மறைந்துவரும் கடிதக்கலை!? காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும்

author
1
0 minutes, 7 seconds Read
This entry is part 2 of 14 in the series 18 பெப்ருவரி 2018

முருகபூபதி- அவுஸ்திரேலியா

மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம். எஸ். , வைபர், வாட்ஸ்அப் அறிமுகமானதன் பின்னர் கடிதம் எழுதுவதே அரிதாகிவிட்டது. இவை அண்ணன் தம்பிகள் போன்று அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள். தற்காலத்தில் படிவங்களையும் ஒன்லைனில் பூர்த்திசெய்து அனுப்பமுடிந்திருப்பதனால் அதிலும் பேனைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
காசோலைக்கு ஒப்பமிடுவதற்கு மாத்திரம் பேனை உதவும் காலத்தில் வசதிபடைத்தவர்கள் மாறிவிட்டார்கள்.
எழுத்தாணியும் பனையோலை ஏடுகளும் வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச்சென்றுவிட்டதுபோன்று தபால் முத்திரைகளும் வருங்காலத்தில் ஆவணக்காப்பகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் இடம்பெறலாம். அவுஸ்திரேலியாவில் தபால் நிலையங்களை போஸ்ட் ஷொப் (Post Shop) என அழைக்கிறார்கள். அந்தப்பெயரில்தான் தபால் நிலையம் காட்சிப்பலகையில் துலங்குகிறது.
அங்கே முத்திரை மட்டுமல்ல இனிப்பு சொக்கலெட், தண்ணீர்ப்போத்தல், சிறுவர்க்கான விளையாட்டுப்பொருட்கள், காகிதாதிகள் உட்பட வேறு பண்டங்களும் விற்பனையாகின்றன. மக்கள் முத்திரை வாங்குவதும் குறைகிறது. காரணம் கணினிதான்.
முதியவர்கள் இன்றும் கடிதம் எழுதுகின்றார்கள் என நம்பும் அவுஸ்திரேலியத் தபால் திணைக்களம், அவர்களுக்கென 60 சதம் பெறுமதியான ஐம்பது முத்திரைகளை வருடம் ஒருமுறை விற்பனை செய்கிறது. அவற்றைப்பெறுவதற்கு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து ஒரு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனை காண்பித்து குறிப்பிட்ட Seniors முத்திரைகளை தபால் நிலையங்களில் வாங்கிக்கொள்ளலாம். இவ்வாறும் மறைந்துவரும் கடிதக்கலைக்கு புத்துயிர்ப்பு வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தபால் திணைக்களம் முயற்சிக்கிறதோ என்றும் யோசித்தேன்.

வெளிநாடுகளில் வதியும் தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இலங்கையில் ஏதாவது ஒரு கிராமத்திலிருந்தும் ஸ்கைப்பின் ஊடாக மணித்தியாலக்கணக்கில் பேச முடிகிறது. பைவரில் உரையாட முடிகிறது. இந்த இலட்சணத்தில் யார்தான் கடிதம் எழுதி தபாலில் அனுப்பிக்கொண்டிருக்கப்போகிறார்கள்? சம்பிரதாயத்திற்காக திருமண சாமத்தியச்சடங்கு அழைப்பிதழ்கள் தபாலில் வருகின்றன. அவற்றுக்குச்செல்ல முடியாதவர்கள் வாழ்த்துமடல் அனுப்புகிறார்கள்.
இந்தப்பின்னணியிலிருந்துதான் இந்த ஆக்கத்தை எழுதுகின்றேன்.
ஒரு காலத்தில் தினகரன் பிரதம ஆசிரியராகவிருந்தவர் கைலாசபதி. 1982 டிசம்பரில் அவர் மறைந்தார். பதினைந்து ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட டிசம்பர் மாதத்தில் – பேராசிரியர் கைலாசபதி வாரம் 06-12-97 முதல் 12-12-97 வரை எனத்தலைப்பிட்டு தினமும் தினகரனில் 6 ஆவது பக்கத்தில் (ஆசிரியத்தலையங்கம் பதிவாகும் பக்கம்) கைலாசபதி பற்றிய கட்டுரைகளை அவரை நன்கு அறிந்தவர்களைக்கொண்டு எழுதவைத்தார் அச்சமயம் அதன் பிரதம ஆசிரியராகவிருந்த எனது நண்பர் ராஜஸ்ரீகாந்தன். அச்சமயம் நான் இலங்கை சென்றிருந்திருந்தேன்.

எனது இலங்கை வருகையை அறிந்ததும் என்னை உடனடியாக நேரில் சந்தித்து கைலாசபதி பற்றி எழுதித்தருமாறு கேட்டார்.
கணினி அறிமுகமாகியதும் மக்கள் கடிதங்கள் எழுதும் பழக்கம் குறைவாகிக்கொண்டிருந்த காலப்பகுதி. எனக்கு உடனடியாக கைலாசபதியின் அயர்ச்சியற்ற கடிதம் எழுதும் பழக்கம்பற்றி எழுதுவதற்கே பெரிதும் விருப்பமாக இருந்தது.

கடிதக்கலையிலும் பரிமளித்த கைலாஸ் என்ற தலைப்பில் தினகரன் 97 டிசம்பர் 10 ஆம் திகதி இதழில் எழுதியிருந்தேன்.
அதிலிருந்து சில பகுதிகளை இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.

” எத்தனையோ வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அவர் தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதவும் – தமக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதவும் தவறவில்லை என்பது வியப்பானது. மல்லிகைப்பந்தல் 1996 இல் வெளியிட்ட ‘எங்கள் நினைவுகளில் கைலாசபதி’ என்ற நூலில் திரு. ரா. கனகரத்தினம் அவர்கட்கு கைலாஸ் எழுதிய சில கடிதங்கள் அதில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கைலாஸ் தனது நண்பர் கவிஞர் முருகையனுக்கு எழுதிய கடிதங்கள் அடங்கிய ஒரு கோவையை பார்த்திருக்கிறேன். முருகையனே எனக்குக் காண்பித்தார்.

பொதுவாக ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களை பிறர் பார்ப்பதும் வாசிப்பதும் நாகரீகம் அல்ல என்பது பண்பு. அந்தரங்கம் புனிதமானது என்பதனால் இந்தப்பண்பு பின்பற்றப்படுகிறது.

ஆனால், கைலாஸின் கடிதங்கள் அந்தரங்கமான விடயங்களை அலசுவதில்லை என்பதனால் பகிரங்கமாகின்றன. அதற்கு அவற்றில் ‘அந்தரங்கம்’ இல்லை என்பது மாத்திரம் காரணமல்ல. அவை இலக்கியத்தரமானவை, பல ஆலோசனைகளை வழிகாட்டல்களை எடுத்துரைப்பவை என்பதனால் பகிரங்கமானவை.
ஆனால் கைலாஸ்- மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்கள் – பதில்கள் என்றாவது ஒருநாள் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்குப் பகிரங்கமாகப் பகிரப்படலாம் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் எழுதப்படவில்லை என்பது சத்தியமானது.
1953 முதல் 1956 வரையில் கைலாஸ் நண்பர் கனகரத்தினத்திற்கு எழுதிய சில கடிதங்கள் தொகுக்கப்பட்ட ‘எங்கள் நினைவுகளில் கைலாசபதி’ என்ற நூலைப்படித்தபொழுது, பேராசிரியரின் ‘அகம்’ துலாம்பரமாகத்தெரிகிறது. ஆக்க இலக்கியங்களில் படைப்பாளியின் அகத்தை எம்மால் பூரணமாக அறியமுடியாது. ஆனால், கடிதங்கள் அப்படி அல்ல.
ஆக்க இலக்கியங்கள், பத்திரிகைகளில் இலக்கிய இதழ்களில் வெளியாகும். வாசகர் படிப்பர். நண்பர்கள் எழுதும் கடிதங்கள் நண்பர்களின் பார்வைக்கு மாத்திரமே!
ஆனால், அவை இலக்கியத்தரம் கருதி வாசகர் மத்தியில் வலம்வரும்பொழுது அவற்றை எழுதியவரின் அகத்தை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.

மகாத்மா காந்தி, பாரதியார், வ.வெ.சு ஐயர், அரவிந்தர், அறிஞர் அஸீஸ், கி. ராஜநாரயணன் முதலானோர் எழுதிய கடிதங்களை பல ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து தொகுத்து வாசகர்களுக்கு வழங்கினார் எழுத்தாளர் மு. கனகராஜன்.
இந்த வகையில் கைலாஸ் முருகையனுக்கும் கனகரத்தினத்திற்கும் எழுதிய கடிதங்கள் – பதில்கள் கவனத்தைப்பெறுகின்றன.

1953 இல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் உத்திமுறையில் தாம் ‘ பரிசோதனைக்கட்டத்தில்’ இருப்பதாகவும் சித்தார்த்தன் என்ற தமது நண்பர் ஆங்கிலப்புலமை மிக்கவராக இருப்பதனால் அவரை மொழிபெயர்ப்புத்துறையில் ஊக்குவித்த தகவலையும் கைலாஸ் கூறுகிறார்.

அதே ஆண்டில் அவர் சிறுகதை எழுதியதையும் அதிலும் தாம் பரீட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டதையும் சொல்கிறார். மொழிபெயர்ப்பில் தமக்கு ஏற்படும் சிரமங்களையும் ஒப்புக்கொள்கிறார்.
தாம் படித்த படைப்புகள் தமிழக இதழ்களில் பிரசுரமான விமர்சனங்கள், ரசித்து நோக்கிய வானொலி நிகழ்ச்சிகள் நாடகங்கள்… இப்படி பல விடயங்களைக் குறிப்பிட்ட கடிதங்களில் அலசுகிறார் கைலாசபதி.
‘கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என்பதைப்படைப்பாளிகளுக்கு உணர்த்திய பேராசான் கைலாசபதியின் இதர கடிதங்களும் தொகுக்கப்பட்டால் பயனுடையதாக இருக்கும் என நம்புகின்றேன்.”

1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்துவிட்டேன். இங்கு வந்து முப்பது ஆண்டுகளும் கடந்துவிட்டன.
இக்காலப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கடிதங்களை எழுதியிருப்பேன். கணினி பரிச்சியமானதும் அதன் ஊடாக மின்னஞ்சலில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதனால் தற்காலத்தில் எனக்கும் கடிதம் எழுதி தபாலில் அனுப்பும் வழக்கம் குறைந்துவருகிறது.
நான் சம்பந்தப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகளுக்காக இலங்கையிலிருக்கும் தொடர்பாளர்களுக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதியிருந்தாலும், அங்கும் கணினி வசதி வந்திருப்பதனால் அந்தவேலையும் குறைந்துவிட்டது.
மின்னஞ்சலையாவது பார்க்கிறார்களா? என்ற சந்தேகமும் அவ்வப்போது எழுவதுண்டு.

எனக்குவந்த கலை இலக்கியவாதிகள் , சமூகப்பணியாளர்களின் கடிதங்களைத்தொகுத்து 2001இல் கடிதங்கள் என்ற நூலையும் வெளியிட்டிருக்கின்றேன். எண்பது பேரின் கடிதங்கள் அதில் பதிவாகியிருக்கின்றன.

இலங்கையிலும் தமிழகத்திலும் அவுஸ்திரேலியா கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் வசித்த — வசிப்பவர்களின் கடிதங்கள் அவை. எனக்கு வாரம் ஒருதடவை கடிதங்கள் எழுதிய எனது அம்மா மற்றும் எனது தாய்மாமனார், அரிச்சுவடி சொல்லித்தந்த ஆசிரியை ‘பெரியரீச்சர் ‘அம்மா உட்பட பலர் தற்பொழுது உயிருடன் இல்லை. எனினும் அவர்களது கடிதங்களை பொக்கிஷமாகப் பாதுகாத்துவருகின்றேன்.

எஸ்.பொன்னுத்துரை, அகஸ்தியர் கே.கணேஷ், ராஜஸ்ரீகாந்தன், இரசிகமணி கனக செந்திநாதன், அருண்விஜயராணி, செங்கைஆழியான், பிரேம்ஜி, மாணிக்கவாசகர், அன்புமணி, மு.கனகராஜன், வாசுதேவன், என்.எஸ்.எம்.ராமையா, இளங்கீரன், திக்கவயல் தருமகுலசிங்கம், வே. இ. பாக்கியநாதன், நா. சோமகாந்தன், சு. வில்வரத்தினம், உடப்பூர் சோமஸ்கந்தர், ‘லயன்’ சிவராஜலிங்கம், வண. ரத்ணவன்ஸதேரோ, ‘சுந்தா’ சுந்தரலிங்கம், கோ. குமாரவேலு ஆகியோர் அமரத்துவம் எய்திவிட்டனர்.
ஆனால் அவர்களின் கடிதங்கள் நூலில் தொகுக்கப்பட்டதுடன் இன்றும் என்வசம் உள்ளன.

ராஜஸ்ரீகாந்தன் கே. கணேஷ் அகஸ்தியர் எனக்கு எழுதிய கடிதங்கள் அநேகம். ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் பெரும்பாலும் நீண்டவை. இலக்கிய புதினங்களுடன் அரசியல் நிகழ்வு ஆவணமாகவும் திகழ்பவை.

அவரது மறைவின் பின்னர் எழுதிய ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் அவரது கடிதங்கள் சிலவற்றையும் வெளியிட்டிருக்கின்றேன்.
தமிழகத்தில் கி.ராஜநாராயணன் பல எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்களும் பலர் அவருக்கு எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு நூலாகியிருக்கிறது. அதுபோன்று தலித் இலக்கியப்போராளி கே. டானியல் அ.மார்க்ஸ-க்கு எழுதிய கடிதங்களும் நூலாகியிருக்கிறது.
புதுமைப்பித்தன் தனது மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் நூலாகக்கிடைக்கிறது. அறிஞர் மு.வரதராஜனும் கடிதங்கள் எழுதி பின்னர் நூலாக்கியிருந்தார்.
இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், தமது மகன், மகளுக்கு எழுதிய கடிதங்களும் டொக்டர் ‘நந்தி’ சிவஞானசுந்தரம், ” முதன் முதலாக தாயக விளங்கப்போகும் தன் தங்கைக்கு பிரபல டாக்டர் ஒருவர் எழுதும் கடிதங்கள்” என்ற தலைப்பில் ஒரு கடித நூலை எழுதியிருக்கிறார்.

காதல் மனிதவாழ்வில் இரண்டறக்கலந்தது. காதல் கடிதங்கள் எழுதியவர்களின் காதல் வெற்றியிலும் தோல்வியிலும் முடிந்திருக்கிறது.

காதல்கடிதங்களை எழுதியவர்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றை எரித்து அழித்துமிருக்கிறார்கள். ஆனால், காதல் அழிவதில்லை. அதுபோலவே கடிதக்கலையும் அழிந்துவிடாது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழ் இலக்கியக்கடிதங்களை வெளியிட்டிருக்கிறது.

பண்டிதர் ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்து மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களே பின்னர் ‘ உலக சரித்திரம்’ என்ற விரிவான நூலாக வெளியானது.

“ நேருவின் அந்தக் கடிதங்கள் அடங்கிய உலக சரித்திரம் படித்த பின்னர்தான் கம்யூனிஸத்தில் நம்பிக்கை கொண்டதாக” தமிழக கம்யூனிஸ்ட் கட்சி தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறார்.

கடித இலக்கியங்கள் குறித்த சிந்தனையை வாசகர்களிடத்தே பரப்பவேண்டும் என்ற தொனியில் சிலவருடங்களுக்கு முன்னர் திக்குவல்லை கமால் மல்லிகையில் எழுதியதும் நினைவுக்கு வருகிறது.

கணினி இந்தக்கடிதக்கலையின் மகத்துவத்தை வேறு ஒரு திசைநோக்கி திருப்பிவிட்டது. முகநூல்களில் “கொமண்ட்ஸ்” என்ற பெயரில் மோசமான வார்த்தைப்பிரயோகங்களும் அவதூறுகளும் பரவிவிட்டன. போதாக்குறைக்கு எஸ்.எம்.எஸ் குறுந்தகவல்களும் பரிமாறப்படுகின்றன.

அதனால் கடிதங்களுக்கு இனி என்ன வேலை இருக்கிறது என்றாகிவிட்டது மனிதர்களின் வாழ்க்கை!
எனினும் தபால் கடிதங்களினூடான தொடர்பாடல்கள் அரிதாகிப்போனாலும் வேறு ஒரு வடிவத்தில் கடிதக்கலை வளர்ந்துகொண்டுதானிருக்கிறது. தற்பொழுது மின்னஞ்சல் அந்தக்கலையை வளர்க்கிறது. அடுத்த நூற்றாண்டில் இந்தக்கலை வேறு ஒரு வடிவத்தைப்பெறும் என்றும் நம்பலாம்.

letchumananm@gmail.com

Series Navigationமதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து: தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும்தொடுவானம் 209. நண்பர்கள பலவிதம்.
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *