தொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு

This entry is part 4 of 7 in the series 17 ஜூன் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

226. இது கடவுளின் அழைப்பு

ஆலயம் நிறைந்திருந்தது. அனைத்து இருக்கைகளிலும் சபையோர் அமர்ந்திருந்தனர். பலர் உள்ளே இடம் இல்லாத காரணத்தால் வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். சாதாரண ஞாயிறு காலை ஆராதனைகளின்போதே ஆலயம் நிரம்பிவிடும். தேர்தல் என்பதால் வாக்களிக்க சபை உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். நாங்கள் அனைவரின் வீடு தேடிச் சென்று அவர்களை வாக்களிக்க வரச் சொல்லியிருந்தோம்.
பணி காரணமாக ஆலயத்துக்கு வரமுடியாதவர்கள்கூட அன்று அங்கு காணப்பட்டனர். ஆலயத் தேர்தலில் நிச்சயமாக புது வகையில் விழிப்புணர்வு உண்டானது தெரிந்தது. முன்பெல்லாம் தேர்தலின்போது கூட இத்தகைய கூடடம் கிடையாது என்று பால்ராஜ் தெரிவித்தார். எங்களுடைய அரசியல் பிரவேசம் நிச்சயம் ஒருவித புத்துணர்வை உண்டுபண்ணியுள்ளது. வழக்கமாக பல தடவைகள் வெற்றி பெற்று ஆலயத்தை நிர்வகித்துவந்த பழம் புள்ளிகள் இந்த முறை மாற்றப்படுவது நிச்சயம் என்பது தெரிந்தது.
வழக்கமான ஆராதனையை முடித்தார் மறைத்திரு எரிக்தாஸ். அவர் சபைகுருவாக வந்து சில மாதங்கள் ஆகின்றன. எனக்கு அதிகம் பழக்கம் இல்லாதவர். என்னை ஒரு மருத்துவனாக மட்டும் அறிவார். என்னுடைய அரசியல் ஆர்வம் பற்றி அவருக்குத் தெரியாது.
ஒரு சிறு இடைவேளை.அப்போது ஆலயத்தின் வெளியில் சபை மக்களுக்கு வடையும் காப்பியும் வழங்கப்பட்டது. அதன் பின்பு அனைவரும் மீண்டும் ஆலயத்தினுள் இருக்கைகளில் அமர்ந்தோம்.
ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. மறைதிரு எரிக்தாஸ் கூடடம் கூடியுள்ளதின் நோக்கம் பற்றி விளக்கினார். தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்பதயும் கூறினார். தேர்தல் இரகசியமானது என்றார். எழுதத் தெரியாதவர்களுக்கு அவர் எழுதித் தருவதாகக் கூறினார். விழி இழந்தோருக்கு அது உதவும். அவர்கள் பெயர்களைச் சொல்ல வேண்டும்.. அவர் எழுதித் தருவார். அதை ஒரு உதவியாளருடன் வாக்குப் பெட்டியில் போட்டு விடுவார். இதில் வெற்றி பெறுவோர் ஆலயத்தை 1977 முதல் 1980 வரையிலான மூன்று வருடங்கள் நிர்வாகம் செய்வார்கள் என்று கூறினார். அதைத் தொடர்ந்து வாக்களிக்கத் தகுதியானவர்களின் பட்டியல் வாசிக்கப்பட்ட்து.அதை வாசித்தவர் அப்போதைய ஆலயச் செயலாளர் ஜான் ரத்தினம். அப்போது வருகை தந்தவர் கையை உயர்த்தி தங்களின் வருகையை தெரிவித்தனர். அதன் பின்பு மொத்தம் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பதை அவர் தெரிவித்தார். ஆலய சபைச் சங்கத்துக்கு அதிக வாக்குகள் பெறும் ஒன்பது பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சபைகுரு அறிவித்தார். அதோடு மறைமாவட்டத்துக்கு மூன்று பெயர்களையும் சினோடு தொடர்புக் கூட்டத்துக்கு இருவரின் பெயர்களையும் எழுதவேண்டும் என்றும் தெரிவித்தார். வாக்குகளை எண்ணி அறிவிக்க மூன்று தேர்தல் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வாக்களிப்பு தொடங்கியது. ஜான் ரத்தினம் ஒவ்வொரு பெயராக வாசித்தார். பெயர் அழைக்கப்படடவர் வந்து சபைகுருவிடம் வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மறைவான இடத்தில் அதில் ஒன்பது பெயர்களை எழுதி வாக்கு பெட்டியினுள் போடவேண்டும்.அந்த ஒன்பது பெயர்களை நாங்கள் முன்பே அச்சடித்து தந்துள்ளதால் அதைப் பார்த்து எழுதினார்கள். எதிர் அணியினரும் அது போன்று வேறு பெயர்களை கொண்ட சீட்டை தயார் செய்து தந்திருந்தனர். அவர்களுக்கு வாக்களிக்க விரும்பியவர்கள் அதைப் பார்த்து அந்த ஒன்பது பெயர்களை எழுதினார்கள். சுமார் ஒரு மணி நேரத்தில் வாக்களிப்பு முடிந்து விட்ட்து. பெட்டியை எடுத்துக்கொண்டு தேர்தல் அதிகாரிகள் தனி அறைக்குள் சென்று வாக்குகளை எண்ணினார்கள்.
நெஞ்சம் படபடக்க அந்த அரை மணி நேரமும் பொறுமையுடன் நான் காத்திருந்தேன். வெற்றி நிச்சயம் என்ற நிலையிலும் ஒருவிதமான படபடப்பு இருக்கவே செய்தது. இதில் வெற்றி பெற்றால் இன்றுமுதல் நான் ஆலயத்தின் சபைச் சங்க உறுப்பினர் ஆகிவிடுவேன்.அது திருச்சபை அரசியல் நான் வைக்கப்போகும் முதல் படி!
தேர்தல் அதிகாரிகள் வந்தனர். முடிவை சபைகுருவிடம் தந்தனர்.அவர் அதைப் பார்த்தார். நாங்கள் அனைவரும் அவரையே ஆவலுடன் பார்த்தோம். அவர் எழுந்து நின்று முடிவுகளை அறிவித்தார்.அதை ஜான் ரத்தினம் கரும்பலகையில் எழுதினர். அவர் வாசித்த முதல் பெயர் என்னுடையது! அதைத் தொடர்ந்து என்னுடைய குழுவைச் சேர்ந்த மற்ற எட்டு பெயர்களும் வந்தன. நாங்கள் அனைவருமே பலத்த பெரும்பான்மையுடன் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுவிட்டோம்! மறைமாவட்டத்துக்கு ஜான் டேவிட், ஜி.பி. முத்து, நான் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டோம். சினோடு தொடர்புக் கூட்டிடத்துக்கு ஜி. பி. முத்துவும் நானும் தேர்வு செய்யப்பட்டோம். எங்கள் அணி முழுவதுமாக அமோக வெற்றி பெற்றுவிட்டது! பால்ராஜும் கிறிஸ்டோபரும் ஓடி வந்து என் கையைப் பற்றிக் குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன். அவர் என்னை இந்த ஆலயத்தை வழி நடத்த தேர்வு செய்துள்ளது அப்போது எனக்குத் தெரிந்தது. இது கடவுளின் செயல்தான்! அதில் சந்தேகமே இல்லை.
வெற்றி பெற்ற எங்களை பீடத்துக்கு முன்பு வரச் சொல்லி அழைத்தார் சபைகுரு. அங்கு நாங்கள் முழங்கால் இட்டோம். அவர் எங்களுக்காக ஜெபம் செய்து எங்களை சபைச் சங்க உறுப்பினர்களாக பிரதிஷ்டை செய்து வைத்தார்.
வெற்றியில் திளைத்த மகிழ்ச்சியுடன் நாங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறினோம். அங்கு ஒருவர் விடாமல் எங்களுடன் கை குலுக்கி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். அதில் எங்களுக்கு வாக்கு அளிக்காதவர்களும் அடக்கினார்கள்.தலைமை மருத்துவ அதிகாரியும் அவர்களில் அடங்குவார். அது பற்றி நான் கவலை கொள்ளவில்லை. இனிமேல் இன்னும் சிறப்பாக செயல்பட்டு அவர்கள் அனைவரையும் அன்பால் எங்களை பக்கம் இழுக்கவேண்டும் என்று உறுதி பூண்டேன். வெற்றி பெற்ற எங்கள் குழுவினருடன் வீடு திரும்பினேன். அன்றைய மதிய உணவை வீட்டிலேயே வெற்றி விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தேன்.
அன்று மாலை நண்பர்களுடன் காட்டு மேட்டுக்குச் சென்றேன். நான் செயலராக இருப்பது நல்லதா அல்லது பொருளராக இருப்பது நல்லதா என்பதைப் பற்றிச் சிந்தித்தோம். எங்கள் குழுவில் ஜெயராஜ் உள்ளார்.அவர் முதியவர். பழைய சபைத் சங்கத்தின் உறுப்பினர். அவரையே செயலராக்கிவிட்டு நான் பொருளாராக இருப்பது நல்லது என்று முடிவு செய்தொம். அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. ஆரோக்கியநாதர் ஆலயம் சிறிதாக இருந்ததால் மத்திய ஆலோசனைச் சங்கத்தினரின் சம்மதத்தோடும், சுவீடன் சபையின் நிதி உதவியோடும், சபை மக்களின் ஒரு மாத சம்பளப் பண நன்கொடையாலும் ஒரு பெரிய தேவாலயம் மதுரை ரோட்டில் கட் டப்பட்டு வருகிறது. அதன் நிதி நிலையை கண்காணிக்கும் பெரிய பொறுப்பு பொருளருக்கு உள்ளது. அதோடு ஆலயம் கட்டி முடிந்ததும் அதை திறக்கும் வகையில் பெரிய விழா எடுக்கவேண்டியுள்ளது. அதற்கும் நிறைய பொருளாதாரம் தேவை. அதற்கு திருப்பத்தூர் பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்யவும் வேண்டியுள்ளது. அதற்கும் பொருளாளரே பொறுப்பு. இத்தகைய முக்கிய வேலைகள் உள்ளதால் நானே பொருளாளராக இருந்து செயல்படுவது என முடிவு செய்தோம்.
இன்னும் ஒரு வாரத்தில் முதல் சபைச் சங்கக் கூட்டத்தில் செயலாளர், பொருளாளர் தேர்தல்கள் நடந்துவிடும். அப்போது நான் திருப்பத்தூர் ஆரோக்கியநாதர் ஆலயத்தின் பொருளாளர் ஆகிவிடுவேன்! அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஅண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *