தொடுவானம் 220. அதிர்ச்சி

This entry is part 13 of 16 in the series 6 மே 2018
          பன்னீர் சொன்னது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது என்ன அதிர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கொண்டுவந்திருந்த வாடகை ஊர்தியில் அமர்ந்தோம். கோவிந்தசாமி முன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். நாங்கள் மூவரும் பின் இருக்கையில்.
          நலம் விசாரித்தான் பன்னீர். அவன் தமிழகம் வந்ததில்லை. நான் திருப்பத்தூர் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.ஆனால் கோவிந்தசாமியோ மெளனம் காத்தான். அவனுக்கு திருப்பத்தூர் தெரியும்.
          துறைமுகத்திலிருந்து வெளியேறி தஞ்சோங் பாகார் வழியாக அவுட்ராம் வீதி வழியாக தியோங் பாரு வீதியில் சென்றது வாகனம். குயீன்ஸ்வே தாண்டிய பின்பு ஸ்டெர்லிங் வீதியினுள் நுழைந்தது. அங்கு அடுக்கு மாடி வீடுகள் வரிசையாக நின்றன. அவற்றில் ஒன்றின் முன்பு நின்றது. நாங்கள் வெளியேறினோம். மின்தூக்கி மூலம் ஏழாவது மாடிக்குச் சென்றோம். கோவிந்தசாமியின் வீட்டினுள் நுழைந்தோம்.
          கூடம் வெறிச்சோடிக்  கிடந்தது. ஒரு மூலையில் இருந்த மேசை மீது ஏராளமான வெள்ளைத் தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அவை கோவிந்தசாமியின் எழுத்துப் படிவங்கள்.
          சமையல் கட்டுக்குச் சென்ற கோவிந்தசாமி கேத்தலில் சுடுநீர் கொதிக்கவைத்தான். காப்பி கலக்கி எங்களுக்கு பரிமாறினான்.
           சிங்கப்பூர் மருத்துவக் கழகத்திலிருந்து வந்துள்ள கடிதத்தை என்னிடம் தந்தான் கோவிந்தசாமி. அதை நான் படித்துப் பார்த்தேன். இரண்டு வாரங்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நான் வார்டுகளுக்குச் சென்று பயிற்சி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு ‘ கிளினிக்கல் கோட்  ‘ அணிந்து செல்லவேண்டும்.
          ‘ இன்று மாலையே நாம் தையல் கடைக்குச் சென்று கோட் தைக்கக் கொடுப்போம். ” என்றான் கோவிந்த்.
          ” ஆமாம். நீ உடன் தேர்வுக்கு தயார் செய். அது கடினமாகவே இருக்கலாம். உன்மீது நம்பிக்கை உள்ளது. நீதான் நல்லா படிப்பாயே? ” பன்னீர் கூறினான்..
          ” நான் என்னுடைய நூல்களை கொண்டு வந்துள்ளேன். படிக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான். தினமும் மருத்துவமனைக்கும் சென்று வரலாம்.” நான் பன்னீரிடம் சொன்னேன்.
          ” இந்தத் தேர்வுதான் உன் வாழக்கையில் ஒரு திருப்பு முனையாக அமையும். அதே வேளையில் நீ கண்ட அந்த புதையல் கனவு நிறைவேறி விட்ட்தா என்பதை நீதான் சொல்லவேண்டும். ” என்றான்.
          ” நான்  மூன்று வருடங்கள் திருப்பத்தூர் மிஷன் மருத்துவமனையில் பணியாற்றி விட்டேன்.அந்த சேவை போதுமா இல்லையா என்பதை இந்தத் தேர்வு முடிவுதான் கூறவேண்டும். ” நான் பதில் சொன்னேன்.
          ” சிங்கப்பூர் உன்னுடைய நாடு. இங்குதான் நீ இருக்க வேண்டும். அதற்கு இப்போது மீண்டும் உனக்கு ஒரு வாய்ப்பு. ” பன்னீர் சொன்னான்.
          ” அப்படிதான் தெரிகிறது பன்னீர். ஆனால் இந்தத் தேர்வை வேண்டுமென்றே கடினமாக வைப்பார்கள்.உண்மையில் அவர்களுக்கு இந்திய மருத்துவப் பட்டதாரிகள் தேவை இல்லை. அதனால் இது வெறும் கண் துடைப்புதான்.” என்றேன்.
          ” இந்தத் தேர்வுக்கு நுழைவுக் க ட்டணம்  ஐந்நூறு வெள்ளி. அதை கோவிந்தசாமிதான் கட்டியுள்ளான். தோல்வி என்றால் அந்த பணம் வீணாகி விடும். ” பன்னீர் எச்சரித்தான்.
         ” பணம் முக்கியமில்லை. பாஸ் பண்ணுவதுதான் முக்கியம். ” என்றான் கோவிந்தசாமி..
         நண்பர்கள் இப்படிச் சொன்னது நெஞ்சை  நெகிழ வைத்தது..
          நண்பனின் வீட்டில் இரண்டு படுக்கை அறைகள் இருந்தன. முதல் அறையில் கலைமகள் தங்கினாள். அந்த அறையில் அவனுடைய நூல்கள் அனைத்தும் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவன் எழுதும் மேசை ஹாலில் இருந்தது.
          மதிய உணவுக்கு வெளியில் சென்று வந்தோம். அதன் பின்பு சிறிது நேரம் படுத்து உறங்கினோம். கலைமகள் அறைக்குள் இருந்தாள். நாங்கள் மூவரும் ஹாலில் பாய் விரித்து பழையபடி வரிசையாக படுத்துக்கொண்டு தூக்கம் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம். திருமணம் பற்றி கோவிந்தசாமியோ பன்னீரோ ஏதும் சொல்லாமல் இருந்தது எனக்கு என்னவோபோலிருந்தது. இடையில் துறைமுகத்தில் பன்னீர் எனக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி காத்துள்ளது என்று வேறு சொல்லியுள்ளான் அது பற்றியும் இன்னும் எதையும் சொல்லவில்லை.சற்று குழப்பமான நிலையில் பேசிக்கொண்டே கண்களை மூடினேன்.
          மாலையில் குளித்து முடித்த பின்பு கீழே சென்றோம்.  ஒரு வாடகை ஊர்தியில்  அவுட்ராம் வீதி சென்றோம். அங்கு  பொது மருத்துவமனை எதிரில் இருந்த தையல் கடை முன் இறங்கினோம். சீன தையல்காரிடம் ‘ கிளினிக்கல் கோட் ‘ தைக்க வேண்டும் என்றோம். அவர் உடன் அளவு எடுத்துக்கொண்டார். அரசு மருத்துவர்களுக்கு அவற்றைத் தைக்கும் அனுபவம் அவரிடம் இருந்தது.  இரண்டு நாட்களில் தருவதாகக் கூறினார்.
          மீண்டும் வாடகை ஊர்தி மூலம் திரும்பினோம். அங்கே வீட்டின் எதிரேயே உள்ள சீன உணவகம் சென்றோம். கலைமகளுக்கு ‘ கொய்த்தியாவ் ‘ கொண்டுவரச் சொன்னேன். சீன உணவை முதல் முதலாக ருசி பார்த்தாள். அனால் கோவிந்தசாமி வழக்கம்போல் இந்திய இஸ்லாமியர் உணவகம் சென்று ‘ மீ கோரேங்க் ‘  கொண்டுவரச் சொன்னான்.பன்னீர் வழக்கம்ப்போல் ஜில்லென்று இரண்டு அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். நான் கப்பலில் அன்றாடம் இரவில் இரண்டு டின்கள் பருகிவந்தேன்.இப்போது ஆசை தீர பருகலாம். ஆனால் தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டி இருந்ததால் கொஞ்ச நாட்கள் அது முடியாது.
          ஒரு பாட்டில் பீர் காலியானது. கோவிந்தசாமி இன்னொரு காப்பி கேட்டான். பன்னீர் என்னை அழைத்துக்கொண்டு இரண்டு மூன்று கடைகளுக்கு அப்பால் சென்றான்.
          ” பன்னீர்.  எதோ அதிர்ச்சியான செய்தி என்றாயே அது என்ன? ” நான் அவனிடம் கேட்டேன்.
          ” அதைச் சொல்லவே இங்கே தனியாக உன்னைக் கூட்டி வந்துள்ளேன். என்றான்.
          ” சரி. சொல். ” என்றேன்
          ” முதலில் நீ மனத்தைத் திடப்படுத்திக்கொள். சொல்கிறேன். ” புதிர் போட்டான்.
          ” சரி. அது  என்னவென்று சொல். ” என்றேன்.
          ” அநேகமாக நீ வந்துள்ள திருமண காரியம் நடக்காது. ” என்றான்.
          ” ஏன்? என்ன ஆனது? ” நான் பதறினேன்.
          ” அவன் அப்படிதான் சொல்கிறான். “
          ” அவன்தானே தங்கையை அழைத்து வரும்படி இருவருக்கும் டிக்கட் அனுப்பினான்? “
          ” அப்போது அவன் திருமணத்துக்கு தயாராக இருந்தான். ஆனால் இப்போது அது முடியாது என்கிறான். “
          ” அவனுக்கு என்ன ஆனது? ஏன் இந்த திடீர் மாற்றம்? “
          ” அதைச் சொல்ல மாட்டேன் என்கிறான்.அனால் இப்போது திருமணம் வேண்டாம் என்கிறான். “
          ” இப்படிச் சொன்னால் எப்படி? நான் இவனை நம்பி என்னுடைய இளைய தங்கைக்கும் திருமணம் முடித்து விட்டேனே? “
          ” உன் நிலை எனக்குப் புரிகிறது. அவனிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் அவன் அப்படித்தானே கூறுகிறான்.உனக்குத்தான் அவனைப் பற்றி தெரியுமே. கொஞ்சம் மர்மமானவன். சிலவற்றை வெளியில் சொல்லமாட்டான். காரணத்தை என்னிடமும் அவன் சொல்லவில்லை. “
          ” இப்படி தங்கையை அழைத்து வரச் சொல்லி விட்டு இப்போது வேண்டாம் என்று சொன்னால் எப்படி? இது அவனுக்குத் தெரியாதா? ” நான் ஆவேசமானேன்.
          ” நீ கோபப்படுவது நியாயம்தான். அனால் இப்போது இதை பிரச்னை ஆக்கிவிடாதே. இதனால் உன் தேர்வு கெடாமல் நீ மனதை திடப்படுத்திக்கொள். முதலில் தேர்வு எழுது. பின்பு இது பற்றி பேசி ஒரு முடிவுக்கு வருவோம். ” அவன் சமாதானப் படுத்தினான்.
          அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறி நின்றேன்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationசமையலும் பெண்களும்கண்ணகி தேசம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *