மொழிபெயர்ப்புக் கதை
மலையாள சிறுகதை ஆசிரியர் -சி.வி.பாலகிருஷ்ணன்
தமிழில் மொழிபெயர்ப்பு; நா- தீபா சரவணன்
கடைசியில் மோனிகா விமான நிலையத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
அவள் முகம்கூட கழுவவில்லை அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு கைகாளாலேயே பரந்து கிடந்த முடியை ஒதுக்கிக்கொண்டு வேகமாக படியிறங்கினாள். வரும்போதே டிரைவர் ஸ்டான்லியை சத்தமாக கூப்பிட்டுவிட்டு, காரைத்திறந்து பின்சீட்டில் வலது புறமாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.
ரோயித்தோமஸ் ப்ளோரிடாவிலிருந்து அட்லாண்டிக் சமுத்திரம் கடந்து தாய்நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் மோனிகா இருப்பாள்.
திருவல்லாவிலிருந்து ரோயித்தோமஸின் அப்பாவும் அம்மாவும், காஞ்சிரமுற்றத்திலிருந்து சகோதரி க்ளோரிம்மாவும், பாலாய் மடத்திலிருந்து மற்றொரு சகோதரி சிஸ்டர் தெரஸீனாவும், முண்டக்கயத்திலிருந்து சகோதரனும் அவள் மனைவி ஆக்னசும் மற்றுள்ள சொந்தங்கள் யாரும் வரவில்லை என்றாலும், விமான நிலையத்தில் ரோயித்தோமஸை வரவேற்று மோனிகா நிற்பாள்.
கார் ஸ்டார்ட் செய்த சத்தம் கேட்டு ’ஏர்போர்ட்டிற்கு’ என்று சொன்னதல்லாமல் அவள் கண்கள் திறக்கவே இல்லை. அதனால் டிரைவர் சீட்டில் வந்திருந்தது ஸ்டான்லிக்குப் பதில் தனது தந்தை என்பதை அவள் அறியவில்லை.
புரபஸர் தோமஸ் எப்ரகாம் பின்னால் திரும்பி தனது மகள் மோனிகாவை சிறிது நேரம் பார்த்தார்.
அவள் நித்திரையில் ஆழ்ந்தது போல சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
சூசன் எப்ரகாம் அவசரமாக சிட்டவுட்டிற்கு வருவதற்குள், கார் இருபக்கமும் பூச்செடிகள் நிறைந்த கல்பாதை வழியாக கேட்டின் அருகில் சென்றது. புரபஸர் தோமஸ் எப்ரகாம் கார் ஓட்டுவதற்கிடையில் மனைவியைப் பார்த்து கை ஆட்டினார். தான் அவளை விலக்காமல் இருந்திருந்தால், இப்போது பின்சீட்டில் மோனிகா தனியாக வரவேண்டியதில்லை என நினைத்தார்.வழியில் ஒரு மாருதி ஜிப்ஸி கடந்து போயிற்று. அவர் கேட்டைத் தாண்டி காரைப் பாதையில் இறக்கினார்.; பாதையில் பார்க்கும் தூரத்தில் ஒரு வெள்ளை நிற ப்ரீமியர் பத்மினி, பின்னால் சைக்கிளில் ஒரு மீன் வியாபாரி. புரபஸர் தோமஸ் எப்ரகாம் காரின் வேகத்தைக் கூட்டினார். இரண்டு மூன்று நிமிடத்திற்குள் தார் ரோடு வந்து விட்டது. சிறிது தூரம் சென்றால் ஒரு வாகனம் மட்டும் கடந்துபோகக்கூடிய பாலம். அதன் பிறகு சில மீட்டர் நீளம் நிழல்கள் விழுந்து பாதை இருண்டு கிடந்தது. பிறகு வலப்பக்கம் திரும்பி மேடேறி உயர்ந்த ஒரு காம்பவுன்ட் சுவரைச்சுற்றி இடப்புறம் திரும்பி சென்ட்ரல் டெலிகிராப் ஆபீஸ் வழியாக கார் மெயின்ரோட்டை அடைந்தது.
‘ஃப்ளைட்டிற்கு நேரமாச்சுன்னு தோணுது’ ஒரு கறுப்பு நிழலைப் பின்தள்ளி கார் மேற்குப் பார்த்துப் போகவே மோனிகா கூறினாள்.
புரபஸர் தோமஸ் எப்ரகாம் வாச்சில் பார்த்தார்.
‘இனியும் நேரமிருக்கு. பதினஞ்சு நமிஷத்துக்கு மேல இருக்கு. அங்கங்க டிராபிக்ஜாம் இருந்தாலும், அதுக்குள்ள ஏர்போர்ட் போய் சேந்தரலா. வழில பெரிய கூட்டமொன்னுமில்ல. புரபஸர் தோமஸ் எப்ரகாம் காரின் வேகத்தை மேலும் அதிகரித்தார்.
யார் கார் ஓட்டுகிறார் என்று மோனிகா யோசிக்கவே இல்லை. அவள் யோசித்தது எல்லாம்’ ஃப்ளோரிடவைப்பற்றி அடலான்டிக்கிற்கும் மெக்ஸிகோ உட்கடலிற்கும் நடுவில் ஃப்ளோரிடா. ஒரு தூக்கணாங்குருவியைப் போல விமானம் தரையிறங்குகிறது. வேறுபட்ட மனிதர்களுக்கிடையில், ஒரு நீக்ரோ டிரைவர் ரோயித்தோமஸ் என்ற இளம் விஞ்ஞானியையும் ஏற்றி காரோட்டிச் செல்கிறான். சாதாரண திருவல்லாக்காரனுக்கு ஓர் அதிசயம் போன்று ஃப்ளோரிடா. இரண்டு கண்களும் ஓரோ காட்சியையும் உள் வாங்கியது. ‘ மோனிகா உடன் இருந்திருந்தால்! மோனிகாவின் மென்மையான குரல் கேட்க முடிந்திருந்தால்! ’
ரோயித்தோமஸின் குரல் ஒலி கேட்டது எனக்கருதி அவள் கண்களைத் திறந்தாள்.
கார் ஓட்டுவது தனது தந்தை என்றறிய அவளுக்கு வெகுநேரமாயிற்று. கண்களைத் திறந்ததும் அவள் சாய்ந்தபடியே அமர்ந்துகொண்டு வெளியில் பார்த்தாள். புதியதும் பழையதும், பெரியதும் சிறியதுமான பல பொருட்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தன.
வழியோர மரங்களுக்கு மேலாக மிகப்பெரிய சூரியன்.
வெயில் முகத்தில் பட்டு முகம் திருப்பிய போதுதான் தெரிந்தது. கார் ஓட்டுவது ஸ்டான்லி அல்ல தனது தந்தை என்று.
‘அப்பா……!.,’
அவள் முன்னோக்கி நகர்ந்து ஆச்சர்யத்துடன் கூப்பிட்டாள்.
அவர் திரும்பிப்பார்க்கவில்லை
‘நானேதான்’
அவள்சுண்டுவிரலைக்கடித்துக் கீழே பார்த்தாள்.
‘இனியும் ஏழு நிமிஷமிருக்கு’ அவர் ரியர்வியூ மீட்டரைப் பார்த்துக் கொண்டே கூறினார்.
மோனிகா மறுபடியும் சாய்ந்து உட்கார்ந்தாள். நகரக்காட்சிகள் அவளின் கண்களின் வழியாக சிந்தையைக் கலக்கியது.
மெக்ஸிகோ உட்கடலினுடையவும், அட்லான்டிக் கடலினுடையவும் காற்று வீசுகின்ற ஃப்ளோரிடாவில் ரோயித்தோமஸிற்கு கடுமையான தனிமைதான் அனுபவப்பட்டிருக்கும். ‘அன்பு மோனிகா நான் உன்னை நினைத்துப் பார்க்கிறேன். ‘உன்னுடைய சிவந்த கன்னங்கள், வைடூர்யம் போன்று பளிச்சிடும் கண்கள், நான் எப்போதும் முத்தமிடத் துடிக்கும் உன் உதடுகள், உன்னுடைய சுருண்ட கூந்தல், நீளமான கை விரல்கள், ஒரு முறை மட்டும் ஸபர்சித்த உன்னுடைய கூர்மையான முலைகள், மோனிகா நான் எல்லாம் இங்கிருந்து பார்க்கிறேன். எனனுடைய கண்ணாடி ஜன்னலுக்கு அப்புறம் இருந்து தூக்கணாங்குருவிகள் சிறகுகளடிக்கின்றன. அருகில் காண்கின்ற மியாமி பீச்சில் மக்கள் கூட்டமிருந்தாலும் எனக்கு அது சூன்யமாகத்தான் தெரிகிறது. புறவைகள் சிறகடித்துச் சொல்வது என்னவாக இருக்கும்.’
மோனிகா தனது படுக்கையில் வரைபடத்தை விரித்துப் போட்டாள். மரங்காட்டுப் பள்ளியிலிருந்து வந்த சமையல்காரி கத்ரீனாம்மா வரைபடத்தைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள். பெரிய கரைகளும், சமுத்திரங்களும், கடலடிகளும், பனிமலைகளும், பாலைவனங்களும்;, கத்ரீனாம்மாவின் கண்கள் நிறைந்தன. மோனிகாவின் நீண்ட விரல்கள் வரைபடத்தின் மேல் நகர்ந்தது. பிங்க் நிற நெயில்பாலீஷ் மின்னுகின்ற விரலின் சலனத்தை கத்ரீனாம்மாவும் பின்தொடர்ந்தாள். ஏதோ ஒரு நிமிடத்தில் ஒரு மாலுமியைப்போல கத்ரீனா மகிழ்ச்சி அடைந்தாள். ஃப்ளோரிடா…..! கத்ரீனாம்மா மிகவும் ஆனந்தத்துடன் சிலுவை வரைந்தாள். ஃப்ளோரிடா…..!
‘அங்கயும் மரவள்ளியும் மீனும் கெடைக்குமா?…’
புரபஸர் தோமஸ் எப்ரகாம் காரை நிறுத்தினார்.
மோனிகா எவ்வளவு தூரம் வந்தோம் என்று கவனிக்கவில்லை. பார்க்கும்போது முன்னால் விமான நிலையத்தின் மஞ்சள் கட்டிடம்.
‘ஒன்னு மறந்திட்டே’ மோனிகா முணுமுணுத்தாள் ‘கொஞ்சம் பூக்கள்; வாங்கணும், ரோயித்தோமஸிற்கு ஆர்க்கிட் பூவுன்னா ரொம்பப் புடிக்கும். சிட்டில அது கெடைக்கிற கடையும் ஒண்ணு இருக்கு. டைம் இருந்தா வாங்கிட்டு வரலாமே…..!’ என்றாள்.
அப்பா ஃப்ளைட்டோட நிலவரம் ஒன்னு கேளுங்களே. நேரமிருந்தா கொஞ்சம் பூக்கள் வாங்கலாமே…
‘ உம்….’ அவர் காரிலிருந்து இறங்கினார். கொஞ்ச தூரம் நடந்ததும் நெருங்கிய நண்பனான மானுவல் வர்கீஸைப்பார்த்தார். அவரிடம் ப்ளைட்டின் விவரத்தைக் கேட்டார். அரை மணி நேரம் தாமதமாகும் என்பதை அறிந்து கொண்டார். புரபஸர் தோமஸ் எப்ரகாம் காரில் இருக்கும் மோனிகாவை சுட்டிக்காண்பித்தார். இருவரும் காரினருகில் சென்றனர்.
மோனிகாவுக்கு பூக்கள் வாங்குவதற்கான நேரமிருக்கு என்று பின்சீட்டில் முகத்தை நீட்டி அவர் கூறினார்.
‘தாங்க் யூ….’ அவள் மெதுவாகக்கூறினாள்.
புரபஸர் தோமஸ் எப்ரகாம் கார் ஸ்டார்ட் செய்தார். விமானநிலையத்தில் கார்பார்க்கிங் இடத்தில் திரும்பி வரும்போது மோனிகாவின் இடப்பக்கம் ஒரு பாலிதீன் கவரில் பல வண்ணங்களில் ஆர்க்கிட் பூக்கள் இருந்தன.அவள் காரிலிருந்து இறங்கவில்லை. புரபஸர் தோமஸ் எப்ரகாம் வெளியில் இறங்கி காரில் சாய்ந்து நின்று ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்தார். மோனிகா வானத்தைப் பார்த்தாள். திடீரென்று வானமெங்கும் தூக்கணாங்குருவிகள். ‘மோனிகா யார் நம்மை ஆசீர்வதிபப்பார்கள். மேகங்களா? இந்தப் பறவைகளா? .’
‘வெளில வாம்மா’ தோமஸ் எப்ரகாம் மகளைக் கூப்பிட்டார்.
அவள் பூக்களின் கவரை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கினாள்.
வெயிலில் நீண்டு கிடந்த ரன்வே வழியாக ஓடி விமானம் நின்றது. மேகங்கள் ஓடும் வானின் கீழ் அது தன் பெரிய சிறகுகளை விரித்திருந்தது.
‘அதோ….. மோனிகா அவ அப்பா கூட நிக்கறா,’ க்ளோரிம்மா, சிஸ்டா; தெரஸீனாவிடம் கூறினாள்.
‘எங்கே? ’ சிஸ்டர் தெரஸீனா கேட்டாள்.
‘அதோ……. அங்கே…….. க்ளோரிம்மா கை நீட்டினாள்.
சிஸ்டர் தெரஸீனா இப்போது மோனிகாவை அவள் அப்பாவுடன் பார்த்தாள். பூக்களும் கையில் ஏந்தி, வைலட் நிற ஆடை அணிந்து மோனிகா நின்றாள். யாரையும் அவள் பார்க்கவில்லை. வானவெளியில் கதிரவனை மறைத்துக் கொண்டு அனேகம் அனேகம் தூக்கணாங்குருவிகள் சிறகுகளடித்துக் கொண்டிருந்தன. ‘மோனிகா, நம்மளோட தூக்கணாங்குருவிகள் …………!’
விமானத்தின் திறந்த பாகம் வழியாக பயணிகள் ஏணியில் இறங்கிக் கொண்டிருந்தனர். மோனிகா விமானத்திற்கு நேராகப் பார்த்து பூக்களை மார்போடு அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
சகோதரன் இத்தாக்காவும், வின்சென்டும், சன்னியும், ஏன்டப்பனும் சேர்ந்து சவப்பெட்டியை இறக்கினர். கண்ணாடிக் கூண்டிற்குள் ஒரு பயணி படுத்திருந்தான். ‘மூடிய விழிகள், இரத்தம் வற்றின உதடுகள், அமைதியான உறக்கம்……….’க்ளோரிம்மாவும் சிஸ்டர் தெரஸீனாவும் விதும்பினர்.
பழக்கமில்லாத சிலர் கண்ணாடிக் கூண்டிற்குள் உற்றுப்பார்த்தனர். மோனிகா கையில் கொண்டு வந்தப் பூக்களைக் கண்ணாடிப்பெட்டியின் மையப்பகுதியில் வைத்து வணங்கி, முட்டி போட்டு உட்கார்ந்தாள்.
“அவன் நம்மைவிட அதிகம் நேசித்த அவனுடைய இறைவனிடம் சேர்க்கப்பட்டான்.” பரிசுத்தமான ஒரு குரல்ஒலி அவளின் காதுகளில் கேட்டது.
‘நாம் நேசிக்கும் நம்முடைய இறைவன் வானிலிருந்து இறங்கி வரும்போது, இறந்தவர் உயிர் பெறுவர். அந்தக் கூட்டத்தில் உன்னுடைய அன்பிற்குரியவனும் அவனுடைய மண்கூட்டிலிருந்து இறைவனை வரவேற்க ஒளியும் உடம்புமாய் திரும்பி வருவான். அப்போது உங்களுக்கு அவனை மறுபடியும் பார்க்கலாம். அதுவரை விடை கூறுங்கள்.’
மோனிகா அப்பாவுடன் வீடு திரும்பினாள்.
பிறகு எப்போதோ ஒரு நாள் கத்ரீனாம்மா அவளின் தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள்.
‘முடி முழுக்க நெரச்சுப் போயிருச்சேம்மா……!’ கத்ரீனா தயக்கத்தோடு கூறினாள்.
மோனிகா அசைவின்றி இருந்தாள்.
வெளியில் காற்று வீசிக்கொண்டிருந்தது. மண்ணில் கொழிந்த இலைகளும் பறந்தன.
மோனிகா திரும்பிப் பார்த்தாள்.
பின்னால் கத்ரீனாம்மா இல்லை.
அவளும் மண்கூட்டில் மறைந்து விட்டாள்.
மோனிகா பார்வை குறைந்த கண்களை உயர்த்திப் பார்த்தாள். மீண்டும் ஒரு முறை அவளின் கண்களில் வானத்தின் ஏதோ நீலநிறம். கடும்பனி மூடிய மலைமுகடுகள் போன்ற வெளி. மேகங்களின் சிதறலில் எங்கிருந்தோ வெயில் அடித்தது. மரணத்திற்குப் பிறகு உயிர்ப்பு என்ற நம்பிக்கையில் அவை நிலைத்துநின்றன.
- காதற்காலம்- (பிரணயகாலம்)
- நாடோடிகளின் கவிதைகள்
- ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்
- நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
- மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்
- வெளிநாட்டு ஊழியர்கள்
- வாழ்க நீ
- வெங்காயம் — தக்காளி !
- பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி
- பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்
- தொடுவானம் 207. போதை
- இன்று ஒரு முகம் கண்டேன் !
- பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன