நீ பெருசா ஆனதும்…..

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 13 of 15 in the series 3 ஜூன் 2018

ப. செந்தில்முருகன்

 

டது கையால் முடியை வாரிச் சுருட்டி வலது கையால் மூணு சுத்துச் சுத்தி இழுத்துச் சொருகியபடி ஒரு கொண்டை போட்டுக்கொண்டாள்.

“ஏண்டா இன்னும் எழுந்திரிக்கிலியா? மணி எட்டாச்சி… இன்னும் தூங்குற… பள்ளிக்கூடம் போக வேணாம்? எழுந்திரு. அடப்பாவி சனியனே… இன்னைக்கும் சமக்காலத்துல மூத்திரம் போயிட்டியா? கழுத வயசாவது. இன்னும் மூத்தரம் போறத நிறுத்தல. ஒனக்குச் சமக்காலம் தொவைச்சி தொவைச்சே என் ஜென்மம் போயிடும் போல. எல்லாம் அந்தக் கெழவி கொடுத்த செல்லம். அவ போயிட்டா. நாயில்ல கெடந்து கஷ்டப்படறேன்.”

“எந்திரிடா.”

“அம்மா இன்னிக்கி எல்லாரும் டூருக்குப் போறாங்க. அதனாலெ எனக்குப் பள்ளியோடம் லீவு. டூருக்குப் போவாதவங்களுக்கெல்லாம் பள்ளியோடம் லீவு.”

“சரி… இந்தச் சமுக்காலத்த நனைச்சிப் போடு. நான் கந்தன் அண்ணங் கொல்லியில கள வெட்டிட்டு, அப்படியே சுள்ளி பொறுக்கப் போறேன். நாளைக்குக் கெழவிக்குத் தெவசம். நீ எந்திரிச்சி குளிச்சிட்டு வூட்லயே இரு. வூட்ட தெறந்து போட்டுட்டு எங்காவது மட்ட அடிக்கப் போன வந்து தொடப்பக் கட்ட பிய்ய அடிப்பேன் தெரியுமில்ல…”

“தெரியும் தெரியும். டைம் என்னாச்சு பிளீஸ்…”

“இவரு பெர்ரிய இங்கிலீசு தொர. மூத்தரக்குண்டி… கருங்கட்ட எந்திரிடா. இவரு வேற பழைய சோறு தின்ன மாட்டாரு. ஏய்… அஞ்சு ரூவா டப்பா மேல வச்சிருக்கேன். போயி இட்லி வாங்கித் தின்னு. வரட்டா… வூட்ட பாத்துக்கோ. சொன்னத செய்.”

“ஓகே… ஓகே…”

“தொடப்பக்கட்ட… தொடப்பக்கட்ட… எந்திரிடா தொடப்பக்கட்ட.”

 

ஒரே டென்சன். மணி வேற ஆயிடுச்சி. ஆயாக்கு வேற பசிக்கும். சரி… இட்லி வாங்குவோம்.

“அக்கா… அக்கா… இட்லி குடு ஒரு ரூபாக்கு.”

“வந்துட்டாரு ஒர்ரூவாவ தூக்கினு. வொன் ஆத்தாதான் காசு தர்றாயில்ல. வாங்கித் தின்ன வேண்டியதுதான.”

“இல்லக்கா… பசிக்கல.”

“சரி… கிண்ணத்த குடு. இன்னாடா கட்டையா இன்னைக்கும் மூத்திர டவுசர கயிட்டலயா?”

“இல்லக்கா மணியாயிடிச்சி. ஆயாவுக்குப் பசிக்கும் அதான்….”

“போப்போ கெழவிக்கு இட்லி குடுத்துட்டு வா”

“அக்கா… மீனா இருக்கா?”

“இருக்கு. எலே… மீனா… உன் பிரண்டு வந்துருக்காரு. மூத்தர டவுசரு வந்துருக்காரு வாடி.”

“மீனா… பத்து மணிக்கு வரேன். கடைக்குப் போலாமா?”

“சரிடா”

 

கட்டையன் வீடு வந்து கா… கா… க்கா…என்ற மூன்றாவது குரலுக்குக் கருப்புக் காக்கா ஒன்று இட்லியைக் கொத்திக் கொண்டு இருந்தது. ஆயாவுக்கு இட்லி வச்ச சந்தோஷத்துல தோட்டத்திற்கு ஓடினான் கட்டையன்

.

கட்டையன் கட்ட பேட்ட எடுத்துக்கிட்டுப் போனானா எல்லாப் பந்தும் சிக்ஸர்தான். பெரிய பசங்கக் கூடக் கூடப் போர்  அடிப்பான். அவன் ராசியான பேட்டு. அவங்க ஆயா செஞ்சிக் குடுத்தது. இப்ப அந்தப் பேட்டும் அவன் ஆயா புகைப்படமும் மட்டுமே அவனிடம் இருக்கிறது.

போன வருஷம் இதே நாளுளதான் அந்தக் கெழவி செத்துப்போயிடுச்சி. எவ்வளவோ போராடி டூருக்குப் பணம் வாங்கிக்கிட்டு ஆயா ஒனக்கு என்ன வேணும்னு கேட்டதுக்கு “நீ பெருசா ஆனதும் எனக்கு வொருமுத்து மாலையும் நீயும் நானும் ஒரு போட்டோ எடுத்துக்கிணும்னு சொல்லிச்சி கெழவி. எப்போதும் போல் இட்லி வாங்கிக்கிட்டு ஆயா… ஆயான்னு ஓடனவன் அவங்க ஆயாவ பொணமாத்தான் பாத்தான். அந்த ஊரே அவன் அழுதத பாத்துட்டு பெருசு முதல் சிறுசு வரை கண் துடைக்காத ஆளே இல்ல. அப்படி அழுதான் கட்டையன். ஆயாவ சாப்பட வானு சொன்னவன் அழுது அழுதே கண்வீங்கிப் போச்சி. போட்டோ புடிக்க வந்தவன்கிட்ட பொணத்த கட்டிப்புடிச்சிக்கிட்ட, “என்னயும் எங்க ஆயாவையும் போட்டோ எடுங்க”ன்னு கத்தினதுல ஊரே கலங்கிடுச்சி. தன்னோட பதினோராவது வயசுல ரெண்டாவது மொறையா காடா துணியோட கொல்லிச்சட்டி தூக்குறான் இந்தக் கட்டையன். ஏற்கனவே ஆறு மாசக் கொழந்தையா கொல்லிச்சட்டிய தொட்டுக்குடுத்தான் அப்பனுக்கு. அவன் ஆயாலுக்காக ஒட்டு மொத்த கண்ணீரையும் கொட்டித் தீர்த்தான் கட்டையன். இந்தக் காடா துணியோட ஆயாவுக்கு இட்லி வச்சவன் இன்னும் வச்சிக்கிட்டே இருக்கான்.

அந்த டூர் காசயும் சேர்த்து மொத்தமா எழுநூத்தம்பது சேத்துட்டான்.

 

கட்டையன் தோட்டத்ல இருந்த பேட்ட எடுத்து டஸ்யூம் டிஸ்யூம்னு ப்போர் சிக்ஸ். மொதல்ல சமுக்காலத்த தொவிக்கணும். அப்பறம் மாலை வாங்கக் கடைக்குப் போவணும்.

சமுக்காலம் சமுக்காலம் மூத்தர சமுக்காலம்

தொவிக்கோணும் தொவிக்கோணும் சீக்கிரம் தொவிக்கோணும்.

இந்தக் கட்டையன்தான் தொவிக்கோணும்.

 

எப்பா…. என்னா நாத்தம்? இன்னைக்குக் கொஞ்சம் மூத்தரம் அதிகம் உட்டுட்டோமோ… இனிமே மூத்தரமே உடக்கூடாது. சமுக்காலத்த தொவிச்சாச்சி. குளிச்சிட்டுச் சீக்கிரமா போவணும். உண்டியல் காசு எல்லாத்தயும் சேர்த்து எழுநூத்தம்பது கெடச்சிடுச்சி. முத்துமால வாங்கணும்.

“மீனா போலாமா?”

“வரண்டா… இரு.”

“மீனா… ஒங்கிட்ட சொன்னமாரி எழுநூத்தம்பது சேர்ந்திடுச்சி. இன்னிக்கு சேட்டுக் கடையில முத்து மால வாங்கிடணும். நாளைக்கு ஆயாவுக்குச் தெவசம். எப்படியும் வச்சி படைச்சிடணும்.”

“சரி… வாடா போவலாம்.”

 

“சேட்டண்ணா”..

“என்னடா இன்னைக்கும் வந்திட்டீயா. முத்துமால அப்படியேத்தான் இருக்கு போயிட்டு வா. அப்பறம்…”

“இல்லண்ணே… நான் வாங்க வந்திருக்கேன்.”

“அப்படியா!”

“காசு இருக்குண்ணே. இந்தா எழுநூத்தம்பது.”

“டேய்… இப்ப மால எழுநூத்தம்பது இல்லடா… எட்னூறு. போய் அம்பது ரூவா எடுத்துக்கினு வா”

“என்னண்ணா நீங்கதானே எழுநூத்தம்பது சொன்னீங்க?”

“வெல ஏறிடுச்சிடா போய்ட்டு வா…”

“அண்ணா… அம்பது ரூவா அப்புறம் தரட்டுமாண்ணே?”

“டேய்… போடா… வேணும்னா பத்துரூவா கொறச்சிக் குடு வாங்கிக்கிறேன்.”

“சரிண்ணா இதோ வர்றேன்.”

“மீனா… என்ன பண்றது? ஐடியா வா போலாம்.”

“கட்டையா என்ன ஐடியாடா?”

“நோ டென்ஷன். ஐடியா பண்றான் இந்தக் கட்டையன். வெயிட் பண்ணு.”

“மீனா… ஒரு ஐடியா… என் பேட்ட விக்கப் போறேன்.”

“டேய் அது பேட்டா…டா… போடா லூசு”

“ஏய் மீனா, பேட்ட பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது. அது எம்ஆர்எஃப் பேட்டு. வரன் இரு”

“டேய் வாங்கடா. என் பேட்டு யாருக்கு வேணும்? விக்கப்போறேன். பவர் பேட்டு.”

“டேய் எனக்குக் குடுறா…”

“காசு குடு”

“ஏய்… எங்கிட்ட பதினைஞ்சு ரூவாதான் இருக்கு கட்டையா”

“சரி… குடுறா”

“மீனா, பேட்ட வித்துட்டேன்”

“பதினைஞ்சு ரூவா போதுமா? மீதி காசுக்கு என்ன பண்றது?”

“ஐடியா மீனா. யாருக்கிட்டயும் சொல்லாத. நான் பரிட்சைக்கு எல்லாத்தையும் கரைச்சிக் குடிச்சிட்டேன். பேசாம புஸ்தகத்த வித்திடலாமா?  நீயும் புஸ்தகத்த குடு. வித்திடலாம்.”

“யப்பா.. எங்கம்மா அடிப்பாங்க. வேணுன்னா தமிழ்புக்கு இங்கிலீஷ் புக்கு தறன். அதான் பரிச்ச முடிஞ்சிருக்கு.”

“ஓகே குடு”

“ஏண்ணே… இந்தப் புஸ்தகத்துக்கு எவ்வளவு கெடைக்கும்?”

பேப்பர் கடைக்காரர் : “பதினைஞ்சு ரூபா தர்றேன்.”

“அண்ணே பாத்துக்குடுண்ணே.”

“சரி பதினெட்டு ரூபா தர்றேன்.”

“சரி… குடுண்ணே”

“பதினைஞ்சும் பதினெட்டும் எவ்வளவு மீனா?”

“பதினைஞ்சும் பதினெட்டும் முப்பத்தி மூணு ரூவா”

“சரி… வா. கடைக்குப் போலாம். இட்லி காசு நாலு ரூவா இருக்கு. அப்ப முப்பத்தி ஏழு ரூவா இருக்கு. வா… மீனா, கடன் சொல்லலாம்.”

“எங்கிட்ட ரெண்டு ரூவா இருக்கடா”

“அப்ப ஒர்ரூவாதான் கடனா?”

“அண்ணே… ஒர்ரூவா அப்பறம் தர்றண்ணே. மால குடுண்ணே”

“சரிடா பத்தரமா எடுத்துக்கினு போ”

“ஆய்! முத்துமால… ஆயாவுக்கு வாங்கிட்டேன்.”

 

சந்தோஷத்தில் வீடு வந்தவனுக்கு வாசலில் காத்திருந்தாள் கட்டையன் அம்மா.

“வாடா சனியனே… வூட்ட தெறந்து போடதன்னு சொன்னல்ல… நாய் வந்து ஆக்கி வச்ச சோத்தெல்லாம் தின்னுட்டுப் போயிடுச்சி. தொடப்பக்கட்ட நாயே… எங்கடா போன?” என்று பிரம்பு பிய்யும் வரை கட்டையனை அடித்தாள் அவன் அம்மா.

பாக்கெட்டில் இருந்த முத்துமாலையைத் தொட்டுப் பார்த்தபடி மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான் கட்டையன்.

“சனியனே… ஏண்டா இப்படி பண்றேன்”னு கண்ணைத் தொடைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம், “அம்மா எனக்கு வலிக்கல. நீ அழுவாத” எனக் கண்ணைத் துடைத்தபடி பாக்கெட்டிலிருந்த முத்துமாலையை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.

“என்னடா…  இது ஏது? ”

“அம்மா… காசு சேத்து ஆயாவுக்கு வாங்கினம்மா. நாளக்கி ஆயாவுக்குத் தெவசமில்ல. அதாம்மா….”

கட்டையனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி அம்மாவும் மகனுமாய் ஆயா போட்டோவுக்கு மாலையைப் போட்டனர்.

எப்போதும்போல் விடிந்ததும் அவன் மூத்திர டவுசரைத் தொவித்துக்கொண்டிருந்தாள் அவனுடைய அம்மா.

ஆயா காக்காவுக்கு இட்லியுடன் ஆயாவின் கழுத்திலிருந்த முத்துமாலையைப் பார்த்துக்கொண்டே இருந்தான் கட்டையன்.

ஒரு சொட்டுக் கண்ணீரும் அவனும் அவன் ஆயா போட்டோவும்….

 

Series Navigationமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்விண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது
author

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    சாதாரணமான ஆனால் மனத்தை உருக்கும் கதை. கட்டையன் மிகவும் போற்றிப் பொதிந்து வைத்திருக்கும் பேட்டையும் விற்கிறன் எனில் அவன் அவனது ஆயாவின் மீது வைத்துள்ள பற்று எவ்வளவு என்பது தெரிகிறது. கதை மீண்டும் யதார்த்தத்திற்கு வந்து திறந்து கிடந்த வீட்டினுள் நாய் நுழைந்து சோற்றைத்தின்று விட அம்மாவிடம் கட்டையன் அடி வாங்குகிறான். அம்மாவிற்குப் பிறகுதான் தெரிகிறது அவன் எங்கு எதற்குப் போனான் என்று. கட்டையனுடன் சேர்ந்து நாமும் அழுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *