அழகர்சாமி சக்திவேல்
திரைப்பட விமர்சனம் –
இந்தப்படம் பார்க்கும்போது, 2005 ஆம் ஆண்டில், நான் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அமெரிக்காவின் கறுப்பர் நகரமான டெட்ராய்ட்டில், முப்பது மாடிகளுக்கும் மேல் கொண்ட ஜெனரல் மோட்டோர்ஸ் கட்டிடடத்தின் ஐந்தாவது மாடியில் எனது அலுவலகம் இருந்தது. அன்று எனக்கு சோகமான நாள். நான் அமெரிக்காவில் இருந்து, திண்டுக்கல்லில் இருக்கும், விவசாய அலுவலகத்தில் அதிகாரியாய் இருக்கும், எனது முப்பது வருட உயிர் நண்பருடன் காலையில் தொலைபேசியில் சண்டை போட்டுவிட்டு வேலைக்கு வந்து இருந்தேன். வந்ததில் இருந்தே எனக்கு வேலை ஓடவில்லை. ஜெனரல் மோட்டோர்ஸ் கட்டிடடத்தின், இரண்டாவது மாடியில்தான் அந்த தியேட்டர் இருந்தது. நான் பார்க்க வேண்டிய வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, அந்த தியேட்டருக்கு வந்து எதேச்சையாகப் பார்த்த படம்தான் ‘ப்ரோக் பேக் மௌண்டைன்’. படம் பார்க்கும் போதே நான் பல இடங்களில் கதறிக் கதறி அழுதேன். படம் முடிந்ததோ இல்லையோ நான் தியேட்டர் விட்டு வெளியே வேகமாய் வெளியேறினேன். மேலே என் அலுவலகம் செல்லாமல் அடித்தளத்திற்கு ஓடி கதவைத் திறந்து வெளியே போனேன். வெளியே கனடா நாட்டையும் அமெரிக்கா நாட்டையும் பிரிக்கும் டெட்ராய்ட் ஆறு ஓடிக்கொண்டு இருந்தது. மைனஸ் 17 டிகிரி குளிரில் என் உடம்பு நடுங்க நடுங்க ஆற்றின் விளம்பில் போய் நின்றுகொண்டேன். ஆற்றின் அந்தப்புறம் இருந்த கனடா நாடு என் முன்னே தெரிந்தாலும் என் மனம் முழுதும் திண்டுக்கல் வந்து வந்து போனது. படத்தில் பார்த்த ஒவ்வொரு காட்சியையும் என் திண்டுக்கல் வாழ்க்கையும் பொருத்திப் பொருத்திப் பார்த்து நான் ரொம்ப நேரம் அழுதுகொண்டே இருந்தேன். ப்ரோக் பேக் மௌண்டைன் என்ற அந்தப் படத்தின் பிரமிப்பில் இருந்து நான் விடுபட ரொம்ப காலம் ஆயிற்று. உண்மையைச்சொன்னால், என் வாழ்க்கையில் நான் யார் என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவிய படம்தான் ப்ரோக் பேக் மௌண்டைன். சரி இனி படத்திற்கு வருவோம்.
ப்ரோக் பேக் மௌண்டைன் ஒன்றிரண்டு உலக விருதுகளைக் குவிக்கவில்லை. மாறாய் கிட்டத்தட்ட 71 உலக விருதுகளை வென்றுள்ளது. மேலும் 53 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதை “கிராஸ்” என்ற இன்னொரு படத்திடம் போட்டியிட்டு இழந்தபோதும், இன்று வரை “ஆஸ்கார் விருது ப்ரோக் பேக் மௌண்டைன் படத்திற்கே கொடுத்து இருக்கவேண்டும்” என்று வாதிடுவோர் பலர் உண்டு. இந்தப் படத்தின் இயக்குனர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர் ஆகும். ஆங் லீ என்ற அந்த இயக்குனர் இந்த படத்திற்கு முன்னரே கிரௌச்சிங் டைகர், ஹிட்டன் ட்ராகன் போன்ற பல வெற்றிப்படங்களைக் கொடுத்த போதும், ப்ரோக் பேக் மௌண்டைன் படமே ஆங் லீக்கு உலக அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது என்பது வெள்ளிடை மலை ஆகும். ப்ரோக் பேக் மௌண்டைன் படம், 1997 ஆம் ஆண்டு, திருமதி ஆன்னி பிரவ்ல் என்பவரால் எழுதப்பட்ட ஒரு பிரபல சிறுகதையை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்பட்ட படம்.. இரண்டு ஆண்களுக்கு இடையே உள்ள காதல் நுண்ணுணர்வை எழுதியவர் ஒரு பெண்மணி என்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் அல்லவா?. படத்தில் இரண்டு கதாநாயகன்கள் இரண்டு கதாநாயகிகள் என்று சொன்னால் அது ஒரு மேலோட்டமான விமர்சனமாகவே அமையும். மாறாய்ப் படத்தில், ஒரு ஜோடி காதல் கதாநாயகன்கள் என்று மட்டும் சொன்னால் அது மிகை ஆகாது. ஏனெனில், படத்தில் பல இடங்களில், ஆண்-பெண் உடலுறவுகள் காட்டப்பட்டபோதும், படம் முழுதும் நிகழும் ஆண்-ஆண் உறவுகளே படத்தை ஒரு குறிப்பட்ட உயரத்துக்கு மேல் தூக்கி நிறுத்துகிறது என்பது உண்மை ஆகும்.
படத்தின் ஒரு காதல் கதாநாயகன் ஹீத் லெட்கர். இவர் ‘டார்க் நைட்’ என்ற பிரபல படத்தில் வில்லனாய் நடித்து பின்னர் துரதிர்ஷ்டவசமாக இறந்து போன ஆஸ்திரேலிய நடிகர் ஆகும். ஹீத் லெட்கரின் ஜோடியாய் வரும் இன்னொரு ஆண் கதாநாயகன் ஜேக்கப் பெஞ்சமின் பிறக்கும்போதே ஒரு திரைப்பட குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு பிரபல இயக்குனர். தாய் ஒரு பிரபல வசனகர்த்தா. எனவே இவர் நடிப்பு பற்றி சொல்ல வேண்டியது நிறைய இல்லை. படத்தில் இரு நாயகிகள் இருந்தபோதும், நாயகன்களின் ஓரினக்காதலே படம் முழுதும் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்றே சொல்லவேண்டும். இன்னொரு கதாபாத்திரம் குறித்தும் இங்கும் சொல்லித்தான் ஆக வேண்டும். அந்தக் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கும் அழகிய வயோமிங் மலை ஆகும். ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் இந்த மலை எவ்வளவு அழகாக ஜொலிக்கிறது! பிரமாதம் போங்கள். படத்தின் பல இடங்களில் கனடா நாட்டு மலைகள் வயாமிங் மலையின் பிற இடங்களாகக் காட்டப்பட்ட போதும், இரண்டு ஆண் காதலர்களும் இந்த மலையின் முன்னால்தான் தங்கள் ஓரினக் காதல் உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.
ப்ரோக் பேக் மௌண்டைன் என்ற வார்த்தைக்கு கொச்சையான தமிழில் மொழி பெயர்த்தால் ‘குண்டியடி மலை’ என்று மொழி பெயர்க்கலாம். சரியாய்ச் சொன்னால், ப்ரோக் பேக் மௌண்டைன் என்ற இந்தப்படத்தின் கதைத்தலைப்பின் அர்த்தம் இரண்டு விசயங்களைச் சொல்கிறது. ஒன்று பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டாலும், கடைசி வரை தங்கள் ஓரினக் காதலையே நினைத்துக் கொண்டு, அந்த வயாமிங் மலைக்கு முன்னர் வந்து அவ்வப்போது அவர்கள் இருவரும் நடத்தும் ஓரின உறவு. இன்னொன்று “இயற்கையான தங்கள் ஓரின உணர்வு அங்கீகரிக்கப்படவில்லையே” என்ற வேதனையில் அவர்கள் இருவரும் அதே வயாமிங் மலை முன்னர் கொட்டித் தீர்க்கும் உள்ளக் குமுறல்கள். இவை இரண்டும்தான் படத்தின் ஆணிவேர்.
கதை இதுதான். என்னிஸ் மற்றும் ஜேக் இருவரும் ஆட்டிடையர்கள். வயாமிங் மலையில் இருக்கும் ஒரு பண்ணையில் ஆடு மேய்க்கும் வேலையில் இருவரும் சேர்கிறார்கள். மலையிலேயே தங்கி, குதிரையில் அமர்ந்துகொண்டே ஆடு மேய்க்கவேண்டும். என்னிஸ் மற்றும் ஜேக் இருவருக்கும் ஓரின உறவு பிடித்து இருக்கிறது. ஜேக் கொஞ்சம் வெளிப்படையாய்ப் பேசுபவன். ஆனால் என்னிஸ் அப்படி இல்லை. சின்ன வயதில், ஓரின உறவு செய்து மாட்டிக்கொண்டு, கடுமையாய்க் கொல்லப்பட்ட இரண்டு ஆண்களின் பிணங்களை தனது அப்பாவின் மூலம் பார்த்ததால், ஓரின உறவு குறித்து பயம் கொண்டவன். கடுமையாய்க் குளிரும் ஒரு நள்ளிரவில் எதேச்சையாய்ப் பேசுகையில், என்னிஸுக்கு ஓரின உறவு பிடிக்கும் என்பதை ஜேக் கண்டு கொள்கிறான். அன்று இரவு இருவரும் கூடாரத்துக்குள் உறங்குகையில், ஜேக் ஓரின உறவை ஆரம்பிக்கிறான். என்னிஸ் முதலில் தயங்கினாலும் பின் உடன்படுகிறான். அந்த இரவு நன்றாய்க் கழிந்தாலும், அதே இரவில் ஆட்டு மந்தைக்கு வரும் ஓநாய் ஒன்று, ஒரு ஆட்டைக் கடித்துத் தின்று தோலை மட்டும் வீசி விட்டுப்போகிறது. காலையில் எழுந்து பார்க்கும் காதலர்கள் இருவரும் சோகம் அடைகிறார்கள். பயந்து போகும் என்னிஸ், “ஓரின உறவு இந்த ஒரு முறைதான்” என்று ஜேக்கிடம் சொல்ல பிரச்சினை இருவருக்கும் இடையே முற்றுகிறது. சண்டையில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி இருவரின் சட்டையையும் நனைக்கிறது. இருவரும் பிரிந்து தங்கள் இல்லம் செல்கிறார்கள்.
இருவருமே கல்யாணம்’ செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் பிள்ளை பிறக்கிறது. காலம் செல்கிறது. என்னிசை மறக்க முடியாத ஜேக், சில வருடங்களுக்குப்பின், மறுபடியும் ஒரு நாள் என்னிசைப் பார்க்க வருகிறான். இருவரும் முத்தமழை பொழிந்து கொள்கிறார்கள். அந்தக் காட்சியை என்னிசின் மனைவி பார்த்து விடுகிறாள். விவகாரம் முற்றி என்னிசை அவன் மனைவி விவாகரத்து செய்கிறாள். அத்தனை இக்கட்டான சூழ்நிலைகளிலும், என்னிஸ், ஜேக் இருவரும் வயாமிங் மலைக்கு அவ்வப்போது சென்று ஓரின உறவு செய்கிறார்கள். ஜேக் “நாம் இருவரும் ஒன்றாய் வாழ்வோம்” என்று என்னிசிடம் மன்றாடுகிறான். பயப்படும் என்னிசோ “சமூகம் அதை விரும்பாது” என மறுக்கிறான். ஒருவருக்கொருவர் அந்த மலையின் முன்னால் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டிக் குமுறுகிறார்கள். பிரியும் என்னிஸ், மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணோடு வாழ ஆசைப்படுகிறான். ஆனால், ஜேக்கின் நினைவுகளில் தடுமாறும் என்னிசொடு அந்தப்பெண்ணால் வாழ முடியாமல் போகிறது. பிரிந்து போன ஜேக்கோ மெக்ஸிகோ நாடு சென்று ஆண் விபச்சாரிகளை நாடுகிறான். ஆனால் அவன் மனம் அப்போதும் என்னிசையே நினைக்கிறது.
கொஞ்சநாள் கழித்து என்னிசுக்கு ஜேக்கின் மனைவியிடம் இருந்து ஒரு போன் வருகிறது. ஜேக் ஒரு விபத்தில் இறந்து விட்டதாக ஜேக்கின் மனைவி சொல்கையில், அவள் சொல்வதை என்னிஸ் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. மாறாய் “சிலர் ஜேக்கின் ஓரின உறவைக் கண்டுபிடித்து அவனைக் கல்லால் அடித்துக் கொன்று இருக்கவேண்டும்” என்று நினைத்து என்னிசின் மனம் பதைபதைக்கிறது. “என் கணவர் சாகும்போது தனது அஸ்தி சாம்பலை, ப்ரோக் பேக் மௌண்டைன் என்ற மலையில்தான் கரைக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்..ஆனால் ப்ரோக் பேக் மௌண்டைன் என்ற அந்த மலை எங்கு இருக்கிறது என்று தெரியாது” என்று ஜேக்கின் மனைவி சொல்ல என்னிஸ் அவளுக்கு உதவ முன்வருகிறான். ஜேக்கின் அஸ்தி சாம்பல், ஜேக் பிறந்த ஊரில், அவன் தந்தை தாய் இடத்தில் இருக்கிறது. எனவே என்னிஸ் ஜேக்கின் பிறந்த இடம் போகிறான். ஜேக்கின் தந்தை ஆஸ்தியைத் தர மறுக்கிறார். தாயோ, ஜேக்கின் படுக்கை அறையை ஒரு முறைப் பார்த்துவர என்னிசை அனுமதிக்கிறாள். உள்ளே செல்லும் என்னிஸ், ஜேக்கின் அலமாரியைத் திறக்கிறான். உள்ளே, ரத்தக்கறை படிந்த இரண்டு சட்டைகள், பக்கத்தில் பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. ரத்தக்கறை படிந்த அந்த இரண்டு சட்டைகளில் ஒன்று ஜேக்கினுடையது. இன்னொன்று என்னிசினுடையது. அந்த வயாமிங் மலையில் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்ட போது இருவரும் போட்டு இருந்த சட்டைகள் என்பது என்னிசின் நினைவில் வருகிறது. என்னிஸ் அழுகிறான். ஜேக்கின் வீட்டை விட்டுத் திரும்புகையில், அந்த இரு சட்டைகளோடு என்னிஸ் தனது வீடு திரும்புகிறான். ஒரு நாள், என்னிசின் மகள் “தனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருப்பதாக” அப்பாவிடம் பேசுகிறாள். ஒரு பொறுப்புள்ள தகப்பனாக தனது மகளிடம் பேசி மகிழ்கிறான் என்னிஸ். மகள் போன பிறகு வீட்டின் உள்ளே வரும் என்னிசுக்கு, அந்த இரு சட்டைகள் கண்ணில் படுகிறது. என்னிசின் கண்களில் கண்ணீர் வழிவதொடு படம் முடிகிறது.
இன்று தமிழகத்திலும் சரி, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சரி..என்னிஸ் மற்றும் ஜேக் போல வாழும் எண்ணற்ற ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து தங்கள் உடலையும் மனத்தையும் கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் கண்ணீரும் படத்தின் இந்த இரு அபலைகளின் கண்ணீரும் ஒரே உப்பைத்தான் கொண்டு இருக்கிறது என்பது திண்ணம்.
அழகர்சாமி சக்திவேல்.
- தங்கப்பா: தனிமைப்பயணி
- பாவண்ணனைப் பாராட்டுவோம்
- கருங்குயிலே !
- மணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை
- அந்த நாளை எதிர்நோக்கி
- சொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்
- மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும்
- ஒரே ஒரு ஊரிலே………
- திக்குத் தெரியாத காட்டில்…..
- நானொரு முட்டாளுங்க…..
- தொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி
- மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்
- நீ பெருசா ஆனதும்…..
- விண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்