விளக்கு விருது – 21 வருடங்கள்

This entry is part 1 of 22 in the series 1 ஏப்ரல் 2018

 

(வெற்றிவேல், கோபால் ராஜாராம், சமயவேல், எஸ் ராமகிருஷ்ணன்)

1991 இறுதியில் ஒரு நடுங்கும் குளிர்நாளில் நான் அமெரிக்கா சென்றடைந்தேன். புதிய பூமியில் புதிய அனுபவங்கள்.

டாக்டர் நா கோபால்சாமி பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சைன்ஸில் பயின்ற போது இலக்கிய ஆர்வமும், செயல்படவேண்டும் என்ற ஊக்கமும் கொண்டவராய் தமிழவனுக்கு அறிமுகம் ஆனவர். அவர் சொல்லி நான் கோபால் சாமியுடன் தொடர்பு கொண்டேன். அவருடன் பேசியபோது, அந்த வருடம் 1992ல் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு வாஷிங்டனில் நடக்க விருப்பதாக அறிந்தேன். அதில் கலந்து கொள்ள எனக்கு அவர் அழை ப்பு விடுத்தார், அங்கு அவரைச் சந்தித்த போது தான். விளக்கு விருதிற்கு அடித்தளம் இடப் பட்டது. அவருடன் உரையாடியதில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் கலாசார அக்கறைகள் தமிழ்நாட்டின் கலாசார அக்கறைகளை அடியொற்றி இருந்ததில் வியப்பில்லை.

 

(கோபால்சாமி )

https://science.gsfc.nasa.gov/sed/bio/natchimuthuk.gopalswamy-1

அபபோது சாகித்ய அகதமியின் செயல்பாடுகள், விருதுகள் குறித்து பல விமர்சனங்கள் இருந்தன. முக்கியமான விருதுகள் தகுதியில்லாத படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் வழங்கப் படுவது பற்றியும், அதன் உள்ளீடாக நடக்கு அரசியல் பற்றியும், மற்றும் ஒரு குறிபிடட குழு தமிழில் தமக்குள்ளாக விருதுகளை வழங்கிக் கொள்வது பற்றியும் விமர்சனங்கள் இருந்தன. சாகித்திய கத்தமி விருதுகள் வெறும் பணம் அன்பளிப்புப் பிரச்சினை ஆல். மாறாக தமிழின் எந்த படைப்புகள் அங்கிகாரம் பெறுகின்றன என்பதும், எந்த படைப்புகளும் படைப்பாளிகளும் வெளி மாநிலங்களுக்கு அறிமுகம் செய்யப் படுகிறார்கள் என்பதும், தவறான இந்த நடைமுறையினால் எப்படி தமிழின் காத்திரமான படைப்புகளும் படைப்பாளிகளும் இருட்டடிப்புக்குஆளாகிறார்கள் எனபது பற்றியும் பல விவாதங்கள் நடைபெற்றவாறிருந்தன.

நாம் இந்த விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, சாகித்திய அகதமிக்கு மாற்றாக ஏதும் விருது அல்லது அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமெரிக்க வாழ் தமிழர்களின் உதவியைக் கொண்டு ஏதும் செய்ய முடியுமா என்று நான் கோபால்சாமியுடன் உரையாடினேன். அவருடைய முயற்சியால் விளக்கு விருது புதுமைப்பித்தன் நினைவாக அளிக்குமாறு ஒரு வடிவம் பெற்றது.

விளக்கு விருது தகுதியான நடுவர்களால், வேறு இடையீடு இல்லாமல் சுதந்திரமான தேர்வுக்கு மதிப்பளித்து படைப்பாளிகளை சிறப்பிக்குமாறு அமைய வேண்டும் என்று கருத்து வெளிப்பட்டது. கோபால்சாமியுடன், சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி இணைந்தனர். பால் பாண்டியன் மற்றும் சிலருடன் கோபால்சாமியின் முனைப்பினால் விளக்கு விருது ஒரு வடிவம் பெற்றது.

(சுந்தரமூர்த்தி)

முதல் விருதை வழங்க நடுவார்களாய் இருந்த பாவண்ணனும், தமிழவனும் இந்த விருது எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று ஆலோசித்து விவாதித்து , சில கருத்துகளைத் தெரிவித்தனர். சிறுபத்திரிகை இயக்கம் வலுவாக இருந்த காலகட்டம் அது. வணிக எழுத்துக்கும், சிறு சிறு நகரங்களிலிருந்து, என் கிராமத்திலிருந்து கூட தனிச்சுற்றுக்கு மட்டும் என்று பத்திரிகை பதிவிலிருந்து தப்பி, தனி மனிதர்களின் முயற்சியால் கதை விமர்சனம், மொழிபெயர்ப்பு என பலவாறான அக்கறைகளுடன் தம் படைப்பாயாற்றலை பல நண்பர்கள் வெளிப்பாடுத்துக் கொண்டிருந்தார்கள். முதன் முதல் நடுவர்களாய் இருந்த தமிழவனும், பாவண்ணனும், விளக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்க ஒப்புக் கொண்ட வெளி ரங்கராஜனும் இந்த இயக்கத்தின் வழி வந்தவர்கள். கலாசார விரிவாக்கத்தில் சுணங்கிப் போய் இருந்த வணிகத் தமிழ்ச் சூழலுக்கு வெளியே பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருந்த இவர்கள் விளக்கின் முதல் கட்ட திசையை நிர்ணயிக்க பெரிதும் உதவினர்.

1996-இல் விளக்கு விருது சி சு செல்லப்பாவிற்கு வழங்கப் பட்டது. அபபோது சாகித்ய அகாதமி பரிசுத் தொகை 25,000 ரூபாய் ஆக இருந்தது, விளக்கு விருதும் 25,000 ரூபாய் ஆக நிர்ணையிக்கப பட்டது. சி சு செல்லப்பா விருதை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினார். தம்முடைய நேர்மையையும், இலக்கிய அர்ப்பணிப்பையும் விருது எதுவும் களங்கப் படுத்திவிடக் கூடாது என்ற அவருடைய தயக்கம் புரிந்து கொள்ளத் தக்கதே. முன்பே அவர் தமிழ்ப் பல்கலைக் கழகம் அளித்த விருதை மறுதலித்திருந்தார். இந்த மறுப்பே விளக்கு அமைப்பின் முதல் விருது சரியான ஒருவருக்குப் போகிறது என்று எங்களுக்குப் புரிய வைத்தது. ஒரு சமரசமாக, பணத்தை வாங்காமல் “என் சிறுகதைப பாணி” என்ற அவர் படைப்பை வெளியிட இந்தப் பணத்தைப் பயன் படுத்தலாம் என்று முடிவெடுத்தார்.

((சி சு செல்லப்பாவின் புத்தகத்திற்கு கோபால்சாமி எழுதிய பதிப்புரை)

இரண்டாவது ஆண்டு விருது பிரமிள்-க்குச் சென்றது. பிரமிள் கவிஞராகவும், படைப்பாளியாகவும், விமர்சகராகவும் தனித்த குரலைக் கொண்டவர்.

மூன்றாவது ஆண்டு கோவை ஞானிக்கு விருது வழங்கப் பட்டது. மார்க்ஸிய விமர்சகராகவும், கவிஞராகவும் அறியப் பட்டவர்.

நடுவர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை மாற்றப் பட்டு புதிய நடுவர்கள் கொணரப்படுவதையும் முறையாய்ச் செய்தோம். இதனால் புதிய பார்வைகளும் புதிய வெளிச்சங்களும் விருது நடைமுறைக்குக் கிடைத்தது.

நகுலன், பூமணி, ஹெப்சிபா ஜேசுதாசன், சி மணி, சே ராமானுஜம், ஞானக் கூத்தன், அம்பை, தேவதேவன், எஸ் வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப் குமார், தேவதச்சன், எம் ஏ நுஃமான் , பெருமாள் முருகன், கோணங்கி, சி மோகன் என்று இந்த வரிசை நீள்கிறது. இவர்களில் ஒவ்வொருவரும் தனித்த சிறப்புக் கொண்டவர்கள். தமிழ் இலக்கியத்தையும் கலாசாரத்தையும் அதன் அடுத்த கட்டிடத்திற்கு நகர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர்கள். இவர்கள் அனைவரின் செயல்பாடுகளும் மிகச் சிறப்பான இடத்தை தமிழக கலைப் பரப்பில் கொண்டுள்ளன.

சென்ற ஆண்டு நடுவர்களாக அம்பை, தமிழச்சி தங்கபாண்டியன், பெருந்தேவி இருந்தனர். இந்த நடுவர்களில் அம்பையும் மற்றவர்களும் விருதை இரண்டாக்க வேண்டும் என்றும், பணத்தைக் காட்டிலும் அங்கீகாரத்தை முதன்மைப் படுத்த வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கினர். அம்பையுடன் இது பற்றிக் கலந்து ஆலோசித்தோம். இந்த வருடம் முதல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு விளக்கு அமைப்பிற்கு கணிசமான தொகை அளித்து உறுப்பினராகி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் இரண்டு விருதுகள் சாத்தியம் ஆயிற்று.

சென்ற வருடம் மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமனுக்கு விளக்கு விருது நடுவர்கள் பரிந்துரையின் பேரில் வழங்கப் பட்டது. இந்த வருடம் விளக்கு விருதுகள் இருவருக்கு வழங்கப் பட்டது. கவிஞர் சமயவேல், திறனாய்வாளர் ராஜ் கௌதமன், ஆகிய இருவருக்கும் விருது வழங்கப் பட்டன.

இதற்கான விழா மதுரையில் நடந்தது. நான் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி தரும் விஷயம். ஒருங்கிணைப்பாளராக வெற்றிவேல், மற்றும் மகாலிங்கம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வெற்றிவேல் விழா நாளுக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பெரும் விபத்தினால் கால் முறிவு ஏற்பட்டு துன்பத்துக்கு ஆளாகி, மருத்துவ மனையில் இருக்க வேண்டியதாயிற்று என்பது ஒரு சோக நிகழ்வு. இருப்பினும், அவர் மகாலிங்கம் ஆத்மார்த்தி போன்ற நண்பர்களுடன் இணைந்து விழா வெற்றி பெற உழைத்தார். பேசுச்சாளர்களாக பங்கேற்ற முத்துமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், வ கீதா, ச தமிழ்ச்செல்வன், சா தேவதாஸ், எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் விழாவைச் சிறப்பித்தனர்.

விளக்கு விருதின் 21 ஆண்டுகளில் அமைப்புடன் இணைந்து வாசுதேவன், சிபிச் செல்வன் ஒருங்கிணைப்புப பணியை மேற்கொண்டு சிறப்பித்துள்ளனர். மேலும் பலரும் விளக்கு அமைப்பின் செயலுக்குத் துணை நின்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நன்றிக்கு உரியவர்கள். இந்தக் காலக்கட்டத்தில் நடுவர்களாய்ப் பணியாற்றியவர்கள் விளக்கு அமைப்பின் பின்னணியைப் புரிந்து கொண்டு இந்த விருதின் மதிப்பை உயர்த்தும் வகையில் சீரிய படைப்பாளிகளை இனங்கண்டு விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து நா கோபால்சாமி, சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி, சிவகுமார் ஈடுபாட்டுடன் இதனை வழி நடத்திச் செல்ல முன்வந்திருக்கின்றனர்.

இணைப்பு. தினமலர்

Series Navigationநியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா?
author

கோபால் ராஜாராம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *