார் எம்ஜியார்.

ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் தமிழர்கள் இல்லை என்ற பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்துவிட்டார்கள். இதெல்லாம் அவலமான அரசியல்கள். கமலஹாசனும் அக்மார்க் தமிழர்தான். தமிழ்நாட்டில் இருக்கும் பல கட்சிகளின் தலைவர்களும் அக்மார்க் தமிழர்கள்தான். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் அன்புமணி, ராமதாஸ் ஆகியோர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச் ராஜா போன்றோர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் திருமாவளவன், ரவிக்குமார் போன்றோர், கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன் போன்றோர், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போன்றோர் இவ்வளவு பேரும் அக்மார்க் தமிழர்கள்தானே? தமிழர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றால், நல்லக்கண்ணுவை முதல்வராக ஆக்குவேன் என்று ரஜினிகாந்த் சொல்லி ஆதரவளிக்கவேண்டியதுதானே என்று கேட்கும் சீமான் போன்றவர்கள் இத்தனை அக்மார்க் தமிழர்களில் ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டியதுதானெ? பிரச்னை தமிழர் ஆள வேண்டும் என்பதல்ல, தான் ஆள வேண்டும் என்பது. இதற்கு தமிழ் அடையாளம் ஒரு ஸ்டெப்னி.

இந்த கோரிக்கைக்குக் காரணம் தனிநபர் துதியும், தனிநபர்கள் நடத்தும் கட்சிகளுக்கு மக்கள் வரலாற்று காரணங்களால் ஆதரவளித்ததுதான் இல்லையா? ஆனால் “கன்னட ஜெயலலிதா”வுக்கு மாற்று “தெலுங்கு கருணாநிதி” என்ற நிலையை உருவாக்கியது அதிமுகவும் திமுகவும்தானே? தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் இல்லாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாஜக போன்ற தேசிய கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால், அடிக்கடி முதல்வர்கள் மாற்றப்பட்டிருப்பார்கள். ஏராளமான அக்மார்க் தமிழர்கள் முதல்வர்களாக இருந்திருப்பார்கள். இந்த வடுகர், அன்னியர், தமிழர் ஆகிய கோஷங்கள் இன்றைக்கு போல வலுவாக இருந்திருக்காது என்பது ஒரு முரண்நகை.

உதாரணமாக கர்னாடகாவில் தரம் சிங் என்ற காங்கிரஸ் முதல்வர் ஆட்சியில் இருந்தார். வீட்டில் இந்தி பேசும் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த கன்னடர். ஆனால், அவர் அக்மார்க் கன்னடர் அல்ல; ஆகையால் அவர் முதல்வராக ஆகக்கூடாது என்ற கோஷம் கர்னாடகாவில் எழவே இல்லை.

கலைஞரும் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் மாறி மாறி 1969லிருந்து சுமார் 46 வருடங்கள் ஆண்டிருக்கிறார்கள். “தமிழ் முதல்வர்” கோரிக்கையாளர்களின் பார்வையில் இவர்கள் மூவருமே தமிழர்கள் அல்லர். இவ்வாறு வேறெந்த ஜாதியும் குலமும் இனக்குழுவும் முதல்வர் முத்திரை இல்லாமல் போனதால், அந்தந்த ஜாதி அமைப்புகள் அரசியல்கட்சிகளாக பரிணாமம் பெற்று தங்கள் கோரிக்கைகளை முதல்வர் முத்திரை மூலம் பெற வேண்டும் என்ற ஆசையில் ”தமிழ் முதல்வர்” கோரிக்கையின் பின்னால் நிற்கிறார்கள்.

ஆனால் ஏன் இந்த இனக்குழு அடிப்படையிலான கட்சிகள் அந்தந்த இனக்குழுக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களை முழுமையாக கைப்பற்றவில்லை? பெண்ணாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மூன்றாவது இடத்தை பிடித்தார். ஏன்?

ஏனெனில், ஜெயலலிதாவோ அல்லது கருணாநிதியோ அல்லது எம்ஜியாரோ ஆட்சியில் இருந்தாலும், அதிகாரப்பரவல் என்பது அந்தந்த ஜாதியினருக்கும் இனக்குழுக்களுக்கும் முழுமையான அளவிலேயே நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஜெயலலிதா தான் கன்னட பார்ப்பனர் என்பதால் கன்னட பார்ப்பனர்களுக்கு மட்டுமே படியளக்கவில்லை. கருணாநிதி வெள்ளாளர் என்பதால் வெள்ளாளர்களுக்கு மட்டுமே கொட்டி கொடுக்கவில்லை. எம்ஜியார் மலையாளி என்பதால் மலையாளிகளுக்கு தமிழகத்தை பட்டா போட்டு கொடுத்துவிடவில்லை. சொல்லப்போனால் இவ்வாறு மிகமிகசிறுபான்மையாக இருந்ததே இவர்களது பலம்.

தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர ஜாதி உணர்வு காரணமாக பல ஜாதிகளின் நோக்கம் தான் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை மற்றொரு பலமான ஜாதி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான். அதனால், எல்லாருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய மிகச்சிறு சிறுபான்மையை சேர்ந்த ஒருவர் நடுவராக இருக்க தகுதி பெற்றவராகிவிடுகிறார்.

ஆகையால் அதிகாரப்பரவலை இப்படிப்பட்டவர்கள் உறுதி செய்துவிடுகிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் எம்ஜியாரும் எல்லா சமூகத்தினருக்குமான அதிகாரப்பரவலை உறுதி செய்திருக்கவில்லை என்றால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆகையால் தமிழன் அரசாள வேண்டும் என்று கலைஞர் சொன்னதும், தமிழன் அரசாளக்கூடாதா என்ற சீமானின் புலம்பலும் தன்னுடைய ஜாதி அடையாளத்தையும் மற்றவர்களின் ஜாதி அடையாளங்களையும் மறைக்கவும் பூசி மொழுகவுமான ஒரு உத்திதானே தவிர உண்மையான கோரிக்கை அல்ல.

இந்த நோக்கில் திராவிட கொள்கையும் தமிழ் கொள்கையும் ஒரே மாதிரியானவை. ஜாதிகளை மறைத்துகொண்டு திராவிடம் என்ற அடிப்படையில் தனக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று கேட்ட கலைஞர் அண்ணா போன்றவர்களுக்கும், ஜாதிகளை விட்டுவிட்டு தமிழன் என்ற அடிப்படையில் தனக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று கேட்கும் சீமானுக்கும் வித்தியாசம் இல்லை. யார் வில்லன்கள் என்பதுதான் வித்தியாசம்.

ஒரு பேச்சுக்கு சீமான் அவர்களை நாடார் ஜாதியை சேர்ந்தவர் என்று வைத்துகொள்வோம். சீமான் அவர்கள் முதல்வராக ஆகிவிட்டால், மற்ற ஜாதிக்காரர்கள் “தமிழால் வீழ்ந்தோம்” என்று கட்டுரைகள் எழுதுவார்களா மாட்டார்களா? எப்படி மற்ற மொழி பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ”திராவிடத்தால் வீழ்ந்தோம்” கருத்தும், அதன் டெமகாகரி சீமானும் வருகிறார்களோ அதே போல “தமிழால் வீழ்ந்தோம்” என்று மற்ற ஜாதிக்காரர்கள் வரமாட்டார்களா?

இன்று அனைத்து பிராந்திய கட்சிகளுமே தனிநபர் அல்லது தனி குடும்ப அமைப்புகளாகவே இருக்கும் சூழ்நிலையில் எப்படி இவை அனைத்து ஜாதிகளுக்கும் முதல்வராகும் வாய்ப்பு (அது ஒரு சிம்பாலிக்கான பதவியாக இருந்தாலும்) கிடைக்கும்?

இதற்கு முன்னரே சொன்னது போல தீர்வுகள் உண்டு. அது கம்யூனிஸ்டு, பாஜக, காங்கிரஸ் போன்ற பிராந்திய கட்சிகள் அல்லாத கட்சிகளை ஆதரிப்பது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் முதல்வர் பதவி வர வாய்ப்பு உண்டு என்றால் அது மஹாராஷ்டிரத்தில் முஸ்லீமான அப்துர்ரஹ்மான் அந்துலே அவர்களை முதல்வராக்கிய காங்கிரஸாலோ, அல்லது உம்மன் சாண்டி என்ற கிறிஸ்துவரை முதல்வராக்கிய காங்கிரஸாலோ, அல்லது 1970இலேயே தாழ்த்தப்பட்டவரான கர்ப்பூரிதாகூரை பிகாரின் முதல்வராக்கிய காங்கிரஸாலோ, பிற்படுத்தப்பட்டவரான, பெரும்பான்மை சமூகத்தின் உறுப்பினரல்லாத யோகி ஆதித்யநாத் அவர்களை முதல்வராக்கிய பாஜகவாலோ, ஜாட்களே ஆட்சி செய்து வந்த ஹரியானாவில் கட்டார் அவர்களை முதல்வராக ஆக்கிய பாஜகவாலோ தான் முடியும்.

ஆகவே உண்மையிலேயே அதிகாரப்பரவல் வேண்டும், தமிழர்களின் அனைத்து ஜாதியினருக்கும் மதத்தினருக்கும் முதல்வராக ஆக வாய்ப்பு இருக்கவேண்டும் என்று கருதுபவர்கள் ஆதரிக்கவேண்டிய கட்சி காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவையே.

Series Navigationஇரவு
author

சின்னக்கருப்பன்

Similar Posts

9 Comments

 1. Avatar
  சிவசங்கரன் says:

  ஆழமான பல கேள்விகளை நம்முள் இக்கட்டுரை எழுப்புகிறது.

  1.தனிநபர் அல்லது தனிக் குடும்ப அரசியலுக்கு ஏன் பிராந்திய கட்சிகள் இரையாகின்றன ?
  2.தேசிய கட்சிகளில் இந்தச்சிக்கல் இல்லையா ? காங்கிரஸ்?
  => காங்கிரஸ் கட்சியை விதிவிலக்காக கொள்ளலாம் இப்பொழுது இருக்கும் மோசமான நிலையில் காங்கிரஸ் இருந்தாலும் தனிக் குடும்ப அரசியலில் இருந்து விடுபட அதற்கு திராணி(potential) உள்ளது என்றே கருதுகிறேன்.
  3.தனிநபர் / தனிக் குடும்ப அரசியல் செய்தாலும் அதிகார பரவலாக்கலை உறுதி செய்தால்தான் பதவிக்கு வர முடியும் எனும்போது அப்பதவியில் பல்வேறு தரப்பினரும் வருவதால் என்ன வித்தியாசம் வரப்போகிறது அல்லது அதனால் என்ன பயன்?
  => பயன் என்னவென்றால் அதிகாரம் இன்னும் அதிகம் பரவலாகும். இது ஓர் அடுத்த கட்ட நகர்வு குறியீட்டு ரீதியில் சமூகத்தில் ஒரு தாக்கம் இருக்கலாம்.

  பிராந்திய அரசியலுக்கு முன்பான தமிழக வரலாற்றில் இருந்தும், நாட்டின் பிற பகுதி அரசியலையும் தேசிய அரசியலையும் நோக்கும் பொழுது நம் தேர்வாக காங்கிரஸ் பாஜக அல்லது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்றாக அமைய வேண்டும் என்பது என் தனிப்பட்ட முடிவு. காரணம் கொள்கை சார்ந்த அரசியலை இக்கட்சிகள் முன்னெடுக்கின்றன என்பதே. தேசிய கட்சிகள் பிராந்திய நலனை புறந்தள்ள முடியாது என்பது என் கருத்து.

  4. பிராந்திய நலனையே முதன்மை கொள்கையாக முன்னிறுத்தும் பிராந்தியக் கட்சிகள் தனிநபர் தனிக் குடும்ப அரசியல் அல்லது ஊழல் போன்ற படுகுழியில் வீழ்வது ஏன் ? ( முதல் கேள்வியும் இதுவும் ஒன்று தான்)

 2. Avatar
  சிவசங்கரன் says:

  இல்லுமினாட்டி சதிக் கோட்பாட்டின் தோற்றுவாய் பற்றிய குறிப்புகளுக்காக கட்டுரையாசிரியருக்கு நன்றிகள்.

  இணையத்தில் இல்லுமினாட்டி சதிக் கோட்பாட்டை நம்புபவர்களின் உரையாடல்கள் திகைப்படையச் செய்கின்றன மூடிய மனதுடையவர்களான அவர்களுடன் உரையாடுவது சோர்வளிக்கிறது.

 3. Avatar
  BSV says:

  அக்மார்க் தமிழரென்றால் யார்? சீமான் குறிப்பிடும் தமிழர் யார்? தமிழைத்தாய்மொழியாகக் கொண்ட பெற்றோரைக்கொண்டவர்கள்; தமிழக்த்தில் பிறந்து வாழ்ந்து தமிழ் மக்கள் வாழ்க்கை, பண்பாடு இவற்றோடு இணைத்துக்கொண்டு, தமிழ்மக்கள் வாழ்க்கை நலத்திற்காகவும் பண்பாட்டு அடையாளங்களுக்காக தம் வாணாளைப் போராடிச் செலவழிப்போரும் கூட தமிழராக மாட்டார். எனவே ஜயலலிதா,கருநநிதி, வைகோ, விஜய்காந்த், பலபல கட்சிகளின் பலபல தலைவர்கள் இதிலடக்கம்ப). தமிழே வீடுகளில் பேசினாலும், தமிழறிஞர்களாக இருந்தாலும் (எ.கா: தமிழறிஞர் பரிதமாற்கலைஞர் ஒரு தெலுங்கு பார்ப்பனர; ஏராளமான தமிழ் எழுத்தாளர்களுக்கு தாய்மொழி தமிழ் கிடையாது) ஆனால் இவர்கள் தமிழர்கள் ஆக மாட்டார்கள். ஒரே அளவு கோல் தமிழ் தாய்மொழியாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டில் பிறந்து, தமிழர்களோடு உணர்ச்சிப்பூர்வமாக இணைத்துக்கொள்ளபவ்ராக இருக்க வேண்டும்.

  இதைத்தான் கட்டுரையாளர் எதிர்நோக்கிப் பேசியிருக்க வேண்டும். தமிழரை சீமான் கணிப்பில் உள்ள தமிழர் ஆளவேண்டுமா? இல்லை, மேலே சொன்ன தமிழரல்லாதவர் ஆளவேண்டுமா? என்பதே கேள்வி. இதைத்தான் சீமான் கேட்கிறார். கட்டுரையாள்ர் திறமையாக் ஜாதிகளோடு முடிச்சுப்போட்டு அக்கேள்வியை விட்டு விலகி ஓடுகிறார்.

  கேள்விக்குப் பதில் தமிழரல்லாதாவரும் ஆளலாம் என்றால் வெறும் ஜெயலலிதா, கருநாநிதி, எம்ஜிஆர் என்று குறிப்பிட்டாலும் விலகி ஓடும் கோழைத்தனமே. ஏன்? ஒரு வெள்ளைக்காரர் – 50 ஆண்டுகளுக்குமேலாக தமிழகத்தில் வாழ்ந்து தமிழறிஞராகி, தமிழ்மக்களோடு இணைத்துக்கொண்டால், நம்மை ஆளலாமா? காலனி ஆதிக்கமென்றலல்லவா பேசுவோம்? இங்கு சீமான் சொல்வது: எவரும் தமிழகத்தில் கட்சித்தலைவர்களாக இருக்கலாம். தமிழ்மக்களுக்காக போராடலாம்; தமிழ், தமிழ் மக்கள் என்று உணர்ச்சுப்பூர்வமாக இணைத்துக்கொள்ளலாம். ஆனால் எம்மை ஆளும் ஆட்சித்தலைவராகக் கூடாது என்பதே.

  இதை கட்டுரையாளர் எப்படி பார்க்கிறார்? இப்படிச்சொல்லி, பல தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, தான் தலைவராக ஆசைப்படுகிறார் சீமான் என்கிறார். முதலில் சொல்லும் கொள்கை. பின்னர் தனிநபர் ஆராய்ச்சி.

  உங்கள் பதிலென்ன? ஏன் தமிழரை தமிழரல்லாதாவர் ஆள வேண்டும்? First deal with the basic principle of Seeman. Then you can jump to other matters. Can’t you? Others may also try to answer the question. I reserve my own opinion on the question now.

  1. Avatar
   சிவசங்கரன் says:

   ஏன் முதல்வராக மட்டும் கூடாது ?முதல்வர் பதவி அதிகாரங்கள் மிக்கது . அதில் வேற்றாள் வந்தால் எளிதாக தமிழகத்திற்கு தீங்கு இழைக்க முடியும் என்பதாலா ?

   வழுவான எதிர்கட்சிகள், தகவல் அறியும் உரிமை, Ombudsman அமைப்பு உள்ளிட்டவைகள் மூலம் ஜனநாயகத்தில் அரசை மக்கள் கட்டுபடுத்தலாம்

 4. Avatar
  BSV says:

  //கர்னாடகாவில் தரம் சிங் என்ற காங்கிரஸ் முதல்வர் ஆட்சியில் இருந்தார். வீட்டில் இந்தி பேசும் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த கன்னடர். ஆனால், அவர் அக்மார்க் கன்னடர் அல்ல; ஆகையால் அவர் முதல்வராக ஆகக்கூடாது என்ற கோஷம் கர்னாடகாவில் எழவே இல்லை.//

  தமிழகத்திலும்தான் எம்ஜீஆர், ஜயலலிதா, கருநாநிதி, முதல்வராகக்கூடாதென்ற எதிர்ப்பு எழவேயில்லை. எம்ஜீஆர் மலையாளி என்று சிலர் சொன்னாலும் மக்கள் சட்டைசெய்யவில்லையே! சீமானின் கோரிக்கை ஒரு புதிய முயற்சி. அதில் வெற்றிபெறுவோமென்று அக்கோரிக்கையைத் தொடர்ந்து பரப்புகிறார்.

  இரஜனியை தரம் சிங், எம் ஜி ஆர், ஜயலலிதா, கருநாநிதியோடு ஒப்பிடவே முடியாது. இரஜினி உறுதியாக தமிழர்களையோ, அவர்கள் பண்பாடு, மொழி, இலக்கியம் இவற்றோடு தன்னை இணைத்துக்கொள்ளவேயில்லை. அவருக்குத் தமிழ் பேச மட்டுமே தெரியும். அதுவும் ஒரு அந்நியரைப்போலத்தான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வாழ்ந்தும் அவர் பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. சினிமா, பணம் என்று 40 ஆண்டு வாழ்க்கை. தமிழர்கள் நலன்களுக்காக உரிமைக்காக குரல் கொடுக்கவேயில்லை. அப்படி நெருக்கடி வந்த போது கன்னட மக்களுக்கு தான் விரோதியாகக்கூடாதென்ற நினைப்பில் இமயமலைக்கு ஓடி விட்டார். கருநாடகத்தில் அவர் உறவுகள் எல்லாம் வாழ்கின்றன. தரம் சிங், ஜயலலிதா, கருநாநிதி, எம்ஜிஆர் அப்படி செய்தார்களா?

  இச்செய்தியை வாசியுங்கள்? https://timesofindia.indiatimes.com/city/pune/rajinikanths-village-waits-for-a-visit-from-its-hero/articleshow/62399171.cms.

  ஆக, இரஜினிகாந்த, தமிழரல்லாத தமிழராகக்கூட அவர் மாற மனமில்லதவர்தான். சினிமா அவரைத் தூக்கிமேலே விட அதைப் பயன்படுத்தி முதலமைச்சராக ஆசைப்படுகிறார். இதை சீமான் மட்டுமன்று; பலரும் எதிர்க்கிறார்கள் என்பது கட்டுரையாளருக்கு நன்கு தெரியும்.

 5. Avatar
  சிவசங்கரன் says:

  BSV அவர்களே,

  1) முதலில் ஜனநாயகத்தில் பிரதமரோ முதலமைச்சரோ , மக்களுக்கு தலைமை தாங்குபவர்கள் அல்ல. மக்களுக்காக வேலை செய்யும் பணியாளர்கள் குழுவுக்கு தான் அவர்கள் தலைவர்கள்.
  நடைமுறையில் தனி மனித வழிபாட்டு மனநிலை காரணமாக அவர்களை தலையில் தூக்கி வைத்து காவடி ஆடுகிறார்கள்.
  முதல்வரின் roles and responsibilities, duties, functions ஆகியவற்றுக்கு எல்லைகள் உண்டு.
  2) ஒரு வேட்பாளரை அவர் முன்வைக்கும் செயல் திட்டம், அவ்வேட்பாளர் கடந்து வந்த பாதைகளில் இருந்து அவரின் நேர்மை, நிர்வாகத் திறமை ஆகியவற்றை மட்டும் பார்த்தே வாக்காளன் தேர்வு செய்யலாம்.
  ரஜினி கன்னடர் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவர், உள் நோக்கம் கொண்டவர் என்று நிராகரிக்கலாம். ஆனால் ஒரு வேட்பாளரை தமிழர் இல்லை என்று நிராகரிப்பது நடைமுறையில் பயனளிக்காது.

  ஜனநாயக வழியில் சட்டத்தின் படி விதிமுறைகளின் படி ஒரு வெள்ளைக்காரனோ ஒரு கோடி வெள்ளைகாரர்களோ தமிழகத்தில் வாழ்ந்து முதல்வர் மற்றும் இன்னபிற பதவிகளுக்கு வந்தாலும் அதற்கு பெயர் காலனி ஆதிக்கம் அல்ல.

  வெள்ளையரோ ரஜினியோ திட்டம் போட்டு நேர்மையானவராக வேடமிட்டு, பொய்யான செயல்திடங்களுடன் பதவிக்கு வந்தபின் அவர்கள் வேலையை காண்பித்தால் என்ன செய்ய?
  முதல்வர் பதவியோ பிரதமர் பதவியோ ஜனநாயகத்தில் முற்றதிகாரம் கொண்டது அல்ல. எதிர்கட்சிகளும் நீதிமன்றமும் இருக்கிறது. மிஞ்சிப்போனால் 5 ஆண்டுகள். வாக்காளன் அவன் தேர்வை மாற்றிக்கொள்ளலாம்.

  • தனி மனித வழிபாட்டு மனநிலையில் இருந்து மக்கள் வெளிவர உழைத்து
  • குடிமகனுக்கு உரிய சிவில் உரிமைகள், அரசியல் உரிமைகளை கற்பித்து
  • அதைப்பெறுவதற்குண்டான போராட்ட உணர்வை மக்களுக்கு ஊட்டுவதே
  ஒரு அரசியல் கட்சியின் அல்லது இயக்கத்தின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். அடையாள அரசியல் எனக்கு உவப்பில்லை.
  இன்னும் வலிமையான தகவல் அறியும் உரிமைச்சட்டம், பிரதமர் முதல்வர்களையும் கேள்வி கேட்டு பதில் பெறும் உரிமை கொண்ட Ombudsman அமைப்பு, உள்ளாட்சிகளில் மட்டுமாவது மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் உரிமை.
  ஜனநாயகம், வரலாறு பற்றிய தங்களது புரிதல் குழந்தைத்தனமாக உள்ளது.

  1. Avatar
   BSV says:

   மண்ணின் மைந்தர் கோட்பாடு அரசியலைத் தவிர்த்து மற்றவிடங்களில் செய்லில் வந்துவிட்டது. வெளிநாடுகள் பலவற்றில் அரசியலிலும் வந்துவிட்டது.

   எடுத்துக்காட்டாக, சில மாநிலங்களில் மாநில அரசு வேலைகளில் அம்மாநிலத்தில் பிறந்தோர், வசிப்போர், அம்மாநிலமொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் மட்டுமே சேரமுடியும். எஸ் சி எஸ் டி இட ஒதுக்கீட்டிலும் அம்மாநிலத்தைச்சார்ந்தவராக இருந்தால்தான் மஹாராஷ்ராவிலும் தில்லி யூனிபன் பிரதேசத்திலும் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். தில்லிப்பல்கலைக்கழகத்தில் கீழ் வரும் பொறியிய்ல் கல்லூரியில் 85 விகிதம் தில்லி மாணவருக்கே. அதாவது 12ம் வகுப்பை தில்லியில்தான் முடித்திருக்க வேண்டும்.

   இதற்கெல்லாம் உங்கள் லாஜிக்கைப் போடுங்கள்; நகைச்சுவையே மிஞ்சம். ஏனெனில், இப்படி மண்ணின் மைந்தர் கோட்பாடு தன் ஆட்களை மட்டுமே தகுதியிடையர்களாகப்பார்க்கும்போது மற்றவர் எவ்வளவுதான் அவரைவிட உயர்ந்தவரயினும் ஏற்காது. ஏன்? மண்ணின் மைந்தர் கோட்பாட்டுக்குக் காரணம், சுய மரியாதை, வாய்ப்புகள் பறிபோகாமலிருத்தல், ஆண்டுகள் செல்லசெல்ல மண்ணின் மக்கள் அந்நியருக்கு அடிமையாவதைத் தடுக்க. இங்கே அவரை இவர் நன்றாயிருப்பார்; தகுதி எனப்து எவருக்கும் உண்டு என்ற ஜனநாயக்க்கொளகை, தன் கண்ணில் தன் விரலை விட்டுக் குருடாக்குவதாகும்.

   இதை நாம்புரியாததால், தென்னக இரயில்வே முழுவதும் இன்று பீஹாரிகள்தான் வேலையில் இருக்கிறார்கள். சமீபத்தில் பாலிடெக்னிக் ஆசிரியர் வேலையில் அமர்ந்தவர்கள் தமிழே பேசத்தெரியாத்வர் மட்டுமல்ல, தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் வெறுக்கும் பீஹாரிகள் (மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் ரிசர்வேசன் விண்ணப்பத்தை தமிழில் நிரப்பிய பெண்ணை அவதூறாகப் பேசிய பீஹார் க்ளார்க்கைப்பற்றிய செய்திகள் படித்திருப்பீர்கள்)

   இந்நிலை எங்கும் வராமலிருக்கத்தான் சீமான் அரசியலில் அந்நியர் நம்மை ஆள்பவராக வரக்கூடாதென்கிறார். இராமதாஸ்தான் பாலிடெக்னிக் விவகாரத்தை வெளியில் சொன்னவர். தமிழில் எழுத பேச வாசிக்கத்தெரிதலாகவது குறைந்த பட்சமாக‌ முதல்வராக ஆசைப்படும் ஒருவருக்கு முதலில் வேண்டிய தகுதி. மற்றத் தகுதிகள் பின்னர்தான். இத்தகுதியை வைத்திருந்தால் பீஹாரிகள் அரசு வேலைகளை ஆக்கிரமிக்க முடியுமா? இரஜினி அரசியலில் நுழைய முடியுமா? அந்நியர் ஆட்சி செய்யும் போது நம்மிடையே நம்மை ஆட்சிசெய்ய ஒருவருக்குமே தகுதி இல்லையென்றாகிறது.

   சர்ச்சில் இந்தியாவுக்கு சுதந்தரம் தரும் விவாதத்தில் – அப்போது அட்லி பிரதமர் அங்கே – விடுதலை பெற்ற இந்தியா அயோக்கியர்களிடம் சுரண்டல்காரர்களிடமும் சென்றுவிடும் என்று நகைத்தார். வரலாறு அதை நிரூபித்திருக்கிறது. அதற்காக ஆங்கிலேயரை அழைத்து நம் நாட்டை மீண்டும் கொடுத்துவிடலாமா? நாம் சரியில்லையென்றால் நம்மைத் திருத்த வழிகளை ஆராய்ந்து செயல்படுத்துவதுதான் சரி. அந்நிய மொழிபேசும் அந்நிய மாநிலத்துக்காரனை முதல்வராக்க முடியாது. செருப்பைச் சரியாக்குவதற்கு காலை வெட்டுவார்களா? செருப்பை வெட்டிச் சரிசெய்வார்களா?

   1. Avatar
    சிவசங்கரன் says:

    அரசின் செயல்பாடுகளை சுருக்கமாக வரையறுப்பதென்றால்
    1. தமிழ் நாட்டினருக்கு உணவு உடை உறையுள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்
    2. தமிழ் பண்பாடு பேணப்பட வேண்டும்
    என்று கூறலாம்.

    இவற்றை செயல்படுத்த பணியாளர்களை நாம் நியமித்தால் அவர்கள் எல்லோரும் ஏமாற்றுப்பேர்வழிகளாக உள்ளனர்.

    இதுவொரு நிர்வாகச்சீர்கேடு.
    ==>இதற்கு தங்கள் தரப்பின் தீர்வு , பணியாளர்கள் நம்மவர்களாக இருத்தல்.
    ==> என்னுடைய தீர்வு, நம் மக்களுக்கு உரிமைகளை கற்பித்து; போராட்ட உணர்வை ஊட்டுவது.
    விவாதம் நிறைவடைந்தது என்று நினைக்கிறேன் ?

    தங்கள் வாதத்தை பரிசீலிக்கிறேன். எதிர்காலத்தில் நான் ஏற்றுக்கொண்டாலும் கொள்வேன் அனுபவங்களை பொருத்து ?

    1. Avatar
     சிவசங்கரன் says:

     சிறு திருத்தம்:-
     /////இதற்கு தங்கள் தரப்பின் தீர்வு , பணியாளர்கள் நம்மவர்களாக இருத்தல்.////// என்பதில் ‘நம்மவர்களாக’ என்பதற்கு பதில் ‘மண்ணின் மைந்தர்களாக’ அல்லது ‘அக்மார்க் தமிழராக’ என்று மாற்றி வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

     ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ராஜாஜி, கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, வை.கோ, விஜயகாந்த் இவர்கள் எல்லோரையும் நான் நம்மவர்களாக நம்மவர்களில் இருந்து வந்தவர்களாக தான் நினைக்கிறேன். இவர்களில் பலரை நான் ஏற்கவில்லை; விமர்சனங்கள் உண்டு. காரணங்கள் வேறு.

     முற்றும்.

     திண்ணை இதழுக்கு பணிவான வேண்டுகோள்:- Edit செய்யும் வசதி இருத்தல் நலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *