எத்தனையாவது

0 minutes, 3 seconds Read
This entry is part 21 of 22 in the series 1 ஏப்ரல் 2018

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

‘எத்தனையாவது’ என்ற தனித்துவமான தமிழ்ச்சொல்லை
தங்குதடையின்றி ஆங்கிலத்திற்குக் கடத்த
எத்தனையோ முயன்றும் முடியவில்லை……

மொழிபெயர்ப்பாளர் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார்.

சொல்சொல்லாய்ச் செதுக்கிச் செதுக்கி
கண்ணும் கையும் களைத்துப்போய்விட்டன.

வெண்சாமரம் வீசவோ விக்கலுக்கு நீர் தரவோ
வேந்தரா என்ன – வெறும் மொழிபெயர்ப்பாளர்தானே?

கனன்றெரியும் விழிகளில் குளிர்நீரூற்றிக்கொண்டு
தொடர்ந்தார் தன் தேடலை.

எத்தனையாவது முறையோ…..

ஏகாந்தமாய் எங்கோவொரு மலைமுகட்டோரம் அமர்ந்து
எழுதிக்கொண்டிருந்தவரை
’என்ன எழுதிக்கிழித்துக்கொண்டிருக்கிறாய்
வெண்ணைவெட்டி மொழிபெயர்ப்பாளரே’ என்று
பின்னிருந்தொருவன் கேட்டான், கையில் குண்டாந்தடியோடு.

’எத்தனையாவது என்ற வார்த்தைக்கு ஆங்கில
இணை தேடிக்கொண்டிருக்கிறேன், உங்களுக்குத் தெரியுமா?”
என்று ஆவலோடு கேட்டார் மொழிபெயர்ப்பாளர்.

”எனக்குத் தெரிந்ததெல்லாம் ஏகதேசமா யொரு குறை கண்டுபிடித்து
எளிய மொழிபெயர்ப்பாளர் எவரையேனும் கழுவிலேற்றுவதுதான். அதிருக்கட்டும். இதற்கு பதில் சொல் –
என்ன எழுதிக்கிழித்துக்கொண்டிருக்கிறாய் –
இதை எப்படி எழுதுவாய் ஆங்கிலத்தில்?”

எழுதுவது தடங்கியதில் எரிச்சலுற்ற மொழிபெயர்ப்பாளர்
”எப்படி யெழுதவேண்டுமோ அப்படி எழுதுவேன்”, என்றார்.

”எப்படி – சொல் சொல்” என்றான் வந்தவன், விடாமல்.

”கையால் மையால் – ஏன், காலால்கூட”

”என்ன நக்கலா – எங்கே காலால் எழுதிக்காட்டு பார்க்கலாம்.”

”முதலில் நீ இந்த எத்தனையாவதை கையாலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தாயேன் – தயவுசெய்து”

”அட பழிகாரா… வடலூர் வள்ளலாரைத் தெரியாமலிருக்கலாம், ஆனால்
விண்ணைத்தொடும் மொழிபெயர்ப்பை?”

”அது யாருடையது?”

”என்னுடையது”

”எந்த நூலின் மொழிபெயர்ப்பு”

”என்றோ ஒரு நாள் செய்யநேர்ந்தால் அப்போது யோசித்தால் போயிற்று.”

“அது சரி – வடலூர் வள்ளலார் ஏன் வந்தார்?”

“வடலூர் – விண் – வ – வி – Wow! What a rhyme! நிற்க, வழக்கமாக, வீட்டுக்குள்ளி ருந்தா மொழிபெயர்ப்பு செய்வது?

”வேறு எங்கிருந்து?”

”மூலப்பிரதியில் கடல் விரிந்திருந்தால் அதன் மேல் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு
அதிலுள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையை சரிவரக் கணக்கிட்டு முடித்த பிறகே
அதை மொழிபெயர்க்க முற்படவேண்டும் நீ;

””மூலப்பிரதியில் நாய் வந்தால் முதலில் நீ குரைக்கக் கற்றுக்கொண்டால்தான் மொழிபெயர்ப்பில் மேம்பட முடியும்;

மூலப்பிரதியில் விஷம் வந்தால் நீ குடித்தாகவேண்டும் அதன் மொழிபெயர்ப்பில் முழுமை பெற_”

”மன்னிக்கவும் குறுக்கிடுவதற்கு”, என்று முனகினார் மொழிபெயர்ப்பாளர்: ”மரித்து விடுவேனே நான் – அப்படிச் செய்தால்…”

“அதனாலென்ன – செத்தால்தான் சொர்க்கம் – No Pain, No Gain” என்று அசால்ட்டாகக் கூறியவனை

”அப்படியானால் முதலில் நீ” என்று மலையுச்சியிலிருந்து பிடித்துத்தள்ளிவிட்டு
மறுபடியும் மொழிபெயர்க்க முனைந்தார் எத்தனையாவதை.’

Series Navigationமொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்விண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய  உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *