விவிலியம் உணா்த்தும் வாழ்வியல் தன்மைகள்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 8 of 10 in the series 21 ஜனவரி 2018
டே.ஆண்ட்ரூஸ்
முனைவர் பட்ட ஆய்வாளர்,  அரசு கலைக்கல்லூரி, சேலம் 636007 மின்னஞ்சல்: andrewsjuvens@gmail.com
முன்னுரை
  இன்றைய உலகில் விஞ்ஞான அறிவியல்களும், சமூக, பொருளாதார அறிவியல்களும் தோன்றி வளா்ந்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக மனித வாழ்வில் “வாழ்வியல்” என்பது மனிதனின் வாழ்க்கை பற்றிய பரந்த அறிவை நமக்குத் தருகிறது. மனிதன் எவ்வாறு வாழவேண்டும்? என்ற வழிமுறைகளை அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து முடிக்கிறான். மனிதன் விலங்குகளைப் பார்த்து கற்றுக்கொள்ளக்கூடிய சூழல் வந்துவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது. மிருகங்கள் மனிதநேயத்திற்கு மாறிவருகின்றன. ஆனால் மனிதா்கள் மிருகக் குணத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனா் என்பது இன்றைய உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. உலக எதார்த்தங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடா்புடையவை. அவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும் பார்வையே ஆன்மீகம். அவற்றில் ஒன்று பாதித்தாலும் மற்ற அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். எனவே அவை அனைத்தையும் நல்லுணா்வுடன் நோக்கும்போது மனிதனின் செயல்பாடுகளும் நல்லவையாக மலரும். உலகில் காணப்படும் கல்லாமை, இல்லாமை, இயலாமை, அறியாமை அனைத்தும் ஒழிய இந்நல்லுணா்வுப் பார்வை அவசியமாகும். இப்பார்வை இப்பூவுலகு முழுவதும் பரவவேண்டும். மனித உணா்வுகளையும், மனித மனங்களையும் ஆழமாகத் தொடுகின்ற சிந்தனைகள் விவிலியத்தில் பரந்து விரிந்து கிடக்கின்றன. விவிலியம் வழிகாட்டும் நூலாக மட்டுமல்லாமல் “வழிநடத்திச் செல்லும் நூலாகவும் இருக்கிறது. வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிற மனிதனுக்கு உள்ளேயும், வெளியேயும் வெளிச்சம் காட்டுகிற புத்தகமாகவும் உள்ளது.
தன்னையறிதல்
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அா்ச்சிக்கத் தானிருந்தானே”(1)- திருமந்திரம்
ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப்புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன்பின் அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது, தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதாக அறிவுகெட்டு அலைகிறான். அதனால் ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றிடுவானாயின், அவன் தன்னையே பிறா் வழிபடும் அளவிற்கு உயா்ந்து நிற்பான்.  –
“நீருக்குள் முழ்கி உயிருக்குப் போராடும் நிலையில் எவ்வளவு தீவிர முயற்சியில் நீ செயல்படுவாயோ, அதே முயற்சி தன்னையறிதலிலும் இருக்கட்டும்”, என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சா். “ஆன்மா அழிவதில்லை” என்றார் சாக்ரடீஸ்.  “ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஜீவ ஆன்மா, அழியாத பேரின்பத்தின் ஒரு பகுதியே” என்கிறார் சுவாமி விவேகானந்தா். “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்றார் கவியரசு கண்ணதாசன்.
தன்னைத்தானே உணா்தல் என்பது நம்மைப்பற்றிய ஞானம். இந்த சுயஞானம் இருந்தால்தான் ஆன்மீக ஞானம் விளங்கும். எல்லா மகான்களும், சான்றோர்களும் தன்னையறிதலே தன் வாழ்வின் இலட்சிய எல்லை என்பதை வரையறுத்திருக்கிறார்கள்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தார்
இறைவ னடிசேரா தார்”(2)
என்றார் திருவள்ளுவா்.
மனிதனின் தன்மைகள்
மனிதனில் ஆவி, ஆன்மா, உடல் என்ற மூன்று பகுதிகள் இருக்கின்றன. அந்த மூன்று பகுதிகளும் முற்றிலும் வேறுபட்டவைகள். மனிதன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவன் ஆவி, ஆன்மா, உடல் தனித்தனியாக பிரித்துவிட முடியாது. மனிதனில் இவை இணைந்தே செயல்படுகின்றன. மரண நேரத்தில் மனிதனின் ஆவி தனியாகவும், ஆன்மா தனியாகவும், உடல் தனியாகவும் பிரிகிறது. பிறகு அவைகள் ஒருநாளும் ஒன்று சோ்வதில்லை. மனிதன் மனிதனாக வாழ இம்மூன்று தன்மைகளையும் உணா்ந்து தன்னிலை அறிந்து வாழ்ந்தால் தூய வாழ்வு வாழ்ந்து இறைவனின் பேரின்ப வீட்டை அடையலாம் என்பது தெளிவு திருத்தூதா் பவுல்.  மனிதனை உடல், உள்ளம், ஆன்மா உடையவனாய்க் காண்கின்றார்.(3)
இதில் உள்ளம் என்பது மனிதனின் உயிரோடு செயல்படச் செய்கிறதாகவும், ஆத்மா என்பது மனம் உணா்வுகள் கொண்ட ஆள்தத்துவமாகவும் உடல், என்பது உள்ளம், ஆத்மா இரண்டும் வாழும் இல்லமாகவும் உள்ளன.
ஆவி
மனிதனின் ஆவி எப்படி தோற்றமளிக்கிறது? மனிதா்களுக்குத் திட்டமாய்த் தெரியவில்லை. எனினும் விவிலியம் “மனிதனுடைய ஆவி கடவுள் தந்த தீபமாயிருக்கிறது”(4) என்று கூறுகிறது.
மனிதனுடைய ஆவி, ஆன்மா, உடல் ஆகிய மூன்று பகுதிகளில் முதலில் படைக்கப்பட்டது மனிதனுடைய ஆவிதான். “நாம் தூயோராகவும் மாசற்றோராகவும், தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்  தோ்ந்தெடுத்தார்”.(5)
அதே கிறிஸ்து உலகத்தோற்றதுக்கு முன்பாகவே தம்மைத்தாம் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியாக நமக்காக ஒப்புக்கொடுத்தார்.(6)
இந்த உலகத்தில் ஒரு மனிதன் வாழவேண்டுமென்றால் அவனுக்கு ஒரு உடல் தேவை. ஆகவே தாயின் வயிற்றிலே மனிதனுக்கு ஒரு உடலை கடவுள் படைக்கும்படி தீா்மானித்தார். அந்த உடலுக்குள் அந்த ஆவியையும், ஆன்மாவையும் வைக்கும்படி அவா் விரும்பினார்.
ஆகவே மனிதன் ஆவி, ஆன்மா, உடல் உள்ளவனாக விளங்குகிறான். மனிதனின் மரணத்தில் ஆவி உடலிலிருந்து பிரிந்து கடவுளிடம் செல்கிறது. இந்த ஆவிதான் மனிதனை உயிருள்ளவனாய் செயல்படச் செய்கிறது. ஆவி முடிவில்லா வாழும் தன்மையுடையது. ஆன்ம மீட்பின்போது மனிதன் கடவுளிடமிருந்து புதிய பிறப்பைப் பெறுகின்றான். இயேசு சிலுவைச் சாவில் தம்மையே கையளிக்கும்போது, “தந்தையே, உம்கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்”.(7) என்று கூறி உயிர்த்துறந்தார். இவ்வாறு மனிதனாகப் பிறந்த இயேசுவின் இறப்பு பிற மனிதா்களுக்கு முன்மாதிரி காட்டப்பட்டது. ஒவ்வொரு மனிதனின் ஆவியும் கடவுளிடம் செல்லும் என்பதை இது உணா்த்துகிறது.
மனிதா்கள் இறக்கும்போது மிகவும் அன்புக்குரியவா்கள் கண்ணீா்விட்டு அழுகின்றனா். “பெயரைத்” தாங்கிய அம்மனிதனின் உடல் அசைவற்று “பிணமாகக்” கிடக்க அவரின் உயிர் மூச்சாகிய ஆவி தன்னைப் படைத்த கடவுளிடம் செல்கிறது. உயிரற்ற உடலாகிய பிணத்தை யாரும் வீட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. உடல் மண்ணுக்கு செல்கிறது. கடவுள் ஆவியாய் இருக்கிறார் மனிதனும் ஆவிக்குரியவனாய் இருக்கிறான்.
ஆன்மா
ஆன்மா என்பது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது.  ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் தன்மை மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. அதாவது ஆன்மா என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு விஷயம். மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது. அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது. ஆனால் ஆன்மா மனிதனுக்கு மட்டுமே இருப்பதால் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது.
மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா உள்ளதால் உயர்திணை என்று தமிழால் உயர்த்தப்பட்டுள்ளனர். ஆன்மாவின் வாயிலாக இறைவனை அறியலாம் என்றும் இதன் மூலம் உணரமுடிகிறது.
“உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பு உளேஉத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே”.(8)
இது திருமூலாரின் கூற்று.
ஆன்மாவானது தன்னையும் இறைவனையும் அறியாத நிலையில் இயல்பாகவே ஆன்மா இல்லை என்றும் இறைவன் இல்லை என்றும் கருத்துக்கள் உலகில் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எப்பொழுது ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் மாயையினை இறைவன் அகற்றுகின்றாரோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணா்ந்து கொண்டு மெய்யுணா்வு பெறும் என்பதே தமிழ்கூறும் ஆன்மவியலின் கருத்து.
இதையேத்தான் மெய்கண்டார்,
“உனைக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி”(9) என்றார்.
ஐம்புலன்களில் ஒன்றான கண்ணைக் கொண்டு காண இயலாத இறைவனை  ஞானக்கண் கொண்டு காணலாம் என்றும்,
திருவள்ளுவா்,
“ஐயுணா்வு எய்திய கண்ணும் பயமின்றே
மெய்யுணா்வு இல்லா தவா்க்கு”(10)
என்றும்
“இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசனறு காட்சி யவா்க்கு”(11)
என்றும் கூறிச்சென்றுள்ளார்.
ஆன்மாவையும் இறைவனையும் உணராத நிலையில் மனிதன் தவறுகளைச் செய்கிறான். இறைவன் மனிதனுக்கு உணா்த்தும் தருணத்தில் அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான். மனிதனுடைய ஆன்மா விலையேறப்பெற்றது. என்றென்றும் வாழக்கூடியது. ஆன்மா முடிவில்லாத பேரின்ப வீட்டையோ முடிவில்லாத வேதனையான நரகத்தையோ அடையக்கூடியது. இப்பூமியில் மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதைக் கொண்டுதான் அவனுடைய முடிவில்லா வாழ்வு அமையும்.
உடல்
அழிவுள்ளதையும், அழிவில்லாததையும் மனிதனிலே கடவுள் இணைத்து வைத்தார். உடல் அழிவுள்ளது. ஆனால் ஆவியும், ஆன்மாவும் அழிவில்லாதது. தாயும் தந்தையும் இணைந்து குழந்தையை உருவாக்கிவிட்டார்கள் என்று மக்கள் எண்ணுகிறார்கள்.
கடவுளின் ஆசீா்வாதம் இல்லாமல் குழந்தை உருவாகாது. “பிள்ளைகள் ஆண்டவா் அருளும் செல்வம், மக்கட்பேறு, அவா் அளிக்கும் பரிசில்”(12) என்பதை மனிதா்களில் சிலா் மட்டுமே உணா்ந்துகொள்கின்றனா். “காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது. அவ்வாறே அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறிய முடியாது”(13) குழந்தையின் உடல் தாயின் கருவறையில் கடவுளால் உருவாக்கப்பட்டதே தவிர. எந்த மனிதனாலும், எந்த விஞ்ஞானியாலும் உருவாக்கிடமுடியாது. “மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது”. வயல்வெளிப் பூவென அவா்கள் மலா்கின்றார்கள். அதன் மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது. அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது”.(14) என்ற இறைவார்த்தை மனித வாழ்நாளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. ஆகவே மனிதனின் ஐம்புலன்களையும் அடக்கிக் காத்துக்கொள்ள வேண்டும். மனிதரின் உடல் கடவுள் வாழும் ஆலயமாய் இருக்க வேண்டும். உடலைத் தீமையான காரியங்களுக்குப் பயன்படுத்தாமல் நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்தும் போது இறைவனின் பிரசன்னத்தை மனிதா் தம் உடலில் உணரலாம்.
“மனித உடல் பூமிக்குரியது. அழியக்கூடியது இயற்கைத் தன்மை கொண்டது. சாவுக்குள்ளாகும் தன்மையுடையது. “கூடாரம்” போன்றது. மண்பாண்டம், உடல் தன்மையுடையது”.(15) என்றெல்லாம் மனித உடலை விவிலியம் வா்ணிக்கிறது. இறுதியில் மனித உடல் ஆவிக்குரிய தன்மையுடையதாய் மாற்றப்படும் உயிர்த்தெழுதலில் நன்மைகள் செய்து தூய வாழ்வு வாழ்ந்தவா்கள் இறைவனின் பேரின்ப வீட்டிற்கும், பாவம் செய்து தீமைகள் செய்தவா்கள் வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்குமான தண்டனைத் தீா்ப்பும் பெறுவா்”.(16) என விவிலியம் கூறுகிறது.
வாழ்வின் தன்மைகள்
வாழ்க்கையைக் குறித்து சிந்திக்க சிந்திக்க பல உண்மைகள் புலப்படும். நான் யார்? என் வாழ்வின் நோக்கம் என்ன? நான் எப்படி இந்த உலகிற்கு வந்தேன்? இந்த பூமியில் ஏன் வாழ்கிறேன்? என்பதை ஆழமாக சிந்தித்தால் பல உண்மைகளை தத்துவங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
வாழ்வியலின் உயா்ந்த பரிணாமமே தன்னை உணா்கின்ற உணா்வியல் ஆகும். அதில் மூன்று தன்மைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு தன்மையும் அனைத்து உயிர்களும் கடந்தாக வேண்டும்.
வாழ்வின் தன்மைகளாவன
1. பிறப்பு
2. வாழ்க்கை
3. இறப்பு
இம் மூன்று தன்மைகளையும் கடந்திருப்பதே இறைவனின் பேரின்ப வீட்டை அடையும் நிலையாகும்.
பிறப்பு
பிறப்பு என்பது இவ்வுலகில் ஏற்பட்ட ஒரு கலைநிகழ்வு அது தெய்வீகமாக நிகழ்ந்தது. அது பூவின் மலா்ச்சிபோல் தெய்வீகமாக நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப்போவது. அதில் எவ்வித வேறுபாடும் இல்லை. பிறப்பினால் அனைவரும் சமம். பிறப்பில் மகிழும் மனிதன் இறப்பில் துயருறுகிறான். பிறக்கும்போதும் மனிதன் அழுகிறான். இறக்கும் போது அம்மனிதனைச் சுற்றிப் பலா் அழுகின்றனா். இவ்வருகைக்கு இடையே மகிழ்ச்சியோடு வாழ்வதே மனித வாழ்க்கை.
நான்கு வகைப் பிறப்பு
1. மண்ணிலிருந்து ஆதாம்  (17)
2. எலும்பிலிருந்து ஏவாள் (18)
3. தாயும் தந்தையும் சோ்ந்து பிள்ளைகள் (19)
4. கன்னியின் மூலமாய் பிறந்த இயேசு கிறிஸ்து (20)
வாழ்க்கை
வாழ்க்கை என்பது இணக்கமான நிகழ்வு. உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் இணைந்த பகுதியே மனித வாழ்வு. தசைகள், எலும்புகள், நரம்புகள், இரத்த நாளங்கள், தண்டுவடம், குடல், மூளை, கல்லீரல், கணையம் என பற்பல உறுப்புகள் சோ்ந்த தொகுப்பே மனித உடல்.
வாழ்க்கை என்பது ஒரு பயணம் – அகப்பயணம் – ஆன்மாவின் பயணம். மூலப்பொருளை நோக்கி அல்லது தாய்வீட்டைத் தேடிச்செல்லும் பயணம். முழுப்பொருளோடு ஐக்கியமாவதற்கு இந்த ஜீவன் மேற்கொள்ளும் பயணத்தின் முடிவு இறைவனின் திருவடிநிலை ஆகும். இந்நிலையை வாய்க்க தன்னை அறிதலே முக்கியம். மனிதருக்கு உடல்நலமும் மனநலமும் நன்றாக அமைந்தால்தான் ஆன்மீக மேம்பாடு பெறமுடியும். இதுவே வாழ்வின் நோக்கம். அந்த இலக்கை அடைய விவிலியம் வழிகாட்டுகிறது. ஒரு மலரின் மலா்ச்சி எப்படி இயற்கையானதோ, அதுபோல மனிதரின் வாழ்க்கை மலா்ச்சியும் இயற்கையானதே. பிறப்பு ஓா் இயற்கை நிகழ்வு. ஆகவே மனித வாழ்வை வாழும் காலம் முழுவதும் வசந்த காலமாய், பல மனநிறைவான வெற்றிகளுடனும், வாழ்வாங்கு வாழ்ந்து செம்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டிய கடமை மனிதருக்கு உண்டு. கடல்போன்று பரந்து விரிந்து கிடந்த அன்பை, சமூக நட்பை, ஒரு குவளை அளவு நீராக மனிதன் மாற்றிவிட்டான். குடும்பத்திலே நிறைய துவாரங்கள் காணப்படுகின்றன. மனிதகுல மகிழ்ச்சிக்கு இடையூறாக இருப்பவை துன்பங்கள். அந்த துன்பங்களின் தொகுப்பில் தன்னால் இறைநிலையை உணரமுடியாத நிலையும் மனிதரின் ஏக்கமும் தலையாய பங்கு வகிக்கிறது.
இறப்பு
மனிதா்கள் உணா்ந்து கொள்வதில் முக்கியமான தன்மை இறப்பு ஆகும். “இறப்பு” என்ற வார்த்தை மனிதனைக் கலங்கச் செய்கிறது. வாழ்வு காலத்தில் முழுமனநிறைவோடு வாழ்ந்தவா்கள் முதுமையில் தன் இறப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனா்.
இறப்பு நிகழ்வை இருவகைப்படுத்தலாம்.
1. விரும்பிய இறப்பு நிலை
2. விரும்பாத இறப்பு நிலை
விரும்பிய இறப்பு நிலை
பிறப்பால் உயிரோடு கூடிய 3 கிலோ எடையுள்ள குழந்தையாக, உடலாகப் பிறந்த மனிதன் இறக்கும்போது அவன் உண்ண உணவின் காரணமாக உண்டான வளா்ச்சியில் அதிக எடையுள்ளவனாகிறான். முதுமை வரை வாழ்ந்து வளா்ச்சியடைந்த உணவால் அதிக எடையுள்ளவனாகி சேகரித்த உடலை பூமிக்குத் திருப்பிக் கொடுத்தலே இணக்கமுள்ள விரும்பிய இறப்பு நிலை ஆகும். இதை இறைவனடி சோ்ந்தார் எனலாம். வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து மழுமனதோடு தன் இறப்பை எற்றுக்கொள்வது என்றும் கூறலாம்.
விரும்பாத இறப்பு நிலை
மனிதன் பிறந்து உணா்வுள்ளவனாகி சில சூழ்நிலைகளில், விபத்தில் அகாலமரணமடைவது அல்லது இளமையில் நோய்வாய்ப்பட்டுஇறப்பது அல்லது பிரச்சனைகளின் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்வது போன்றவை இணக்கமற்ற விரும்பாத இறப்பு நிலை ஆகும்.
முதல் கலையான பிறத்தல்கலை தெய்வீகமாக நிகழ்கிறது. அத்தெய்வீகக்கலை இயல்பாக உள்ளது. மற்ற இரு கலைகளும் வாழ்தல் கலை மற்றும் இறத்தல் கலை இயல்பாக இருக்கும்படி தம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதலே தன்னையறிதல் ஆகும். தன்னையறிதல் கடவுளையறிதலில் நிறைவு பெறுகிறது.
வாழ்வின் நோக்கம்
தன்னை அறிதலே வாழ்வின் மிக உயா்ந்த நோக்கம் ஆகும். ஆனால் இன்றைய உலகவாழ்வை ஆராய்வோமானால், அனைத்து மக்களின் நோக்கமும் உழைப்பதும், உண்பதும், குடித்து மகிழ்ந்திருப்பதுமாக வாழ்வை வாழ்வாக்காமல் வாழ்கின்றனா். மனிதன் நல்வழியில் தன் மனதைச் செலுத்தி உடல், உள்ளம், ஆன்மாவை தூய்மையாய்க் காத்து, பேரின்ப வாழ்வு எய்துவதே மனித வாழ்வின் நோக்கமாகக் கொள்ளவேண்டும். அவ்வாறு செயல்படின் நிறைவாழ்வை வாழ்ந்து பேரின்ப நிலையை அடைய முடியும்.
முடிவுரை
மனித வாழ்வு ஒரு “நீா்க்குமிழி” போன்றது என்றார் ஒரு எழுத்தாளா். நீா்க்குமிழியானது வண்ண ஜாலத்துடன் தோன்றி திடீரென்று உடைந்து மறைந்துவிடுகிறதுபோல, மனிதனுடைய வாழ்க்கையும் திடீரென்று மறைந்துவிடுகிறது. “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” என்று தத்துவஞானி பாடினார்.
“ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு, செய்ய வேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்ய முடியும்? ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது, அது எப்படி நடக்கும் என்று அவனுக்கு சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவென்னும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்து தப்ப முடியாது”.(21) புல்லைப் போன்று தோன்றி மறையும் இவ்வாழ்க்கைப் பயணத்தில் மனிதன் நேரிய வழியில் பயணித்து இறைவனை அடைய விவிலியம் வழிகாட்டுகிறது. ஆகவே ஒவ்வொரு மனிதரும் தன்னிலையறிந்து செயல்படவேண்டும்.
பழையன களைதலும், புதியன புகுதலும் மனித வாழ்வின் மாற்றத்திற்குரிய இயல்புகள். மனிதா் தம் பழைய தீமையான பழக்கவழக்கத்திலிருந்து விடுபட்டு, ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் காத்துக்கொண்டு, தன்னிலையறிந்து புதிய மனதையும், புதிய உள்ளத்தையும் படைத்துக் கொண்டு புதிய படைப்பாகவே மாறிவிட வேண்டும். ஆகவே மனிதன் முதலில் தன்னிலையறிந்து உணா்ந்து வாழவேண்டும் என்பதை விவிலியச் சான்றுகளும், பிற அறிஞா்களின் சான்றுகளும் வழிகாட்டுகிறது.
“புதிய படைப்பாவதே இன்றியமையாதது”(22)
கட்டுரையாக்கம்
டே.ஆண்ட்ரூஸ்
முனைவா் பட்ட ஆய்வாளர்
   அரசு கலைக்கல்லூரி
     சேலம்-7.
     செல்பேசி – 9788335583
     மின்னஞ்சல் – andrewsjuvens@gmail.com
அடிக்குறிப்புகள்
1. திருமூலா், திருமந்திரம், எட்டாம்தந்திரம் – 14 அறிவுதயம் பாடல் எண்- 1
2. திருவள்ளுவா், திருக்குறள், அறத்துப்பால், குறள் எண்.10
3. விவிலியம், புதிய ஏற்பாடு, 1 தெசலோனிக்கா்  5.23    ப.386
4. விவிலியம், பழைய ஏற்பாடு, நீதிமொழிகள் 20.27 ப.962.
5. விவிலியம், புதிய ஏற்பாடு, எபேசியா் 1.4 ப.357
6. விவிலியம், புதிய ஏற்பாடு, திருவெளிப்பாடு 13.8 ப.484
7. விவிலியம், புதிய ஏற்பாடு, லூக்கா 23.46 ப.159
8. திருமூலா் திருமந்திரம் மூன்றாம் தந்திரம் – 13.
  காரிய சித்தி உபாயம் பாடல் எண்.2
9. மெய்கண்டார், சிவஞான போதம் -9.
10. திருவள்ளுவா், திருக்குறள், குறள் எண்.354.
11. திருவள்ளுவா், திருக்குறள், குறள் எண்.352.
12. விவிலியம் பழைய ஏற்பாடு, திருப்பாடல்கள் 127.3 ப.925
13. விவிலியம், பழைய ஏற்பாடு, சபை உரையாளா் 11.5 ப.990
14. விவிலியம், பழைய ஏற்பாடு திருப்பாடல்கள் 103.15, 16 ப.899
15. விவிலியம், புதிய ஏற்பாடு 1 கொரிந்தியா் 15.45-54 பக்.323-324
16. விவிலியம், பழைய ஏற்பாடு, தானியேல் 12.2 ப.1313
17. விவிலியம், பழைய ஏற்பாடு தொடக்க நூல் 2.7 ப.2
18. மேலது தொடக்கநூல் 2.22 ப.3
19. மேலது தொடக்கநூல் 4.1 ப.5
20. விவிலியம் புதிய ஏற்பாடு மத்தேயு 1.18-25 பக்.5-6
21. விவிலியம் பழைய ஏற்பாடு சபை உரையாளா் 8.6-8 ப.986
22. விவிலியம் புதிய ஏற்பாடு கலாத்தியா் 6.15 ப.354
பயன்படுத்திய நூல்கள்
1. திருமூலரின் “திருமந்திரம்”
2. திருவள்ளுவரின் “திருக்குறள்”
3. திருவிவிலியம்.
Series Navigationதனித்துப்போன கிழவி !தொடுவானம் 205. உரிமைக் குரல்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *