மொழிபெயர்ப்பும் கவிதையும்

author
0 minutes, 1 second Read
This entry is part 14 of 20 in the series 11 பெப்ருவரி 2018

– சுயாந்தன்.
மொழிபெயர்ப்பாளன் தன் உடலில் இன்னொரு கவிஞனின் தலையைப் பொருத்தி நிறுத்துகிறான் என்று கே. சச்சிதானந்தன் கவிதை மொழிபெயர்ப்பின் நுட்பங்களைப் பற்றித் தெளிவுறுத்தும்போது கூறியுள்ளார். அதில் இருக்கும் அர்த்தங்களைப் புரியாத வெறும் கவிதைப் பயிற்சி இல்லாதவர்கள், கவிதைகளை மொழிபெயர்க்கும்போது கவிதையானது நம்மிடத்தில் வெறுப்புக்குரிய பண்டமாகிப் போகிறது. அவ்வாறுதான் அவற்றை இன்றும் நுகரவும் முடிகிறது.

1. ஆலிலையும் நெற்கதிரும்.
2. கவிதை மீண்டும் வரும்.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு தொகுப்புக்களையும் மலையாளத்திலிருந்து எடுத்து மிகநேர்த்தியாகத் தமிழ்ப்படுத்தித் தந்தவர் எழுத்தாளர் சிற்பி. கல்வியலாளர்களும் பேராசிரியர்களும் மொழிபெயர்த்த கவிதைகள் எப்போதும் அழகியல் கெட்டுப்போன வெற்று உரைநடைகளாகவே இருப்பவை. நல்ல உதாரணம் சி.சிவசேகரம் மொழிபெயர்த்த கம்யூனிசக் கவிதைகள். எம்.ஏ நுஃமான் மற்றும் அ.யேசுராசா முதலானவர்கள் மொழிபெயர்த்த கவிதைகளும் வெறும் உரைநடைபோல அழகியலையும் கவிதையின் நேர்த்தியையும் கெடுத்தவையாகவே இருந்தன. இவற்றைப் போல மோசமான மொழிபெயர்ப்புக்களை யாருமே அந்த தசாப்தங்களில் வாசித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் சிற்பியின் மொழிபெயர்ப்பு மிக நுட்பமானது. அழகியலின் அண்மையில் நின்று கவிதையை உணரத்தருவது. அது அறிவார்ந்தது என்றோ வாசிப்பு மனமென்றோ எப்படியும் கருதலாம். “கவிதையின் கண்களைத் தோண்டியெடுக்க அவர்கள் சுத்திகளுடன் நெருங்குகின்றனர். கண்கள் சப்தரிஷி மண்டலத்தில் சேர்ந்து வானத்தில் மின்னி நிற்கின்றன” என்று “கவிதையும் போலிசும்” என்ற தலைப்பில் அவர் மொழிபெயர்த்த கவிதையை ஏனைய கல்வியலாளர்களின்- மொழிபெயர்ப்பாளர்களின் அணுகுமுறையில் இருந்து பார்த்தால் அவற்றை செங்குத்துக் கவிதைகள்-மட்டக் கவிதைகள் என்று மோசமாகத்தான் மொழிபெயர்த்திருப்பார்கள். (கம்யூனிசக் கவிதைகளின் மொழியை இப்படி அழகுபடுத்த முடியுமா).

குறிப்பாகத் தமிழில் பெண்கள் மொழிபெயர்க்கும் கவிதைகளைப் போல ஒரு கொடூரமான-சலனமான-நாராசமான, அயர்ச்சியை மோசமான உரைநடை கூட வழங்கியிராது. அவ்வளவு கீழான மொழிபெயர்ப்பைத் தமிழில் செய்வது பெண்கள் தான். இவர்களுக்குக் கவிதை பற்றிய ஆழ்ந்த புலமையும் இல்லை. பரந்த வாசிப்பும் இல்லை. ஆனால் உடனே கொண்டாடப்படவேண்டும் இலக்கியத்தில் பேசப்பட வேண்டும் என்ற ஆசையில் அதனை ஒரு Entertainment ஆகக் கருதுபவர்கள்தான் இவர்கள். அதற்காகவே எடுத்தவுடன் பிளாத், சிம்பொர்ஸ்கோ என்று பலநூறு வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளை நமக்கு மோசமாக மொழிபெயர்த்துத் தருவது இதனால்தான். இவற்றையும் பெண்கள் என்ற காரணத்துக்காக முக்கியமான சிற்றிதழ்களும் வெளியிடுகின்றன. சிலர் கண்ணைமூடியபடி பாராட்டுகின்றனர். இது ஒரு வெட்கக்கேடான விடயம். அதாவது ஒரு கொமர்ஷியல் படத்தில் ஐட்டம் பாட்டு வைப்பது போன்றது. இந்த ஐட்டம் பாடல்களைப் போலத்தான் அநேக மொழிபெயர்ப்புக் கவிதைகள் உள்ளன. இவற்றை பிரசுரித்துப் பிரபலப்படுத்தும் கொமரஷியல் இதழ்கள்தான் உயிர்மை, காலச்சுவடு, தடம், தீராநதி போன்றவை.

ஆனால் சிற்பி, சுகுமாரன், பாவண்ணன், நிர்மால்யா, பிரம்மராஜன் என்று சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் தம்மளவில் சிறந்த கவிஞர்களாகவும் உள்ளனர். அத்தருணத்தில்தான் தம்சுய கவிதைகளைவிட மொழிபெயர்ப்புக் கவிதைகள் மிக நேர்த்தியாக வெளிப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்கவிதைகள் என்றவுடன் நான் முதலில் தேடுவது இவர்களைத்தான். இவர்கள் மீது அசராத நம்பிக்கை உள்ளது. இதில் சமகாலத்தில் இயங்குபவர் சுகுமாரன் மட்டும் என்றே நினைக்கிறேன்.

சரி, இப்போது சிற்பியின் மொழிபெயர்ப்புப் பற்றிப்பேசலாம்.
1. சச்சிதானந்தனின் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தும்போது சிற்பி, சச்சிதானந்தனின் படைப்புலகம் பற்றிய முழுமையான உசாவலை அறிந்திருக்கிறார். சச்சிதானந்தன் கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று பல்திறனை வெளிப்படுத்திய மிக முக்கியமான இந்தியக் கவிஞர் என்கிற அடையாளத்தில் இருந்து கொண்டு எழுதிய கவிதைகளை அவரது தரத்திலிருந்தே மொழிபெயர்த்துள்ளார். அதனால்தான் இக்கவிதைகளை இன்றும் வாசித்து சச்சிதானந்தனின் படைப்புலகைப் பற்றி தமிழில் பேசமுடிகிறது. அதற்கு இந்த மொழிபெயர்ப்பு எத்துணை முக்கியம் என்று புரியும்.
2. கேரளத்தின் அரசியல் செயற்பாடுகளில் களச்செயற்பாட்டாளராகவும் அறியப்பட்ட சச்சிதானந்தன் அவருக்கென ஒரு அரசியல் கோட்பாட்டை ஆரம்பக் கவிதைகளில் வெளிப்படுத்தினார். குறிப்பாக அதனைப் பிற்காலத்தில் விமர்சிக்கவும் செய்தார். இவ்விரண்டையும் கவிதைகளில் பதிவு செய்துள்ளார். அதனை மொழிபெயர்க்கும்போது தட்டையான வெற்றுச் சொற்களைவைத்து ஒரு மேடைப் பிரச்சாரம் போலவே பலர் நமக்களிப்பதுண்டு. ஆனால் சிற்பி இந்த அரசியலை உள்வாங்கி அதன் சாரங்களை மொழியின் அழகியலுடன் இணைத்துக் கவிதையை மூலம்போலவே ஆக்கியுள்ளார். (இது எப்படி மூலம்போன்றது என்று எனக்குத் தெரியும் எனக் கேட்பவர்களுக்கான பதில், சச்சிதானந்தன் வாசித்த பல கவிதைகளை மலையாள மொழியில் கேட்டுள்ளேன். மலையாள மணிப்பிரவாளத்தைப் புரிவதில் எனக்குச் சிக்கல்கள் இருந்ததில்லை.)
3. இந்த மொழிபெயர்ப்பில் சங்க இலக்கியமான குறுந்தொகையின் பாடல்கள் பல அடிக்கடி நிழலாடுகின்றன. “மின்னுச் செய் கருவிய பெயல்மழை தூங்க விசும்பு ஆடு” என்ற உலோச்சனின் நெய்தல் பாடலையும் சிற்பி மொழிபெயர்த்த சச்சிதானந்தனின் காதல் கவிதைகளின் மொழி இயற்கை வெளிப்பாடுகளையும் ஒப்பிடலாம். சச்சிதானந்தனின் “இரண்டு காதல் கவிதைகள்” இதற்கு நல்ல ஆதாரம். (ஏற்கனவே அதில் ஒன்றைப் பதிவிட்டுள்ளேன்)
4. இத்தொகுப்புகளில் சில கவிதைகளை வாசிக்கும் போது ஏற்பட்ட இடர்பாடு என்பது ஆங்காங்கே பிரயோகித்த சொற்களை மீளவும் பிரயோகித்துச் சலிப்பாக்கியது. வானம்பாடிக் காலத்துக் கவிதைகள் போல சாதாரணமான சினிமா பாணிபோலவும் கவிதைகள் இருந்தன. அதுவும் நூற்றில் இரண்டு கவிதைகளில்தான் இதனைக் காணமுடிந்தது. மேலும் சிற்பி போன்றவர்களால்தான் சச்சிதானந்தனின் கவிதைகளை மிக ஆழமாகத் தமிழ்ப்படுத்த முடியும் என்று, இக்குறைகளை நீக்கிவிட்டு உணர்ந்து கொண்டேன்.
5. தேவதேவனின் தமிழ்க் கவிதைகளுக்கும் சச்சிதானந்தனின் மலையாளக் கவிதைகளுக்கும் தொடர்பு இருப்பதாக உணரமுடிகிறது. மொழி, வாழ்நிலம், அரசியல், காதல் போன்றவற்றை நீக்கமற அப்படியே இருவரும் பிணைத்துக்கொண்டிருப்பதாகவே உணரமுடிகிறது. இவற்றை இத்தொகுப்பின் மூலம் வாசிப்பு அனுபவத்துக்குக் கொண்டு சென்ற சிற்பியின் மொழிபெயர்ப்பைப் பாராட்டியே ஆகவேண்டும்.

இப்படி மொழிபெயர்க்கலாம். மொழியை இங்கு அழகியலுக்கு உண்டாக்கியிருக்கலாம் என்று நான் யாருக்கும் அறிவுரை கூறவில்லை. மேலும் என்னிடம் அறிவுரை கேட்பவர்களுக்கு அறிவுரை சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உனது மொழிபெயர்ப்பை நீதான் எழுதவேண்டும். அது தரமானதாக வரவேண்டும். அதற்குக் கவிதைப் பரீட்சயத்துக்கு உள்ளாகியிருக்கவேண்டும். அவ்வளவுதான். மேலும் சமகாலத் தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்புக்களில் உடன்பாடு இல்லை என்பதையே திரும்பத் திரும்பக் கூறுவேன். அதிலும் பெண்களின் மொழிபெயர்ப்பு அயிட்டம் பாடல்களுக்கு இணையானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதற்குள் சுகுமாரன் தொடக்கம் சிற்பி வரையானவர்களை உள்ளடக்கமுடியாது.
==
சிற்பியின் மொழிபெயர்ப்பில் அமைந்த ஒரு கவிதை.
1. நினைவில் காடுள்ள மிருகம்.
===
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில்
பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.

அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.

அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன. அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.

அதன் சிந்தனைகள் காட்டுப் பாதைகளில் குதித்தோடுகின்றன.

நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.

என் நினைவில் காடுகள் உள்ளன.

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்சுவாசக் குழாய் அடைப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *