தொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்

This entry is part 8 of 10 in the series 29 ஜூலை 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் பார்த் கழுத்தில் போட்ட ரோஜாப்பூ மாலையை கழற்றாமலேயே ஒளி வாங்கியின் முன் கம்பீரமாக நின்று சுமார் அரை மணி நேரம் ” ட்ரூப்பா ” திட்டம் பற்றி உரையாற்றினார். அவருக்குப் நாங்கள் அன்போடு அணிவித்த மலர் மாலைக்கு அவர் மரியாதையை அவ்வாறு தருகிறார்.( நம்மவர்களுக்கு ஆசையோடு ஒரு மாலையை அணிவித்தால் அதை உடன் கழற்றி விடுகின்றனர். அந்த மாலைக்குக் கிடைக்கும் மரியாதை அந்த ஒரு நிமிடம்தான்.அதை அணிவிக்கும் கணம்தான் அதற்குப் பெருமை.) டாக்டர் பார்த் மிகவும் உயரமானவர். அவரின் தலை முடி வெள்ளி நிறத்தில் அடர்ந்திருக்கும். அவரை அப்போது மேடையில் பார்த்தபோது ஓர் ஆண் சிங்கம்தான் என் நினைவுக்கு வந்தது! அவ்வளவு கம்பீரம் அவர்!
சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை மீது சுவீடன் தேசத்து மக்களிடையே தனி அக்கறை இருந்து வந்தது. ஆரம்ப காலங்களில் இந்த மருத்துவமனையை சிறு கண் மருத்துவமனையாக உருவாக்க டாகடர் கூகல்பர்க் என்னும் சுவீடிஷ் கண் மருத்துவரும் ஃபிரிக்கோம் என்னும் சுவீடிஷ் இறைப் பணியாளரும் இடம் தேடி புதுக்கோட்டையிலிருந்து மாட்டு வண்டியில் சிங்காரத்தோப்பு என்னும் காடுகள் அடர்ந்த இப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இயற்கை அழகுடன் திகழ்ந்த இந்த இடம் அவர்களைக் கவர்ந்தது. இங்குதான் தூக்கிலிடப்பட்ட மருதுபாண்டியர் சகோதர்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. இங்கு மருத்துவமனையை அமைக்க அவர்கள் சித்தம் கொண்டனர். இந்த சிங்காரத்தோப்பை தங்களுக்குத் தர வேண்டி அவர்கள் சிவகங்கை மன்னரிடம் சென்றனர். அவரும் இந்த அரிய பணிக்கு சிங்காரத்தோப்பு என்னும் இந்த காட்டுப் பகுதியை தானமாகத் தந்துவிட்டார். காடும் மேடும் அழிக்கப்பட்டு இந்த அழகான மருத்துவமனை வளாகம் உருவானது. இன்று இதுவும் இன்னொரு சிங்காரத்தோப்பாகத்தான் திகழ்கின்றது. அவர்கள் இதற்கான நிதி உதவியை சுவீடன் தேசத்து தாய்ச் சபையிடம் கேட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள சபை மக்களிடமும் பொது மக்களிடமும் நன்கொடை வசூலித்து அனுப்பியுள்ளனர். இன்றும் வருடந்தோறும் சுவீடிஷ் மிஷனிலிருந்து ( Church of Sweden Mission ) நன்கொடை வந்துகொண்டுதானிருக்கிறது. இப்படி திருப்பத்தூரைப் பார்க்காத பல்லாயிரக்கணக்கான சுவீடன் தேசத்தவர் நன்கொடை தந்து இந்த மருத்துவமனையை வாழவைப்பது பெரும் சிறப்பாகும்.
இப்போது டாகடர் பார்த் சுவீடிஷ் அரிமா சங்கத்தின் ஆதரவில் ஒரு புதிய திட்டத்தை திருப்பத்தூருக்குக் கொண்டு வந்துள்ளார்.இது மருத்துவப் பணியுடன் இணைந்த சுமூக பொருளாதார கிராம மேம்பாட்டுத் திட்டம். கிராமவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது இதன் குறிக்கோள். . மருத்துவராக இங்கு பணி புரிய வந்திருந்த ஒரு மேல்நாட்டவர் இங்குள்ள கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற வாஞ்சையில் அங்குள்ள நல்ல உள்ளங்களிடம் அதை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைப் பெற்று பணத்துடன் திரும்பியுள்ளது பாராட்டுதற்குரியது.
டாக்டர் பார்த் துவங்கியுள்ள திட்டம் தற்காலிகமாக பிசியோதெராப்பி கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கும் என்று தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இதற்கான களப்பணியாளர்கள் அந்தந்த கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்தவாறே திடடத்தை செயல்படுத்துவார்கள்.மருத்துவமனை தொண்டு போல இதுவும் முழுக்க முழுக்க மதச் சார்பற்ற பொது நலத் தொண்டாகவே செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோன்றே சுவீடனிலிருந்து நன்கொடை வழங்கும் நல்ல உள்ளங்களும் அதை மத மாற்றத்துக்கு அல்லாமல் பொது நலன் கருதியே அனுப்புகின்றனர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற தத்துவ அடிப்படையில் அமைந்த சிறப்பான திட்டமாக இது அமைந்தது.
இந்தக் கிராமங்களில் பணி புரியும் களப்பணியாளர்கள் கிராமத்து மக்களின் பிரச்னைகளை அறிந்து அதற்கு அரசாங்க உதவிகளை பெற்றுத் தருவதோடு, நோய்வாய்ப்பட்டுள்ளவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும் கொண்டு வந்தனர். கிராமத்தில் கோழிப்பண்ணை வைத்தல், வீடுகளில் ஆடு மாடுகள் வளர்த்தல், பால் பண்ணை போன்ற மேம்பாட்டுத் திட்டங்களும் இதில் அடங்கின.
இந்த புதிய திட்டத்தால் மருத்துவமனையின் சமூகச் சேவை இன்னும் பன்மடங்கில் திருப்பத்தூர் மக்களுக்குப் பயன்தரும் என்பது நிச்சயம்.
ஆரோக்கியநாதர் ஆலயத்தின் புதிய கட்டிட விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இடையில் சபைச் சங்கத்தின் கூட்டம் நடத்தினோம். நினைவு மலருக்கான வாழ்த்துச் செய்திகள் அனைத்தும் வந்துவிடடன. அவற்றை டைப் செய்து பக்கம் போடும் பணியை பால்ராஜ் செய்துகொண்டிருந்தார். நாங்கள் காரைக்குடி சென்று சில அச்சகங்களில் செலவு பற்றி விசாரித்தோம். குறைவான செலவில் சிறப்பாக செய்யும் சதர்ன் அச்சகத்தைத் தேர்ந்தெடுத்தோம். நாங்கள் தயார் செய்திருந்த டைப் பிரதியை புகைப்படங்களுடன் அவர்களிடம் தந்துவிட்டு வந்தோம். அவர்கள் அந்த புகைப்படங்களை பிளாக் செய்துதான் அச்சில் ஏற்றுவார்கள்.
இனி விழா ஏற்பாடுகள்தான் பாக்கி. அதற்கு முன்பே திருப்பத்தூரிலேயே அழைப்பு இதழ்களை அச்சடித்துவிட்டோம். யார் யாரை அழைக்கவேண்டும் என்ற பட்டியலைத் தயாரித்தோம். உள்ளூர் பிரமுகர்களையும் காரைக்குடியில் சில முக்கியமானவர்களையும் முதலில் மறக்காமல் குறித்துக்கொண்டோம் இவர்களையெல்லாம் நேரில் சென்று அழைக்க முடிவு செய்தோம். திருச்சபையின் தலைவர்களுக்கு தபால் மூலம் அனுப்பலாம்.
ஒரு நாள் மாலையில் ஒருவர் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார். அவர் பார்ப்பதற்கு இடி அமீன் மாதிரி இருந்தார். அவ்வளவு கருப்பு. இடி அமீன் போன்றே தடித்த உருவம். தன்னை மறைதிரு பிச்சானந்தம் என்று அறிமுகம் செய்துகொண்டார். பெரம்பலூரில் சபைகுருவாக இருப்பதாகச் சொன்னார்.நான் வீட்டுக்குள் வரச் சொல்லி அமரச் சொன்னேன். அண்ணனை நன்றாகத் தெரியும் என்றார்.அத்துடன் எனக்கு உறவுக்காரர் என்றும் கூறினார். அவரின் பூர்விகம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி என்றார். ஆலய காரியமாக என்னிடம் பேச வந்துள்ளதாகக் கூறினார். அவரை வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் போகச் சொன்னேன். அவரும் சரி என்றார். அவருக்கு மடியில் அறை தந்தேன். குளித்துவிட்டு கீழே வந்தபின்பு உணவருந்தினோம்.
பழைய ஆரோக்கியநாதர் ஆலயம் நோக்கி மெல்ல நடந்தோம்.
” நான் ஒரு முக்கிய விஷயமாக உங்களிடம் பேச வந்துள்ளேன். ” என்று அவர் ஆரம்பித்தார்.
” சொல்லுங்கள். ” என்றேன்.
” இது திருச்சபை தொடர்புடையது. நமது மக்கள் முன்னேற்றத்துக்காக லுத்தரன் முன்னேற்ற இயக்கம் என்ற ஒன்றை தொடங்கியுள்ளோம். சமுதாய உணவுடைய தலைவர்கள் இதை வழி நடத்துகின்றனர். ” என்றார்.
” நம் மக்கள் என்றால் என்ன? ” நான் புரியாமல் அவரிடம் கேட்டேன்.
” அதை விரைவில் தெரிந்து கொள்வீர்கள். ” புதிர் போட்டார்.
” அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ” புரியாமல் அவரிடம் வினவினேன்.
” அடுத்த சனிக்கிழமை நாங்கள் ஒரு பொதுக் கூட்டம் தரங்கம்பாடியில் ஏற்பாடு செய்துள்ளோம்.. அதில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும். அப்போது லுத்தரன் முன்னேற்ற இயக்கம் பற்றிய முழு விவரமும் தெரிந்து கொள்வீர்கள்.உங்கள் அண்ணன் பீட்டரும் வருவார். ” அழைப்பு விடுத்தார். எதோ பெரிய காரியம் செய்யப்போவதாக கடைமை உணர்ச்சியுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
” நான் கட்டாயம் வருகிறேன். ” உறுதியளித்தேன்.
” உங்களுக்கு மோசஸ் தம்பிப்பிள்ளையைத் தெரியுமா? ” அவர் கேட்டார்.
” தெரியாது. இன்னும் சொன்னால் திருச்சபையில் யாரையும் எனக்குத் தெரியாது. ” என்றேன்.
” தம்பிப்பிள்ளையும் உங்களுக்கு உறவுதான். அவருக்கு நல்ல மூளை. சிறந்த பேச்சாளர். உளுந்தூர்பேட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அன்று கூட்டத்தில் அவருடைய பேச்சைக் கேட்கலாம். தற்போது நீங்கள் திருப்பத்தூர் ஆலயத்தின் பொருளாளர். அதோடு மதுரை மறை மாவட்ட உறுப்பினர். எஸ்.சி.சி.உறுப்பினர் வேறு. இனிமேல் திருச்சபைத் தலைவர்களையெல்லாம் நேரில் கண்டு பேசும் வாய்ப்புகள் வரும். இந்தக் கூட்டத்திலேயே நம்முடைய தலைவர்களையெல்லாம் சந்தித்துவிடலாம். அவர்களும் உங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ” என்றார்.
” நான் கட்டாயம் வந்துவிடுகிறேன். இந்த லுத்தரன் முன்னேற்ற இயக்கம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.” என்றேன்.
பழைய ஆலயத்தின் வராந்தாவில் அமர்ந்து பேசிவிட்டு வீடு திரும்பினோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபாலைவனங்களும் தேவைசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *