அழகர்சாமி சக்திவேல்
120 பீட்ஸ் பெர் மினிட்(120 Beats per Miniute) என்ற இந்த பிரெஞ்ச் படத்தை, என்னுடன் பார்த்துக் கொண்டு இருந்த பலரின் விசும்பல் சத்தங்களை, என்னால், அவ்வப்போது உணர முடிந்தது. நானும் படத்தின் பலகாட்சிகளில் கனத்த இதயத்தோடுதான் உட்கார்ந்துகொண்டு இருந்தேன். ஆனால் அழவில்லை. காரணம், நான் ஏற்கனவே, இது போன்ற பல சோகக்காட்சிகளை நேரில் பார்த்து இருக்கிறேன். Action For Aids என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில், எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் சமூகப்பணி செய்கிறேன். அந்த சமூகப் பணி செய்யும்போது, படத்தில் வரும் வாலிப ஆண்கள் மற்றும் பெண்களைப் போல பலரை நான் பார்த்து இருக்கிறேன். “போன மாதம்தான் நான் முதன் முறையாக ஒரு செக்ஸ் தொழில் செய்யும் பெண்ணிடம் சென்றேன். என் வாழ்நாளில் நான் ஒரே ஒரு முறைதான் உடலுறவு கொண்டு இருக்கிறேன். அதற்குள் எனக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது” என்று கதறி அழும் காட்சிகளை நான் நேரிடையாகப் பலமுறைப் பார்த்து கண்ணீர் சிந்தி இருக்கிறேன். எனவே, எனக்கு, இந்தக்காட்சிகளைப் பார்க்கும் பொது கண்ணீர் வரவில்லை. ஆனாலும், படம் பார்த்த எல்லோரும் சிரித்த, படத்தில் இருக்கும் அந்த நகைச்சுவை காட்சியைப் பார்த்து நான் அழுதேன். அந்தக்காட்சி இதுதான். சுமார் இருபது வயதில் இருக்கும் படத்தின் கதாநாயகன் சன் என்பவன், தனது பதினாறாவது வயதில், அவனது ஆண் கணக்கு வாத்தியாரின் செக்ஸ் ஆசைக்கு இரையாகிறான். மாணவனைக் குண்டியடிக்கும் அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே எய்ட்ஸ் நோய் இருக்கிறது. விவரம் தெரியாத மாணவனாகிய கதாநாயகனும் எய்ட்ஸ் நோய்க்கு, அந்தப் பதினாறு வயதிலேயே பலியாகிறான். மாணவன் சன்னை, எய்ட்ஸ் நோய் இன்னும் வராத நேதன் என்பவன் காதலிக்கிறான். நேதன், சன்னுக்கு ஆறுதலாயும், உடலுறவுத் துணையாகவும் இருக்கிறான். ஒரு கட்டத்தில் சன்னின் எய்ட்ஸ் நோய் முற்றி, சன் படுத்த படுக்கை ஆகிறான். அப்போதும் அவனிடம் முகம் கோணாமல் அவனைப் பராமரிக்கிறான் நேதன். படுக்கையே கதியாய் வாழும் சன்னை குஷிப்படுத்த, நேதன் அவனுக்கு கையடித்து விடுகிறான். சன்னும், நேதனுக்கு கையடித்து விடுகிறான். இருவரும் சிரித்துகொண்டே செய்யும் அந்த கையடிக்கும் காட்சி எனக்கு நகைச்சுவையைக் கொடுக்கவில்லை. மாறாய், நகைச்சுவைக்குப் பின்னால் பொதிந்து கிடக்கும் அந்த சமூக அவலம் என் கண் முன்னால் வந்து என்னை அழவைத்து விட்டது. “ஹோமோசெக்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையே எய்ட்ஸ் நோய்க்குக் காரணம்” என்ற தவறான அறிவியல் கோட்பாட்டை முறியடித்து, “ஒழுக்கமற்றவர்களுக்கு மட்டுமே எய்ட்ஸ் நோய் வரும்,, இது மேற்கத்தியவர் பிரச்சினை” என்ற இன்னொரு கண்மூடித்தனமான சமூகக் கோட்பாட்டையும் முறியடித்து, “பாதுகாப்பற்ற உடல் உறவே எய்ட்ஸ் நோயின் காரணம்..காண்டம் என்ற உறைபோட்ட உடல் உறவால், எய்ட்ஸ் நோய் வராது” என்ற சரியான அறிவியல் கோட்பாட்டை மனித சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல, எத்தனை எத்தனை தன்னார்வ ஊழியர்கள் உழைத்து இருக்கிறார்கள்? எத்தனை எத்தனை ஊடகங்கள் பல வழிகளில், தாங்கள் சொல்லவரும் விஷயத்தை கொண்டு சென்று இருக்கின்றன என்பதினை, 120 பீட்ஸ் பெர் மினிட்(120 Beats per Miniute) என்ற இந்தப்படத்தைப் பார்ப்போர் உணர்ந்து கொள்வர்.
1990-களில், பாரிசில் நடக்கும் கதை இது. ‘எய்ட்ஸால், ஒவ்வொரு நாளும் நாம் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று படித்த ஒரு கூட்டம் உணர்ந்துகொள்கிறது. ‘மனிதன், நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழ, 500க்கும் மேற்பட்ட வெள்ளை அணுக்கள் வேண்டும் என்பதும், ஹெச்ஐவி என்ற அந்த எய்ட்ஸ் வைரஸ், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து, கடைசியில், ஒன்று கூட இல்லாமல் செய்து, உயிரைக் காவு வாங்கிவிடும்’ என்பதும் அந்தக்கூட்டத்திற்கு தெரிந்து இருக்கிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, தங்கள் உடம்பில் 50, 30 என்று குறைவதைப் பார்த்துக்கொண்டே இருக்கும் அந்தக்கூட்டம் அனுதினமும் கதறுகிறது. AZT போன்ற ஹெச்ஐவி நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள் எங்கே கிடைக்கும் என்று தெரியாமல், அந்தக் கூட்டம் தவியாய்த் தவிக்கிறது. சில மருந்துக் கம்பெனிகள், எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, நோயாளிகள் சிலரை, தங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறது. ஆராய்ச்சியில் எய்ட்ஸ் நோயாளிகள் பலர் இறக்கிறார்கள். ஆனாலும் மருந்துக் கம்பெனிகள், தங்கள் ஆராய்ச்சியை, படித்த கூட்டத்திடம் மறைத்து வைத்து, வியாபார நோக்கில் செயல்படுகிறது. பார்க்கும் படித்த கூட்டம் ஆவேசப்படுகிறது. “எய்ட்ஸ் நோய் ஓரினச்சேர்க்கையாளர் போன்ற ஒழுக்கமற்றவர்களுக்கு மட்டும் வருவது” என்ற மெத்தனப்போக்கில் அரசாங்கம், நோய்தடுப்பு நடவடிக்கைகளை மெதுவாய் நகர்த்துகிறது. இந்த சூழ்நிலையில் அந்த படித்த கூட்டம் என்ன செய்யும்? “அமைதி என்ற நாகரிகப்போராட்டம் இனிச் செல்லாது.. கலகமே தங்கள் உயிர்பிழைக்க வழி” எனப் புரிந்து கொண்டு, போராடும் ஒரு படித்த கூட்டத்தின், உண்மைக்கதையே, 120 பீட்ஸ் பெர் மினிட் (120 Beats per Miniute) என்ற இந்தப்படத்தின் கதைக்கரு ஆகும்.
ஹெச்ஐவி என்ற இந்த எய்ட்ஸ் நோய்க்குப் பின்னாலும், ஓர் உலகாளவிய சரித்திரம் இருக்கிறது. எய்ட்ஸ் என்ற ஹெச்ஐவி கிருமி, ஆப்பிரிக்காவின் காங்கோ காடுகளில் இருந்த, சிம்பன்சி குரங்குகளின் மூலம் தோன்றியது என்பது பெரும்பான்மையான அறிவியல் ஆய்வாளர்களின் கணிப்பு ஆகும். எஸ்ஐவி (SIV) என்ற அந்தக் கிருமி கொண்ட குரங்குகளை, காங்கோவில் இருந்த மனிதர்கள் வேட்டையாடியபோது, குரங்குகளின் ரத்தம் மூலம், காங்கோ காட்டுவாசிகளுக்கு இந்த எஸ்ஐவி நோய் பரவியது. 1920-இல், காங்கோவின் தலைநகரமான கின்சாசா நகரம், பொருளாதார ரீதியாக வளரத்தொடங்கியது. அதன் காரணமாய், அதன் ரயில்வே போக்குவரத்தும் வளர ஆரம்பிக்க, காட்டை ஒட்டி வாழ்ந்த மக்கள், காங்கோவின் கின்சாசா நகருக்கு, புலம் பெயர்ந்தார்கள். நகரின் அடர்ந்த மக்கள் தொகைக்கு ஏற்ப, செக்ஸ் தொழிலும் பெருக, எஸ்ஐவி என்ற அந்தக் கிருமி நகரின் மற்ற மனிதர்களுக்கும் பரவி, காசநோய் போன்ற ஒரு பெரும் தொற்றுநோயாய் மாறி, காங்கோவின் பல மனிதர்களைக் கொன்றது. அதே 1920-இல், அமெரிக்காவை ஒட்டி இருக்கும் ஹைட்டி மற்றும் கரீபியன் தீவில் வாழந்த மனிதர்கள், தொழில் நிமித்தம், காங்கோவின் கின்சாசா நகருக்குச் சென்று திரும்பியபோது, கூடவே எஸ்ஐவி நோயையும் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு வந்தார்கள். கரிபியன், ஹைட்டி தீவுகள், அமெரிக்கர்கள் விரும்பும் ஒரு சுற்றுலாத்தலம் ஆகும். எனவே எஸ்ஐவி கிருமி, அமெரிக்காவில் இருந்து, தீவுக்குள் வந்த சுற்றுலாவாசிகள் மூலம், அமெரிக்காவைச் சென்றடைந்தது. 1980-வரை, இந்த நோய், அமெரிக்காவின் மருத்துவக்கண்களுக்குத் தெரியவில்லை. 1981-வில், முதன்முதலில் ஐந்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு, ஒரு புதுவித காய்ச்சல் வந்து இருப்பது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த வருடத்தில், நியூயார்க் டைம்ஸ் என்ற அமெரிக்கப் பத்திரிக்கை, ஒருவித புது நோய் எதிர்ப்புச்சக்திக் குறைவால் 335 பேர் பாதிக்கப்பட்டதையும், அதில் 136 பேர் பரிதாபமாய் இறந்துபோனதையும் செய்தியாக வெளியிட அமெரிக்கா பதற ஆரம்பித்தது. பாதிக்கப்பட்ட அந்த 335 பேரில் பெரும்பான்மையானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட, இந்தப் புது நோய்க்கு, ஆரம்பத்தில் GRID (Gay Related Immuned Deficieny) என்று பெயரிடப்பட்டது. “ஓரினச்சேர்க்கை ஒரு பாவச்செயல்..எனவே கடவுள் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை” என்று கிருத்துவ மற்றும் இஸலாம் மதங்கள் அலற ஆரம்பித்தன. இருப்பினும், ஒரு வருடம் கழித்து, இந்தப் புதுநோய், பெண்களிடமும் கண்டுபிடிக்கப் பட்டபோது, “இது ஓரினச்சேர்க்கை செய்பவர்களை மட்டும் தாக்கும் நோய் அல்ல.. மாறாய், இது ஒரு பொதுவான பாலியல் நோய்” என்று கண்டுகொண்ட, அமெரிக்க மருத்துவம், GRID என்ற ஓரினச்சேர்க்கை நோய் பெயரை மாற்றி, எய்ட்ஸ் என்ற பெயரை இந்தப் புதுநோய்க்கு இட்டது.
இந்தியாவில், எய்ட்ஸ் நோய் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம், தமிழ்நாட்டின் சென்னை ஆகும். சென்னையில் பிறந்து வளர்ந்து டாக்டர் ஆன பேராசிரியர் சுனிதா சாலமனும், அவரது மருத்துவ மாணவியான, டாக்டர் நிர்மலா செல்லப்பனும், சென்னையில் செக்ஸ்தொழில் செய்துவந்த சில பெண்களிடம் எய்ட்ஸ் நோய் இருப்பதை, 1986-இல், முதன்முதலில் கண்டறிந்தனர். அமெரிக்காவில் அல்லது மற்ற வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மூலம், இந்தியாவிற்குள் இந்த நோய் நுழைந்து இருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு ஆகும். 1987-இல், இந்தியாவில் 135 பேர் எய்ட்ஸ் நோய்க்கு பலியானது கண்டுபிடிக்கப்பட்டது. 1992-இல், இந்திய அரசாங்கம், எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுக் கழகத்தைத் தோற்றுவித்தது. உலகத்தின் எய்ட்ஸ் நோயாளிகள் 36 மில்லியன் என்று கணக்கிடப்படுகிறது. அதில் சுமார் 2 மில்லியன் பேர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். உலக எய்ட்ஸ் நோயாளிகளின் அளவில், இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பது வேதனைக்குரிய விஷயம். இருப்பினும், இந்தியா அதன் எய்ட்ஸ் நோய் கொண்ட மக்கள் எண்ணிக்கையை, முன்பு இருந்ததை விட, பாதிக்குப் பாதியாய் குறைத்து இருப்பது பாராட்டத்தக்கது.
120 பீட்ஸ் பேர் மினிட் என்ற இந்தப் படத்தின் கதை, எய்ட்ஸ் நோயை எதிர்த்து போராடிய ACT UP என்ற போராட்டக்குழுவின், உண்மைக்கதையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை ஆகும். Aids Coalition To Unleash Power என்ற இந்த ACT UP போராட்டக்குழு, 1987-இல், அமெரிக்காவில் தோன்றி, பின்னர் உலகம் முழுதும் பரவிய, ஒரு எய்ட்ஸ் போராட்டக்குழு ஆகும். “கலகம் செய்தால்தான் நன்மை பிறக்கும்” என்பது இந்தக்குழுவின் கொள்கை ஆனதால், அரசாங்கத்தையும், கார்ப்பரேட் கம்பெனிகளையும். சின்னச்சின்ன வன்முறை கலந்த போராட்டங்கள் மூலம் எதிர்த்து மக்களிடம், எய்ட்ஸ் விழிப்பை ஏற்படுத்துவது, இந்தக் குழுவின் நோக்கமாகும். இந்த ACT UP குழுவின் ஒரு கிளை, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்தது. அந்தக் குழுவை ஒட்டிய கதையே 120 பீட்ஸ் பெர் மினிட் படத்தின் கதை ஆகும். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில், எண்பதுகளில் பல மருந்துக்கம்பெனிகள் போட்டியிட்டன. அதில் ஒரு மருந்துக்கம்பெனியாக மெல்டன் பார்ம்(Melton Pharm) என்ற கம்பெனி, படத்தில் காட்டப்படுகிறது. மெல்டன் பார்ம் கம்பெனி, எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்தாலும், அதை வர்த்தகரீதியாக வெற்றிபெறச் செய்யவேண்டி, அது சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கையை ரகசியமாக வைத்து இருக்கிறது. ஆனால், நாள்தோறும் இறக்கும் எய்ட்ஸ் நோயாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆக்ட் அப் அதனை எதிர்க்கிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாய், போராட்டக்குழு, மருந்துக் கம்பெனி நடத்தும் ஒரு கருத்தரங்கத்திற்குச் சென்று, மேடையில் பேசும் அறிஞர் ஒருவரைத் தாக்குவதோடு படம் ஆரம்பிக்கிறது. பிறிதொரு நாளில், போராட்டக்குழு, மருந்துக் கம்பெனிக்கே சென்று, கம்பெனியை, போலி ரத்தத்தால் அசிங்கப்படுத்துகிறது. இருப்பினும், போராட்டக்குழுவுக்குள் இருக்கும் உறுப்பினர்களின், பலதரப்பட்ட, வேறுபட்ட சிந்தனைகளாலும், வாதங்களாலும், போராட்டக்குழு அவ்வப்போது, தான் நினைத்ததைச் செய்யமுடியாமல் தடுமாறுகிறது..போராட்டக்குழுவின் ஒரு உறுப்பினர் சன் ஆவான். சன், அவனது கணக்கு ஆசிரியரால் குண்டியடிக்கப்பட்டு, அதன்மூலம் எய்ட்ஸ் நோய்க்கு ஆளானவன். சன்னோடு உடலுறவு கொள்ளும் அவன் நண்பன் நேதனுக்கு, எய்ட்ஸ் நோய் கிடையாது. சன்னுக்கு எய்ட்ஸ் நோய் இருந்தபோதும், அவனை பராமரிப்பதில் சந்தோசம் கொள்ளுகிறான் நண்பன் நேதன். இதற்கிடையில், அப்பாவியான ஜெரிமி என்பவன், எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி இறந்து போகிறான். அவனது கடைசி ஆசையை நிறைவேற்ற, போராட்டக்குழு, பதாகைகள் ஏந்தி, ஊர்வலம் செல்கிறது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று, ஆசிரியர்கள் “இது கலாச்சாரத்திற்கு எதிரானது” என்று எதிர்த்தாலும், மாணவர்களுக்கு ஆணுறைகளை விநியோகிக்கிறது. இப்போது, சன்னின் எய்ட்ஸ் நோய் முற்றுகிறது. நேதன், அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தபோதும், ஒரு நாள் சன் இறந்துபோகிறான். “நான் இறந்த பிறகு, எனது எரித்த உடல் சாம்பலை, பாரிஸ் எங்கும் தூவுங்கள்” என்ற சன்னின் ஆசையை நிறைவேற்ற, போராட்டக்குழு முடிவெடுக்கிறது. நகரில் நடக்கும் ஒரு சுகாதாரக் கருத்தரங்கில், ஏற்பாடு செய்யப்படும் ஒரு விருந்து உணவில், சன்னின் சாம்பலைத் தூவுவதுடன் படம் முடிகிறது.
படத்தில் முதலில் பாராட்டப்பட வேண்டியது அந்தக் கேமராவைத்தான். போராட்டக்குழு நடத்தும் ஒரு விவாத அறையை, வெறுமனே காட்டாமல், கேமராவும் ஒரு போராட்டக்குழு உறுப்பினர் ஆகி, வாதிடுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் அந்த விறுவிறுப்பான காட்சிகள், நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. படம் முழுக்க, அப்பட்டமான ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கைக்காட்சிகள் நிறைந்து இருந்தாலும், காட்சியின் காமத்தோடு, சோக உணரவும் சொல்லப்படுவதால், ஆபாசம் அடியோடு தெரியவில்லை. இந்தப்படம், எய்ட்ஸ் நோய், அது சம்பந்தப்பட்ட மருந்துகள், அது சம்பந்தப்பட்ட விவாதங்கள் என்று மருத்துவ வார்த்தைகள் நிறைந்த ஒரு கதையைச் சொன்னாலும், அந்தக்கதையை, எல்லோருக்கும் புரியும்படி சொல்லியிருக்கும் இயக்குனரை நாம் பாராட்டாமல் இருந்துவிட முடியாது. படத்தின், இடையிடையே காட்டப்படும் அந்த டிஸ்கோ நடனமும், அதன் பாட்டும், எய்ட்ஸ் நோயின் பாதுகாப்பற்ற உறவு தோன்றும் இடங்களில், இது போன்ற இரவுக் கேளிக்கை இடங்களும் ஒன்று என்று, இயக்குனர் சொல்லாமல் சொல்கிறாரோ என்று நம்மை நினைக்க வைக்கிறது. படம் பல்வேறு உலக விருதுகளைத் தட்டிச்சென்று இருக்கிறது, கூடவே, கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பெருமை பெற்று, அங்கேயும் நான்கு உயரிய விருதுகளை வென்ற பெருமை படைத்து இருக்கிறது. படத்தில் சன் ஆக நடித்து இருக்கும் அர்ஜென்டினா நடிகர் நாகுவேல் பெரஸ், பாராட்டப்பட வேண்டிய இன்னொருவர். எய்ட்ஸ் நோயால் அவதிப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கும் அவரது நடிப்பு, படம் பார்ப்போர் கண்களில் நிச்சயம் கண்ணீரை வரவழைத்து விடும்.
எய்ட்ஸ் நோயினை, முற்றிலும் ஒழிக்க, இதுவரை, சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு சில எய்ட்ஸ் கட்டுப்படுத்தும் மருந்துகள், எய்ட்ஸ் நோய் வந்த, ஏழை எளியவரின் கைகளுக்கு, எளிதில் போய்ச் சேராத அளவிற்கு, அதிக விலையில் விற்கப்படுகின்றன என்பதும் ஒரு துயரச் செய்தியே. காலம் மாறட்டும். எய்ட்ஸ் நோய் முற்றிலும் மறையட்டும்.
அழகர்சாமி சக்திவேல்
- வீடு எரிகிறது
- தொடுவானம் 231.மதுரை மறை மாவடடம்.
- புதுக்கோட்டை பேராசிரியரின் நூலுக்கு ’சிறந்த நூலுக்கான விருது’
- சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்
- மருத்துவக் கட்டுரை உறக்கமின்மை
- 120 பீட்ஸ் பெர் மினிட் – திரைப்பட விமர்சனம்
- தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்
- பூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன
- பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் பளபளப்பு உடைப் பாவை