- கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
இது திருப்பாவையின் இருபத்தேழாம் பாசுரமாகும். இது சர்க்கரைப் பொங்கல் பாசுரமாகும். வாசித்தாலே தித்திக்கும் பாசுரமாகும். இந்த மார்கழி 27-ஆம் நாளில்தான் கூடாரவல்லிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்ற பாசுரத்தில் ஆயர்குலச் சிறுமிகள் நோன்பு நோற்பதற்காகப் பலவித சாதனங்ளைக் கேட்டார்கள். எம்பெருமான் அளித்து மகிழ்ந்தான். ஆனாலும் “இன்னும் சிலவற்றைக் கொடுத்தாலொழிய இவர்கள் விடமாட்டார்கள்” என அவன் எண்ணினான். மேலும் சில உபகரணங்களையும் கொடுத்தான். தனது பாஞ்சசன்யத்துக்குத் துணையாக இருக்கட்டும் என்று “புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கினக் கொடுத்தான். அதேபோல திரிவிக்ரம அவதாரத்தின்போது ஜாம்பவான் அடித்துக் கொண்டு சுற்றி வந்த பறையையும், இலங்கையை வெற்றி கொண்டபோது அடித்த பறையையும் அளித்தான். பல்லாண்டிசைக்கும் பாகவதர்க்குத் துணையாகப் பராங்குச ஆழ்வாரையே அளித்தான். அனந்தாழ்வானான ஆதிசேஷனையே விதானமாக அளித்தான்.
”இவைதானே நீங்கள் கேட்டவை? போதுமன்றோ?” எனப் பகவான் கேட்க, ஆயர்குலச் சிறுமிகள், “அவையெல்லாம் நாங்கள் நோன்பு நோற்க மார்கழி நீராடப் போகுமுன் வேண்டியவை; நோன்பு நோற்றபிறகு நீ எமக்குச் சில பரிசுகள் தரவேண்டும்” என்கிறார்கள். ”கண்ணா! நீயும் நப்பின்னைப் பிராட்டியும் பூண்ட ஆபரணங்களையும், சூடிய ஆடையையும் அளித்து உன்னோடு கலந்து இன்னமுது அருந்த அருளவேண்டும்” என்று இப்பாசுரத்தில் வேண்டுகிறார்கள்.
முதலில் “கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா” என்று அவனை அழைக்கிறார்கள். அவன் கேட்கிறான், “பெண்களே என்னையும், என்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு என்னைத்தோற்கடித்து விட்டீர்களே! இது எவ்வாறு நடந்தது?”
அவர்கள் பதில் சொல்கிறார்கள் “பகவானே நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் உன்னிடம் கூடமாட்டோம் என்றிருப்பவர்களை வென்று விடுவாய்; ஆனால் உன்னிடம் விரும்பிக் கூடுபவர்களிடம் தோற்பதுதானே உன் ஸ்வபாவம்; ஆகையால் இதில் ஆச்சரியமென்ன?”
மேலும் ”நீயா தோற்றாய்? நாங்கள் உன் கண்பார்வை படாமையால் படும் துன்பத்தைக்காட்டி உன்னைத் தோற்கடிக்க வந்தோம்; ஆனால் உங்களைக் காண நான் வரவில்லையே எனும் தோல்வியைக் காட்டி நீ எம்மை வென்றாய்; நீ அன்பால் வெல்லக் கூடியவன்” என்கிறார்கள்.
திருக்காட்கரை திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்யும் நம்மாழ்வார் பாசுரம் இங்கு பொருத்தமாக உள்ளது. அன்பினால் வஞ்சித்துத் தம்மை ஆட்கொண்டதை ஆழ்வார் இவ்வாறு கூறுகிறார்.
“நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான்
சீர்மல்கு சோலைத்தென் காட்கரை என்னப்பன்
கார்முகில் வண்ணன்தன் கள்வன் அறிகிலேன்” என்பது அவர் அருளிச்செய்த பாசுரம்.
பகவான் எப்பொழுதும் இயன்றவரை அனைவரையும் தன்பால் சேர்த்துக் கொள்ளத்தான் பார்க்கிறான். கும்பகருணனைச் சேர்த்துக் கொள்ள வீடணனை அனுப்புகிறான். அனுமன், மற்றும் அங்கதனை இராவணனிடம் தூது அனுப்பிப் பார்க்கிறான். மேலும் தானே “இன்று போய் நாளை வா” என்று அவனை அனுப்பி வைக்கிறான். இப்படிப் பல செய்தும் வந்து வணங்காமல் இருந்ததால்தான் இராவணாதி கும்பகருணனர்களை வதம் செய்து வெற்றி கொண்டான்.
இப்படி இராவணனை வெற்றி கொண்டதைப் பெரிய திருமொழியில் ஒரு பாசுரத்தில் பார்க்கலாம்.
“வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணிமுடி ஒருபதும் புரள
அணங்கெழுந்து அவன்தன் கவந்தம் நின்றாட அமர்செய்த அடிகள் கோயில் என்று திருவல்லிக்கேணியைத் திருமங்கை ஆழ்வார் சேவிக்கிறார்.
தம் திருவடி பக்கத்தில் வந்து உட்காரவும் மனம் இல்லாத துரியோதனனையும் தீர்க்க வழிகள் செய்தான். அதே நேரத்தில் அன்புடன் தம்முடன் கூடிய பாண்டவர்களுக்குத் தன்னையே தந்து இரவு பகல் என்னாது அவர்களைக் காத்தான். பாண்டவரைக் காத்ததைப் பெரிய திருவந்தாதியில் நம்மாழ்வார் இப்படி அருளிச் செய்வார்.
”சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே!
எல்லி பகல்என்னா[து] எப்போதும்—தொல்லைக்கண்
மாத்தானைக்[கு] எல்லாமோர் ஐவரையே மாறாகக்
காத்தானைக் காண்டும் நீகாண்”
இப்படி கூடுபவர், கூடாதவர் எல்லாரையும் வெல்லும் சீர் கொண்டவன் அவன். இந்த இடத்திற்கு வியாக்கியானம் செய்த பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள் மூன்று பேரைக் காட்டுகிறார். அபிமுகர் [அன்பர்கள்], விமுகர் [விரோதிகள்], உதாசீனர் [வழிப்போக்கர்] ஆகிய மூவகையினரையும் எம்பெருமான் கூட்டிக் கொள்வானாம். இவர்களில் விமுகரும், உதாசீனரும் பகவானிடம் கூடார். ஆனால் அன்பர்களான அபிமுகரும் கூடமாட்டாராம். ஏனெனில் பகவானைவிட ”யான் தாழ்ந்தவன்; அவனோடு எப்படிக் கூடுவது” என்றிருப்பாராம். மேலும் ஒரு சிலர் தாம் செய்த பாபத்திற்கு அவன் அருகில் போக முடியுமோ என்று கூடாமல் தூரத்திலியே நிற்பார்கள். அவன் அவரையும் அன்பால் கூட்டிக்கொள்வான்.
இவர்களில் கூடுவாரைத் தன் சௌலப்யமான எளிமையால் வென்று தன் அழகுக்கு இலக்காக்கிக் கூட்டிக் கொள்ளும் அவன் கூடாதாரைத்தன் அம்புக்கு இலக்காக்கிக் கூட்டிக்கொள்கிறான். ”வெல்லும் சீர் கோவிந்தா” என்கின்றனர். சீர் என்பது அவன் கல்யாண குணங்களைக் குறிக்கும். தன்னுடன் கூடாதாரின் உள்ளத்தில் புகுந்து அவர்களைத் தன்னிடம் கூடும்படி வரவழைப்பான். “போதரேயன்று சொல்லிப் புந்தியிற் புகுந்து தன்பால் ஆதாரம் பெருகவைத்த அழகன்” என்பது ஆழ்வார் வாக்கு. சீர் என்பது குணத்தின் மேன்மையைக் குறிக்கிறது.
வால்மீகி இராமனின் குணங்களைச் சொல்லும்போது “ஸத்யேந லோகாந் ஜயதி” [ராகவன் உண்மை உரைத்தலால் உலகங்களை ஜெயிக்கிறான்]; “தீநாந் தாநேந ராகவ: [எளியவர்களைக் கொடையினால் கவர்கிறான்]; குரூந் ஸூஸ்ரூஷயா வீரோ [ஆச்சார்யர்களைக் கைங்கர்யத்தால் வசப்படுத்துகிறான்]; தனுஷா யுதி ஸாத்ரவாந் [எதிரிகளைப் போரில் வில்லினால் வெல்கிறான்” என்று காட்டுகிறார்.
“கோவிந்தா” எனும் திருநாமத்தால் அழைக்கிறார்கள். ஆயர்குடியில் பிறந்து பசுக்களை மேய்ப்பதை இத்திருநாமம் காட்டுகிறது. பசுக்கள் சாதுவானவை. அவை தன் காரியத்தைத் தான் செய்ய சக்தியற்றவை; அவற்றையும் அவன் தன்னருகில் கூட்டிக்கொண்டு காப்பாற்றுபவன். மேலும் பசுக்கூட்டத்தை மேய்ப்பது என்பது அவனுக்கு மிகவும் பிரியமான செயல்; பரமபதத்திலிருக்கும்போது கூட பசுக்களை மேய்க்கும் நினைவை அவன் விட மாட்டானாம். ”திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர்தேவே” என்பது நம்மாழ்வார் அருளிச் செயலாகும். அவனுக்குத் தானாகவே புல் மேயும் பசுக்களைக்காட்டிலும் புல் மேய்வதை அறியாத கன்றுகளைக் காப்பதில் விருப்பம் அதிகம். “கன்று மேய்த்து இனிதுகந்த காளாய்” என்றும், “கன்று மேய்த்து விளையாட வல்லானை” என்றும், “காலிமேய்க்க வல்லாய்” என்றும் ஆழ்வார்கள் அருளிச் செய்திருக்கின்றனர். “இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக்கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டேனே” என்பது நாச்சியார் திருமொழி>
“உந்தன்னைப் பாடி” என்கின்றனர். இது பிரகலாதனை எண்ணிச் சொன்னது என்று கூறுவர். ”இரண்யாய நம: என்றில்லாமல் பிறவிப்பேறான உன் பெயர் பாடினோம். நீ வந்து அருள் செய்ய வேண்டும் ஆனால் நாங்கள் வந்து உன்பெயரைப் பாட வேண்டி உள்ளதே!” என்கின்றனர். உன்னைப்பாடி என்றால் அவனைப் பாடுவதாகும். உன்தன்னைப்பாடி என்பதால் அவன் திருநாமப்பெருமை பேசப்படுகிறது. மேலும் ”எங்களை நீ வந்து பாடவேண்டி இருக்க நாங்கள் வந்து உன்னைப் பாடும்படி ஆயிற்றே” எனக் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம் “உன்னை எங்கள் வாசலில் ஆவி காத்திராதே உன் வாசலிலே வந்து “கோவிந்தா” என்று பாடும்படியானதே” என்று கூறுவது நாச்சியார் திருமொழி [8-3] பாசுரத்தை நினைவூட்டுகிறது.
”ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ[டு] இவைஎல்லாம்
எளிமையால் இட்டென்னை ஈடழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத்தி ருப்பேனே” என்பது அப்பாசுரம்.
இந்த வாய் பெற்ற பயன் பகவான் திருநாமம் பாடுவதேயாகும். அதனால்தான் முதலில் ஆயர்குலச் சிறுமிகள் “வாயினால் பாடி” என்றார்கள். நடுப்பகுதியில், “கேசவனைப்பாட”, ‘முகில்வண்ணன் பேர்பாட”, “மனத்துக்கினியானைப் பாட”, மாயனைப்பாட”, மைத்துனன் பேர் பாட”, என்றார்கள். இப்போது முடிவில் “உன் தன்னைப் பாடி” என்கிறார்கள். அப்படிப் பாடி முன்பாசுரத்தில் சொன்ன பறை முதலான சாதனங்களைக் கொண்டபின்பு சன்மானம் பெறவேண்டுமாம். பாடிப்பறை கொண்டு என்பது பாடும்போதே பறை கொள்வதைக் குறிக்கும். அதாவது உண்டு பசி தீர்ந்தான் என்றால் உண்ணும் போதே பசிதீருகிறது என்பதைப்போல.
இவர்கள் பெற விரும்பும் சன்மானம் என்பது என்ன என்று பார்த்தால் இங்கு பட்டர் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது. அவர் ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் உபன்யாசம் செய்துகொண்டிருக்கும்போது, பெருமாள் பிரசாதம் வந்ததாம். அப்போது அவர், “யாம்பெறும் சம்மானம் வந்தது” என்று அருளினாராம். வனத்தில் தம்மைப் பின் தொடர்ந்து வந்த சீதாபிராட்டிக்கு பெருமாள் ஒரு சம்மானம் அளித்தார்” என்றார் வால்மீகி முனிவர். அதற்கு விளக்கம் கூற வந்த ஆழ்வான், தம் தோளில் இருந்த மாலையை எடுத்துப் பிராட்டி மேலே இராமபிரான் இட்டதைச் சம்மானமாகக் காட்டுவார். இராமபிரானின் பட்டாபிஷேகத்தின்போது சீதாபிரட்டி ஆஞ்சநேயருக்கு அளித்த முத்து மாலையைப் போன்ற சன்மானத்தை இவர்கள் விரும்புகிறார்கள்.
அடுத்ததாக ”நாடு புகழும்” என்கிறார்கள். அதாவது கண்ணன் அளிக்கும் பரிசுகள் நாடெல்லாம் புகழும்படி இருப்பனவாம். “நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடையூர்தி பண்ணி வீடும் பொறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே” என்ரு கூறும்படி உலகமெல்லாம் போற்றும்படி இருக்குமாம். நாடு புகழும் என்பது தங்களுக்குப் புகழ் வருவதற்காகச் சொல்லுவது அன்று; நாட்டிலுள்ள எல்லாரும் இதைப் புகழ்ந்து வாய் பெற்ற பயனைப் பெற வேண்டும் என்பதற்காகவே சொல்லப்படுகிறது.
அடுத்து சில ஆபரணங்களை வேண்டுகிறார்கள். அவையாவன; சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் என்பனவாம். எம்பெருமான் முதலில் இவர்களின் கைகளைத்தான் பிடிப்பான். எனவே தங்கள் கைக்கு இடும் ஆபரணமாக சூடகம் எனும் பெயர்கொண்ட கைவளை [கரபூஷணம்] கேட்கிறார்கள். கைகளைப் பிடித்தவுடன் அடுத்து அணைத்துக் கொள்ள அவன் இவர்களின் தோள்களைப் பற்றுவான். அவனே தோளழகன்; சுந்தரத் தோளுடையான்; “தோள்கண்டார் தோளே கண்டார் என்று ஆசைப்படும் தோள்கள் அவனுடையவை; ஆடவர் அவாவுறும் தோளினான் அன்றோ அவன்? அப்படிப்பட்டவனே ஆசைப்படுவதே இவர்களுடைய வேயிருதடந்தோள்களாகும். எனவே தங்கள் தோளுக்கு அணிகலனாக தோள்வளையை வேண்டுகிறார்கள். இந்த ஆபரணம் அங்கதம் என்றும் வழங்கப்படும்.
“”நாண் உரசுவதாலுண்டான தழும்பினால் கடினமாயும், மங்களகரமாயும், விளங்குவதாய், முழங்காலளவும் தொங்குவதாய், பிராட்டியின் செவிப்பூ, தோடு, அவிழ்ந்திருக்கும் முன்னெற்றி மயிர்கள் ஆகிய இவை உரசியிருப்பதைத் தெரிவிப்பதான நான்கு திருக்கைககளால் பிரகாசிப்பவனை” என்று ஆளவந்தார் அருளிச் செய்வது இங்கு நினைவு கூறத்தக்கது.
திருவாலிப் பெருமாளைப் பார்த்து, “என்மனமும் கண்ணும் ஓடி திருவடிக்கீழ் அணைய கைவளையும் மேகலையும் காணேன்; கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்” என்று திருமங்கையாழ்வார் பெண்ணாக மாறிப்பாடுகிறார்.
இந்தப் பெண்கள் மேலும் தங்கள் காதுகளுக்குத் தோடு வேண்டும் என்று கேட்கிறார்கள். மேல்காதில் அணியும் கர்ணைப்பூவான செவிப்பூ கேட்கிறார்கள். ஏற்கனவே இவர்களுக்கு இவர்கள் வீட்டில் தோடு அணிவிக்கப்படிருந்தாலும் அது இவனிட்டதுபோல் ஆகாது என்பதால் கேட்கிறார்கள். ”செவிப்பூ என்பதில் செவிக்கு ஆபரணம் எது என்பது மறைத்துச் சொல்லப் பட்டிருக்கிறது” என்பார் முக்கூரார். அதாவது திருமந்திரம், த்வயமந்திரம், சரமஸ்லோகம் ஆகியவற்றைக் கேட்பதே செவிக்கு ஆபரணமாகும்.
பகவானின் கோவிலுக்குச் சென்று அவனைச் சேவிப்பதே காலுக்கு ஆபரணம்; அவனுக்குக் கை கூப்பி அஞ்சலி செலுத்துவதே கைகளுக்கு ஆபரணம். பாடகம் என்பது பாதபூஷணத்தை குறிக்கிறது. இவர்களை அணைத்துத் தோற்று பெருமான் கீழே விழுந்து பிடிக்கும் கால்களுக்குக் கொலுசு போன்ற ஆபரணமாகும். “உலகம் ஏத்தும் கண்டியூர், அரங்கம், மெய்யம், கச்சி, பேர்மல்லை என்று மண்டினர் உய்யர் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே” என்று மங்கை மன்னன் அருளும் திவ்யதேசங்களுக்குச் செல்லும் பாதங்களுக்கு அணியும் பாத பூஷணம் கேட்கிறார்கள்.
அடுத்து “என்றனைய பலகலனும் நாமணிவோம்” என்கிற்ர்கள். இப்போது சொன்னவை தவிர வேறு சில ஆபரணங்களும் உபலட்சணமாகும். ஹாரம், ஒட்டியாணம், மூக்கூத்தி போன்று பல அணிகலங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். மேலும் அவனுக்கு இந்த ஆயர்குலப் பெண்கள்மேல் இருக்கும் அளவு கடந்த பிரேமை இந்தச் சில அணிகலன்களை அளிப்பதோடு திருப்தி அடையாது. அவனும் பலப்பல ஆபரணங்கள் அணிபவன்.
”பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே
பலபலவே சோதிவடிவு; பண்பு எண்ணில்
பலபல கண்டுண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்
பலபலவே ஞானமும்; பாம்பணை மேலாற்கேயோ [2-5-6]
என்பது நம்மாழ்வார் அருளிச் செயலாகும். முதலில் ”மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்” என்றவர்கள் இப்போது நாமணிவோம் என்கிறார்கள். இவர்கள் இப்போது அணிவது தங்கள் அழகுக்காக அன்று; கண்ணனும், நப்பின்னைப் பிராட்டியும் சேர்ந்து அணிவிப்பதாலே அணிந்துகொள்கிறார்கள். இருவரும் சேர்ந்து அணிவிப்பதால் நன்றாக அணிவோம் என்கிறார்கள். ”நீ அணிவிக்க வேண்டும்” என்று கூறாமல் ”யாமணிவோம்” என்று கூறுவது ஏனென்றால் முன்பு ”நாம் முடியோம்” என்று சொன்னவர்கள் இப்போது அணிவார்களோ என்று கண்ணன் ஆசைப்பட்டுக்கிடப்பதால் இவர்கள் தங்கள் இசைவைத் தெரிவிக்கிறார்களாம்.
இவர்கள் 5 ஆபரணங்களைத்தான் முக்கியமாக வேண்டுகிறார்கள். சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, மற்ரும் பாடகம் என்பனவே அவை. அவையெல்லாம் திருநாடு அலங்கரிக்கச் செல்லும் முக்தர்களுக்கு அருளப்படுபவை என்று பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள் அருளுகிறார்கள். அவர் “ ஏன் 5 ஆபரணங்கள் தெரியுமா? திருநாடு செல்பவர்களை முதலில் 500 அப்சரஸ்கள் எதிர்கொண்டு அழைப்பார்கள். அவர்களில் நூறு நூறு பேராக புஷ்பமாலைகள், அந்ஜனம், ஸுகந்த சூர்ணம், திவ்ய பீதாம்பரங்கள், திவ்ய பூஷணங்கள் கொண்டு அலங்கரிப்பார்கள். அவையே இந்த ஐந்து ஆபரணங்கள்” என்று அருளுகிறார்.
அடுத்து, “ஆடையுடுப்போம்” என்கிறார்கள். நன்றாக என்பதை இங்கு கூட்டிக் கொண்டு நன்றாக ஆடையுடுப்போம் எனவும் கொள்ளலாம். ஏனெனில் ”முன்பும் ஆடை இருந்தது. ஆனால் அது ஆடையாகாது. திரௌபதிக்கு நீ தந்ததைப் போல ஆடைதந்தால் அதுவன்றோ ஆடை” என்று சொல்கிறார்கள். அதாவது நீ தருவது புதிதன்றோ? அதுவும் நீ உடுத்துக் களைந்த ஆடை தந்தால் அபூர்வமானதன்றோ? “பெருமான் அரையில் பீதக வண்ண ஆடை” என்றும் “உடுத்துக் களைந்த நின் பீதக ஆடையுடுத்து” என்கிறபடி ஆயர் குலப்பெண்கள் அவன் உடுத்துக் களைந்த ஆடையை உடுப்பதையே “ஆடையுடுப்போம்” என்கிறார்கள்.
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் நாச்சியார் இதனை அழகாகப் பாடுவார். அவளுக்கு வந்த காதல் நோய்க்கு அவன் ஆடையே மருந்தாம்.
”கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறம்நின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு
வாட்டம் தணிய வீசீரே’
பயங்கரம் ஸ்வாமிகள் இன்னும் சொல்வார். “நாங்கள் முன்பு பசுப்ராயர்களாக இருந்தோம். அதாவது பசுக்களுக்கு அரையில் ஆடையில்லை. மானிடவர்க்கு மட்டுமே உண்டு. இப்போது உன் அருளால் ஞானம் பெற்றோம்; எனவே இப்போது “ஆடையுடுப்போம்” என்கிறார்களாம்.
இத்தனை நாள் ”நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்” என்று இருந்தார்கள். இப்போது மூட நெய் பெய்து பாற்சோறு உண்ண ஆசைப்படுகிறார்கள். இவர்கள் உண்ணாததால் அவனும் உண்ணாமலிருந்தான். எனவே அவனுடன் சேர்ந்து இவர்கள் உண்ண விரும்புகிறார்கள். ஆயர்பாடியில் பாலுக்குப் பஞ்சமில்லை. எனவே பாலை இட்டு அதில் அரிசியை வேகவைத்துப் பாற்சோறு உண்ண விரும்புகிறார்கள். அதிலும் மழை பெய்வதுபோல நெய்யைப் பெய்ய வேண்டும். “நெய்யிடை நல்லதோர் சோறு” என்று பெரியாழ்வார் அருளிச் செய்தபடிக்கு நெய்யின் நடுவே சோற்றைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.
அதிலும் அப்பால் சோற்றை உண்ணும்போது அதில் பெய்த நெய்யானது முழங்கை வழியாக வழிய வேண்டும். பட்டர் இந்த அடிக்கு வியாக்கியானம் செய்யும்போது, நம்பி திருநாடு வளநாடு தாஸர் என்னும் பெரியவர் “நெய் இவர்கள் வாயிலே படாதா?” என்று கேட்டாராம். அதற்குப் பட்டர், “இவர்கள் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை, எல்லாம் கண்ணன் என்று உள்ளவர்கள்; கண்ணனிடத்தில் கண்ணையும் நெஞ்சையும் பறிகொடுத்தவர்களுக்குச் சோறு வாயில் பட்டாலன்றோ நெய் வாயில் படப் போகிறது” என்று அருளினாராம்.
மேலும் பாற்சோறு உண்ணுதால் பசி தீர்க்கும் உத்தேசம் அவர்களுக்கில்லை. ”அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ” என்றிருந்தவர்கள் இப்போது பாற்சோற்றைத் தொட்டுக்கொண்டாவது எல்லாரும் கூடி இருக்க விரும்புகிறார்கள். “எந்நாள் வந்து கூடுவன்” என்று அவர்கள் பட்ட சிரம்ம் எல்லாம் போகும்படிக் கூடி இருக்க விரும்புகிறார்கள்.
”இந்த மார்கழி மதிநிறைந்த நன்னாளிலே பெருமானே! உன்னைக் கூடியிருந்து வாய் உன்னைப் பாட வேணும்; உடம்பு கூட வேணும்; நெஞ்சு குளிரவேணும்” என்று வேண்டுகிறார்கள். அவர்கள் குள்ளக் குளிர்ந்து நீராடுவோம் எனச் சொன்னது நீர்வண்ணனாகிய எம்பெருமானின் தடத்தில் மூழ்குவதையே குறிப்பாக உணர்த்துகிறார்கள். முக்தாமாக்கள் பரமாத்மாவுடன் கூடியிருந்து சகல கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் என்ற வேத வாக்கியங்களை இந்த இட்த்தில் அவர்கள் பேசுகிறார்கள்.
இப்பாசுரம் மறைமுகமாக பஞ்சஸம்ஸ்கார வைபவத்தைப் பேசுகிறது என்பார்கள். அதாவது பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்போது கையில் கங்கணம் கட்டுவர். அதிக் குறிப்பது ‘சூடகம்’. தோளில் சங்கு, சக்கரங்களை அனலில் இட்டுப் பதிப்பர். அதைக் காட்டுவது ‘தோள்வளை’. காதில் திருமந்திர உபதேசம் செய்வர். அதுதான் ’தோடு’. அதைவிட ரகசியமானது நுட்பமான த்வ்யமந்திர உபதேசம். அது திருமாலும், திருமகளும் சேர்த்தி அடிபணிவது. அதுதான் ‘செவிப்பூ’. பகவத் கீதையில் கண்ணன் கூறிய சரணாகதி உபாயம் சர்மஸ்லோகம் கால்களைப் பற்றிக்கொள்வது. அதுவே ‘பாடகம்’ ஆகும்.
இவ்வாறு இப்பாசுரத்தில் ஆயர்குலப்பெண்கள் தாங்கள் பெறவிருக்கும் சன்மானங்களைக் கூறி கண்ணன் திருவருள் வேண்டுகிறார்கள்.
=====
- மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து: தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும்
- மறைந்துவரும் கடிதக்கலை!? காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும்
- தொடுவானம் 209. நண்பர்கள பலவிதம்.
- ஞானரதமும் வாக்குமூலமும்
- தூக்கமின்மை
- நூல்கள் வெளியீடு:
- இரண்டாவது கதவு !
- மூன்று கவிதைகள்
- 27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!
- ஆதவனும் பெண்களும்: சில குறிப்புகள்
- நிலாந்தனின் கவிதைகள்: ஒரு பார்வை
- ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் வழங்கும் விழா
- அந்த வார்த்தை உச்சரி ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.