ஜெயஸ்ரீ சாரநாதன்
தமிழை ஆண்டாள் என்னும் அதி அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள் என்றார் வைரமுத்து. அது தவறு என்று நாம் நிரூபித்தோம்.
மேலும் அவரது கட்டுரை பறைசாற்றும் அவரது தமிழறிவைப் பற்றி 18 சறுக்கல்கள் என்று தலைப்பிட்டு விவரித்திருந்தோம்.
இவற்றின் தொடர்ச்சியாக ஆண்டாள் குறித்து வைரமுத்து, மற்றும் அவரது கட்டுரைக்குத் தோள் கொடுத்த நாலு பேர் சொன்ன அவதூறுகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில் கொடுப்போம்.
நாலு பேரில் ஒருவர் சில கருத்துக்களைச் சொன்னார். அதற்கு மேலும் அவர் தனது ஞானத்தைக் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று தெய்வம் நினைத்து விட்டது போலும். அவருக்கே நாலு பேர் வந்து விட்டார்கள்!
அவர் சொன்ன ஒரு கருத்து ராஜாஜியைப் பற்றியது. ராஜாஜி மஹாபாரதம் போன்றவற்றையெல்லாம் அறிந்தவர் என்ற பீடிகை கொடுத்து விட்டு, அவர் ஆண்டாளை பற்றி எழுதியதைச் சொல்கிறார். ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றும், அந்தப் பாடல்களை சிறு பெண்ணான ஆண்டாள் எழுதியிருக்க முடியாது என்றும், அதனால் அவற்றை அவள் பெயரில் பெரியாழ்வாரே எழுதியிருக்க வேண்டும் என்றும் ராஜாஜி 1946- இல் ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார் என்கிறார். இந்த விவரத்தை, ஆண்டாளின் பாடல்களில் காம ரசம் சொட்டுகிறது என்று பலவிதமாக விவரித்த பிறகு இவர் சொல்கிறார். இதனால் கேட்பவர்களுக்கு, இதன் காரணமாகவே அந்தப் பாடல்களை ஆண்டாள் எழுதியிருக்க முடியாது என்று ராஜாஜி கருதியிருக்கிறார் என்ற தோற்றம் எழுகிறது.
இதே கருத்தை, நாலு பேரில் மற்றொருவர் தொலைக்காட்சி நேர்க்காணலில், பாண்டே அவர்களிடம் அழுத்திச் சொன்னார். ராஜாஜி அவர்கள் அன்றைக்கே ஆண்டாளை பற்றி அப்படிச் சொன்னாரே, அவர் மீது கோபப்பட்டீர்களா, இன்று வைரமுத்துவின் மீது கோபப்படுகிறீர்களே என்று கேட்டார்.
ராஜாஜியை மேற்கோளிடும் இந்த இருவருமே ராஜாஜி அந்தக் கட்டுரையை எழுதியதாகச் சொல்லப்பட்ட வருடமான 1946- இல் பிறந்திருந்தவர்கள்தானா என்பது சந்தேகமே. நேரே பார்த்தது போலச் சொல்கிறார்களே, ராஜாஜி எழுதியதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு கட்டுரை வந்தது என்பதையும், அதை ராஜாஜி ஏற்றுக் கொண்டார் என்பதையும் ஏன் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்? தனக்கு ஆண்டாளை பற்றி அவ்வளவாகத் தெரியாது என்று ராஜாஜி ஒத்துக் கொண்டார் என்பதை ஏன் மறைத்தார்கள்?
மேலும் ராஜாஜி சொல்லியிருந்தால் அந்தக் கருத்து உண்மை என்றாகி விடுமா? பெரியாழ்வார் எழுதியிருப்பார் என்று சொல்வதன் மூலம், காம ரசம் சொட்டும் பாடல்களை பெரியாழ்வார் எப்படி எழுதியிருப்பார் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா? அவர் விட்டுசித்தர் (விஷ்ணு சித்தர்). விட்டுசித்தர் வாயில் காமப் பாடல்களா? இதையெல்லாம் யோசிக்காமல் அவரும் சொல்லியிருக்கிறார், இவர்களும் நியாயப்படுத்துகிறார்கள்.
ராஜாஜியின் ஆண்டாள் கட்டுரைக்கு மறுப்பு.
ராஜாஜியின் கட்டுரைக்கு ‘பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்’ (PBA ஸ்வாமி) என்னும் வாத, உபன்யாச சிரோன்மணி பதில் கொடுத்தார். அதைப் பற்றி “ஸ்ரீராமானுஜன்” என்னும் தனது மாதப் பத்திரிக்கையில் ஒரு அறிவிப்பும் செய்துள்ளார். 1956-ஆம் ஆண்டு பத்திரிகையில் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பு மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. அவரது மறுப்புக் கட்டுரையும் கிடைத்தால் நலம். இனியும் யாரும் ராஜாஜியின் பெயரைச் சொல்லிக் கொண்டு அன்றே அவர் ஆண்டாளை பற்றிச் சொல்லவில்லையா என்று கேட்க முடியாது.
PBA ஸ்வாமி அவர்கள் ராஜாஜிக்குக் கொடுத்த மறுப்புரை நமக்குக் கிட்டவில்லையென்றாலும், அவர் வேறொரு கட்டுரையில் கூறியுள்ளது வைரமுத்துவின் கட்டுரைக்குப் பொருத்தமாக இருக்கிறது. அதனைக் கீழே காண்க:
வைரமுத்து எழுதியது யார் யாரையெல்லாம் மயக்கியது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் விவேகிகளுக்குக் கண்டிப்பாக உகப்பாக இருக்கவில்லை.
PBA ஸ்வாமி வேறொரு கட்டுரையை விமரிசித்தபோது எழுதியது, வைரமுத்துவின் கட்டுரைக்கும் பொருத்தமாக இருக்கிறது. அவரது விமரிசனத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
PBA ஸ்வாமி அவர்கள் நையாண்டியாக எழுதிய இந்த விமரிசனத்தில் உள்ளது போலவே, ஆண்டாள் கதையை வைரமுத்து எங்கோ ஆரம்பித்து, எங்கேயோ கொண்டு போய் விட்டார்.
‘ஆண்டாள் என்றொருத்தி இருந்தாள். அவள் பாவை நோன்பு செய்தாள். நோன்பு என்பது இறைவனுக்குச் செய்வது. அந்த இறைவனே கணவனாக வேண்டும் என்று நினைத்தாள். அந்தக் காலக்கட்டத்தில் இவன்தான் கணவன் என்று ஒருத்தி தானாகவே எப்படி முடிவு செய்வாள்? ஏனெனில் அவள் தகப்பனுக்குப் பிறந்தவள் இல்லை’ என்று பின்னிக் கொண்டுபோய் ‘கலாசார அதிர்ச்சி’ ஏற்படுத்தக்கூடிய முடிவுக்கு வந்து விட்டார்.
அவருடைய கட்டுரையைத் தூக்க வந்த தூக்குத் தூக்கியோ ஒரு படி மேலே போய், ஆண்டாள் ஒரு தொட்டில் குழந்தைக்குச் சமம் என்று ஆரம்பித்து, வைரமுத்துவின் ‘கலாசார அதிர்ச்சி‘ முடிவுக்குப் பக்க வாத்தியம் ஊதினார். அவள் பாடலில் அடிக்கடி வருவது முலைகள் என்னும் சொல் என்னும் கண்டுபிடிப்பைக் கொடுத்து, காமவேட்கையும், புணர்ச்சியுமே அவள் பாடல்களில் அதிகம் இருக்கின்றன என்றும் தூற்றினார்.
மேலும், மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டு, திருப்பாவை பற்றி அதிகம் பேசும் மக்கள் கூட, நாச்சியார் திருமொழி பற்றி அதிகம் பேச மாட்டார்கள். ஏனென்றால் நாச்சியார் திருமொழி முழுக்க முழுக்க காம ரசம் ததும்பும் படைப்பாக இருக்கிறது என்கிறார்.
இப்படிச் சொல்லும் இந்த ஞானவானுக்குத் தெரியவில்லை – நாச்சியார் திருமொழியின் பல பாடல்களைத் தினந்தோறும் காலையில் சென்னை வானொலி நிலையம் ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. பிரபல பாடகியான திருமதி மணி கிருஷ்ணஸ்வாமி உட்பட பலரும் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை 25 வருடங்களுக்கு முன்னால், வானொலியில் கேட்டு கற்றுக் கொண்ட பலரில் நானும் ஒருத்தி. அவற்றுள் ‘கருப்பூரம் நாறுமோ‘ பாடல் உட்பட நாச்சியார் திருமொழியின் பல பாசுரங்களும் அடக்கம்.
நாச்சியார் திருமொழியின் கனவு நிலைப் பாடலான ‘வாரணமாயிரம்‘ இன்றும் திருமணங்களில் பாடப்படுகிறது. பெருமாள் கல்யாண உத்சவத்திலும், தேங்காய் உருட்டும் போது பாடப்படுகிறது. சமீபத்தில் அயோத்தியில் நடந்த சீதா கல்யாண உத்சவத்தில் தென்திருப்பேரை அரவிந்தலோசன ஸ்வாமி அவர்கள் அதைப் பாடக் கேட்ட நான், ஆணாகப் பிறக்கவில்லையே என்று முதன் முறையாக என் வாழ்க்கையில் நினைத்தேன். ஆண் குரலின் கம்பீரத்தில், பிரபந்த வேதத்துக்கான சந்த ஓசையுடன் அந்தப் பாடல் பாடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாடப்படுவதைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அந்தக் கொடுப்பினை இல்லாத ஞான சூன்யங்கள் காமத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பார்கள்.
நாச்சியார் திருமொழி காம ரசம் ததும்பும் படைப்பாக இருக்கிறது என்றும் ஒரு பெண் எப்படியெல்லாம் தன் காம வேட்கையைச் சொல்லமுடியுமோ அப்படியெல்லாம் ஆண்டாள் சொல்லியிருக்கிறாள் என்றும் அந்தத் தூக்குத் தூக்கி சொல்லியுள்ளார். மேலும் அவர்தான் வரவில்லை. அவர் உடையையாவது எனக்கு அனுப்பக்கூடாதா என்று சொல்லும்போது – மேலாடை வேண்டாம், கீழாடை தான் வேண்டும் அதுதான் அவருடைய உடல் வாசனையை எனக்கு கொடுக்கும் என்று ஆண்டாள் கூறுகிறாள் என்றும் சொல்கிறார்.
ஆண்டாள் அப்படித்தான் கூறினாளா? அந்தப் பாடலில் ‘புண்ணில் புளிப் பெய்தாற் போல‘ என்று ஆண்டாள் சொல்கிறாள். இவர்கள் சொல்லும் தூஷணையும் புண்ணில் புளிப் பெய்தாற் போல இருக்கிறது.
மேலும் அவள் யாரைப் பற்றிப் பாடியிருக்கிறாள்?
யார் அந்த ‘அவர்’?
அந்த ‘அவர்’ என்பது தெய்வம். கண்ணனென்னும் கருந்தெய்வம். அதன் மேலுள்ள தன் காதலை ஆண்டாள் வெளிப்படுத்தியமைக்கு இவர்கள் பேசும் பேச்சு இது.
ஆண்டாள் என்ன எழுதியிருக்கிறாள்?
ஆண்டாள் சொன்னதை எதற்காக இந்தத் தூக்குத் தூக்கி திரித்துச் சொல்லுகிறார்?
உண்மையில் ஆண்டாள் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்வோம். கண்ணனென்னும் கருந்தெய்வம் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டி ஆண்டாள் வேண்டி நிற்கிறாள். அவள் வேண்டுதலுக்கு இன்னும் அந்தத் தெய்வம் செவி சாய்க்கவில்லை. அவ்வாறிருக்க அவளை சுற்றியுள்ளோர் அவனது புற அழகைப் பேசுகையில், அவளது வருத்தமும், வாட்டமும், அவலமும் அதிகரிக்கிறது. அச்சுதன் அணியும் பொருட்களைக் கொண்டு தன் அவலத்தைத் தணியுங்கள் என்று கூறுவதே அந்தப் பத்துப் பாடல்கள்.
அவளது “வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண ஆடை கொண்டு, என்னை வாட்டம் தணிய வீசீரே‘ என்று கூறுகிறாள் (நா. தி. 13-1). அவன் அரையாடையைக் கொண்டு தனக்கு விசிறி வீசச் சொல்கிறாளே தவிர, மேலாடை வேண்டாம், கீழாடைதான் வேண்டும், அதுதான் அவரது உடல் வாசனையைக் கொடுக்கும் என்று இந்த ஞானவான் சொல்வது போல ஆண்டாள் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்ன வாய்க்கு வாய்க்கரிசி வந்து விட்டது.
அது என்ன அரையாடை?
இதே அரையாடையைத் திருப்பாணாழ்வாரும் உகந்து பாடியிருக்கிறார். ஆண்டாளின் மணாளனான அரங்கன் அழகை, திருப்பாதம் முதல் கேசம் வரை விவரிக்கையில், ‘அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே‘ என்கிறாரே, பெருமாளின் கீழாடையின் மேல் என் சிந்தனை செல்கிறது என்றா இதனைப் பொருள் கொள்ள வேண்டும்?
அதே பதிகத்தில், அந்தத் தெய்வம் தன்னைத் ‘தன் வாரமாக்கி வைத்தான், வைத்ததன்றி என்னுள் புகுந்தான்‘ என்றும் திருப்பாணாழ்வார் சொல்கிறாரே, அதை இந்தத் தூக்குத் தூக்கிகள், புணர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார் என்று கூட வியாக்கியானம் செய்வார்கள். நல்ல வேளை, அவர் ஆணாகப் பிறந்து விட்டார். இப்படிப்பட்ட அபவாதப் பேச்சுகளிலிருந்து தப்பி விட்டார்.
இதெல்லாம் என்ன பேச்சு?
பெற்ற தந்தையே மகளை மணக்கலாம் என்றும், அண்ணனும், தங்கையும் உறவு கொள்ளலாம் என்றும், நண்பன் மனைவியுடன் காம லீலை செய்யலாம் என்று கதைகளும், நாடகங்களும் தீட்டியவர்களால் புத்தி மழுங்கடிக்கப்பட்டவர்கள்தானே இவர்கள்?
இவர்கள் அறிந்த அரையாடைப் பேச்சு எப்படிப்பட்டது தெரியுமா? “We are tied to the apron strings of the Central Government’ என்று ஒருவர் குற்றம் சாட்டியதை மொழிபெயர்த்து, மத்திய சர்க்காருடைய பாவாடை நாடாவில் மாகாண சர்க்கார் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கிறது. அந்தப் பாவாடை நாடாவை அவிழ்த்து விட நாங்கள் விரும்புகிறோம் என்றவர் இவர்களுக்கு அறிஞர்! ஆபாசப் பேச்சும், பாலுணர்ச்சி தூண்டும் வசனங்களும், பாடல்களும் எழுதி அரை நூற்றாண்டுகளாக மக்கள் மனத்தைக் கெடுத்தவர்களுக்கு, இயற்கையிலேயே உள்ள காம உணர்ச்சியை எப்படி ஆற்றுப்படுத்த வேண்டும் என்று தமிழாலும், இலக்கணத்தாலும் முதற் சங்கம் முதல் வழி வகுத்துக் கொடுத்த முன்னோர் பான்மை எப்படிப் புரியும்?
தமிழ் இலக்கியத்தில் முலைப் பேச்சு
முலை என்று சொன்னாலே காமக் கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பவர்கள் இவர்கள்.
முலையைப் பற்றிய முதல் செய்தி, சங்கத் தமிழ்ப் பரம்பரையை ஆரம்பித்து வைத்த பாண்டியன் குலக் கொழுந்து தடாதகைப் பிராட்டியின் கதையில்தான் வருகிறது என்பது இவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால். அதைக் காமப் பொருளில் கையாண்டார்கள் என்று சொல்வார்களா இவர்கள்?
அவள் பிறக்கும் போதே மூன்று முலைக் காம்புகளுடன் பிறந்தாள். அவள் தன்னை மணக்கப் போகிறவனைக் காணும் போது, மூன்றாவது முலை மறைந்து போகும் என்பதே அந்தக் கதை சொல்லும் செய்தி.
தடாதகைப் பிராட்டி போர் புரிய கயிலைக்குச் சென்றாள். அங்கு கயிலைநாதனைக் கண்டவுடன் அவளது மூன்றாம் முலை மறைந்து விட்டது. அதே கணத்தில், அவள் கருத்தில் நாணம், மடம், அச்சம் ஏற்பட்டு, கால் விரலால் தரையைக் கீறிக் கொண்டு, கண்களைத் தாழ்த்தி ‘புறவடியை’ – அதாவது கயிலை நாதன் அடியை நோக்கினாள் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதே வருணனையைக் களவியல் இலக்கணமாகத் தொல்காப்பியம், பொருளதிகாரம் சூத்திரங்கள் 93 முதல் 97 வரை காணலாம்.
எவனைக் கண்டவுடன் முலை முதற்கொண்டு புறத்திலும், நாணம், மடம் என்று அகத்திலும் உணர்வுகள் தோன்றுகின்றனவோ, அவற்றைக் கொண்டு அவனே தலைவன் என்று அறிவது சங்க காலம் தொட்டு வந்த அகப்பொருள் மரபு. தடாதகைப் பிராட்டியும் அவ்வாறே அறிந்தாள். அதையே கம்பனும் தான் எழுதிய ராமாயணத்தில் வைத்தார். வால்மீகி சொல்லாத ஒரு விவரமாக, அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்று ஒருவருக்கொருவர் நோக்கிய பாங்கைச் சொன்னதன் காரணம், அந்த நோக்கு அகவெழுச்சியை உண்டாக்குகிறது. அப்படி அகவெழுச்சி உண்டானால், அவனுக்கும் அவளுக்கும், ஜன்மாந்தர தொடர்பு உண்டு என்பது பொருள் என்பதே சங்க காலம் தொட்டு வந்துள்ள எண்ணம். அதனால் களவியலை உயர்திச் சொன்னார்கள். இன்றைக்குக் காதல் என்ற பெயரில் எழும் காமத்தை அல்ல.
இதையே சிலப்பதிகாரத்தில் முலையைப் பற்றிப் பேசும் இடத்தில் காண்கிறோம். கணவனை இழந்த கண்ணகி வஞ்சினம் கொண்டாள். தன் முலையைத் திருகி, மதுரை நகரம் மீது வீசி எறிகிறாள். மதுரையே தீப்பற்றி எரிந்தது. ஏன்? அவள் ஒரு சபதம் எடுத்தாள். தான் விரும்பிய தன் காதலனை மன்னன் கொலை செய்தான். அதனால் அவனது நகரத்தின் மீது கோபமுற்றாள். அப்படிக் கோபம் கொண்டதில் தவறே இல்லை என்பது உண்மையென்றால் இந்த நகரம் தீப்பற்றி எரியட்டும், என்று சொல்லி, தன் முலையைத் திருகிப் பிடுங்கி வீசி இருந்தாள். அந்த முலையின் சக்தியால், நாடே தீப்பற்றி எரிந்தது. தன் கணவனை முன்னிட்டு அவள் செய்த சபதத்துக்கும், அந்த முலைக்கு இருந்த சக்திக்கும் உள்ள தொடர்பை மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
மூன்றாவதாக முலைப் பேச்சு வருவது ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில்.
எந்தப் பதிகத்தில், பெருமாளின் அரையாடையைக் கொண்டு விசிறி விடுங்கள் என்று சொன்னாளோ, அதே பதிகத்தின் எட்டாவது பாசுரத்தில், தன் முலையைப் பிடுங்கி வீசி எறிவேன் என்கிறாள் ஆண்டாள் . உள்ளே உருகி, நைந்து போய், இருப்பேனோ, இறந்து விடுவேனோ என்று தன் நிலையைச் சொல்கிறாள் ஆண்டாள். இந்த நிலை தொல்காப்பியத்தின் களவியல் சூத்திரத்தில் சொல்லப்படும் 10-ஆவது நிலை. அது சாதல். இனியும் கண்ணன் என்னும் கருந்தெய்வம் வரவில்லையென்றால் தான் இல்லாமல் போய் விடுவேனோ என்று மருளும் ஆண்டாள், இதற்கு மேல் கோவர்தனனைக் கண்டால் என்ன பயன் என்று கேட்கிறாள்.
அவனை அவள் இன்னும் கண்டதில்லை. அவனைக் காணும் போது, தடாதகைப் பிராட்டி உணர்ந்த உணர்ச்சியும், கண்ணகி குறிப்பால் உணர்த்திய தொடர்பும், கம்பன் வைத்த நோக்கும் ஏற்பட வேண்டுமே? ஆனால் சாகக் கிடக்கையில் அந்த உணர்வுகள் எப்படி ஏற்படும்?
அதனால் கூறுகிறாள்,
“கொள்ளும் பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்து அவன் மார்வில்
எறிந்து என் அழலை தீர்வேனே‘
இப்படிப்பட்டச் சொல்லை ஆண்டாள் ஏன் அந்தத் தருணத்தில் வைக்க வேண்டும்? ‘கோவர்தனனைக் கண்டக்கால்‘ என்கிறாள். தூக்குத் தூக்கிகள் சொல்வது போல அவள் காமப்பித்து கொண்டவள் என்றால், அவனைக் கண்டவுடன் ஏற்படும் துடிப்புகளைத்தானே சொல்ல வேண்டும்? அவனைக் கண்டவுடன், இன்பம் தானே ஏற்படவேண்டும்? ஆனால் அவள் அவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில் நைந்து உருகிக் கிடக்கிறாள் அவள். அப்படிப்பட்ட நேரத்தில், அவள் முன் அவன்தோன்றினாலும், அண்ணலும், நோக்கி, அவளும் நோக்கி என்று தொன்று தொட்டு சொல்லப்பட்டு வந்த அகவெழுச்சி அங்கு எழ வாய்ப்பில்லை.
தமிழ் இலக்கிய மரபில் அந்த நோக்கும், அது தரும் அகவெழுச்சியும் முக்கியம் என்பதால்தானே கம்பனும், ராமன்- சீதை குறித்து இடைச்செருகல் செய்தான்? ஆண்டாளும் இலக்கிய மரபில் எழுதவேதான் அதன் கூறுகளைப் பிசகாமல் எழுதியிருக்கிறாள்
இதற்கு முந்தின பதிகம் வரை அவள் எதிர்பார்ப்பில் இருந்தாள் – தொல்காப்பியக் களவியல் (பொருள் அதி: 97) கூற்றுப்படி சாக்காடுக்கு முந்தின மயக்கத்தில் இருந்தாள். அந்தப் பதிகத்தில் எப்படியாவது கண்ணனைப் பார்த்தேயாக வேண்டும் என்று விழைகிறாள். கண்ணன் அவளைத் தேடி வரவில்லை, அதனால் இவளைக் கண்ணனிடம் அழைத்துப் போங்கள் என்று தமரிடம் கூறுகிறாள். அப்பொழுது முலை சார்ந்த அகவெழுச்சியைக் குறிப்பிடுகிறாள்.
செங்கச்சுக் கொண்ட அவள் கொங்கை, மானுடரைக் கண்டால் நாணி உள்ளடங்கிடும். ஆனால் கோவிந்தனைக் கண்டால் அவனை நோக்கும் என்று அவள் சொல்கிறாள். அது மரபு சார்ந்த, மரபால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, தன் உள்ள கிடங்கை பெண்ணாகப் பட்டவள் உணர்வதற்கான அறிகுறி. இந்த மரபையும் , இலக்கண, இலக்கியத்தையும் அறிந்துதான் எழுதியிருக்கிறாள் என்பதை பற்றி மரபு அறிந்த மக்கள் இருந்தவரை சந்தேகமே எழ வில்லை. மரபறியாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், திரிபு செய்தும், காமக்கண்ணோட்டத்தில் எழுதியும், பரப்பியும் வந்த இன்றைய காலகட்ட மக்களுக்குத்தான் இப்படிப்பட்ட சந்தேகங்களும், பேச்சுக்களும்.
பாலியல் உரையாடல் செய்த வைரமுத்து
இலக்கியங்களில் முலை குறித்த பேச்சு அடிக்கடி நிகழ்வது ஆயர் குல மக்களிடையேதான். கலித்தொகையில் முல்லைக் கலியில்தான், ஆயமகள் கேட்கும் முலை விலை எளிதானதா போன்ற கருத்துக்கள் வருகின்றன. அவள் வளர்க்கும் மாட்டை அடக்குபவன் அவளையும் ஆளத் தகுந்தவன் கன்றுப் பருவத்திலிருந்து அதை இழுத்து அடக்கி வளர்க்கவே, அந்த ஆயர் குலப் பெண்ணுக்கும் தோள் வலியும், உடல் வளர்ச்சியும் குறிப்பிடும்படி அமைந்திருக்கும். இதன் காரணமாக ஆயர் குலச் சொல்லாடலில்தான் முலை குறித்த பேச்சு காணப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில், “குத்து விளக்கெரிய” பாசுரத்தில் வைரமுத்து இரண்டு விதமான தவறான புரிதல்களையும் அதன் காரணமாக அபாண்டங்களையும் புகுத்தியுள்ளார். முதலாவது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆயர் குல மகளான நப்பின்னையைப் பற்றிப் பேசும் இடத்தில் அவளது கொங்கையும் இடம் பெறுகிறது. இதனை வைரமுத்து பாலியல் உரையாடல் என்றால், ஆண்டாள் காலத்தை ஒட்டி எழுந்த சீவக சிந்தாமணியில் பல இடங்களில் இதைவிட அதிகமாக முலைப் பேச்சு வருகிறதே, அதை எழுதிய திருத்தக்க தேவர் அத்துமீறிப் பேசினார் என்றும், பாலியல் உரையாடல் செய்தார் என்றும் வைரமுத்து சொல்வாரா?
சீவக சிந்தாமணியில், கோவிந்தையார் இலம்பகத்தில் ஆயர்குலத் தலைவனான நந்தகோன், தன ஆநிரையை மீட்டுத் தருவோருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து தருவதாகக் கூறுகிறார். அப்பொழுது என்னவென்று தன் மகளை அறிமுகப் படுத்துகிறார்? ‘வண்ண வனமுலை மாதர் மட நோக்கி‘ வளப்பமான முலையையுடைய பெண் என்கிறார். இப்படியா ஒரு தந்தை தன் மகளைப் பற்றிக் கூறுவது என்று கேட்கும் நவீன உலக ஞானிகளும், வைரமுத்துக்களும் அன்று இல்லை.
அவர் மட்டுமல்ல, ஆநிரையை மீட்ட சீவகனும் என்ன சொல்கிறான்? ‘மோடு இள முலையினால்‘ ஆன நின் மகள் என்று அவளை பற்றிச் சொல்கிறான். அவளை மணக்கும் பதுமுகன் அவளை எப்படித் தழுவினான் என்பது 490-ஆவது செய்யுளில் வருகிறது. கடு-நெறிகளைக் கொண்ட சமணர்கள் என்றோர் இடத்தில் வைரமுத்து சொல்கிறாரே, அந்த சமணத்தைச் சேர்ந்த சமணத்துறவியான திருத்தக்க தேவர் அந்த வரிகளை எழுதியுள்ளார். அவர் பாலியல் சொல்லாடல் செய்தார் என்று வைரமுத்து சொல்வாரா?
உண்மை என்னவென்றால் இந்தவிதமான சொற் பிரயோகம் ஆய்ச்சி மக்களைக் குறித்து வருகிறது என்பதைத் தமிழ் ஆராய்ச்சி செய்த வைரமுத்துவும் அறியவில்லை, அவருக்கு ஒத்து ஊதும் மற்றவர்களும் அறியவில்லை. ஆண்டாள் காலத்திற்குப் பின் வந்த சீவக சிந்தாமணியிலும் தொடரும் இந்தச் சொற் பிரயோகம், அன்றைக்குக் கவி பாடியவர்கள், எத்துணை நுணுக்கத்துடன் ஒவ்வொரு பாத்திரத்தையும், சொல்லையும் கையாண்டு இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. இதில் ஆண்டாளைக் குறை சொல்வதை விடுத்து, சிறு வயதிலேயே அந்த கவிச்சொல் இலக்கணத்தை எப்படி ஆண்டிருக்கிறாள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
இனி ‘குத்து விளக்கெரிய’ பாசுரத்தில் வைரமுத்து சொல்லும் இரண்டாவது அபாண்டத்தைப் பார்ப்போம்.
தீராப் புலமையால் திமிர் காட்டும் உரைகாரர்கள் சொல்வதில் நியாயம் பாராட்ட முடியாதாம். ஆனால் தீர்ந்து போன, தீய்ந்து போன புலமையைக் கொண்ட வைரமுத்து சொல்லும் உரை என்ன? அவர் அந்தப் பாசுரத்தில் அவர் புரிந்து கொண்டது தான் என்ன?
கண்ணனை வாய் திறந்து பேசு என்று கேட்கிறாள் ஆண்டாள். உடனே கவிப்பேரரசுக்குக் கற்பனை ஓடுகிறது. கண்ணன் ஏன் வாய் திறக்கவில்லை? அதற்குத் தானே ஒரு காரணத்தைக் கற்பித்து, அதை ஆறாம் பொருள் என்று நாலாந்தர சினிமாப்பாணியில் சொல்லி விட்டு, அதைக் கவிதை நயம் என்றும் தானே சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறாரே, யார் பாலியல் உரையாடல் செய்கிறார்? வாய் என்றாலே கற்பனையைத் தட்டி விடுகிற வைரமுத்துதானே?
‘வாய் திறவாய்’ என்று படித்த இடத்திலேயே வைரமுத்து நின்று விட்டார். அதற்கு மேல் அவரது கண்ணும், சிந்தையும் செல்லவில்லை. சென்றிருந்தால் அந்தப் பாசுரத்தின் கடைசி வரியில் ‘தத்துவம் அன்று’ என்று ஆண்டாள் சொல்லியிருக்கிறாளே, அது என்ன தத்துவம் என்று யோசித்திருக்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். வாய்ப்பு கிடைத்தால் மட்டும் என்ன, ஒழுங்காகவா சிந்திருப்பார் என்று கேள்வியும் நமக்கு எழுகிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
வைரமுத்துவின் அகத்தின் அழகு, அவர் எழுத்தில் தெரிகிறது.
காமம் சாரா முலைப் பேச்சு
ஆயர் குல மரபை ஒட்டித்தான் ஆண்டாள் சொற்பிரயோகம் செய்திருக்கிறாள் என்பதற்கு இரண்டாம் பத்தில் ஒரு சான்று இருக்கிறது.
நாச்சியார் திருமொழியின் இரண்டாம் பத்தில் ஆண்டாளும், அவளொத்த சிறுமிகளும் சிற்றில் இழைக்கிறார்கள். அதாவது மணலில் வீடு கட்டுகிறார்கள். அதைக் கண்ணன் வந்து சிதைக்கிறான். (சிற்றில் இழைத்தல், சிற்றில் சிதைத்தல் என்னும் இவை இரண்டுமே பெண் பால், ஆண் பால் பிள்ளைத் தமிழில் வருபவை). கண்ணனிடம், நீ வராதே, சிதைக்காதே, போய் விடு என்று ஆண்டாள் பலவிதமாகச் சொல்கிறாள். அப்படிச் சொல்லும் போது, நாங்கள் சிறு பிள்ளைகள் என்று சொல்லவருகையில், 6 – ஆம் பாடலில்,
‘முற்றிலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோம்‘ என்கிறாள்.
வளராத பிள்ளைகள் நாங்கள். எங்கள் முலைகள் இன்னும் வெளிப்பட வளரவில்லை என்று சொல்கிறாள்.
அது ஆண்டாள் சொன்ன சொல்லா என்று பார்த்தால், 10- ஆம் பாட்டில் தாங்கள் யார் என்று வெளிப்படுத்திக் கொள்கிறாள்.
‘வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர்‘ என்கிறாள்.
தன்னை ஒரு ஆயர் சிறுமியாகக் காட்டிக் கொள்கிறாள். ஆயர் சிறுமிகள் மத்தியில் இருந்த சொல்லாட்சியை அவள் பயன்படுத்தி இருக்கிறாள்.
பொதுவாகவே ஆயர் மக்களிடையே முலை குறித்து சர்வ சாதாரணமாகப் பேசுவதை சங்க கால இலக்கியம் தொட்டே பார்த்திருக்கிறோம். அந்தப் பேச்சு விகற்பம் இல்லாமல் அவர்களிடையே புழங்கி இருக்கிறது என்பதை ஆயர் சிறுமியர் வாக்கிலும் ஆண்டாள் காட்டியுள்ளாள்
சிறுமியராக இருந்தவர்கள் முலையைக் குறித்து தங்கள் அறியாப் பருவத்தை ஆண் பிள்ளைகளிடம் சொன்னதன் காரணமென்ன? . சிற்றிலைச் சிதைக்க வருபவன், அவளால் ஈர்க்கப்பட்டு அதன் வெளிப்பாடாக, அவளிடம் வம்பு செய்ய வந்திருந்தால், அவளுக்கு இன்னும் வயதாகவில்லை என்று ஆயர் குலப் பெரியோர்கள் அந்த காலக் கட்டத்தில் சொல்லிக் கொண்டிருந்திருப்பார்கள். அதன் வெளிப்பாடாகவே இந்த முலைப் பேச்சு அமைந்துள்ளது. அந்தச் சொல், அந்த சமூகத்துக்கு இயல்பானது.
இன்றைக்கு முலை என்பது கெட்ட வார்த்தையாகப் போய் விட்டது. அதைக் காமம் சார்ந்ததாகத்தான் பார்க்கும் வண்ணம் இன்றைக்கு சினிமா, பாடல்கள் என எல்லாவற்றிலும் புகுத்தியது கவிப்பேரரசு முதல் அவர் சினிமா முன்னோடிகள் வரை கொடுத்துள்ள உபயம்.
ஆயர் மகளாக மாறிய ஆண்டாள்.
ஆண்டாள் பாடிய அத்தனை பாசுரங்களும் ஆயர்பாடியை மையமாகக் கொண்டவைதான். அவளே தன்னை ஆயர் மகளாக உருவகித்துக் கொண்டு திருப்பாவை பாடினாள். நாச்சியார் திருமொழியும் பாடினாள்.
ஏன் அவள் ஆயர் மகளாகத் தன்னை உருவகப்படுத்திக் கொண்டாள் என்றால், கண்ணனை மணந்து கொள்ளவே. கண்ணன் ஆயர் குலத்தவன். ஆயர் குலத்தவர் தங்களுக்குள்தான் மணந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குச் சான்றாக சீவக சிந்தாமணியைக் காட்டலாம்.
அதில் ஆநிரையை மீட்டு, அதற்குப் பரிசாக ஆயர் மகள் கோவிந்தையைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தாலும், சீவகன் மறுத்துவிடுகிறான். அவள் குலத்தைச் சேர்ந்தவன் மணந்து கொள்வதே நலம் என்று சொல்லிவிடுகிறான்.
இதை இந்த காலத்தவர் சாதி வெறி என்பார்கள். திருத்தக்க தேவர் காலம் வரை இதுதான் மரபாக இருந்திருக்கிறது. அவர் காலத்துக்கு முந்தின ஆண்டாளும், கண்ணனை மணக்க விரும்பி தன்னை ஒரு ஆய மகளாகவே பாவித்துக் கொண்டாள்.
அவளது சீர்மை எப்படிப்பட்டது என்றால், குலம் தாண்டி ஒருத்தி (அல்லது ஒருவன்) கண்ணனை அடைய வேண்டும் என்றால் எப்படியெல்லாம் தன் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வரிக்கு வரி எழுதி வைத்தும், வாழ்ந்தும் காட்டியும் சென்றிருக்கிறாள்.
அவள் வரிகளில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், சங்க மரபிலிருந்து இம்மியும் பிசகாமல் எழுதி இருக்கிறாள்.
நாச்சியார் திருமொழியும், திருக்குறளும்
நாச்சியார் திருமொழியை யாராலும் படிக்க இயலுமா என்று தூக்குத் தூக்கிகள் கேட்டார்களே, திருக்குறளைப் படிக்க முடிந்தால், நாச்சியார் திருமொழியையும் படிக்க முடியும். திருக்குறளில் சொல்லாததை, நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்லிவிடவில்லை.
4-ஆம் பத்திலிருந்து, கடைசி பத்தான 14-ஆம் பத்து வரை நாச்சியார் திருமொழியில் திருக்குறள் கருத்துக்கள் விளையாடுகின்றன. அவை என்னவென்று பாருங்கள்:
4-ஆம் பத்து : கூடல் இழைத்தல் = குறள் அதிகாரம் 109 (தகையணங்குறுத்தல்)
5-ஆம் பத்து : குயில் பத்து = குறள் அதிகாரம் 112 (நலம் புனைந்துரைத்தல்)
6-ஆம் பத்து: வாரணமாயிரம் = குறள் அதிகாரம் 122 (கனவு நிலை உரைத்தல்)
7-ஆம் பத்து: கருப்பூரம் நாறுமோ = குறள் அதிகாரம்113 ( காதல் சிறப்புரைத்தல்)
8-ஆம் பத்து : மேகம் விடு தூது = குறள் அதிகாரம் 117, 124 (படர் மெலிந்து இரங்கல், உறுப்பு நலன் அழிதல்)
9-ஆம் பத்து: திருமாலிருஞ்சோலைப் பெருமானை வழிபடல் = குறள் அதிகாரம் 127 (அவர்வயின் விதும்பல்)
10-ஆம் பத்து : கார்க்கோடல் பூக்காள் = குறள் அதிகாரம் 123 (பொழுது கண்டு இரங்கல்)
11-ஆம் பத்து: திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுதல் = குறள் அதிகாரம் 109 (தகையணங்குறுத்தல்)
12-ஆம் பத்து: சீதரனிடம் அழைத்துச் செல்வீர் எனத் தமருக்குச் சொல்லுதல் = குறள் அதிகாரம் 115, 126 (அலர் அறிவுறுத்தல், நிறை அழிதல்)
13 -ஆம் பத்து: அச்சுதன் அனுப்பி பொருளைக் கொண்டு அவலம் தணிமின் = குறள் 1199 ‘நசை யார் நல்கார் எனினும் அவர் மாட்டு இசையும் இனிய செவிக்கு”
14 – ஆம் பத்து: விருந்தாவனதே பரந்தாமனைக் கண்டமை = குறள் அதிகாரம் 131 (புலவி)
முக்கியமாக நாச்சியார் திருமொழியில் நாம் பார்க்க வேண்டுவது, சங்கத் தமிழ் சார்ந்த அகப்பொருளை ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஆண்டாள் கொடுத்திருக்கிறாள் என்பதே. அதை நாம் புரிந்து கொண்டால் இவர்கள் செய்து வரும் கேவலப் பேச்சுகளுக்கு இடம் இல்லாமல் போகும்.
ஆயனான மாயவனை அவள் கனவில் மணந்த பின்தான் இவர்கள் தூஷிக்கும் பாடல்கள் வருகின்றன. கனவில் மணந்த பின் வரவே, அவை கற்பியலில் சேரும். ஆயர் மகளுக்கு ஒரு மணம்தான் என்று முல்லைக் கலி கூறுவது இங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது. மனத்தால் வரித்து விட்டால் அவன் தான் மணவாளன். ஆண்டாள் விஷயத்தில் கனவிலே அவனை மணந்து விட்டாள். அதற்கு மேல் அவள் படும் ஆற்றாமை, பிரிவுத் துயரம் எல்லாம் காமம் என்றோ, சொல் விடுதலை என்றோ சொல்லுதல் சொல்பவராது அறியாமையைக் காட்டுகிறது.
காமன் நோன்பும், கரும்பு வில்லும்
நாச்சியார் திருமொழியைக் காமன் நோன்புடன்தான் ஆண்டாள் ஆரம்பிக்கிறாள். இந்த இடத்திலேயே தூக்குத் தூக்கிகளுக்கு வாய்த் துடுக்கு ஆரம்பித்துவிடும். அவர்கள் தமிழ்க் கலாசாரம் அறிந்தவர்களா என்ன? அவர்களுக்குத் தெரியுமா, பெண்பால் பிள்ளைத் தமிழ் காமன் நோன்புடன் முடியும் என்று?
“ஆண்டு ஈறாறதில் இழிற்காமன் நோன்போடு
வேண்டுதல் தானுள விளம்பினர் புலவர்”
என்று பன்னிரு பாட்டியல் கூறுகிறது. (105).
பிறந்ததிலிருந்து ஒவ்வொரு பருவத்தையும் விளக்கும் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தின்படி, ஒரு சிறுமி, பன்னிரண்டு வயது எய்துகையில் காமன் நோன்பை மேற்கொள்வாள். ஆண்டாளும் அதையே செய்தாள்.
அந்தக் காமன் நோன்பைக் காம தேவனுக்குச் செய்ய வேண்டும். யார் அந்தக் காம தேவன் என்பதை ஆண்டாள் முதல் பாசுரத்திலேயே சொல்கிறாள். ‘உன்னையும், உம்பியையும் தொழுதேன்’ என்று சொல்வதன் மூலம், காமன், சாமன் என்ற சகோதரர்களைக் குறிக்கிறாள் என்று தெரிகிறது. அவர்கள் இருவரும் திருமாலின் மகன்கள். இந்தச் செய்தியை பரிபாடலின் முதல் பாடலில், திருமாலை, ‘இருவர் தாதை’ என்று விளிக்கும் தொடரில் காணலாம். மால் என்றாலே மயக்குபவன் என்று பொருள். தன் மகள் மாலுறுகிறாள் என்று பெரியாழ்வார் தனது திருமொழியில் உருகுகிறார் (பெரியாழ்வார் திருமொழி 3-7). அப்படி மயக்குபவனது மகன்களது சிபாரிசில் அந்தத் திருமாலை அடையலாம் என்று நமக்குத் புரிகிறாற்போல பெரியோர்கள் அமைப்புகள் உருவாக்கியிருக்கிறார்கள். காமன், சாமன் வழிபாடு சங்க இலக்கியத்தில் இருப்பது, அது பழந்தமிழ்க் கலாச்சாரத்தின் அங்கம் என்பதைக் காட்டுகிறது.
அன்றைக்கு காமன் கோட்டம், சாமன் கோட்டம் இரண்டும் அருகருகில் இருந்திருக்க வேண்டும். இன்று காமன் கோட்டம் இல்லை, இன்றைய அறிவு ஜீவிகளான தூக்குத் தூக்கிகளைப் போல அன்றும் சமணர்கள் பழந்தமிழ்க் கலாச்சாரத்தை ஒழிக்கப் பார்த்தவர்கள்தான். அவர்களைப் போன்றவர்களால் காமன் கோட்டம் எந்த இடத்திலும் இல்லாது ஒழிந்தது. ஒரே ஒரு சாமன் கோட்டம் இன்றும் இருக்கிறது.
அது திருவெண்காட்டில் உள்ள புதன் கோயில்.
சாமன் என்பது புதன் பெயர்.
கடலோடு காவிரி சங்கமிக்கும் இடத்தில் சோம குண்டம், சூரிய குண்டம் என்ற இரு குண்டங்கள் இருந்ததாகவும், கணவனுக்காக நோன்பு இருந்து அந்தத் துறையில் மூழ்கி, அங்குள்ள காமவேள் கோட்டத்தில் தொழுதால், கணவனோடு இம்மையிலும், மறுமையிலும் இன்பமாக இருக்கலாம் என்றும் சிலப்பதிகாரத்தில் தேவந்தி என்னும் அந்தணப் பெண் கண்ணகியிடம் கூறுகிறாள். (சிலப்பதிகாரம் –9: 55-60)
சிலப்பதிகாரம் சொல்லும் காவிரி-சங்கத்தின் அருகே காமவேள் கோட்டம் இருந்தால், அங்கு திருமாலுக்கும் கோயில் இருந்திருக்கும். திருப்பாவையின் 22-ஆம் பாசுரத்தில் (அங்கண் மா ஞாலம்) இவையனைத்தையும் காட்டும் குறிப்புகள் உள்ளன. தம் மனைவிமார் நோற்கும் காமன் நோன்பின் காரணமாக, கணவன் மனைவியாக மன்னர்களும் அந்த சங்கத்துக்கு வந்து நீராடி, அருகில் உள்ள பள்ளி கொண்ட பெருமானின் கட்டில்காலின் கீழே நின்று சேவித்துச் சென்றிருக்கின்றனர். அந்தப் பாசுரத்தில் சொல்லப்பட்ட ‘திங்களும், ஆதித்யனும் எழுந்தாற்போல‘ என்பது அங்கிருந்த சோம, குண்டம், சூரிய குண்டத்தைக் குறிப்பதாக இருக்கலாம். சிலப்பதிகாரம் காட்டும் செய்திகளிலிருந்து வழுவாத இப்படிப்பட்ட குறிப்புகள் மூலம், ஆண்டாள் அன்றைக்கிருந்த வாழ்க்கை முறையைப் பற்றியே பேசியிருக்கிறாள் என்று தெரிகிறது.
காமன் நோன்பில், எல்லாச் சிறுமிகளும் வரப்போகும் கணவனைப் பற்றியே நினைத்தார்கள். ஆண்டாள் மட்டுமே அந்தக் கணவன் கண்ணனாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாள். காமன் நோன்பில்தான் இந்தக் கருத்து வருகிறதே ஒழிய, வைரமுத்து கூறுவதை போல திருப்பாவையின் பாவை நோன்பில் அல்ல. அறியாப் பருவத்தில் சிறுமிகள் செய்யும் பாவை நோன்பில் தெய்வத்தைச் சரணடைதலையே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நோன்பிருப்பதை ஒரு வாழும் இயல்பாகக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அறியாப் பருவம் முதல் தெய்வத்தை நோக்கியே மனத்தைச் செலுத்த வேண்டும் என்று ஆற்றுப் படுத்துவதற்க்காகவும் இந்தப் பாவை நோன்பு ஏற்படுத்தப்பட்டது என்றும் எண்ணத் தோன்றுகிறது.
காமன் நோன்பு இன்று மறைந்து விட்டாலும், அதன் அங்கமான கரும்பும், பொங்கலும் அதே தை முதல் நாளன்று வேறு ஒரு பண்டிகையாக இன்றும் இருப்பது ஆராயத்தக்கது. இதற்கெல்லாம் வைரமுத்துவுக்கு எங்கே நேரம் இருக்கிறது? காமப் பொருளைப் பொருத்திப் பார்க்கச் சொல் கிடைக்காதா என்று தேடுபவர்களுக்கு இந்த ஆராய்ச்சியிலெல்லாம் எங்கே கவனம் செலுத்த முடியும்?
நாறியது கருப்பூரமல்ல.
‘குத்து விளக்கு’ பாசுரத்தில் கண்ணனை ஆண்டாள் ஏன் வாய் திறக்கச் சொன்னாள் என்று ஆராய்ந்த கையுடன், இன்னொரு ‘வாய்’ பாடல் வைரமுத்துவின் கண்ணில் பட்டுவிட்டது. இது நாச்சியார் திருமொழியில் வரும் ‘கருப்பூரம் நாறுமோ‘ பாசுரம். இதுவே ஆண்டாள் அடைந்த பரவசத்தின் உச்சக் கட்டப் பாடல் என்று சொல்லும் வைரமுத்துவுக்குப் பரவசத்தால் தலைகால் புரியவில்லை.
வாய்ச் சுவையை யாரிடம் கேட்பது என்று ஆண்டாள் தேடிப் பார்த்து , உயர் திணைப் பெண்கள் உண்மை சொல்லார் என்று கண்ணன் வாயில் வைத்தூதும் அஃறிணைப் பொருளான பாஞ்சசன்னியம் என்னும் வெண் சங்கைக் கேட்கலாம் என்று முடிவெடுத்தாளாம்.
வாய்ச் சுவையை அறிவதுதான் அவளது நோக்கம் என்றால் அதே பதிகத்தில், கண்ணனது பதினாறாயிரம் தேவிமார் பார்த்திருக்கையில் நீ மட்டும் கண்ணன் வாயமுது உண்கிறாயே என்று சங்கினைக் கேட்கிறாளே. அந்தப் பதினாயிரம் தேவிமாரைக் கேட்டிருக்கலாமல்லவா?
காமரசத்துடன் எழுதப்பட்டது என்றால் அதே பதிகத்தின் இன்னொரு பாசுரத்தில் பல பெண்களும் சங்கின் மேல் பூசல் உறுகின்றனர் என்கிறாளே, அது போல் தானும் சங்குடன் பூசல் கொண்டதாக அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஆனால் அப்படிச் சொல்லவில்லை என்பதே வைரமுத்து நினைத்ததைப் போல் அவள் நினைக்கவில்லை என்று காட்டுகிறது.
அந்தப் பதிகத்தின் மற்ற பாசுரங்களில் எதிலுமே கண்ணனது வாய்ச் சுவையைத் தான் அறிவதற்காகக் கேட்கிறேன் என்று அவள் சொல்லவில்லை. மாறாக, அனைவரையும் விட, அவனது தேவிமாரையும் விட, பாஞ்சசன்னியமே அவனுக்கு மிக அருகாமையாமையில் உள்ளது என்றுதான் சொல்கிறாள். பலஸ்ருதியாக பத்தாம் பாசுரத்தில் பாஞ்சசன்னியத்தைப் பத்மநாபனுடைய பெருஞ்சுற்றமாக்கினேன் என்றுதான் ஆண்டாள் சொல்லியிருக்கிறாளே தவிர, காமச் சுவை ஊடாடும் பரவசத்துக்காக அவள் வாய்ச் சுவையை விசாரிக்கவில்லை.
முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். அந்தக் கடைசி பாசுரத்தின் கடைசி வரியில், தான் சொன்னதை ‘ஆய்ந்து ஏத்த வல்லார் ஆர் அவரும் அணுக்கரே‘ என்று சொல்லியிருப்பதால், இங்கு மேம்போக்கான பொருளுக்கிடையே ஏதோ ஒரு மறை பொருளை வைத்திருக்கிறாள் என்று தெரிகிறது. கடைசி பாசுரம் வரை படிப்பதற்கு வைரமுத்து போன்றவர்களுக்கு ஏது பொறுமை? ‘வாய்’ என்ற சொல்லைப் பார்த்தாகி விட்டது. வாய்ச் சுவை என்று அவளே சொல்லி விட்டாள். இனியென்ன பரவசம் தான் வைரமுத்துவுக்கு.
ஆய்ந்து பார்க்கவில்லையென்றாலும், ஆண்டாள் இறைத்த நீர், கழனி, வாழை என்று ஏதேதோ சொல்லுவதற்குப் பதில், இது போன்ற சொல் அமைப்புகள் சங்கத் தமிழில் உள்ளனவா என்று தேடியிருக்கலாமே? திருமாலைப் பற்றி பரிபாடல் பேசவில்லையா என்ன?
வாய்ச் சுவையும், வாய் மொழியும்
13 -ஆம் பரிபாடலில் திருமாலின் அழகு வர்ணிக்கப்படுகிறது. அப்பொழுது அவன் வாய் மொழியைச் சொல்லுகையில் வலம்புரிச் சங்கைப் பற்றிச் சொல்லுகிறார் புலவர் நல்லெழுநியார். திருமால் கூறும் அருண்மொழி வலம்புரி நாதத்தை ஒக்கும். “வலம்புரி வாய்மொழி அதிர்புவான் முழக்கு செல் அவை நான்கும் உறழும்” என்கிறார். இதற்கு உரை எழுதிய பழைய உரைகாரர்கள் அவன் அருண்மொழி, வலம்புரி முழக்கத்தையும், வேத முழக்கத்தையும் ஒக்கும். அவன் செறல் மொழி (போர்க் கண் சொல்லும் கோப மொழி) முகில் முழக்கத்தையும், இடி முழக்கத்தையும் ஒக்கும் என்கிறார்.
அந்த வலம்புரியைக் கொண்டுதான் ‘பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஷோ‘ என்று கௌரவர்களது இதயம் பிளக்க அவன் போர்க்களத்தில் ஊதினான். ஆனால் இந்த சங்கத் தமிழ்ப் பாடல் பாஞ்சசன்னியத்தின் ஒலி அவன் வாயிலிருந்து வரும் அருள் மொழி என்கிறது!! அவனுடைய வாயிலிருந்து ஊறும் அந்த அருண்மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவனது வலம்புரியைத்தான் கேட்க வேண்டும்.
அந்த அருள் மொழி என்ன?
இந்த பரிபாடலைப் படித்திருக்கிறாள் ஆண்டாள். இது கூறும் அருள் மொழியைப் படித்திருக்கிறாள். அது மட்டுமல்ல, தானே அணுக்கராகிப் பெற்ற அந்த அருள் மொழியை, அவள் திருத்தகப்பனார் ஆசானாக இருந்து ஆண்டாள் என்னும் ‘வீட்டுப் பொருளுக்குச் ‘ சொல்லிக் கொடுத்திருக்கிறார். திருமால் குறித்த அனைத்து சங்கப் பாடல்களையும் அவள் படித்திருக்க வேண்டும். அவை கொடுத்த உந்துதலில் சங்கத் தமிழ் மாலை இயற்றியிருக்கிறாள்.
ஒன்பது வயதுக்குள் பாவைப் பருவத்திலேயே அவள் அறிந்திருக்கவேதான், ஆயர் சிறுமிகளைக் கூட்டிக் கொண்டு போய் நந்தகோபனுடைய கோயில் காப்பானைக் கதவு திறக்கச் சொல்லும் போது – நாங்கள் ஒன்றும் அழையாமல் வரவில்லை. ‘அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான்.’ நேற்றைக்கு முந்தாநாளே மணிவண்ணன் வாய் கொடுத்து விட்டான். அதனால் கதவைத் திற என்கிறாளே, அன்றைக்கு அவள் பெற்ற மணிவண்ணன் வாய் எது? வைரமுத்து சொல்லும் காமப் பரவச வாயா அது?
அந்த வாய் கொடுத்ததன் காரணமாக ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோம்” என்று சொன்னது மட்டுமல்லாமல், ‘மற்றை நம் காமங்கள் மாற்று‘ என்றாளே, இதே கருத்தை அதே பரிபாடலில், ‘இறைஞ்சினேம், வாழ்த்தினேம், முன்னும் முன்னும் யாம் செய் தவப்பயத்தால் இன்னும் இன்னும் எம் காமம் இதுவே” என்று புலவர் சொன்னது, வழி வழியாக சங்க காலம் தொட்டே இந்தக் கருத்து இருந்து வந்திருக்கிறது என்று காட்டுகிறதல்லவா? இதுதானே ‘உள்ளார்ந்த தமிழ் நயம்’?
முற் பிறவிகளிலும் உன்னைத் தொழுதோம். இப்பொழுதும் தொழுகிறோம். எப்பொழுதும் தொழுவோம். இதுதான் எங்கள் காமம் என்பதுதான் நல்லெழுநியார் முதற்கொண்டு இந்த நாட்டில் வழங்கி வரும் காமம்! இதைத் தவிர வேறு எதிலும் காமம் அதாவது விருப்பம் ஏற்படாமல் மாற்று என்று ஆண்டாள் ஒரு படி மேலே நின்று சொல்லிவிட்டாள்.
அது மட்டுமா? ‘குமரனார் சொல்லும் பொய்யானால், நானும் பிறந்தமை பொய்யன்றே” (நாச்.திரு.10-4) என்னும் பொழுது அவன் வாய்ச் சுவை என்பது வாய்ச் சொல் என்று புலனாகிறது. அவன் சொன்னதே பொய் என்றால், தன் பிறப்பே பொய் என்றாகும் என்பதால் இவள் அவனது தேவி என்பது இந்த வரிகளின் மூலம் நமக்குப் புரிந்து விடுகிறது. இதைக் கண்டுணர்ந்த பூர்வாசார்யர்கள், வைகுந்த வாழ்வை இகழ்ந்து ஆண்டாள் ஆழ்வாருக்குப் பிறந்தாள் என்று மணவாள மாமுனிகள் வாயிலாகத் தெரிவிக்கின்றனர் (உபதேசரத்ன மாலை 22)
மீண்டும் அவனுடைய சொல் பொய்யானால் என்ன செய்வது என்ற கவலையை நாச். திரு-11-ஆம் பத்தின் முடிவில் வெளிப்படுத்துகிறாள்.
அந்தச் சொல் என்ன என்பதை இங்கு நாம் அறிகிறோம். அது “தம்மை உகப்பாரைத் தாம் உகப்பரென்னும் சொல், தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே”
இதே கருத்து திருக்குறளில் வந்துள்ளது என்பது எத்துணை பரவசமாக இருக்கிறது தெரியுமா? இன்பத்துப் பால், பிரிவாற்றாமை அதிகாரத்தில்,
‘அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேரியார்க்கு உண்டோ தவறு‘ (குறள் 1154)
முன்பு உன்னைக் காப்பேன் அஞ்சாதே எனக் கூறியவர் பிரிந்தால், அவர் கூறிய மொழியை நம்பியவர்க்குக் குற்றமுண்டோ?
இதை விவரிக்கும் பரிமேலழகர், நம்பியவர் மேல் குற்றமில்லை. ஆனால் மொழியைக் கொடுத்தவர் மீது குற்றம் வந்து விடுமே என்று கருதி அவரைச் சீக்கிரம் வரச் சொல் என்று தலைவி தோழியிடம் கூறுவதாக உள்ளது என்று உட்பொருள் தருகிறார்.
இதையே ஆண்டாளும் கண்ணன் வாக்கு பொய்யானால், அதனால் கண்ணனுக்கு என்ன லாபம், பொய்யன் என்னும் பெயர் கண்ணனுக்கு வரலாமா என்று ஆதங்கப்படுதலை, அடுத்த பதிகத்தில் காட்டுகிறாள். அவன் வரவில்லை என்பதால் நானே போகிறேன், அல்லது என்னை அவனிடம் அழைத்துப் போங்கள் என்கிறாள். இவ்வாறு கோர்வையாக அவள் பாடியுள்ளதை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தம்மை உகப்பாரைத், தாம் உகப்பேன் என்னும் சொல், பாஞ்சசன்னியத்தை ஊதி முடித்தவுடன் அர்ஜுனனனுக்குத் தேர்த் தட்டில் சொன்ன சொல். நீ என்னிடம் வா, நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ… ” . அந்தச் சொல்லை கண்ணனுக்கு மிக அருகில் இருந்து கேட்டது வெண்சங்கான பஞ்சசன்னியம்!
அதனிடம் கேட்கிறாள், அவன் வாயிலேயே நீ இருக்கிறாய். அவன் வாயமுது எப்படிப்பட்டது? அவன் வாய் மொழியை நீதானே கேட்டாய், அது எப்படி இருந்தது சொல் என்கிறாள்.
இதைக் கற்பனை என்று வைரமுத்து நினைத்தால், அவரிடம் ஒன்று கேட்கிறேன். சங்கைப் போலவே புல்லாங்குழலும் கண்ணனுக்கு மிகவும் நெருக்கமானது. அதற்கும் அவனது வாய்ச் சுவை தெரியும். அதுவும் சங்கினைப் போல ஒலி பரப்பிக் கொண்டிருப்பது. உல்லாச நேரத்தில் குழல் தான் அவனது வாய் அமுதை பருகிக் கொண்டிருக்கும்.
ஏன் அந்தக் குழலிடம் ஆண்டாள் வாய்ச் சுவையைக் கேட்கவில்லை?
அதை விடுத்து ஏன் சங்கிடம் கேட்டாள்?
இதை ஆராய்ந்தோமேன்றால். சங்கு அறிந்த வாய்ச் சுவை, தேர்த் தட்டில் கொடுத்த அருண் மொழி என்பது புரியும் – பரிபாடல் சொல்வது போல.
ஆண்டாள் காம ரசத்தையோ, இன்ப ரசத்தையோ விரும்பினவளாயின், அவள் குழலிடம் கேட்டிருப்பாள்.
அவள் விரும்பியது நீங்காத ஆனந்தம் என்னும் அவனுடன் ஒன்றிக் கலந்தமை.
அதைச் சொல்ல அவன் கைச் சங்கினால்தான் முடியும்.
முன்பே நென்னேலே வாய் நேர்ந்த அதை, கனவில் கண்ணன் கைத்தலம் பற்றிய பின் நனவில் வரவில்லையே என்பதால், அதற்கு அடுத்த பதிகத்தில்தான் சங்கைக் கேட்கிறாள். அன்று சொன்ன சுவையான அந்த வாய்மொழி சரிதானே என்று நிச்சயம் செய்து கொள்கிறாள். அதன் பின் மேகத்தைத் தூது விட்டு அவனுக்கு நினைவூட்டுகிறாள். அதன் பின் திருமாலிருஞ்சோலையில் உள்ள குருவிக் கணங்கள் அந்த ‘வார்த்தை’யை உரைப்பதைச் செவிமடுக்கின்றாள். கொஞ்சம் நிம்மதி வருகின்றது.
ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. அவன் தன் வாய்மொழியை மறந்து விட்டானோ? அதனால், மயில், குயில் என்று எல்லாவற்றையும் தூது அனுப்புகிறாள். அரங்கன்தான் தன் மணாளன் என்று எதிர்பார்த்திருக்கையில், அவன் சொன்ன சொல் பொய்யாகுமோ என்று அஞ்சுகிறாள். இனி அவனுக்காகக் காத்திருந்து பயனில்லை. நாமே அவனிடம் போவோம் என்று தமரிடம் கெஞ்சுகிறாள். ஒன்றும் நடக்கவில்லை. உயிரே போகும் போல இருக்கும் நிலையில், என் அவலம் குறைய அவன் அணியும் பொருட்களை என் மீது அணியுங்கள், அதனால் கொஞ்சமாவது அவலம் தணியும் என்று வெதும்புகிறாள்.
அந்தக் கடைசி நிலையில் – அதோ யாரது பசுக்களை நீராட்டிக் கொண்டிருப்பது? கண்ணனல்லவா? இது விருந்தாவனம் அல்லவா? – என்று கண் குளிர விருந்தாவனத்தில் அவனைக் கண்டு நிம்மதியுறுகிறாள். இத்துடன் நாச்சியார் திருமொழி முடிவடைகிறது. இந்த அழகை, இதில் பொதிந்துள்ள தமிழ் நடையை, கவி நயத்தை வைரமுத்து ஆராய்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
கல்வியில் சிறந்த ஆண்டாள்
அவள் வீட்டுப் பொருளோ, பூட்டுப் பொருளோ அல்ல. சங்கத் தமிழைப் படித்து, பாகவத புராணத்தையும் படித்திருக்கிறாள் என்பதை விருந்தாவனக் காட்சியில் அறிகிறோம். அன்றைய காலக்கட்டத்தில் புராணங்களும், சங்க இலக்கியங்களும், தமிழ் இலக்கணமும் பாடங்களாக இருந்தன என்பது நச்சினார்க்கினியரது தொல்காப்பிய உரை வாயிலாகத் தெரிய வருகிறது.
கார்க்கோடல் பூக்களை அழைத்த பொழுது (நாச். திரு-10-10) தன் தோழியை விளித்து, தன் தந்தை அந்தப் பரமனை வரவழைப்பார், அவனும் வருவான், அப்பொழுது அவனைக் காணலாம் என்று சொல்லுமிடத்தே, அவள் தந்தை வாயிலாகப் பரமன் மீது அவள் கொண்ட தாக்கம் தெளிவாகிறது.
‘பண்ணுறு நான் மறையோர் புதுவை மன்னன்‘ என்னும் அவள் தந்தை அவளுக்கு அளித்த வேத வித்துக்கள் ஏராளம். அதில் ஒன்று, சிற்றில் இழைக்கும் பதிகத்தில் ‘சீதை வாய் அமுதுண்டாய்‘ என்று சொல்லும் இடத்தில் வெளிப்படுகிறது.
இங்கும் வாய் – அதன் அமுது, அதை உண்ணுதல் என்பன வருகின்றன. சிற்றில் இழைக்கும் சிறுமியின் வாயில் வரும் இதனைக் காமம் என்பாரா வைரமுத்து?
வாயமுதும், வைரமுத்துவின் கழித்தல் கணக்கும்
சீதையின் வாய் அமுதை ராமன் உண்டான் என்று ஆண்டாள் சொல்கிறாள்
அந்த ‘வாய் அமுது’ என்ன?
அந்த அமுது என்ன என்று அறிந்தவர்களுக்கு , ‘குத்து விளக்கெரிய‘ பாசுரத்தில் நப்பின்னையிடத்தில் ‘தத்துவம் அன்று‘ என்று ஆண்டாள் எதைச் சொன்னாள் என்பது புரிந்திருக்கும். அது என்னவென்று வைரமுத்துவுக்குப் புரிந்திருந்தால், இந்நேரம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஓடோடிச் சென்று , தாயே, நான் உன்னைத் தவறாகப் பேசி விட்டேன் , என்னை மன்னித்துவிடு என்று மன்றாடியிருப்பார். சீதையும், நப்பின்னையும் செய்தது எதுவோ அதையே ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக ஆண்டாள் தன் அன்பர்களுக்குச் செய்து கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்
அது மட்டுமல்ல, கட்டுரையின் முடிவில் போட்டாரே ஒரு கழித்தல் கணக்கு, இறைவனைக் கழித்த பிறகு ஆண்டாள் சொல்லில் என்ன இருக்கும் என்று – அதைப் போல மட்டமான, முட்டாள்தனமான கணக்கு உலகில் இருக்கவே முடியாது என்பதையும் உணர்ந்திருப்பார்.
‘உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது‘ என்று கழிக்க முடியாத உறவை அப்பட்டமாக ஆண்டாள் சொன்ன பிறகும், இந்தக் கழித்தல் கணக்கு போட்டோமே, கணக்கைப் போல தமிழிலும் ‘வீக்’ என்றல்லவா மக்கள் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று வெட்கப்பட்டிருப்பார்.
போகட்டும். இன்னும் நேரம் வரவில்லை.
ஆனால் நேரம் வரும் என்று சொல்லும்படி வைரமுத்துவுக்கு முன்னோடிகள் உள்ளனர்.
இவரது பெரிய முன்னோடி, அரங்கன் வாயிலில் அமர்ந்து விட்டார்.
அடுத்து வந்தவர் ராமானுஜர் வைபவத்தை எழுதி முடித்த கையோடு, ராமாநுஜரைப் பேசிய வாயால் வேறு எதையும் பேசக்கூடாது என்று வாய் மூடப்பட்டு, ஸ்ரீ பெரும்பூதூரில் ராமானுஜர் எழுந்தருளியிருக்கும் ஆதி கேசவப் பெருமாள் கோயில் வாயிலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார் – பாதாளச் சாக்கடையின் மேல்.
அடுத்து ஸ்ரீ வில்லிபுத்தூர் வாயிலில் இவருக்கு இடம் காத்துக் கொண்டிருக்கிறது. காலம் அதையும் செய்து காட்டும்.
இத்துடன் கட்டுரையை முடித்து விடலாம் என்று நினைத்தேன், ஆனால் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையும் சொல்லி விடுகிறேன்.
ஒன்று, ஆண்டாள் மறைந்தது எப்படி?
வைரமுத்து போன்றவர்களது ஆய்வு மூளையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது.
இதற்காக கூகிள் தேடல் செய்து இண்டியானா பல்கலைக் கழகம் வெளியிடாத நூலைத் தேடுவதற்குப் பதில், 1980-ஆம் வருடம் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள “Sri Ramanuja’s Theory of Knowledge, A study” என்ற நூலைப் படித்திருக்கலாம். அதிலிருந்து இரண்டு பக்கங்களை கீழே கொடுத்துள்ளேன்.
பிறப்புக்குக் கரு தேவை. ஆனால் மறைதலுக்கு அவன் அருள் தேவை. ஆண்டாள் அவனில் மறைந்தாள். உடலும் உயிருமாக (குருதியும், இறைச்சியுமாக அல்ல) அவனுடன் கலந்தாள். இது எப்படி சாத்தியம்?
அவனுடன் கலக்க வேண்டும் என்றால், அறிவியல் பார்வையில் அவனது அணுத்திரளை அவளும் அடைந்திருக்க வேண்டும். பார்த்துக் கொண்டே இருக்கையில், ஒருவர் காற்றில் கரைந்தாற் போல மறைய வேண்டும் என்றால், அவருடைய கட்டமைப்பு சப் அட்டாமிக் லெவலை அடைந்திருக்க வேண்டும். மேலே கொடுத்துள்ள பக்கங்களில் ஆஸ்மாசிஸ் என்ற கலப்பு நிலை பேசப்படுகிறது. ‘முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் ‘ என்பதே ‘முமுக்ஷுப்படி‘ காட்டும் மோக்ஷ நிலை.
அவனை நாம் உகந்து கொண்டே இருக்கையில், அவனது அணுத்திரளின் நிலையை நாமும் அடைந்து அவனுக்கு ‘அணுக்கராகிறோம்’. வார்த்தையைப் பாருங்கள் – அணுக்கர். நாம் உகந்த அவனை, அதனால் அணுக்கராகிய நம்மை, அவனும் உகக்க ஆரம்பிக்கிறான். நம்முள் புகுந்து நம்மை ஆக்கிரமிக்கிறான். அந்த நிலையை ஆஸ்மாசிஸ் என்பதுடன் கட்டுரையாளர் ஒப்பிடுகிறார். அந்த நிலையை ஆண்டாள் அடைந்ததைக் கண் கூடாகக் கண்டனர்.
இரண்டாவது விஷயம்.
தமிழ்த் தாய்க்கு என்று ஒரு உருவம் கொடுக்க வேண்டும் என்ற பேச்சு இன்று இருக்கிறது. ஆண்டாள் உருவில் தமிழ்த் தாய் அமைவதுதான் மிகச் சரியானது என்பதே நம் கருத்து. ஆயிரம் வருடங்களாகியும், ஆண்டாள் பாடிய சங்கத் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அவள் பாடியது வாழ்ந்து கொண்டிருக்கும். பழைய சங்கப் பாடல்களின் கருத்தை எளிய தமிழில் அவள் கொடுத்துள்ளதை நாம் பலவிதமாகச் சுட்டிக் காட்டியுள்ளோம்.
சங்கத் தமிழ் மட்டுமல்லாமல், சங்க காலம் தொட்டு வழங்கி வந்த கலாசாரத்தையும் அவள் பாடல்கள் பறை சாற்றுகின்றன. கண்ணனைச் சுற்றியும், அவன் பிறந்த ஆயர் குல வழக்கங்களான பாவை நோன்பு, ஏறு தழுவுதல், மாட்டுக்கு ஒரு விழா என தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களையும் அவள் பாடல்கள் என்றென்றும் உயிரோட்டத்துடன் வாழ வைத்துக் கொண்டிருக்கும்.
கண்ணனை ஒட்டி வாழ்ந்தது தமிழ்ச் சமுதாயம் என்று நாம் சொல்வதை ஏற்றுக் கொள்ள மறுப்பார், தமிழர் இலர். ஏனெனில் புறநானூறு ஆறாம் பாட்டில் இந்த நாட்டின் எல்லைகள் என்று இமயம், குமரி, கிழக்கிலும், மேற்கிலும் கடல் பரப்பு என்று சொன்னபின், புலவர் காரி கிழார் சொல்வது யாதெனில், ‘கீழு, மேலது, ஆனிலை உலகம்‘ என்பதே. கீழுள்ள நிலம், மேலுள்ள ஆகாயம், அதற்கும் மேலே ‘ஆனிலை’ என்னும் ‘கோ-லோகம்’ நம்மைச் சூழ்ந்துள்ளது என்கிறார். இந்த கோலோகம் என்பது கண்ணனை முன்னிட்டு எழுந்த சொல். அது விருந்தாவனம், வைகுந்தம் என்றும் சொல்லப்படுவது. சங்க இலக்கியமான புறநானூறால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோ -லோகம் என்னும் ஆனிலை உலகத்தை அடைய உத்தியும், புத்தியும் கொடுப்பவள் ஆண்டாள். அவள் பாசுரங்களே அதற்கு வழிகாட்டி.
தமிழும், தமிழ்க் கலாசாரமும், முடிபொருளான பரம்பொருளை அடையும் உபாயமும் ஒருங்கே கொண்டுள்ள உன்னத பாசுரங்களைத் தந்துள்ள ஆண்டாள் நாச்சியார், தமிழ்த் தாயாக வழிபடத் தகுந்தவள்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என்பது வள்ளுவன் வாக்கு .
வள்ளுவன் வாக்கறியா வைரமுத்து, கருவிலே பிறந்த ராமன் எப்படி தெய்வமானான் என்று கேட்டார்.
வாழ்வாங்கு வாழ்ந்த ராமன் தெய்வம்.
வாழ்வாங்கு வாழ்ந்த ஆண்டாள் தெய்வம்.
என்றைக்குப் பிறந்தாள் என்றறியாத் தமிழ்த் தாயும் தெய்வம் என்னும் நிலையில் வைக்கப்படவேண்டும் என்றால்,
என்றும் மாறா இளமையில், தமிழை, தமிழ்க் கலாச்சாரத்தைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் ஆண்டாளின் தெய்வத் திரு உருவே தமிழ்த் தாயின் உருவம் என்றாக வேண்டும்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
- ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் வழங்கும் விழா
- வைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.
- ‘குடி’ மொழி
- சூத்திரம்
- தலையெழுத்து
- பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.
- அகன்ற இடைவெளி !
- மாலே மணிவண்ணா
- திருப்பூர் அரிமா விருதுகள் 2018
- சொந்த ஊர்
- சின்னச் சிட்டே !
- தொடுவானம் 208. நான் செயலர்.
- படித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்
- மொழிபெயர்ப்பும் கவிதையும்
- சுவாசக் குழாய் அடைப்பு
- கவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும்
- கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..
- பிரம்மராஜனின் இலையுதிராக் காடு
- பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை
- நேற்றைய நிழல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்