நாள் : மார்ச் 10 சனிக்கிழமை மாலை 5:30
ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் வழங்கும் விழா
நிகழ்ச்சி நிரல் :
5:15 – தேனீர்
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
முதல் அமர்வு : ராஜ் கௌதமன் விருது வழங்கும் நிகழ்வு
உரைகள் :
முனைவர் முத்து மோகன்
வ. கீதா
ஸ்டாலின் ராஜாங்கம்
15 நிமிட இடைவேளை
இரண்டாவது அமர்வு : சமயவேல் விருது வழங்கும் விழா
உரைகள்:
சா தேவதாஸ்
ச தமிழ்ச்செல்வன்
எஸ் ராமகிருஷ்ணன்
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016 ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன.
1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் விளக்கு விருது இவ்வாண்டிலிருந்து இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவரையும், அம்பை, பெருந்தேவி , தமிழச்சி தங்கபாண்டியன் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 75,000 மதிப்புள்ள இவ்விருதுகள் விரைவில் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். விழாவைப் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
ராஜ் கௌதமன்
விருதுநகரில் 1950ல் பிறந்து புதுச்சேரியின் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்த்துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்சமயம் திருநெல்வேலியில் வசிக்கும் எழுத்தாளரும் பேராசிரியருமான ராஜ் கௌதமன் தமிழ் மற்றும் இந்திய நவீன இலக்கியத்திற்கும் ஆய்வுப் புலத்துக்கும் கிடைத்திருக்கும் அருங்கொடை என்றால் மிகையில்லை. பிரதிகளை வெறும் மொழிவளப் பெட்டகமாகவோ காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவோ குறைத்து அணுகாமல் அவற்றில் சமூகப் பண்பாட்டு ஒழுங்குகளையும் ஒழுங்குகளின் வம்சாவழியியலையும் அடையாளப்படுத்திய முன்னோடி ராஜ் கௌதமன்.
ஆதிக்கக் கருத்தியலை மறுத்து “கலகப்பாங்கான தலித் பண்பாட்டைக் கட்டியெழுப்பவேண்டும்” என்று கூறும் ராஜ் கௌதமன் அத்தகையப் பண்பாடு ஒடுக்கப்பட்டிருப்பவரின் விடுதலைக்கும் மானுட சுதந்திரத்துக்கும் சகவாழ்வுக்கும் தேவையான அடித்தளம் என்பதைத்தன் ஆய்வெழுத்திலும் புனைவாக்கங்களிலும் தொடர்ந்து எடுத்துக்காட்டியிருக்கிறார். ராஜ் கௌதமனின் எழுத்து பரப்பு சங்ககாலம் தொட்டு நவீனகாலம் வரை பரந்து விரிந்திருப்பது. தமிழ்ச் சமூகம் உடைமைச் சமூகமாக மாறிய வகையில் சங்க இலக்கியத்தில் இயங்கும் பால் அரசியலையும் அறநெறி மதிப்பீடுகளின் கட்டமைப்பையும் அவர் நூல்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
ராஜ் கௌதமனின் சிந்தனைச் சட்டகம் இலக்கிய அழகியலைத் தாண்டி, சமூகப் பண்பாட்டுத் தளங்களின் பொருள்கோடலோடும் பொருண்மையான மனித இருப்பைக் குறித்த அக்கறையோடும் இயங்குவது. அயோத்திதாசரின் சிந்தனைகளை முன்வைத்துப் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளின் தமிழக, இந்திய வரலாற்றெழுதியலை ஆராய்ந்தவர். அயோத்திதாசரோடு கூடவே தமிழ் நவீன மனப்பரப்பின் உருவாக்கத்தில் இன்றியமையாத கண்ணியான இராமலிங்க வள்ளலாரை முன்வைத்துச் சமூகவரலாற்றை எழுதிப்பார்த்திருக்கிறார். வர்க்கம்,சாதி, பாலினம் என்ற மூன்று வகைகளிலும் ஒடுக்கப்படுபவர்களின் பார்வையிலிருந்து வரலாற்றை அணுக அவர் பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார். புதுமைப்பித்தன், அ. மாதவையா போன்றவர்களின் படைப்புகளைக் குறித்த ஆராய்ச்சியை அன்றைய காலகட்டம், எழுத்துச் சூழல் இவற்றின் தறுவாயில் இருத்தி நவீனத் திறனாய்வுப் புலத்தில் அவர் செய்திருக்கும் இடையீடு சிறப்பானது.
ஆராய்ச்சியாளராக மட்டுமின்றி புனைவெழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் ராஜ் கௌதமனின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. பதினேழு ஆராய்ச்சி நூல்களோடு சார்ல்ஸ் டார்வினின் The Origin of Species இல் தொடங்கி மேல் நாட்டுப் பெண்ணியக் கோட்பாட்டுச் சிந்தனைகள், இந்திய ஆராய்ச்சியாளர்களின் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள் குறித்த ஆராய்ச்சிகள், எரிக்ஃப்ராமின் The Sane Society வரை செய்துள்ள அரிய மொழியாக்க நூல்களும், சுயசரிதைத் தொனியில் அமைந்த மூன்று நாவல்கள், சில சிறுகதைகள் எனத் தன் வெளிப்பாட்டுக் களத்தை அகலமாகவும் செறிவாகவும் அமைத்துக்கொண்டவர் ராஜ் கௌதமன். அத்துடன் “பிரக்ஞை”, “பரிமாணம்”, “படிகள்” போன்ற சிறு பத்திரிகைகளோடு செயல்பட்டவர். 1990-களின் தொடக்கத்தில் வெளிவந்த “நிறப்பிரிகை” இதழின் கருத்துவெளியைக் கட்டியமைத்ததில் பங்காற்றியவர்.
சமூக வரலாற்றெழுத்துக்கும் திறனாய்வுக்கும் நவீனத்துவத்துக்கும் அளப்பரிய பங்காற்றியிருக்கும் எழுத்தாளர் ராஜ் கௌதமனைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2016ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக்குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் பேருவகையும் கொள்கின்றன.
சமயவேல்
கரிசல் பகுதியான வெம்பூரில் 1957ல் பிறந்த கவிஞர் சமயவேல் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்று மதுரையில் வசிக்கிறார். ஆறு கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும், கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். “கவிதா இயக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள இன்று வரை, விழிப்பான அரசியல் மற்றும் தத்துவப் பிரக்ஞையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளேன்” என்று சொல்லும் கவிஞர் சமயவேல் எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத வந்தவர். ‘போதனையாக மாறாத கவித்துவம்’ எனப் பிரமிளால் பாராட்டப்பட்டுப் பரவலான கவனம் பெற்ற ‘காற்றின் பாடல்’ எனும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1987ல் வெளியானது. இவர் தொடர்ச்சியாக கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புப் பணி எனத் தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கிவருபவர். இளைய தலைமுறைப் படைப்பாளிகளிலும் கவனம் குவித்து அவர்களது படைப்புகள் குறித்து சமயவேல் எழுதியிருக்கும் கட்டுரைகளின் சமீபத்தியத் தொகுப்பான “ஆண்பிரதியும் பெண் பிரதியும்” இவரது நுட்பமான ரசனை உணர்விற்குச் சான்று.
”கவிதைக்கும் அதை எழுதுகின்ற கவிஞனுக்கும் இடையில் முரண்பாடு இருக்கவே கூடாது” எனக் கூறும் சமயவேலின் கவிதைகள் எளிமையும் உண்மையும் கரிசல் மண்ணின் வேரோடு இயைந்த வெள்ளந்தித்தனமும் உலகமயாக்கலின் மாற்றத்தில் அருகிவரும் மனிதத்துவமும் நிறைந்தவை. சமவேலின் கவிதா சக்தி வெம்பூர் கிராமத்தின் ‘வெளி’ தான். நுகர்வுக் கலாச்சாரத்தின் முதல் பலி உழவும் உழவனும் எனும் பெரும் துக்கத்தின் கையாலாகாத்தனத்துடன் மனிதத்துவத்தின் நீட்சி மீது நம்பிக்கை வைத்து இயங்குகின்ற பின்காலனியக் கவிஞனின் குரல் அவருடையது. இருள், மரணம், தனிமை இவற்றை வலிமையான படிமங்களாகக் கொண்டு உருக்கொள்ளும் இவரது கவிதைகள் தன் கரிசல் மண் சார்ந்து வேரூன்றி நிற்கும் அதே வேளையில் பிரபஞ்சத்தின் தொடர் கண்ணியாகப் பெருங்காதலுடன் தம்மைக் கலையின் வழியில் இணைத்துக் கொள்பவை. உரத்துப் பேசாத, ஆழ்மனத்தில் தைத்துத் தொடர்ச் சலனங்களை ஏற்படுத்துகின்ற கவிதை வகைமை அவருடையது.
”படைப்பு மனநிலைக்கான குழந்தைமையை மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கிற” அபூர்வக் கலைஞனான சமயவேலின் கவிதைகள் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனித்ததொரு அடையாளத்துடன் அதன் செழுமைக்குச் செறிவான பங்களித்திருப்பவை. கரிசல் மண்ணின் தன்மைகளைத் தனது கவிதைகளின் அடிநாதமாய் வரித்துக்கொண்டு நவீன வாழ்வின் தீர்வுகளற்ற துயரத்தையும் அவநம்பிக்கையையும் நடுக்கமுடன், இயலாமையுடன், சன்னமான தீர்க்கமுடன் முன்வைக்கின்ற அவரது கவிதைத் தொகுப்புக்கள் தமிழ்க் கவிதை உலகிற்கு மிக முக்கியமான பங்களிப்புகள்.
2018ற்குள் “உலகக் கவிதையியலும், தமிழ்க் கவிதையியலும்” எனும் ஒப்பாய்வு நூலையும், ‘மெகா நாவல்’எனப்படுகின்ற ஒரு படைப்பையும் நிறைவேற்றுகின்ற முயற்சியுடனும், கனவுடனும் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஒரு ‘காற்று நதியைப்’ போலத் தொடர்ந்து இருபத்தியேழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றார். “காட்டில் எங்கோ ஒரு மூலையில்/ உயர்ந்த மரங்களின் அடியில்” அமைதியாகக் கிடக்கின்ற ஊருணியைப் போன்ற அவரது இருப்பையும் ஆழமான பங்களிப்பையும் கௌரவித்தும் மதிப்பளித்தும் 2016ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக்குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் பேருவகையும் கொள்கின்றன.
கவிஞர்சமயவேல்
பாரதியின்எட்டயபுரம்அருகில்உள்ள,வெம்பூர்என்றகிராமத்தில், 1957ல் பிறந்தகவிஞர்சமயவேல், தொலை தொடர்பு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்று, மனைவியுடன் மதுரையில் வசிக்கிறார்.
இவரது நூல்கள்:
காற்றின்பாடல் (1987)
அகாலம் (1994)
தெற்கிலிருந்துசிலகவிதைகள் (தொகை நூல்)
அரைக்கணத்தின்புத்தகம் (2007)
மின்னிப்புற்களும்மிதுக்கம்பழங்களும் (2010)
இனி நான் டைகர் இல்லை (2011) (சிறுகதைகள்)
பறவைகள்நிரம்பியமுன்னிரவு(2014)
ஆண்பிரதியும்பெண்பிரதியும் (2017)
(கட்டுரைத்தொகுப்பு)
தொடர்ந்துசிற்றிதழ்களில் கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரைகளும்எழுதுவதோடு,மொழிபெயர்ப்புகளும் செய்துவருகிறார்.
தொடர்புக்கு: samayavelk@gmail.com
தொலைபேசி: 9486102498
————–————————————
ராஜ் கௌதமனின் நூல்கள்
எண்பதுகளில் தமிழக கலாசாரம்
தலித் பண்பாடு
தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு
பொய் + அபத்தம் > உண்மை
அ மாதவையா (1872-1925)
அறம், அதிகாரம்
புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்ஷஸ்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக
சிலுவைராஜ் சரித்திரம் (தன்வரலாற்று நாவல்)
காலச்சுமை
தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
க அயோத்திதாசர் ஆய்வுகள்
தலித் அரசியல்
லண்டனில் சிலுவைராஜ்
தமிழ் சமூகத்தில் அறமும் ஆற்றலும்
ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ் சமூக மாற்றமும்
ஆ கொள் பூசலும் பெரும் கற்கால நாகரிகமும்
பதிற்றுப் பத்து ஐங்குறுநூறு – சில அவதானிப்புகள்
கலித்தொகை, பரிபாடல் ஒரு விளிம்பு நிலை நோக்கு
ராஜ் கௌதமனின் மொழி பெயர்ப்பு நூல்கள்
உயிர்களின் தோற்றம் (டார்வின்)
பாலற்ற பெண்பால் (Female Eunuch- Germain Greer)
பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் (Feminism: History and Theories- Sarah Gamble – Toril Moi)
கதைக் கருவூலம் (சமண சமயக் கதைகள்) ( Katha Kosa- C. H. Thani)-
கிளி எழுபது ( Suka Sapta Sathi)
மன வளமான சமுதாயம் ( The Sane Society- Erich Fromm ) –